ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மிக மிக முக்கியமான மொழிபெயர்ப்புத் தொகுப்பை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். இந்த நூலை சென்னை புத்தக விழாவிலேயே கொண்டு வந்து விட வேண்டும் என்று விரும்பினேன். ஆனாலும் நான் ஒரு perfectionist என்பதால் அவசர கோலமாகக் கொண்டு வருவதில் இஷ்டமில்லை. பிழை திருத்தம் முடியும் வரை நீண்ட பதிவுகள் எதுவும் எழுதக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தேன். ஆனாலும் இன்று நேர்ந்த ஒரு சம்பவத்தால் பிழை திருத்தத்தை ஒத்தி வைத்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கடந்த பத்தாண்டுகளாக புத்தகங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. தரம் குறைந்திருக்கிறது. பிழையே பார்க்க முடியாத முதல் தர பதிப்பகமான க்ரியாவின் நூல்களிலேயே பிழைகள் காணப்படுகின்றன. தமிழே யாருக்கும் தெரியாமல் போய் விட்டபடியால் பிழை திருத்தம் செய்தல் என்ற காரியமே நின்று போய் விட்டது. அதன் காரணமாக 99 சதவிகித புத்தகங்கள் பிழைகளுடனேயே வருகின்றன. இந்த சதவிகிதத்தில் சிலருக்கு ஆட்சேபணை இருக்கலாம். என்னுடைய நண்பர்கள் நடத்தி வரும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் காயத்ரியும் ராம்ஜியும் சேர்ந்து பிழைதிருத்தம் செய்வதால் அங்கே பிழைகள் சற்று மட்டுப்படுகின்றன. என்னுடைய நூல்களில் 200 பக்க புத்தகத்தில் அதிக பட்சம் பத்து பிழை இருக்கலாம். ஆனால் நான் வாசிக்க நேரும் நூல்களில் பக்கத்துக்கு ஐந்து பிழைகள் உள்ளன. இதில் இலக்கணப் பிழைகள், தமிழ்க் கொலை ஆகியவற்றைச் சேர்க்கவில்லை. சேர்த்தால் ஹராகிரிதான் ஒரே தீர்வு.
இப்படிப்பட்ட பரிதாபகரமான சூழலில் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட க.நா.சு., சி.சு.செ., தி.ஜானகிராமன், கு.ப.ரா., லா.ச.ரா. போன்றவர்களின் எழுத்துக்களில் எத்தனை பிழைகள் இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். அதிலும் தஞ்சை ப்ரகாஷ் தஞ்சாவூர் மாவட்டத்து முஸ்லீம்களின் வாழ்க்கையை எழுதியவர். அந்த மொழியின் பல வார்த்தைகள் தஞ்சாவூரில் வசிக்கும் ஒரு இந்துவுக்கே புரியாது. அப்படியிருக்கும் போது அதில் ஏதேனும் அச்சுப்பிழை நேர்ந்தால் என்ன ஆவது? சி.சு. செல்லப்பா தன் உயிரை விட்டு எழுதிய நாவல் சுதந்திர தாகம். 2000 பக்கம். தன் வாழ்நாளெல்லாம் எழுதினார். திருவல்லிக்கேணி வீட்டின் ஒரு இருண்ட அறையில் ஒற்றை விளக்கை வைத்துக் கொண்டு எழுதி பிரசுரித்தார். வயதான காலத்தில் அந்த 2000 பக்கங்களுக்கும் பிழை திருத்தம் செய்தார். இப்போது அந்த நாவலின் மறு பதிப்பு வந்துள்ளது. அந்த நாவலில் காந்தியும் வருகிறார். கற்பனையாக அல்ல. சரித்திர நாயகனாக. புத்தகத்தைத் திறந்ததும், முதல் பக்கத்தில், முதல் வார்த்தை இப்படி ஆரம்பிக்கிறது:
மகாத்மா காண்டு
காண்டு என்றால் இந்தியில் catamite என்று பொருள். இப்படி ஆகி விட்டது பதிப்புத் துறை. பிழை திருத்தம் என்ற விஷயமே நடப்பதில்லை. நான் யாரையும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. தமிழ்நாட்டிலேயே பிழை திருத்துவோர் இல்லை. பதிப்பகங்களே தங்களால் ஆன வரை தங்கள் ஊழியர்களைக் கொண்டு செய்கின்றன. அது எவ்வளவு தூரம் சாத்தியம்?
என் புத்தகங்களை நானே பிழை திருத்தம் செய்கிறேன். பல சமயங்களில் அது தற்கொலைக்குத் தூண்டுவதாக இருக்கிறது. உதாரணமாக, ஃபாண்ட் அளவு பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைப் புத்தகம் ஃபாண்ட் மாதிரி இருந்ததால் ஃபாண்ட் அளவைக் குறைக்கச் சொன்னேன். உடனே ஃபாண்டுகளுக்கே புத்தி வந்தது போல் – artificial intelligence ஆ என்ன? – ஃபாண்டுகளே சேர்ந்து கதை எழுதுகின்றன. காந்தி என்றால் சாந்தி. சாந்தி என்றால் சந்தி. தோளிலும் – தாளிலும். மனிதன் – மதன். இப்படி ஒரு பக்கத்துக்கு பத்து பிழைகள். ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று ஏன் சொன்னேன் என்றால், பிழைகளில் அர்த்தமும் சரியாக வருவதுதான்.
தொலையட்டும். இதையெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். நீங்கள் எல்லோரும் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நான் எத்தனை சிரமத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வேன். எனக்குப் புத்தகம் வேண்டும் என்றால் என்ன புத்தகம் என்று பத்து பேர் அமெரிக்காவிலிருந்து எழுதுகிறார்கள். ஊரிலேயே மிகப் பிரபலமான வக்கீல் – ஐம்பது வயது – எல்லோருக்கும் முன்னால் என் பாதம் பணிகிறார். தினமும் நாலைந்து ஹார்ட் சர்ஜரி செய்யும் டாக்டருக்கு என்னோடு பேசும் போது அன்பிலும் பதற்றத்திலும் கைகள் நடுங்குகின்றன. உங்கள் அன்புக்கு முன்னால் நான் செய்வது சாதாரணம்.
இன்று பிழை திருத்தம் செய்யும் போது ரத்த வேட்கை என்ற கதைக்கு வந்தேன். அது Bloody Countess என்ற தலைப்பில் அலெஹாந்த்ரோ பிஸார்னிக் எழுதிய கதை. மிகவும் தனித்துவம் மிக்க கவிஞரான பிஸார்னிக் எழுதிய ஒரே கதை அது. தனித்துவம் மிக்கவர் என்று சொன்ன காரணத்தை அவருடைய ஒரே ஒரு கவிதையைப் படித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். ப்ளடி கவுண்டஸ் என்ற கதை ஹங்கேரில் 1560இலிருந்து 1614 வரை வாழ்ந்த எர்ஸபெத் பத்தோரி என்ற சீமாட்டியைப் பற்றியது. பத்தோரி குடும்பத்தைச் சேர்ந்த எர்ஸபெத் தான் முதுமை அடையக் கூடாது என்று விரும்பி ஒரு சூனியக்காரியின் துணை கொண்டு மனித ரத்தத்தில் குளித்தாள். மனித ரத்தம் என்றால் சாதா மனித ரத்தம் அல்ல; இளம் பெண்ணாக இருக்க வேண்டும். அதிலும் அந்தப் பெண்களை விதம்விதமாகச் சித்ரவதை செய்துதான் கொல்வாள். அதற்காக ஒரு சித்ரவதைக் கூடத்தையே வைத்திருந்தாள். அதில் சித்ரவதைக்கான விதவிதமான இரும்புத் தளவாடங்களையும் வைத்திருந்தாள். அவளுடைய வாழ்க்கையை ஹங்கேரியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இவளுக்கெல்லாம் மிகப் பிந்திதான் மார்க்கி தெ சாத் (1740 – 1814) வந்தார். அவள் வாழ்ந்த கோட்டையின் பெயர் Csejthe. அந்தக் கோட்டை இப்போது ஸ்லோவேகியாவில் இருக்கிறது. நான் ஒவ்வொரு நாட்டுடனும் இப்படியாகத்தான் தொடர்பு படுத்திக் கொள்கிறேன். ஒரு சுற்றுலாப் பயணி ஸ்லோவேகியாவின் அழகான தலைநகரான ப்ராத்திஸ்லாவாவைப் பார்த்து விட்டுத் திரும்பி விருவார். ஆனால் நான் சுமார் 30 ஆண்டுகளாக என் ஞாபக அடுக்கு ஒன்றில் சுமந்து கொண்டிருக்கும் செஜ்தீ கோட்டையைப் போய்ப் பார்த்து வருவேன்.
1590-இலிருந்து 1610 வரை பத்தோரியும் அவளது சகாக்களும் தம் ரத்தச் சடங்குகளுக்காக சுமார் 700 இளம் பெண்களைச் சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். 1610 டிசம்பரில் கைது செய்யப்பட்ட பத்தோரி மீது விசாரணை நடைபெற்றது. சுமார் 300 சாட்சிகளிடம் பத்தோரி பற்றி விசாரிக்கப்பட்டது. அவர்களெல்லாம் செஜ்தே கோட்டையில் பணியாற்றியவர்கள், தப்பிப் பிழைத்த இளம் பெண்கள் மற்றும் சிறை வைக்கப்பட்டவர்கள். பத்தோரியும் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகள் பற்றி நாட்குறிப்பு வைத்திருந்தாள். அதுவும் நீதிமன்ற விசாரணைக்கு உதவியாக இருந்தது. மனித குல வரலாற்றிலேயே அதிக அளவு கொலைகளைச் செய்த பத்தோரியின் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனாலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பிரபு குடும்பத்தினருக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் இல்லாததால் பத்தோரி சீமாட்டி அவளுடைய செஜ்தே கோட்டையிலேயே சிறை வைக்கப்பட்டாள்.
பத்தோரி சீமாட்டி பற்றி சுமார் 20 திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் நான் ஒரே ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். 2008இல் Juraj Jakubisko இயக்கியது.
அலெஹாந்த்ரோ பிஸார்னிக்கின் ரத்த வேட்கை கதையில்…
நாளை தொடர்கிறேன்…