M&L

அலெஹாந்த்ரா பிஸார்னிக் (Alejandra Pizarnik) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவரைப் போன்ற ஒரு கவிஞர் உலகில் இல்லை. இவரை ஒப்பிட வேண்டுமானால் யாருடன் ஒப்பிடுவது என்றே தெரியவில்லை. வேறு துறைகளில் வேண்டுமானால் ஒப்பிடலாம். அந்தோனின் ஆர்த்தோ, மார்க்கி தெ சாத் என்று ஒரு சிலர். இவர் ஒரே ஒரு சிறுகதைதான் எழுதியிருக்கிறார் என்று ஞாபகம். அந்தச் சிறுகதையை ரத்த வேட்கை என்ற தலைப்பில் ஊரின் மிக அழகான பெண் என்ற என் மொழிபெயர்ப்புத் தொகுதியில் மொழிபெயர்த்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை உங்கள் ஆயுட்காலத்தில் படித்திருக்க வாய்ப்பு இல்லை. தற்கொலை செய்து கொண்டு இறந்தவர் பிஸார்னிக். இவருடைய புத்தகங்களைப் பற்றித் தேடிக் கொண்டிருந்த போது தென்பட்டதுதான் ம்யூசிக் அண்ட் லிட்ரேச்சர் என்ற பத்திரிகை. இதற்கு ஆண்டுச் சந்தா செலுத்தலாம் என்று பார்த்தால் தலை சுற்றுகிறது. நான்கு இதழ்களின் சந்தா 65 டாலர். ஆயுட்கால சந்தா 350 டாலர். நான்கு இதழ் சந்தாவை விட ஆயுட்கால சந்தா மலிவாகத் தெரிகிறது. உலகில் அதிகம் பேசப்படாத எழுத்தாளர்களைப் பிரசுரிப்பதே இப்பத்திரிகையின் நோக்கம்.

யாரேனும் நண்பர்கள் எனக்காக சந்தா கட்ட இயலுமா? அதை விட முக்கியம், அந்தப் பத்திரிகையின் ப்ரிண்ட் இஷ்யூவை இந்தியாவுக்கு அனுப்புவார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மட்டுமே ஆன்லைன் இஷ்யூவுக்கு முயற்சிக்கலாம். அதை அவர்களிடம் விசாரித்துத்தான் பார்க்க வேண்டும். சந்தா அமெரிக்க நிலைமைக்கே மிகப் பெரிய தொகையாகத் தெரிகிறது. யாராலாவது முடியுமா பாருங்கள். முடிந்தால் மிக அரிய, இதுவரை தெரிந்திராத எழுத்துக்காரர்களைத் தமிழில் அறிமுகப்படுத்தலாம்.

ஊரின் மிக அழகான பெண் தொகுப்பை பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். கூடவே சார்த்தரின் சிறுகதை சுவர்-ஐயும் அதில் சேர்த்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் படிகள் பத்திரிகைக்காக மொழிபெயர்த்த சிறுகதை. இன்னும் 15 நாட்களில் உங்களுக்கு அந்த நூல் கிடைக்கும்.

charu.nivedita.india@gmail.com