நேற்றிலிருந்து சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சத்தையும், அசோகமித்திரனின் இருவர் குறுநாவலையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கையில் இருந்திருந்தால் நேற்றே அய்யனாருடனான உரையாடலை முடித்திருப்பேன். இது போன்ற அடிப்படை நூல்கள் கூட இணையத்தில் கிடைப்பதில்லை என்பது ஆயாசம் அளிக்கிறது. கிடைத்திருந்தால் ரெண்டு நிமிட வேலை. என்னுடைய ஜீவனாம்சம் காப்பி 1985-இல் வாங்கியது. எழுத்து பிரசுரம், 19-A, பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5இலிருந்து செல்லப்பாவே பிரசுரித்தது. அதுதான் செல்லப்பா குடியிருந்த வீடாக இருக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் கண்ணன் (நான் தபால் துறையில் ஸ்டெனோவாக வேலை பார்த்த போது சக ஸ்டெனோவாக இருந்து இன்று ஒரு சர்வதேச நிறுவனத்தில் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்கும் பணியில் இருக்கிறார். போனை எடுத்தாலே “இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?” என்றுதான் கேட்க வேண்டும். அய்யங்கார் இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நல்லவர். ராமானுஜரைப் போல் புரட்சிக்காரர். உடம்பெல்லாம் மூளை. அப்படிப்பட்டவர்கள் அந்த மூளையை பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள். கண்ணன் அந்தத் திறமையை பிறர் பணி செய்து கிடப்பதற்காகப் பயன்படுத்துகிறார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கியத்தின் நடமாடும் உருவம் கண்ணன்) – திருவல்லிக்கேணியைச் சுற்றிக் காண்பித்தார். திருவல்லிக்கேணியில் ஏ.கே. ராமானுஜன், கணித மேதை ராமானுஜம் எல்லாம் வாழ்ந்த வீடுகள் இன்று சாதாரண கட்டிடங்களாக – அபார்மெண்ட்டுகளாக நின்று கொண்டிருக்கும் போது சி.சு. செல்லப்பா வாழ்ந்த பிள்ளையார் கோவில் தெரு வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் என்னை உதைக்க வருவார்கள். (ஒருநாள் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும் கண்ணன்.)
செல்லப்பா பதிப்பித்த ஜீவனாம்சத்தின் விலை ஆறு ரூபாய். ஜானி ஜான் கான் ரோட்டில் (ராயப்பேட்டை) உள்ள (இப்போது இருக்கிறதா என்று தெரியாது) நாவல் ஆர்ட் ப்ரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட நூல். இதை நான் நண்பரிடம் கொடுத்திருந்தேன். நிரந்தரமாக. படித்தாயா என்று கேட்டேன். இன்னும் இல்லை. நிச்சயம் படிப்பார். ஆனால் தமிழ் சமூகம் ஜீவனாம்சத்தைப் படிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை சி.சு. செல்லப்பாவையும் தி. ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் படிக்காதவர்களை பிராமணர் என்றோ, இந்து என்றோ, இந்தியர் என்றோ ஒப்புக் கொள்ள மாட்டேன். மரபு தெரியாத அனாதைகள் என்றே அவர்களை அழைக்க வேண்டும். நாகரீகமாக இப்படி எழுதியிருக்கிறேன் என்று புரிந்து கொள்க. தன் மூதாதையரே யார் என்று தெரியாத ஒரு கூட்டத்தை என்னவென்று சொல்வது?
சாப்பிட வேண்டிய காலத்தில் சாப்பாடு கிடைக்கவில்லை என்று சொன்னார் அல்லவா அசோகமித்திரன்? அதைக் கொஞ்சம் கவனிப்போம். எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸில் அசோகமித்திரன் சுமார் பதினெட்டு ஆண்டுகள் புரொடக்ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவரது கரைந்த நிழல்கள் நாவல். சுயவரலாற்று நாவல்தான் அது. அதில் வரும் நடராஜன், ராஜ்கோபால் என்ற புரொடக்ஷன் மேனேஜர்களின் அனுபவம் அசோகமித்திரனின் சொந்த அனுபவம்தான். அதில் வரும் பாச்சாதான் எஸ்.எஸ். வாசனின் மகனான, முன்னாள் விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன். அதில் வாசன் பற்றியும் பாலசுப்ரமணியன் பற்றியும் எழுதி விட்டதால்தான் விகடனில் வாழ்நாள் பரியந்தம் அசோகமித்திரனைத் தடை செய்தார்கள். கல்கி, ஜெயகாந்தன், மணியன், மதன், ஞாநி என்று எத்தனையோ எழுத்தாளர்களை வாழ வைத்த விகடன் அசோகமித்திரனை மட்டும் அவரது கரைந்த நிழல்கள் நாவலுக்காக அவரை மிக மூர்க்கமாகப் பழி வாங்கியது. அப்படியென்றால், தமிழ்ச் சமூகம் என்ன செய்திருக்க வேண்டும்? கரைந்த நிழல்கள் ஒரு லட்சம் பிரதி விற்றிருக்க வேண்டும் அல்லவா? இல்லை. இத்தனைக்கும் தமிழ் சினிமா பற்றிய ஒரு நாவல் அது.
புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் பற்றிய பதிவு இது:
“ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் புரொடக்ஷன் மேனேஜர் இருந்தாரு ரெட்டியார் கிட்டே. அவரு இப்போ கிடைச்சா இந்த நிமிஷம் ஆபீஸ் வைச்சுடலாம்.”
“யாருன்னு சொன்னா நானும் விசாரிச்சுப் பார்ப்பேன்.”
“இப்போ இருக்காரோ போயிட்டாரோ. அதுவே சந்தேகங்க. ஒரு வருஷம் முன்னாலே சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டண்டேதான் பார்த்தேன். சொல்லப் போனா பிச்சை எடுத்திண்டிருந்தாரு. நடக்கவும் முடியலை. கண்ணும் தெரியலை போல இருந்தது. அவர் அனுப்பிச்சு நான் எவ்வளவு காப்பி சாப்பாடு வாங்கி வந்திருக்கேன்?”
இது நடராஜன் என்ற புரொடக்ஷன் மேனேஜரின் கதை அல்ல. தமிழ் எழுத்தாளனின் கதை. அசோகமித்திரனுக்கு மணி மணியான புதல்வர்கள் இருந்ததால் நடராஜனுக்கு ஏற்பட்ட கதி அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் பல எழுத்தாளர்கள் அப்படி ஆகியிருக்கிறார்கள். பல எழுத்தாளர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்படாமல் அவர்களின் நண்பர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். (உதாரணம், தர்மு சிவராமு).
அசோகமித்திரன் தன் வாழ்நாள் முழுவதும் சைக்கிளிலேயே சென்னை முழுவதையும் சுற்றியவர் என்பது அவரோடு பழகியவர்களுக்குத் தெரியும். மிக முதிய வயதில் ஒருமுறை பேத்தியை டபுள்ஸ் வைத்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து முதுகு எலும்பில் பிரச்சினை ஆனதிலிருந்து சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தினார். இப்போது ராஜ்கோபால். இயக்குனர் ஜகன்னாத ராவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போகிறான். காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. இயக்குனர் சாப்பிடுகிறாயா என்று கேட்கிறார். நாகரீகமாக மறுத்து விடுகிறான்.
பதினோரு மணி. சில்லறையில் அரை பாக்கெட் சார்மினார் வாங்கிக் கொண்டு சைக்கிளை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மிதித்துக் கொண்டு போகிறான். அரக்கன் போல் நிமிர்ந்து கிடக்கும் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கும்போது சக்கரத்தின் ட்யூப் காற்று எல்லாவற்றையும் இழந்து விட்டிருக்கிறது. நல்ல இறக்கத்தில் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கச் சிரமமாக இருக்கிறது. பிறகு ஒருவழியாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டே போய் ஒரு மெக்கானிக் கடையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கிறான்.
பஞ்சர் போட்டு உடனே வாங்க முடியாது. கையில் ஒரு பைசா இல்லை. கொலைப் பசி வேறு. பஞ்சர் போட்டு வைக்கச் சொல்லி விட்டு நடந்தே கிளம்புகிறான். பனிரண்டு மணிக்குள் சாஹினி ஸ்டுடியோ போனால் சாப்பாட்டு நேரத்தில் யாரையாவது பிடிக்கலாம். பாடல் காட்சியில் க்ரூப் டான்ஸ் ஆடும் பெண்களை அழைத்துச் செல்லும் வேன் ஒன்றில் இடம் கிடைக்கிறது.
பேண்டெல்லாம் என்ன கரி என்று கேட்பவர்களிடம் சைக்கிள் செயின் மசி துணியில் பட்டு விட்டது என்கிறான் ராஜ்கோபால். சாஹினி ஸ்டுடியோவில் சாப்பாட்டுக்காக அங்கும் இங்கும் அலைகிறான். அந்த அத்தியாயத்தில்தான் ரெட்டியார் படம் எடுக்க முடியாமல் ஊரை விட்டே ஓடி விட்டார் என்ற செய்தி போகிற போக்கில் சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் சிட்டி என்ற நண்பனிடம், தான் நாள் பூராவும் பட்டினி என்கிறான். இயக்குநர் ராம்சிங்கின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராம்சிங்கின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் நூறு நாட்கள் ஓடியிருந்தன. சிட்டியிடம் தன்னை ராம்சிங்கிடம் அறிமுகப்படுத்தச் சொல்கிறான் ராஜ்கோபால்.
அந்த நேரம் பார்த்து அங்கே வரும் ஜயசந்திரிகா ராஜ்கோபாலின் மூக்கைப் பிடித்துக் கிள்ளி விளையாடி விட்டுப் போகிறாள். எல்லோரும் இதைக் கவனிக்கிறார்கள். குறிப்பாக இயக்குநர் ராம்சிங். பலரும் சூழ்ந்திருக்கும் இடத்தில் யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரணக் கவனம் காட்டுவது ஜயசந்திரிகாவின் இயல்பு என்று அவர்களுக்குத் தெரியாதே என்கிறார் அசோகமித்திரன். அதற்கு மேலும் ராஜ்கோபாலுக்கு வாய்ப்பு கொடுப்பாரா இயக்குநர்? அதுவும் கைவிட்டுப் போகிறது. பட்டினி. யாரோ எல்லோருக்கும் லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தள்ளுமுள்ளுவில் ராஜ்கோபாலுக்கு லட்டு கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுகிறது. ராஜ்கோபாலை அழைத்துக் கொண்டு சிட்டி ஒரு ஸ்டுடியோ காரில் சாப்பிடக் கிளம்புகிறான்.
“கௌடியா மட் அருகில் வீடு மாதிரி ஒரு உணவு விடுதி இருக்குமே?”
“ஆமாம்; பழனியாண்டி ஹோட்டல்” என்கிறான் டிரைவர்.
”வண்டியை அங்கே விடுப்பா.”
”உட்லண்ட்ஸே போயிடலாமே?” இது ராஜ்கோபால்.
இடையில் ராஜ்கோபால் சைக்கிளை விட்ட இடம் வருகிறது. காரை அவசரமாக நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்கிறான். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு வந்துவிடுவதாகச் சொல்கிறான். ஆனால் அது அவன் நினைத்த கடை இல்லை. பிறகு அவன் சைக்கிள் விட்ட கடையைத் தேடிக் கண்டுபிடித்துக் காசு கொடுத்துவிட்டு சைக்கிளை எடுக்கிறான். வெகுநேரமாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டதால் சைக்கிள் சூடேறிக் கிடக்கிறது. இரு சக்கர டியூப்களும் வயதானவை. பசி மயக்கத்துடன் மேம்பாலத்தில் ஏறி நுங்கம்பாக்கத்தைக் கடந்து மவுண்ட் ரோட்டை அடையும் போது கிட்டத்தட்ட சுயநினைவே இல்லை. பழனியாண்டி ஹோட்டல் என்ற நிழல்தான் தெளிவற்றதாகத் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. லாயிட்ஸ் ரோட்டை நெருங்கும் போது அவனுக்குப் பழக்கப்பட்ட ஒலி வருகிறது.
ராஜ்கோபால் கீழே இறங்குமுன் சக்கரத்தை அழுத்திப் பார்க்கிறான். அது தட்டையாக இருக்கிறது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டே பழனியாண்டி ஹோட்டலை வந்து சேர்கிறான். அங்கே சிட்டி இல்லை. வீட்டுக்குப் போனால் ஆறிக் குளிர்ந்து போயிருக்கும் பழைய சாதம் கிடைக்கும். அப்பளம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். பல்லால் கிழித்துத்தான் தின்ன வேண்டும்.
அதற்குள் எங்கிருந்தோ சிட்டி வந்து விடுகிறான். பழனியாண்டியில் ராஜ்கோபாலால் அசைவம் சாப்பிட முடியாது என்று இருவரும் உடுப்பி ஹோட்டல் போகிறார்கள். இடையில் அங்கே வந்து சேரும் நண்பன் மாணிக்கராஜ் ராஜ்கோபாலின் சைக்கிளை வாங்கிக் கொண்டு ‘பொட்டலம்’ வாங்கப் போகிறான்.
”காற்று இல்லாத டயர்” என்கிறான் ராஜ்கோபால். “பரவாயில்லை; பஞ்சர் ஒட்டிக் கொள்கிறேன்” என்கிறான் மாணிக்க ராஜ்.
பொட்டலம் வாங்கும் ஜோர். பொட்டலத்தைப் புகைத்ததும் ராஜ்கோபாலின் துயரம் அத்தனையும் பீறிட்டு அடிக்கிறது.
கஞ்சா புகைத்ததும் ராஜ்கோபாலின் தயக்கம், தடை எல்லாம் காணாமல் போய் விடுகிறது.
“போடா பேமானி! என்னை எத்தனை வருஷமாத் தெரியும்? ஒரு பிச்சைக்காசு கடன் தர நாலு நாழி யோசிக்கிறே! என்னைச் சாப்பிட வரச் சொல்லிட்டு நீ தின்னுட்டு வந்து நிக்கிறே! எனக்கு சிபாரிசாடா பண்ணறே சிபாரிசு, புளுகுணிப் பயலே! என்னை வைச்சுண்டே நீ சிபாரிசு பண்ணினா எந்த முட்டாள்டா காது கொடுத்துக் கேப்பான்!”
மற்ற இருவருக்கும் போதை தெளிந்து விடுகிறது. “இப்போ உன் வீட்டுக்கு டாக்ஸியிலே போயிடலாம். சாயங்காலமா நான் உன் சைக்கிளைக் கொண்டு வந்திடறேன்.”
ராஜ்கோபாலுக்கு வெறியே வந்து விடுகிறது. “அதைக் கொண்டு போய் சாக்கடையிலே போடு!”
“தெருவுக்கு வந்தவுடன் ராஜ்கோபால் கைகளை உயர்த்தினான்.
மூச்சுப் பிதுங்கும் குமட்டல் ஒன்றின் காரணமாக வாந்தி எடுத்தான். கணக்கற்ற முறை காய்ந்து ஆறிப் போன கடலை எண்ணெய் பஜ்ஜியும் தோசையும் பீறிக் கொண்டு வந்து சிந்தின.
அதை நக்க ஒரு சொறி நாய் வந்தது.”
அசோகமித்திரனின் முகத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்ட கைப்பு உணர்வுக்கு இதுதான் காரணம்.
இப்போது நாம் திரும்பவும் அந்தக் காலத்தில் சமூகத்தின் முன்னணியில் இருந்த பிராமணர்கள் அந்தக் காலத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வந்த, சிறுபத்திரிகைத் தளத்தில் செயல்பட்டு வந்த பிராமண எழுத்தாளர்களை ஏன் புறக்கணித்தார்கள் அல்லது அதை விடவும் கீழ்நிலையில் சொல்லப்போனால் அப்படிப்பட்ட இலக்கிய மேதைகள் இருப்பதே தெரியாமல் அல்லது இருப்பதையே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்று பார்ப்போம். ஏற்கனவே தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலைப் பற்றிக் குறிப்பிட்டேன். அப்படிப்பட்ட சுய விமர்சனத்தை பிராமண சமூகம் ஏற்கவில்லை. பரிசீலனை செய்யக் கூட தயாராக இல்லை. தி.ஜா. ஆபாசமாக எழுதுகிறார் என்று சொல்லி ஜாதிப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். அவரும் பாதுகாப்பாக தில்லி போய் விட்டார்.
கு.ப.ரா.வையும் ஆபாச எழுத்தாளர் என்று சொல்லியே அந்தக் கால பிராமண சமூகம் ஒதுக்கி வைத்தது. அதற்கு கு.ப.ரா. ”எல்லோரும் தன் மனைவியைப் பற்றி எழுதுவதாக நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல” என்று அவருடைய சிஷ்யர் தி.ஜானகிராமனிடம் சொன்னாராம். ஆண் பெண் தாம்பத்யத்தில் உள்ள வேறொரு பிரச்சினையையும் எழுதினார்கள் அக்கால பிராமண எழுத்தாளர்கள்.
அசோகமித்திரனின் ‘இருவர்’ என்று ஒரு குறுநாவல். அதில் வரும் வாலா என்ற பெண் இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண் இனத்தின் குறியீடு. இளம் வயதிலேயே கணவனை இழந்ததால் தலைமயிர் மழிக்கப்பட்டு நார்மடி கட்டிக் கொண்டிருப்பவள். சகோதரன் வீட்டில் வாழ்கிறாள். ஆனால் அங்கே அவளைக் கொடுமைப்படுத்துபவர்கள் யார் என்றால், அவளுடைய அம்மாவும், மன்னியும். வாலாவின் கணவன் தனம் என்ற ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டிருந்தான். கதையில் அவள் ஒரு அற்புதமான காவிய நாயகியாக படைக்கப்பட்டிருக்கிறாள். வாலாவின் மகன் விசு தனத்தைப் பார்க்க அவ்வப்போது செல்வதுண்டு. கொஞ்சநாள் போகாமல் இருந்து விட்டான். எனவே சிறுவனைப் பார்க்க அவன் வீடு தேடி வண்டி வைத்துக்கொண்டு வருகிறாள் தனம். அப்போது வாலாவின் அம்மா தனத்தை வரவேற்கும் காட்சி இது:
“பாவி! நீ நன்னாயிருப்பியா? உன் குடும்பம் விளங்குமா? நீ உருப்படுவியா? என் பொண்ணை மொட்டை அடிச்சு மூலையில் உக்கார வைச்சயே? நீ நன்னாயிருப்பியா? தங்கமாயிருந்தவனை சொக்குப் பொடி போட்டு மயக்கிக் காசு பணமெல்லாம் கறந்துண்டதோடு இல்லாமே அவன் உசிரையும் பிடுங்கிண்டியே? உன் குலம் விளங்குமா? நீ நாசமாப் போக! புழுத்துப் போக! கணுக்கணுவா அழுகிப் போக! நாறிப் போக! வாய்க்கரிசிக்கு வழியில்லாம நாதியத்துப் போக! என் வயித்திலே கொள்ளியை வைச்சயே! உன் மூஞ்சியிலே கொள்ளியைப் போட! அவனை அடியோட அழிச்சதுமில்லாம இப்ப என் வீட்டு வாசலை மிதிக்க வறயா! தட்டுவாணிப் பொணமே! தேவடியாப் பொணமே! நீ நாசமாப் போக! நீ கட்டேல போக! விளக்குமாத்தைக் கொண்டாடி, இந்தச் சிறுக்கியைத் தலையிலே அடிச்சுத் துரத்தலாம்! என்னை வயிறெரிய வைச்சயே! என் பொண்ணை வயிறெரிய வைச்சயே! நீ என்ன கதிக்குப் போகப் போறேடீ! தேவடியா முண்டே! இங்கே ஏண்டி வந்தே? அப்பனை மயக்கி முழுங்கியாச்சு, பிள்ளையையும் முழுங்கிடப் பாக்கறயாடீ? நீ உருப்படுவியாடீ?”
தனம் கிளம்பிப் போய் ஒரு மணிநேரம் கழித்து எங்கோ வெளியே சென்றிருந்த வாலாவின் அண்ணன் வீடு திரும்புகிறான். ”அக்கிரகாரமே அன்று நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து மீளாமல் இன்னும் பரபரத்த நிலையில் இருந்தது. கிராமத்தினுள் அடி எடுத்து வைத்த உடனேயே அவர்கள் வீட்டு மாப்பிள்ளையின் வைப்பாட்டி வந்துவிட்டுப் போனாள் என்ற செய்தி அவனுடைய காதில் எட்டிவிட்டது. இன்னும் சிறிது தூரத்தில் அவளும் வாலாவும் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதார்கள் என்றும் செய்தி தெரிந்துவிட்டது. மிகுந்த ஆங்காரத்துடன் வீட்டினுள் நுழைந்தான். “வாலா! வாலா!” என்று உரக்கக் கூப்பிட்டான். அவனுடைய அம்மாவுக்கோ அன்று பொழுது விடிந்த வேளை சரியில்லை என்று தோன்றியது. “என்னடா?” என்று அவள் தான் பதில் கொடுத்தாள்.
அவளை இலட்சியம் செய்யாமல் அவன் சமையலறைக்குச் சென்றான். அங்கு வாலா இல்லை. கிணற்றங்கரைப் பக்கம் சென்றான். அங்கே கொல்லைப் புறத்தில் ஒரு மூலையில் வாலா ஒடுங்கிக் கிடந்தாள். அண்ணா வரும் வேகத்தைக் கண்டு வாரிச் சுருட்டிக்கொண்டு இன்னும் ஓரமாக ஒதுங்கினாள்.
அவன் நேராக அவளிடம் சென்று அவள் கன்னத்தில் அறைந்தான். அவள் குறுகிக் கொண்டது அடிக்காக அல்ல என்று தோன்றியது. அவன் அதையும் கவனியாமல் அவளைத் தோளிலும் முகத்திலும் மாறி மாறி அடித்தான். “அண்ணா! அண்ணா!” என்று வாலா முனகினாள். “கழுதை! வீட்டிலே மூலையிலே கிடக்காம தெருவுக்கா போறே நாயே! அறுத்துப் போட்டவ அடங்கிக் கிடக்காம ஊர் சுத்தவா போறே? உன்னை என்ன பண்ணறேன் பார்! உன்னைக் கொன்று குழியிலே தோண்டிப் புதைச்சுடறேன். துக்கரி நாயே! கட்டினவனை முழுங்கிட்டு இங்கே வந்து என்னடி ஆட்டம் போடறே!”
அம்மா ஓடி வந்தாள். அவன், வாலாவின் கையைப் பிடித்து எருக்குழிப்பக்கம் தள்ளினான். அப்போது அம்மா, “டேய், டேய். அவ தூரண்டா,” என்றாள். வாலா எருக்குழியருகில் சுருங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். அவன் அவளைத் தீண்டவும் முடியாமல் அதே நேரத்தில் அவளிடமே பெரும் அருவருப்பு அடைந்தவனாகவும் நின்றான். “இதை முன்னியே சொல்லறதுக்கு என்னம்மா?” என்று கேட்டான்.
“நீ தான் சொல்ல விடலியேடா.”
“உனக்கே இதெல்லாம் நன்னாயிருக்காம்மா?”
“நான் என்னடா பண்ண முடியும்? எவளோ வந்தா நான் தடுக்க முடியுமா?”
“இந்த மூதேவியைத் தடுத்திருக்கலாமே?”
“அவ பாவம், என்ன பண்ணினாடா?”
“பின்னே? வாசல்லே ஒரு குச்சுக்காரி வந்தாக்க இவளா அவளைப் போய்ப் பாக்கப் போனாளா?”
வாலாவின் அம்மா விசுவின் பெயரை எடுக்கவில்லை. ஆனால் அப்போது அவளுடைய நாட்டுப் பெண் அங்கு வந்தாள். வாலாவின் அம்மாவுக்கு விசுவை அதிக நேரம் பாதுகாக்க முடியும் என்று தோன்றவில்லை. நாட்டுப் பெண்ணைப் பார்த்து, “எச்சுமி, உன் ஆம்படையானுக்குத் தலைக்குத் தண்ணி விடு,” என்றாள்.
எருக்குழி கிணற்றுக்கு நேர் பின்னால் இருந்தது. வாலாவின் அண்ணன் அவளைப் பார்த்து முறைத்தான். வாலா எழுந்து கொல்லப்புறத்தின் மறுகோடிக்குச் சென்றாள். அவளுடைய அண்ணன் கிணற்றிலிருந்து சற்று தள்ளி உட்கார அவளுடைய மன்னி கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டாள். “செத்த வீட்டுக்குப் போய் வந்தமாதிரி வந்ததும் வராததுமா குளிக்க வேண்டியிருக்கு,” என்று அவள் சொன்னாள்.
ஒரு ரகசிய பாவனையுடன் அவன் மனைவி “வந்தவ இவளுக்காக வரலை. அந்தப் பிள்ளைக்காக வந்திருக்கா.”
“எது? அந்த பிரம்மஹத்திக்கா?”
“ஆமாம். வெக்கம் மானம் இல்லாம இவ்வளவு பெரிய பிள்ளையை அத்தனை பேர் முன்னாலேயும் அவளும் கட்டிக்கறா, இதுவும் தழுவிக் குலாவறது. கொஞ்ச நாழியான்னா அப்படியே படுத்துண்டு புரண்டுப்பா போலவே இருந்தது.”
“இந்தக் கூத்தெல்லாம் யாரும் தடுக்கலை? அப்பா இல்லையா?”
“எல்லா சரச சல்லாபமும் முடிந்தப்புறம்தான் வந்தா. அவர் வந்தப்புறம்தான் உங்க தங்கை உள்ளே வந்தா.”
அவன் துண்டைக் கசக்கிக் கட்டிக்கொண்டு வேட்டியைப் பிழிந்தான்.”
இந்தச் சம்பவம் நடந்து இரண்டொரு நாளில் வாலாவுக்கு ஜுரம் வந்து பிறகு அது ஜன்னியாக மாறி அவள் இறந்து போகிறாள்.
இந்த வாலாவும், ந. முத்துசாமியின் நீர்மையில் வரும் விதவையும், சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலில் வரும் சாந்தியும் ஒரே பெண்கள்தான். ஜானகிராமன் மட்டும்தான் தன் படைப்புகளில் குடும்ப வரம்புகளை மீறுகிறார். ஜீவனாம்சத்திலும் சாந்தி திருமணம் ஆன கையோடு அந்தக் காலத்தில் ஒருமுறை மணப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்புவார்கள். அப்படியாகத் தன் பெற்றோர் வீட்டுக்கு வருகிறாள் சாந்தி. அப்படி அவளுக்குத் தன் கணவனை விட்டுப் பிரிந்து வருவதில் இஷ்டமே இல்லை. இருந்தாலும் சம்பிரதாயம். அதற்கப்புறம் அவள் தன் கணவனைப் பார்க்கவே இல்லை. தோட்டத்தில் பாம்பு கடித்துச் செத்து விடுகிறான். அதற்குப் பிறகு அவள் நடைப் பிணமாகவே வாழ்கிறாள். வாழாவெட்டியாகி தன் வீட்டில் வசிக்கும் சாந்திக்கு ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றம் போகிறான் சாந்தியின் அண்ணன். வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. சாந்தியின் புகுந்த வீட்டார் மிகவும் நல்லவர்கள். பிறந்த வீடுதான் நரகம். கேஸைத் தொடர்ந்து நடத்தாலாமா என்று ஒப்புக்குத் தன் தங்கையைக் கேட்கிறான் அண்ணன். அதற்குப் பதிலாக சாந்தி நினைப்பதாக கிட்டத்தட்ட ஒரு பத்து பக்கம் நினைவோடை உத்தியிலேயே எழுதியிருக்கிறார் செல்லப்பா. பிராமண சமூகத்தின் சீரழிவை இந்தப் பக்கங்களைப் போல வேறு எந்த நாவலும் சொல்லவில்லை என்பது என் கருத்து. சாந்தியின் நினைவோட்டத்தில் ஒரு பத்தி:
“இவ்வளவுக்கு அப்புறம் அண்ணா என் கிட்ட வந்து பதில் கேட்கிறது எவ்வளவு அசட்டுத்தனம் என்றுதான் எனக்குப் படுகிறது. நான் கேட்கிற கேள்விக்குன்னா அண்ணா பதில் சொல்லணும். இது என் விஷயம்தானே அண்ணா, உன்னை ஒன்று கேட்கிறேன். மனசிலே இருக்கிறதை வாய் விட்டுச் சொல்லு. இது அத்தனையும் நீ செய்வது உன் தங்கைக்காகவே தானா? அவள் எதிர்காலத்துக்குத்தானா? இதை (ஜீவனாம்சத்தை) வாங்கிக் கொண்டு விட்டால் சாவித்திரியின் வரும் நாட்கள் அத்தனையும் இன்பமாகப் போகும் என்று மனமார நம்பித்தானா இதை சாதிக்கப் பார்க்கிறாய்? எங்கே சொல்லு என்று கேட்டு விடட்டுமா? அவன் கேள்விக்கு எதிர்க் கேள்வியாக அது இருக்கிற மாதிரிதான் தோணும். ஆனால் அதுதான் என் பதிலாகவும் இருக்கும். அதுக்கு மேலே தன் முடிவை பண்ணிக்கட்டுமே…”
இப்படிப்பட்ட சுய விமர்சனங்களால்தான் பிராமண சமூகம் அக்கால பிராமண எழுத்தாளர்களைப் புறக்கணித்தது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே இது எல்லாவற்றையும் நான் மீண்டும் இங்கே எழுதிப் பார்த்தேன்.
இப்போது நாம் உங்களுடைய கேள்விக்கு வருவோம். வணிக எழுத்தின் மேல் இலக்கிய எழுத்தாளர்களுக்கு என்ன கோபம்? ஏன் வணிக எழுத்தின் மீது ஆத்திரப்பட வேண்டும்? நானே முன்பு அப்படித்தான் இருந்தேன். இப்போது அந்தக் கோபம் போய் விட்டது. வணிக எழுத்துக்கும் ஒரு சமூகத்தில் இடம் இருக்கிறது. இதே வார்த்தைகள் அல்ல. ஆனால் இதுதான் உங்கள் கேள்வியின் சாரம். அய்யனார், என் இறுதி நாள் வரை எனக்கு வணிக எழுத்தின் மீதான கோபம் இருக்கும். எக்காலத்திலும் அது மறையாது.
வணிக எழுத்து ஒரு சமூகத்துக்கு அவசியம்தான். அதன் இடத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால் வணிக எழுத்தாளர் தன்னை எனக்குச் சமமாக நினைத்துக் கொள்கிறார். வணிக எழுத்தை மட்டுமே வாசிக்கும் ஒரு சராசரி எனக்கு அறிவுரை பகர என் முன்னே அமர்கிறான். நான் கமல்ஹாசன் முன்னே கைகட்டி நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். சல்மான் ருஷ்டி மைலாப்பூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணோடு சேர்ந்த வாழ்ந்த காலம் அது. பத்மா தன் பாட்டியைப் பார்ப்பதற்காக மைலாப்பூர் வந்த போது கூடவே ருஷ்டியும் வந்தார். இது ஹிண்டுவில் முதல் பக்கச் செய்தி. அப்போது ருஷ்டியை சந்திக்க பத்மா மூலம் கமல் நேரம் கேட்ட செய்தியும் ஹிண்டுவில் வந்திருந்தது. பத்மாவும் ருஷ்டியும் வந்து போனார்கள். ஆனால் கமலை ருஷ்டி சந்திக்கவில்லை. ஃபோன் செய்து ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இதுவும் ஹிண்டுவில் செய்தி. நிகானோர் பார்ரா இதற்கும் மேல். ஒரு நாட்டின் அதிபருக்கே தேதியும் நேரமும் கொடுத்து விட்டு வேறு எங்கோ கிளம்பிப் போகிறவர். எழுத்தாளர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டே அதிபரும் கிளம்பி விடுவார். எதாவது சர்வாதிகார அதிபராக இருந்தால் கவிஞனைப் பிடித்து ஜெயிலில் போடுவார். அப்போதும் எழுத்தாளர் கவலைப்பட மாட்டார். ஜெயிலில் இருந்து கொண்டு அதிபரைத் திட்டி கவிதை எழுதிப் பிரசுரிப்பார். இதற்கெல்லாம் எனக்கு எழுத்தாளன் என்ற அடையாளம் இருக்க வேண்டும். இங்கே வணிக எழுத்தாளர் என்னுடைய அடையாளத்தைப் பறித்து வைத்துக் கொண்டு இருக்கிறார். அதுதான் என் கோபம். அதுதான் என் ஆத்திரத்துக்குக் காரணம்.
அசோகமித்திரனிடம் ஒருநாள் அவருடைய அந்தச் சிறிய அறையில் ஒடுங்கிக் கொண்டு அமர்ந்திருந்த போது யோசித்தேன். இவரிடம் இவருடைய வாழ்நாள் சேகரிப்பான புத்தகங்கள் ஒரு பெரிய நூலகமாக இருக்க வேண்டுமே, இந்த அறையிலோ ஒரு புத்தகத்தைக் காணோமே? ”எங்கே சார் புத்தகங்கள்?” என்று கேட்டேன். “நீங்களே (அவர் யாரையும் ஒருமையில் விளிக்க மாட்டார்) இப்டி ஒடுங்கிண்டு உட்கார்ந்திருக்கேள். (ஒருமுறை அந்த அறை பூராவையும் தன் ஆட்காட்டி விரலால் சுட்டி) இவ்ளோ பெரிய அறையிலே இன்னொருத்தர் வந்தாலே உட்காரக் கஷ்டம். இதிலே நான் புஸ்தங்களை எங்கே வைப்பேன்? எல்லாத்தையும் அப்பப்போ நண்பர்கள்ட்ட கொடுத்திட்டேன்.”
மேலை நாடுகளில் இப்படிச் சொல்லும் ஒரு எழுத்தாளனைக் காண்பியுங்கள், நம் உரையாடலை முடித்துக் கொள்வோம்.
அசோகமித்திரனின் எதிர்வீட்டில் ஒரு பெரிய ராஜாவின் அரண்மனை இருக்கிறது. இளையராஜா என்பது அந்த ராஜாவின் பெயர். அசோகமித்திரனின் அறையைப் பார்க்குந்தோறும் அந்த அரண்மனையை நினைத்துக் கொள்வேன். ஒருநாள் அசோகமித்திரன் என்னை வழியனுப்புவதற்காக வெளியே வந்த போது அந்த அரண்மனையைக் காண்பித்து “இப்படி ஒரு வீட்டில் அல்லவா நீங்கள் இருக்க வேண்டும்” என்று மனம் கசிந்து என்னையும் அறியாமல் சொல்லி விட்டேன். அசோகமித்திரனுக்கு நான் சொல்லும் பல விஷயங்கள் புரியவே புரியாது. ”தமிழைப் போல் ஆங்கிலம் எழுதும் நீங்கள் ஏன் இந்தப் பாடாவதி தமிழில் எழுதி இப்படி வாழ வேண்டும்? அப்போதும் அந்தக் கேள்வி அவருக்குப் புரியவில்லை. ஏன் ஐயா உமக்கு மட்டும் இப்படியெல்லாம் வினோதமா தோண்றது? ஒரு எழுத்தாளன் தன்னோட மொழிலதானே எழுதணும்? நான் ஏன் இங்லீஷ்ல எழுதணும்? புரியல்லியே?” எப்படியாவது தொலை என்று மனதுக்குள் நினைத்தபடி கிளம்பி வந்து விட்டேன். அரண்மனை விஷயத்துக்கும் ஒன்றும் புரியாமல் என்னையே ஆச்சரியத்துடன் மேலும் கீழும் பார்த்தார். பிறகு யோசித்து விட்டு, தன்னுடைய சிறிய அறையைக் காண்பித்து “எழுத்தாளன்னா இங்கேதான் வாழணும்” என்றார்.
என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நாளை எழுதுகிறேன்…
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai