என்னென்ன நூல்கள் வேண்டும்?

அன்புள்ள சாரு,
உங்கள் பதிவு பார்த்தேன். என்ன புத்தகங்கள் வேண்டும் சாரு? யாருக்கு அனுப்பினால் உங்களுக்கு உடனே கிடைக்கும்?
அன்புடன்,

*****

பிரியமுள்ள ……………….க்கு,

ஆஹா தெய்வமே, நீங்களா?  இருங்கள்.  உங்களுக்கு விரிவாக எழுத வேண்டும்.

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia என்ற பத்திரிகையில் Notes from Madras என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறேன்.  அது ஓவியத்திற்காகவே வரும் ஒரு குவார்ட்டர்லி பத்திரிகை.  அதன் ஆசிரியர் மார்க் எனக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஒரு தொடர் எழுதும்படி கேட்டபோது ஓவியம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே என்றேன்.  வேண்டாம், பொதுவாக எழுதுங்கள் என்றார்.  அரைப் பக்கம் எனக்குக் கொடுக்கப்பட்ட அளவு.  நான் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் இரண்டு பக்கம் வரும் அளவு எழுதி அனுப்பி இதில் ஏதாவது ஒரு அரைப் பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.  அதிலிருந்து அவர்கள் என்னை இரண்டு பக்கமே எழுதப் பணித்தார்கள்.  அந்தப் பத்திரிகையின் முழு ஆசிரியர் குழுவும் என் எழுத்து மேல் பைத்தியம். 

மார்ஜினல் மேன் வெளிவந்த உடனேயே மார்க்குக்கு ப்ளூ டார்ட் கொரியர் மூலம் அந்த நாவலை அனுப்பி வைத்தேன்.  மார்க்குக்கு (Mark Rappolt) ஒரு காப்பி.  உதவி ஆசிரியர் டேவிட்டுக்கு ஒரு காப்பி.  டேவிட் தான் என் கட்டுரைகளை எடிட் செய்பவர்.  இருவருமே என் கட்டுரைகளின் தீவிர விசிறி.  இதில் மார்க் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  அவர் எனக்கு ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்கு column கேட்டு எழுதியபோது “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றே கேட்டு எழுதினேன்.  லண்டனிலிருந்து வெளிவரும் ஒரு ஓவிய ஜர்னலின் ஆசிரியர் என்னை அவர் பத்திரிகைக்கு column கேட்டு எழுதுவதை என்னால் நம்ப முடியவில்லை. அதற்கு அவர் சொன்னார்.  சீனாவில் ஒரு ஓவியக் கண்காட்சியின் போது அவரிடம் ஒரு சீன ஓவியர் என்னுடைய ஸீரோ டிகிரி நாவல் பற்றிச் சொல்லி, அதை அவருக்குப் படிக்கவும் கொடுத்தாராம்.  அந்தச் சமயத்தில் அந்த நாவல் out of print ஆக இருந்தது.  அப்போது மட்டும் அல்ல; பல ஆண்டுகளாகவே அந்த நாவலுக்கு அந்த கதிதான்.  அதை அவர் சீனாவிலிருந்து லண்டன் வரும் போது விமானத்திலேயே படித்து மனம் பறி கொடுத்து விட்டதாகவும் அதனால்தான் இப்போது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வதாகவும் எனக்கு எழுதியிருந்தார். 

மார்ஜினல் மேனை மார்க்குக்கு ப்ளூ டார்ட் கொரியர் மூலம் அனுப்பியதில் சுமார் 6000 ரூ. எனக்கு செலவாகி விட்டது.  நண்பர்கள் திட்டினார்கள்.  இந்தியாவின் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பினால் ஆயிரம் ரூபாய்தான் ஆகும்.  அதில் அனுப்பியிருக்கலாமே என்பது நண்பர்களின் கருத்து.  ஆனால் மார்ஜினல் மேனை மார்க் உடனடியாகப் பார்க்க வேண்டும்; நேரமிருந்தால் படிக்க வேண்டும் என்று எண்ணினேன். 

ஏனென்றால், நான் என்னைப் பற்றி பெரிய புடுங்கி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்; உலக இலக்கியம் வாசித்திராத என் வாசகர் வட்டத்தினரும் என்னை ஆஹா ஓஹோ என்கிறார்கள்.  ஆனால் சு.ரா. குழுவினர், ஜெயமோகன், அசோகமித்திரன், சுஜாதா போன்ற அத்தனை பேருமே என்னை ஒரு எழுத்தாளர் என்றே ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை.  மோசமான எழுத்தாளர் என்று கூட சொல்வதில்லை; எழுத்தாளரே இல்லை என்பதுதான் அவர்கள் கருத்து. சுஜாதா என்னுடைய முதல் நாவல் பற்றி கங்கையின் ஜலத்தில் மஞ்சளாக மிதக்கும் ஒரு வஸ்து என்று கணையாழி கடைசிப் பக்கத்தில் எழுதினார்.  இத்தனைக்கும் அவர் கர்ட் வனேகட், ஹென்றி மில்லர் போன்றவர்களைப் படித்தவர்.  ஆங்கிலத்தில் எழுதினால் ஜீனியஸ்; தமிழில் எழுதினால் ஷிட்.  அசோகமித்திரனை நான் என்னுடைய ஆசான், தந்தை என்றெல்லாம் கொண்டாடிக் கொண்டே இருந்தது அவருக்குக் கடைசி வரை மன உளைச்சலாகவே இருந்தது.  அடிக்கடி நேரிலேயே சொல்வார்; நீங்க எழுதுறதெல்லாம்…  என்று ரெண்டு வார்த்தை சொல்லி விட்டு “அதெல்லாம் என்னன்னே புரியலை.  என்ன சொல்றதுன்னே தெரியலை… ம்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு.  அவருக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றி முகத்தைச் சுளிப்பார் இல்லையா, அவரைச் சந்தித்த அனைவருக்கும் அந்த முகச் சுளிப்பு தெரிந்திருக்கும், அந்த சுளிப்பையும் எனக்குத் தருவார்.  அதனால் எனக்குள் அவ்வப்போது ஒரு சம்சயம் ஏற்படுவதுண்டு.  உண்மையிலேயே நாம், நாம் நினைக்கும் அளவுக்கு ஒரு ஆள்தானா என்பதே அந்த சம்சயம். 

சமீபத்தில் கூட ஜெமோ சாருவிடம் அழகியல் இல்லை என்று எழுதியிருக்கிறார் பார்த்தீர்களா?  இப்படி 40 ஆண்டுகளாக என்னைக் குறித்து என் மதிப்புக்குரியவர்களும் என் ரசனை உலகுக்கு வெளியே இருப்பவர்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றனர்.    ஆனாலும் உலகமே எதிர்த்துச் சொன்னாலும் உலக இலக்கியத்தைக் கற்றிருந்த எனக்கு நாம் எழுதுவது ஒரு பெரும் அழகியல் சாதனைதான் என்ற எண்ணம் இருந்தே வந்தது.  இதற்கிடையில் நண்பர் கமல்ஹாசனின் நினைப்பும் வந்து விடும்.  அவரும் உலக இலக்கியம் கற்றவர்.  அப்படிப்பட்டவர் தன்னுடைய அரைவேக்காட்டு உளறல்களைக் கவிதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னையும் தன் ரசிகர்கள் கருதுவது போல உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.  அப்படி நாமும் நாம் அடிப்படையில் ஒரு நார்ஸிஸிஸ்ட் என்பதால் அப்படி நினைக்கிறோமோ என்ற சம்சயம் வந்து விடும்.  சரி, இதை எப்படித்தான் சோதித்துப் பார்ப்பது?

மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்பு முடிந்த கையோடு என் எழுத்தோடு சம்பந்தமே இல்லாத ஆலன் ஸீலியிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.  Allan Sealyயை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஆங்கிலோ இந்திய கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்.   அவரை நான் முதன்முதலில் Almost Island செமினாரில் சந்தித்த போது ஸீரோ டிகிரியைப் படித்திருந்தார் என்று தெரிந்தது.  ரொம்ப மரியாதையுடன் பேசினார்.  அந்தச் சந்திப்புக்குப் பிறகு என் நெருங்கிய நண்பராக ஆனார்.  சென்னை வரும் போதெல்லாம் சந்திப்பார்.  நானும் அவருடைய The Trotter Nama, Hero ஆகிய இரண்டு நாவல்களையும் படித்து முடித்தேன்.  ட்ராட்டர் நாமா ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தின் ஏழு தலைமுறைக் கதை.  2000 பக்கங்கள் வரும்.  கடுகத்தனை எழுத்திலேயே ஆயிரம் பக்கம் வருகிறது.  ஹீரோ சின்ன நாவல்தான்.  நம் எம்ஜியாரை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல். இப்போது அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.  இப்படி தமிழில்தான் நம்மை எழுத்தாளனே இல்லை என்கிறார்களே என்று மார்ஜினல் மேன் பிரதியை ஆலனுக்கு அனுப்பினேன்.  மிகவும் நெருக்கடியான சூழல் அது.  ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் முதல் வெளியீடாக வரும் புத்தகங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது.  புத்தகம் வெளிவர ஒரு மாதம் இருக்கும் போது மிகுந்த தயக்கத்துடன் ஆலனுக்கு அனுப்பினேன்.  அவர் நான் ஸாஃப்ட் காப்பி படிப்பதில்லையே என்றார்.  உடனே நான் அதை ப்ரிண்ட் அவ்ட் எடுத்து அனுப்பினேன்.  இதற்கே பத்து நாள் ஆகி விட்டது.  நான் அவரிடம் முன்னுரையெல்லாம் கேட்கவில்லை.  நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள் என்று மட்டுமே சொன்னேன்.  ஒரு வருடம் ஆனாலும் சரி, அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்க எனக்கு ஆவல்.  ஏனென்றால், அதைப் படித்திருந்த சில நண்பர்கள் அது பற்றி எதிர்மறையான அபிப்பிராயங்களையே சொல்லியிருந்தனர்.  அந்த அபிப்பிராயங்கள் இலக்கியரீதியானவை அல்ல என்பதால் அவற்றின் மீது எனக்குக் கொஞ்சம் கூட மரியாதை ஏற்படவில்லை.  நாவலை சுருக்க வேண்டும்; நாவல் பெரிதாக இருக்கிறது; தொடர்பில்லாமல் இருக்கிறது; கதை புரியவில்லை என்பது போன்ற அபிப்பிராயங்கள் அவை.  ஆங்கிலம் தெரிந்த அற்பப் பதர்கள் என்று அதை ஒதுக்கி விட்டு, ஆலன் ஸீலியின் கருத்துக்காகக் காத்திருந்தேன்.  அப்படி ஒன்றும் அவர் நட்பு ரீதியாக இலக்கியம் பாராட்டுபவர் அல்ல என்று எனக்குத் தெரியும் என்பதால் நாவலுக்கு அவரிடமிருந்து என்ன எதிர்வினை கிடைக்கும் என்று அறிந்து கொள்ள கொஞ்சம் பதற்றமாகவே காத்திருந்தேன்.  இரண்டே வாரத்தில் அவர் நாவலைப் படித்து முடித்து எழுதிய கடிதத்தை நாவலுக்கு அணிந்துரையாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு எழுதி, அவர் அதற்கு ஒப்புதல் அளித்ததும் அதுவே நாவலின் அணிந்துரையாக அமைந்தது. 

மார்க்குக்கு நாவல் இரண்டொரு தினங்களிலேயே கிடைத்து விட்டது.  அவர் அப்போது இந்தியா கிளம்பிக் கொண்டிருந்தார்.  நல்லவேளையாக அவர் கிளம்புவதற்கு முன்பே நாவல் கிடைத்து விட்டதால் அதை எடுத்துக் கொண்டே கிளம்பினார் போல.  இந்தியாவில் பஞ்சாபிலிருந்து சென்னை வரை அங்குமிங்குமாக அவருக்குப் பயணம்.  அந்தப் பயணத்திலேயே அத்தனை பெரிய நாவலைப் படித்து விட்டார்.  படித்துக் கொண்டிருக்கும் போதே “நாவல் எப்படிப் போகிறது?” என்று கேட்டு மெஸேஜ் பண்ணினேன்.  Dangerously addictive என்று பதில் வந்தது.  சில தினங்களில் நேரில் சந்தித்தார்.  அப்போது நாவலைப் படித்து முடித்திருந்தார்.  நாவல் அவருக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மொழிபெயர்ப்பு எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள ஆசை.  கேட்டேன்.  மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை என்றார்.  ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கு இதை விடப் பெரிய பாராட்டு வேறு உண்டா என்ன?   பின்னர், ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் மார்ஜினல் மேன் பற்றி அருமையான மதிப்புரையும் எழுதினார்.  இதற்கிடையில் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் என் கட்டுரையின் நீளம் மூன்று பக்கங்களுக்கு நீண்டு விட்டது.  அப்படியும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. 

பிறகு விவேக் நாராயணன் என்று ஒரு ஆங்கிலக் கவி.  அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.  அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது.  ஆங்கிலத்தில்தான் தமிழ் இலக்கியம் வாசிப்பார்.  அவருடைய ஆங்கிலக் கவிதைகள் எனக்குப் புரிவதில்லை.  படிக்க மிகவும் கடினமாக இருக்கும்.  அவருக்குக் கிடைத்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை வைத்துப் படித்து ஆதவனையும் அசோகமித்திரனையும் மட்டுமே ஏற்றுக் கொள்வார்.  வேறு யாருடைய உலகத்திலும் உள்ளேயே போக முடியவில்லை என்பார்.  அந்த மொழிபெயர்ப்பெல்லாம் ஆங்கிலமே இல்லை என்பார்.  ”ஆதவனும் அசோகமித்திரனும் மட்டும்தானா, அப்படியானால் நான்?” என்றேன் ஒருமுறை.   அவர் சொன்ன பதிலை என் வாழ்நாள் பூராவும் மறக்க மாட்டேன்.  ”உங்களை நான் தமிழ் எழுத்தாளர் என்றே நினைக்கவில்லையே?”  அவர் மார்ஜினல் மேன் பற்றிச் சொன்னது ரொம்பப் பெரிய வார்த்தை.  இங்கே சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது. 

சரி, இதையெல்லாம் இப்போது இந்தத் தருணத்தில் உங்களுக்கு எழுத என்ன காரணம்?  நீங்கள் என் எழுத்தைப் படித்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பிடிக்குமா? தெரியாது.  ஒருவரை முற்றிலும் புறக்கணிப்பது வேறு; ஒருவரின் எழுத்து நமக்குப் பிடிக்காது என்பது வேறு.  எனக்கு அலெஹோ கார்ப்பெந்த்தியரைப் பிடிக்கும்; ரொபர்த்தோ பொலான்யோவைப் பிடிக்காது; உலகமெல்லாம் கொண்டாடும் ஹாருகி முராகாமியைப் பிடிக்காது.  அப்படி என் எழுத்து உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம்.  அதை நான் எப்போதும் ஏற்றுக் கொள்வேன்.  ஆனால் நாம் இணையும் இடம், உங்கள் எழுத்து.  நீங்கள் எனக்கு மிகப் பிரியமான எழுத்தாளர். இப்போது உங்களைத் தெரியாதவர் இல்லை.  ஆனால் ஆரம்பத்திலிருந்தே உங்கள் எழுத்தின் மீது எனக்குப் பெரும் மரியாதையும் ஈடுபாடும் உண்டு.  எனவேதான் மேற்கண்ட விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. 

இப்போது மெய்ன் விஷயத்துக்கு வருவோம்.  எனக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி அனுப்புவது பற்றி.  அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது என்னிடம் “உங்களுக்குத் தேவையான புத்தகங்களைச் சொல்லுங்கள், வாங்கி அனுப்புகிறேன்” என்று சொல்வது போல் இருக்கிறது.  புரியவில்லையா?  அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் நூறு நண்பர்கள் எனக்கு உண்டு.  ஆனால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமே.  அதனால் நீங்கள் செய்யக் கூடியது புத்தகம் வாங்கி அனுப்புவது அல்ல; நான் அனுப்பும் புத்தகங்களை வாங்கி அங்கே அறிமுகப்படுத்துவது.  ஸீரோ டிகிரி வந்த போது நான் ஒரு வேலை செய்தேன்.  அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்களை ஒவ்வொரு பிரதி வாங்கி அந்தந்த நகர நூலகங்களில் வைக்கச் செய்தேன்.  ஒரு Cult உறுப்பினர்களைப் போல் அதைச் செய்தார்கள்.  மார்ஜினல் மேனுக்கு அப்படி நான் செய்யவில்லை.  வேறு வேலையில் மும்முரமாகி விட்டேன்.  மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.  மார்க்குக்கு ஒரு சீன ஓவியர் ஸீரோ டிகிரியை அறிமுகப்படுத்தி, படிக்கச் சொல்லி கொடுத்ததை.  அது எப்படி நடக்கும்?

உங்களைப் போல் கல்வித் துறையில் இருப்பவர்கள் மார்ஜினல் மேனை உங்கள் கல்லூரி நூலகங்களில் வைக்க முயற்சி செய்யலாம்.  அது போதும்.  கிடைக்க வேண்டியவர்களில் கையில் அதுவாகக் கிடைக்கும்.  கலாம் ஞாபகம் வருகிறது.  உங்களுக்குப் புத்தகம் வாங்கி வருகிறேன் என்று ஜனாதிபதி சொன்னால் நான் என்ன சொல்வேன் தெரியுமா?  புத்தகம் எல்லாம் வேண்டாம் சார், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இண்டியா இண்டர்நேஷனல் செண்டரில் எனக்கு ஒரு உறுப்பினர் கார்டு வாங்கிக் கொடுங்கள் என்பேன்.  அவர் செய்வாரா இல்லையா என்பது வேறு விஷயம்.  ஆனால் இண்டியா இண்டர்நேஷனல் செண்டரில் உறுப்பினராக ஆனால் சில அனுகூலங்கள் உள்ளன.  தில்லியில் நட்சத்திர விடுதிகளின் அறை வாடகை பத்தாயிரம் ரூபாய் இருக்கலாம்.   அதே வசதிகளைக் கொண்ட இந்திய சர்வதேச மையத்தின் அறை வாடகை 2000 ரூபாய்தான்.  உறுப்பினர்களுக்கும் உறுப்பினர்கள் சிபாரிசு செய்பவர்களுக்கும் மட்டுமே இந்த வசதி.  இப்போது வங்காளிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் அந்த மையத்தில் ஒரு நூலகம் உள்ளது.  உங்களுக்கு Dublin Impac இலக்கிய விருது பற்றித் தெரிந்திருக்கும்.  அந்த விருது ஒரே ஒரு நாவலுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையைத் தருகிறது.  அந்த விருதுக்கு உலகில் உள்ள முக்கியமான நூலகங்கள் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.  ஏனென்றால், டப்ளினில் உள்ள நூலகம்தான் அந்த விருதைத் தருகிறது.  அமெரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட முப்பது நூலகங்கள் பரிந்துரை செய்ய முடியும்.  ஆனால் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு நூலகம்தான் அதற்குத் தகுதியானது.  அது இண்டியா இண்டர்நேஷனல் செண்டர் நூலகம்.  அதாவது, விருதுக்குப் பரிந்துரை மட்டுமே செய்யலாம். அதற்கு நம் நூல் அந்த நூலகத்தில் இருக்க வேண்டும் அல்லவா?  எப்படி இருக்கும்?  நம்மைத்தான் உள்ளேயே நுழைய விட மாட்டேன் என்கிறானே?  முழுக்க முழுக்க வங்காளிகள்தான் அந்த நூலகத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த நூலகத்தில் என் நூலை இடம் பெறச் செய்யவெல்லாம் வேண்டாம்.  சும்மா அந்த மையத்தில் எனக்கு ஒரு மெம்பர் கார்ட் வாங்கித் தாருங்கள் என்றே கலாமிடம் கேட்பேன்.

அதேதான் உங்களுக்கும்.  நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று நீங்கள் கேட்கலாம்.  அந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.  அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்தான் இன்று தீவிரமான இலக்கியச் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அரபி இலக்கியம் பற்றித் தெரிய வேண்டுமா?  அந்த நூல்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே பிரசுரம் செய்கின்றன.  அமெரிக்க அரசு எப்படி உலகம் பூராவுக்கும் தாதாவாக விளங்குகிறதோ அதற்கு எதிர்மாறாக உலகம் பூராவும் நடக்கும் மாற்றுக் கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே களம் அமைத்துக் கொடுப்பதில் ஒரு சிறிதளவாவது முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன.  அதெல்லாம் கூட நமக்கு வேண்டாம்.  ஸீரோ டிகிரியை modern asian classic பாடத்திட்டத்தில் வைத்தது ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகம்.  ஆக, நீங்கள் செய்யக் கூடியது, ஒரு மார்ஜினல் மேன் பிரதியை உங்கள் கல்லூரி/பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப் பரிந்துரை செய்வது.  இன்னொரு பிரதியை (இரண்டு பிரதி அனுப்புகிறேன்) Marc Rappolt மாதிரி ஒரு ஆளைச் சந்தித்தால் அவரிடம் கொடுப்பது. 

செய்வீர்களா?

மிக்க அன்புடன்,

சாரு