பழுப்பு நிறப் பக்கங்கள் சலுகை விலையில்…

https://tinyurl.com/pazhuppubundle

நேற்று கூட என் நண்பர் ஒருவர் பதின்பருவத்தினருக்கும் சிறார்களுக்கும் நீங்கள் எழுதினால் என்ன?  உங்களை நான் 25 வயதில்தான் வந்து அடைந்தேன்.  ஆனால் உங்களை ஒருவர் தன் 15 வயதில் அடைய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று அன்புடனும் ஆதங்கத்துடனும் குறிப்பிட்டார்.  நான் அவரிடம் சொன்னேன், என் நாவல்களைத் தவிர என்னுடைய எல்லா நூல்களுமே பதின்பருவத்தினருக்கானதுதான்.  உதாரணமாக, அறம் பொருள் இன்பம், கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங், வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள், நாடோடியின் நாட்குறிப்புகள், கடைசிப் பக்கங்கள், கோணல் பக்கங்கள் என்று பலப்பல புத்தகங்களைச் சொல்லலாம்.  அதிலும் நிலவு தேயாத தேசம், பழுப்பு நிறப் பக்கங்கள் (மூன்று தொகுதிகள்) இரண்டும் பள்ளி மாணவர்களும் படிக்க வேண்டியவை. 

நிலவு தேயாத தேசம் பயண நூல் என்பதால் அதற்கு ஓரளவு ஆதரவு இருந்தது.  ஆனால் ஆயிரக் கணக்கில் விற்றிருக்க வேண்டிய பழுப்பு நிறப் பக்கங்களை அதிகம் பேர் வாங்கவில்லை; அதிகம் பேர் வாசிக்கவில்லை.  தினமணியில் வாராவாரம் வெளிவந்த தொடர் அது.  சமகாலத் தமிழ் இலக்கியத்தின் திறவுகோலாக இருக்கக் கூடிய நூல்கள் அவை.  தஞ்சை ப்ரகாஷிலிருந்து எஸ். சம்பத் வரை இதுவரை பேசப்படாத அத்தனை பேர் பற்றிய அறிமுகமும் அதில் உண்டு.  இன்று எஸ். சம்பத்தின் இடைவெளி என்ற நாவல் இன்று அவர் எழுதி எடிட் செய்த வடிவில் புத்தகமாகக் கிடைக்காது.  அழகிய சிங்கர் அதைப் பதிப்பித்திருக்கிறார்.  ஆனால் அது சி. மோகன் எஸ். சம்பத்துடன் சேர்ந்து எடிட் செய்த வடிவம் அல்ல.  இப்போது உங்களுக்குக் கிடைப்பது ஒரு ட்ராஃப்ட் காப்பி.  நல்ல முறையில் எடிட் செய்ததை க்ரியா தான் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.  இப்போது அதை வெளியிட சம்பத்தின் குடும்பத்தினர் அனுமதி தர மறுக்கின்றனர்.  அதாவது, நீங்கள் அந்தப் பிரதியை வைத்து எதையாவது செய்து கொள்ளுங்கள்; எங்கள் அனுமதி கேட்காதீர்கள் என்பதே சம்பத்தின் குடும்பத்தினர் தெரிவிப்பது.  புதுப்பேட்டை படத்தில் ஹீரோ தன் தகப்பனை உயிரோடு குழி தோண்டிப் புதைப்பான் இல்லையா, அந்த மாதிரி வேலை இது.  இப்போது இடைவெளி நாவலையே யாரும் படிக்க முடியாது.  நான் ஒரு பதிப்பாளராக இருந்தால் மயிரே போச்சு என்று இடைவெளியை அதன் ஒரிஜினல் வடிவத்தில் பதிப்பிப்பேன்.  குடும்பத்தினர் வழக்குத் தொடுத்தால் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நீதி கேட்பேன்.  தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களும் விமர்சகர்களும் உலகின் மிகச் சிறந்த நாவல் என்று கொண்டாடும் ஒரு நாவலை வெளியிடாதே என்று சொல்ல அந்த எழுத்தாளனின் குடும்பத்தினருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பேன்.  ஆம், இடைவெளி உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.  அதற்கு இந்திய மொழிகளிலேயே ஈடு இணை கிடையாது.  அந்த நாவலின் ஒரிஜினல் வடிவத்தைப் படித்து அதிக அளவில், பல பக்களில் மேற்கோள் காண்பித்து எழுதியிருக்கிறேன்.  எல்லாம் பழுப்பு நிறப் பக்கங்களில்.  இந்த நூலை கல்லூரிகளும் பள்ளிகளும் தங்கள் நூலகத்தில் வைத்திருக்க வேண்டும்.  அது நடக்கவில்லை.  ஏதாவது மெழுகுவர்த்தி விருது தொடப்பக்கட்டை விருது என்று கொடுத்திருந்தாலாவது நாலு பேருக்குத் தெரிந்திருக்கும்.  அதுவும் நடக்கவில்லை.  அப்படியே கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது.  ஏ, பாவிகளா, அந்த நூலை நான் எழுதவில்லை.  சி.சு. செல்லப்பா எழுதினார்.  க.நா.சு. எழுதினார்.  கு.ப.ரா. எழுதினார்.  அவர்களைப் பற்றி நான் எழுதினேன்.  அப்படியும் யாரும் அசையவில்லை.  என் பெயர் அப்பேர்ப்பட்ட தடை!

இப்போது அந்தப் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதியும் 700 ரூபாய்க்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கிறது.  மொத்த விலை 1100 ரூபாய் என்பதை 400 ரூ. தள்ளுபடி செய்து 700 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள்.  ஆளுக்கு ஐந்து ஐந்து பிரதிகள் வாங்கி நூலகங்களுக்குக் கொடுங்கள்.  உங்கள் வீட்டிலும் நிச்சயம் இருக்க வேண்டிய தொகுதி.  இந்த நூலை நம் பிள்ளைகளோடு படிக்கலாம்!!!

நூல் எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து எழுதாதீர்கள்.  கீழே முகவரி தருகிறேன்.

Zero Degree Publishing

No.55(7), R Block, 6th Avenue,

Anna Nagar,

Chennai 600040

Phone: 98400 65000

E mail: zerodegreepublishing@gmail.com