வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற என் நூலை உங்களில் யாரும் படித்திருக்க வாய்ப்பே இல்லை. அதில் நேற்று முழுவதும் ஆழ்ந்து பிழைதிருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்தேன். அதை ஏன் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன் என்றால், அதில் உள்ள கட்டுரைகள் புதிய தலைமுறை இதழில் வந்தவை. நான் பொதுவாக ஒரு அச்சு இதழில் வந்ததை என் இணைய தளத்திலோ முகநூலிலோ பகிரும் வழக்கம் இல்லாதவன். உதாரணமாக, இப்போது குமுதத்தில் வரும் கட்டுரைகளை அவை வெளிவந்து ரெண்டு வாரம் ஆன பிறகும் கூட இங்கே பகிர்வதில்லை. குமுதத்தில் வந்தால் நீங்கள் குமுதத்தை வாங்கிப் படித்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது என் கட்சி. வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஆன்லைனில் குமுதத்தை வாங்கலாம் இல்லையா?
வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொகுப்பில்
உள்ள சில கட்டுரைகளை வாசித்து நான் கண் கலங்கினேன். பல லட்சக்கணக்கான பேர் படிக்க வேண்டிய
இக்கட்டுரைகள் சில நூறு பேரை மட்டுமே சென்றடைகிறதே என்ற வருத்தத்தினால் கலங்கவில்லை.
அக்கட்டுரைகளில் தெரிந்த உருக்கமான சம்பவங்களே அதற்குக் காரணம். உதாரணமாக, ஒரு கதையை
இங்கே தருகிறேன்.
“சில தினங்களுக்கு முன்பு என் வாசகர் ஒருவர், “எப்படி உங்களால் உண்மையையே பேச முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு என் பதில்: “உண்மை, பொய் ஆகிய இரண்டு வழிகளில் நான் உண்மையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் வெறும் சுயநலமே அன்றி வேறெதுவும் அல்ல. பொய் சொன்னால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக ஆயிரத்தெட்டு பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தப் பொய்களுக்காக மூளையைக் கசக்க வேண்டியிருக்கிறது. எனக்கோ மறதி ஜாஸ்தி. உண்மையைத் தேர்ந்தெடுத்தால் பிரச்சினையே இல்லை. பொய் சொன்னால் அதற்காக மனசாட்சியை வேறு கொலை செய்ய வேண்டும். என்னையே நேசிக்கும் நான் என் மனசாட்சி கொலையுண்டு சாவதை – அதுவும் என் கையினாலேயே சாவதைப் பார்க்க முடியுமா? கண்ணாடி முன் நின்றால் எனக்கு நானே பெருமைக்குரியவனாக இருக்க வேண்டும். ஆஹா, மனிதன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! அட அடா, சாரு, நீ எப்பேர்ப்பட்ட மனுஷன் என்று எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொள்ள வேண்டும். மனசாட்சியைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விட்டால் கண்ணாடியில் தெரியும் உருவத்தைப் பார்த்துப் பாராட்டவா தோன்றும்? இதுதான் நான் உண்மையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்.”
இதை எழுதிய பிறகு நான் இதய நாதம், மண்ணில் தெரியுது வானம் என்ற இரண்டு நாவல்களைப் படித்தேன். இரண்டுமே ந.சிதம்பர சுப்ரமணியன் எழுதியது. இதில் இதய நாதம் 1952-இல் எழுதப்பட்டது. அடுத்தது காந்தி நூற்றாண்டின் போது – அதாவது 1969-இல் வெளிவந்தது. மண்ணில் தெரியுது வானம் என்ற நாவலைப் படிக்கும் ஒருவர் அகிம்சையையும் சத்தியத்தையுமே தன் வாழ்க்கை நெறியாகக் கொள்வார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. நாவலின் நாயகன் காந்தி. இந்த நாவலை ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளுக்குப் படித்துக் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இதய நாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். “தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் (1944-93)” என்று சொல்கிறார் உ.வே.சாமிநாதய்யர். மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட மகா வைத்தியநாதய்யரின் வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதய நாதம்.
நாவலின் நாயகன் கிட்டு. சங்கீதத்தின் மீது இருந்த அதீத விருப்பத்தினால் வீட்டை விட்டு ஓடி விடுகிறான். திருவையாறில் வசித்து வந்த சபேசய்யர் என்ற மகா வித்துவான் அவனுடைய அபாரமான திறமையைக் கண்டு அடைக்கலம் கொடுத்து சங்கீதமும் கற்பிக்கிறார். சபேசய்யருக்கு மகாதேவன் என்ற பேரனும் உண்டு. பேரனும் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்கிறான். அவரிடம் ஒரு வீணை இருந்தது. அந்த வீணை அவருடைய குருவிடமிருந்து கிடைத்த சொத்து. அதைத் தனது குருவே போல் போற்றிப் பாதுகாத்து வருகிறார் சபேசய்யர்.
ஒருநாள் மகாதேவன் கொடியில் வேட்டி உலர்த்தும் போது அதன் நுனி வீணையில் பட்டுவிட வீடே கிடுகிடுக்கும்படி அலறி அவனை அறைந்து விடுகிறார் சபேசய்யர். ஒருநாள் அய்யரும் அவர் மனைவியும் பேரனும் வெளியூர் செல்கிறார்கள். வீட்டைப் பார்த்துக் கொள்வது கிட்டு. அவனுக்கு அந்த வீணையை வாசித்து விட வேண்டும் என்று ஆசை. நேரம் ஆக ஆக அந்த ஆசையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. பயந்து கொண்டே அதை எடுக்கிறான். எடுக்கும் தருணத்தில் வாசலில் ஏதோ நிழலாடுகிறது. பயத்தில் வீணை தவறி விழுந்து அதன் பிருடை உடைந்து விடுகிறது. (பிருடை என்றால் வீணையின் தந்திகளை முறுக்கவும் தளர்த்தவும் பயன்படும் முறுக்காணி.) கிட்டுவுக்குப் பயம் பீடித்துக் கொள்கிறது. அப்படியே தன்னை பூதமோ பிசாசோ விழுங்கி விடக் கூடாதா என்று நினைக்கிறான்.
ஊரிலிருந்து திரும்பி வரும் சபேசய்யர் கண்களில் வீணையின் பிருடை உடைந்திருப்பது படுகிறது. கிட்டு மிகவும் அடக்கமானவன். அவனைப் பற்றி அவர் மனதில் தோன்றவே இல்லை. கட்டுக்கடங்காத கோபத்துடன், கண்கள் சிவக்க மகாதேவா என்று அலறுகிறார். மகாதேவன் எங்கேடா என்று பல்லைக் கடித்துக் கொண்டு கிட்டுவைக் கேட்கிறார். கிட்டுவுக்கு உடல் உதறல் எடுக்கிறது. உதடுகள் துடித்தன. வார்த்தை வரவில்லை. கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர். நான் தான்; நான் தான் என்கிறான். அதற்கு மேல் பேச்சு வரவில்லை. ஒரு நிமிஷம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிகிறது. விம்மலுக்கிடையே தெரியாமல் செய்து விட்டேன் என்று கதறுகிறான் கிட்டு. அவர் முகத்தில் கொதித்த கோபம் மறுவிநாடியில் கருணையாய் மாறுகிறது. சாந்தமாக, “இங்கே வா,” என்கிறார். வாங்கிக்கொள்ளத் தயாராக கிட்டு அவர் அருகே வருகிறான். அவன் தோள் மேல் கையை வைத்து, “போனால் போகிறது. அது முன்பே விரிந்திருந்தது. ஏதோ நடந்து விட்டது. ஆனால் நீ உண்மையை ஒப்புக் கொண்டாயே, அதுவே போதும். வீணை உயர்ந்ததுதான். ஆனால் உண்மை அதை விட உயர்ந்தது,” என்கிறார்.
கொஞ்ச நாள் உண்மையைப் பேசிப் பாருங்கள். அது உங்களுக்கு ஒரு விடுதலை உணர்வைக் கொடுக்கக் காண்பீர்கள். ஏனென்றால், பயம்தான் பொய்யை உருவாக்குகிறது. உண்மை பேச ஆரம்பித்தால் பயம் நம்மை விட்டு அகன்று விடும். ஆனால் உண்மையோடு சற்று விவேகமும் இருக்க வேண்டும். எப்படி? மண்ணில் தெரியுது வானத்தில் ந.சிதம்பர சுப்ரமணியன் விவரிக்கிறார். தெருவில் சில சிறுவர்கள் ஆமையை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆமை சாகவில்லை. அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த காஷாயம் தரித்த பண்டாரம் சிறுவர்கள் செய்வதைப் பார்த்து விட்டு, ஆமையைத் திருப்பிப் போட்டு அடித்தால் சாகும் என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு போகிறார். பண்டாரம் என்னவோ உண்மையைத்தான் சொன்னார். சிறுவர்களிடம் அவர் நேரடியாகவும் சொல்லவில்லை. இருந்தாலும் இது சத்தியமாகுமா? திருவள்ளுவர் விளக்கம் தருகிறார். வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். யாரையும் இம்சிக்காத கூற்றே வாய்மை ஆகும்.”
இந்த நாவலைப் படித்து என் ஆன்மாவில் செரித்துக் கொண்ட ஒருவரால் பொய் பேச முடியுமா சொல்லுங்கள்? இலக்கியம் இப்படியாகத்தான் ஒரு மனிதனைப் பண்படுத்துகிறது. ந. சிதம்பர சுப்ரமணியனின் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் ஏற்கனவே ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கால் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம் போல் ஆயிரக் கணக்கில் விற்றும் தீர்ந்து விட்டன. காயத்ரி கூட நேற்று பிம்டபிள்யு வாங்கலாமா பென்ஸ் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தார். தமிழில் பதிப்பகம் வைத்தால் அவ்வளவு லாபம் பார்த்துக் கொள்ளுங்கள்!!! அதன் காரணமாக, ஸீரோ டிகிரியிலேயே இதய நாதம், மண்ணில் தெரியுது வானம் ஆகிய இரண்டு நாவல்களையும் வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகளும் ஸீரோ டிகிரியிலிருந்து வெளிவர உள்ளது.
எத்தனை துல்லியமாக அங்கே வேலை நடக்கிறது என்றால், John of the Cross என்ற கட்டுரையில் அருளப்பராக (John of the Cross-ஐ தமிழில் அருளப்பர் என்று சொல்கிறார்கள்) நடித்திருக்கும் லியனார்தோ (காப்ரியோ இல்லை; இவர் வேறு) பற்றிச் சொல்லி விட்டு, தெரஸாவாக (இது வேறு தெரஸா) நடித்திருப்பவரின் பெயரைக் கண்டு பிடிக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன். பிறகு முகநூலில் போட்டு சில நண்பர்கள் மூலம் பெயரைக் கண்டு பிடித்து அச்சகத்துக்குப் போக இருந்த புத்தகத்தைப் பிடித்து திருத்தம் செய்தாகி விட்டது. இப்படியெல்லாம் உழைத்தால் முக்கி முக்கி நூறு பிரதி போகிறது. ம்…
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai