பத்தோரி சீமாட்டி இளம் பெண்களின் ரத்தத்தில் குளிப்பாள் என்றேன். வெறும் இளம் பெண்கள் அல்ல; அவர்கள் கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் பத்தோரிக்கு இந்த ரத்தச் சடங்குகளெல்லாம் வீண் என்று தோன்றியது. காரணம், அவளுக்கு ஐம்பது வயது ஆன போது தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன. சரி, சூன்யக்காரியை வதை செய்து கொன்று விடலாம் என்று முடிவு செய்தாள். ஆனால் சூன்யக்காரி பத்தோரி சீமாட்டியிடமிருந்து தப்பிக்கவும், சீமாட்டியையே சிக்கலில் மாட்டி வைக்கவும் ஒரு சதி செய்தாள். ”என்ன இருந்தாலும் நாம் கீழ்க்குலப் பெண்களை அல்லவா பிடித்து ரத்தம் எடுக்கிறோம்? அதனால்தான் சடங்குகள் வேலை செய்யவில்லை. பிரபு வம்சத்துப் பெண்களின் ரத்தத்தில்தான் குளிக்க வேண்டும். அதுவும் அவர்கள் கன்னிகளாக இருக்க வேண்டும்” என்கிறாள் சூன்யக்காரி. உடனே பத்தோரி சீமாட்டி பிரபு வம்சத்துக் குமரிகளாக வேட்டையாடுகிறாள். கன்னிப் பெண் என்று எப்படிக் கண்டு பிடிப்பது? வயதுக்கு வராத பெண்களாகப் பிடித்து வந்து சிறையில் போட்டு, அவர்கள் வயதுக்கு வந்ததும் சித்ரவதை செய்து கொல்வது அவள் முறை. நான்கே ஆண்டுகளில் மாட்டிக் கொண்டாள்.
இந்தக் கதையில் ஒரு வாக்கியம் என்னைக் குழப்பியது. ”காட்டு விஷயத்திலும், நிலவின் இதமற்ற குளிர்த் தோற்றத்திலும் புதைந்திருந்த தீய சக்திகளின் புதிய ரூபங்களை எர்ஸபெத்தின் கண்களில் கண்டாள் அந்த சூன்யக்காரி.” காட்டு விஷத்திலா, காட்டு விஷயத்திலா? என்னிடம் உயிர்மை வெளியிட்ட மூல நூல் கை வசம் இல்லை. சரி, ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்து விடலாம் என்று இணையத்தில் தேடினேன். ஒரு மணி நேரம் செலவழித்திருப்பேன். ஒரே ஒரு இணைப்பில் கிடைத்தது. ஆனால் கதை முழுமையாக இல்லை. கதையின் ஒருசில அத்தியாயங்களை நீக்கியிருந்தார்கள். ஆங்கிலத்தில் கிடைக்காததற்குக் காரணம், நான் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த கதைகள் பெரும்பாலும் பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்புகளில் காண முடியாதவை. நேரடியாக Granma பத்திரிகையிலிருந்து எடுத்தவை. க்ரான்மா பற்றியோ யாருக்கும் தெரியாது. பிறகு, ஊரின் மிக அழகான பெண்ணின் முதல் பதிப்பில் பார்க்கலாம் என்று நினைத்து ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டேன். ஏனென்றால், என்னிடம் உயிர்மை புத்தகமும் இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பும் இல்லை. தேடுகிறேன் என்றார் ஸ்ரீராம். அப்போது இரவு பத்து மணி. கால் மணி நேரத்தில் அவரிடமிருந்து போன் வந்தது. விஷயத்தைச் சொன்னேன். உயிர்மை நூலிலும் “காட்டு விஷயத்திலும்” என்றே இருந்தது. இனிமேல் இதைத் தெரிந்து கொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆனால் அதுவும் சாத்தியம் இல்லை. இந்தக் கதைகளையெல்லாம் மொழிபெயர்த்து மொழிபெயர்த்து கோணங்கிக்குத்தானே அனுப்பினேன்? அப்படியானால் கல்குதிரையில் பார்க்கலாம். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கல்குதிரைக்கு எங்கே போவது?
அதற்குள் ஸ்ரீராம் அழைத்தார். அவருக்குக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்து விட்டது. அதில் இப்படி இருந்தது: In the poisons of the forest and in the coldness of the moon. ஆக, ’காட்டு விஷங்களிலும்’ என்பது காட்டு விஷயத்திலும் என்றே அச்சாகி விட்டது. நடுகல் பதிப்பகம் வெளியிட்ட ஊரின் மிக அழகான பெண் புத்தகத்திலும் கூட இப்படியே ”காட்டு விஷயத்திலும்” என்றே அச்சாகியிருக்கிறது. என்னுடைய பதைபதைப்புக்கும் பதற்றத்துக்கும் காரணம் என்னவென்றால், சென்ற தலைமுறையைச் சேர்ந்த சி.சு. செல்லப்பா, க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ், லா.ச.ரா. போன்ற பல மூத்த எழுத்தாளர்களின் பல புத்தகங்களில் இப்படிப்பட்ட ஏராளமான பிழைகள் எல்லா பக்கங்களிலும் மலிந்திருக்கின்றன. நான் வாழும் போதே என்னுடைய புத்தகத்தில் ஒரு தவறு என்னுடைய பார்வைக்கு வராமல் பதினைந்து ஆண்டுக் காலம் இருந்திருக்கிறது என்றால், பிழை திருத்தம் என்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்கிறீர்களா? நல்லதே இல்லை என்று நான் சொல்லவில்லை. பெருமாள் முருகன் பதிப்பித்து, காலச்சுவடு வெளியிட்ட கு.ப.ரா. தொகுப்பில் இப்படி ஒரு தவறு இல்லை. பெருமாள் முருகனின் புனைவெழுத்து தான் எனக்குப் பிடிக்காதே தவிர அவர் ஒரு அருமையான ஆய்வாளர். கவிஞர் சுகுமாரனும் அப்படியே. இவர்கள் இருவரும் தொகுத்து காலச்சுவடு வெளியிட்ட நூல்களில் இப்படிப்பட்ட அர்த்தப் பிழைகள் எதுவும் இல்லை. ஏனென்றால் இவர்கள் மூல நூல்களைப் பார்த்து என்னைப் போலவே எழுத்து எழுத்தாக சரி பார்த்து பதிப்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அட்டையிலேயே பதிப்பாசிரியர் பெருமாள் முருகன் என்றும் பதிப்பாசிரியர் சுகுமாரன் என்றும் போடப்படுகிறது. யாரோ எழுதிய புத்தகத்துக்கு இவர்களின் பெயர் அட்டையில் ஏன் வருகிறது என்றால், ஒருவகையில் இவர்கள் உ.வே.சா. சங்க இலக்கியத்துக்குச் செய்த பணியை இந்தப் பதிப்பாளர்கள் நம் முன்னோடிகளின் நூல்களுக்குச் செய்கிறார்கள். இது தவிர மற்ற எல்லா நூல்களிலும் பிழைகள் மலிந்து கோரமாகக் கிடக்கின்றன.
இங்கே இன்னும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, ஸ்ரீராம். அவருடைய உதவி இல்லாவிட்டால் இந்த வேலைகளை என்னால் செய்ய இயலாது. ஒரு மணி நேரம் தேடியும் கிடைக்காததால் நான் அந்த வாக்கியத்தை மனசில்லாமலேயே “காட்டு விஷயத்திலும்” என்றே விட்டிருப்பேன். ஏனென்றால், விஷயம் என்பது பிழைதான். ஆனால் அது ஒரிஜினலில் விஷமாக இல்லாத பட்சத்தில் விஷம் என்று போடுவது பெரும் பிழை அல்லவா? சென்ற வாரம் நம் இணைய தளத்தில் ஒரு கடிதம் வெளியிட்டிருந்தேன். அதில் ArtReview Asia எடிட்டர் மார்க் ரேப்போல்ட் மார்ஜினல் மேன் பற்றி என்ன சொன்னார் என்பதை அதில் குறிப்பிட்டிருந்தேன். கடிதத்தை எழுதும் போது மார்க் சொன்னது மறந்து போய் விட்டது. இரண்டே வார்த்தை என்பது ஞாபகம் இருந்தது. ஆனால் என்ன என்று நினைவில் இல்லை. ஸ்ரீராமுக்கு போன் போட்டு மார்க் மார்ஜினல் மேன் பற்றி என்ன சொன்னார் என்று கேட்டேன். சில நொடிகள் யோசித்தவர் “Dangerously addictive” என்றார். மிரண்டு போனேன். டச் வுட்.
இன்னொரு விஷயம். இது தமிழில் புத்தகங்கள் பதிப்பிப்பது தொடர்பானது. ஊரின் மிக அழகான பெண் தொகுப்பை படித்தவர்களும் இந்தத் தொகுப்பை மீண்டும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால், ஜான் பால் சார்த்தரின் சுவர் கதை மொழிபெயர்ப்பையும் இதில் சேர்த்திருக்கிறேன். மட்டுமல்லாமல் சென்ற பத்திகளில் சொன்னது போல் புதிதாக பிழைதிருத்தம் செய்திருக்கிறேன். மொழியைப் புதிதாக செப்பனிட்டிருக்கிறேன். மெருகூட்டியிருக்கிறேன். பத்தோரி சீமாட்டியின் செஜ்தே கோட்டையின் படத்தோடு இந்தப் புத்தகம் வர வேண்டும் என்று நினைத்தேன். பத்தோரி சீமாட்டி பற்றி அறிந்த வரலாற்று ஆர்வலர்கள் இப்போதும் அந்தக் கோட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆவியுலக ஆய்வாளர்களும் அந்தக் கோட்டைக்குப் போய் ஆவிகளோடு பேச முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். குறைந்த பட்சம் 650 இளம் பெண்கள் குரூரமான முறைகளில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கோட்டை. அவர்களின் குருதியில்தான் குளித்திருக்கிறாள் பத்தோரி சீமாட்டி. மட்டுமல்லாமல், ஊரின் மிக அழகான பெண் என்ற இந்த நூல் என்னுடைய மிக முக்கியமான நூல்களில் பிரதானமானது. நான் இதுவரை ஆறு நாவல்கள் எழுதியிருக்கிறேன். அந்த வரிசையில் இந்த நூலை வைக்கலாம். அவ்வளவு முக்கியமானது என்பதால் இதை hard bound edition-ஆகக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். ராம்ஜியிடம் சொன்னேன். அது ஏன் சாத்தியமே இல்லை என்று விளக்கினார் ராம்ஜி. ஏனென்றால், 2000 பிரதிகள் அச்சடித்தால்தான் விலையை எல்லோரும் வாங்குகிறாற்போல் வைக்க முடியும். உலகப் புகழ்பெற்ற மணிபால் அச்சகத்தில் அடித்தால்தான் ஹார்ட்பவுண்ட் நன்றாக வரும். ஸீரோ டிகிரி ஆங்கிலம் அங்கே அடித்ததுதான். அல்லது குறைந்த பட்சம் ஆயிரமாவது அடிக்க வேண்டும். நூறு இருநூறு பிரதிகள் ஹார்ட் பவுண்டில் அடித்தால் விலை ஆயிரம் வரை எகிறி விடும். விட்டு விட்டேன். அதனால்தான் தமிழ்நாடு ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் என்கிறேன். என்னைப் போல் புகழ் பெற்ற எழுத்தாளனாக இருந்தாலும் நூறு இருநூறுதான் போகிறது. புதிய நாவல் என்றால், மூவாயிரம் போகும். மற்றபடி நூறு இருநூறுதான்.
சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். சென்னை புத்தக விழா உரையில் ஒரு புத்தகத்தின் பின்னட்டை பற்றிக் குறிப்பிட்டேன். எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடவில்லை. புத்தகத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஏனென்றால், அச்சமாக இருக்கிறது. சாரு திட்டினார் என்று புகார் கிளம்புகிறது. விமர்சனம் ஒரு நல்ல விஷயம் என்றே யாரும் நினைப்பதில்லை. பெயர் குறிப்பிடாமல் சொன்னதற்கே நாலைந்து நண்பர்கள், “உங்கள் நண்பர்கள் நடத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் புத்தகத்தையே விமர்சிக்கிறீர்களே, நியாயமா?” என்று கேட்டார்கள். தப்புதான் என்று பதில் சொன்னேனே தவிர என்ன தப்பு என்று எனக்கே புரியவில்லை. புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தால் நாலு பேராவது அந்தப் புத்தகத்தை வாங்கியிருப்பார்கள். இல்லையா? ஒரு புத்தகம் பேசப்படுவது சரியா? கிணற்றில் போட்ட கல்லாகக் கிடப்பது சரியா?
ஐயா, 40 ஆண்டுகளாக என்னைப் பெயர் குறிப்பிடாமலேதான் விமர்சிப்பார்கள். குறிப்பிட்டிருந்தால் நான் பெருமாள் முருகன் போல் ஆகியிருப்பேன். விமர்சிக்கப்பட்டதாலும் அச்சுறுத்தப்பட்டதாலும்தானே பெருமாள் முருகன் இன்று சல்மான் ருஷ்டி அளவுக்குப் புகழ் பெற்றார்? வேறு என்ன காரணம்? ஒரு சுரணையுள்ள சமூகத்தில் என்னுடைய காமரூப கதைகள் நாவலைத் தடை செய்திருப்பார்கள். அதன் மூலம் நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெருமாள் முருகனைப் போல் ஆகியிருப்பேன். அப்படிப்பட்ட content-ஐக் கொண்ட நாவல் அது. ஆனால் தமிழ்ச் சமூகமும் பத்திரிகைகளும் அதை இருட்டடிப்பு செய்தன. பெயரையே சொல்லவில்லை. முழுமையாக ignore செய்தன. திட்டவே இல்லை. விமர்சிக்கவே இல்லை.
35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையைச் சொல்கிறேன். தமிழில் non-linear கதைகளை எழுத ஆரம்பித்தேன். நான் – லீனியர் என்ற பதம் எனக்குத் தெரியாது. பிரம்மராஜன் தான் அந்தப் பெயரைச் சூட்டி, அக்கதைகளை அவருடைய மீட்சி பத்திரிகையில் வெளியிட்டார். நான் – லீனியர் கதைகளை அப்போது யாரும் எழுதியதில்லை. ரொனால்ட் சுகேனிக்கின் 98.6 என்ற நாவலை நான் – லீனியர் பாணி என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. அந்த வகையில் நான் – லீனியர் என்ற எழுத்துப் பாணியையே உலகுக்கு வழங்கியது அடியேன் தான். பிறகு என்னை அடியொற்றி கோணங்கியும் எழுதிப் பார்த்தார். சரியாக வரவில்லை. ஸில்வியாவின் கதைகளை நான் – லீனியர் என்று சொல்லலாம்.
அப்போது கோமல் சுவாமிநாதனின் சுப மங்களா பத்திரிகை வந்து கொண்டிருந்தது. மாதாமாதம் அதில் ஒருவரின் பேட்டி வரும். கிட்டத்தட்ட ஐம்பது அறுபது பேரின் பேட்டிகள் வந்திருக்கலாம். அதில் ஒவ்வொரு பேட்டியிலும் இப்போது புதிதாக எழுதப்படும் நான் – லீனியர் எழுத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி இடம் பெறும். திமுக தலைவர் கருணாநிதியிடமெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கேள்வியில் கூட அந்த நான் – லீனியர் பாணியை அறிமுகப்படுத்தி அதில் தொடர்ந்து எழுதி வந்த என் பெயரைக் குறிப்பிட்டதே இல்லை.
இன்னொரு சமீபத்திய உதாரணம் தருகிறேன். தயவுசெய்து பெயர் குறிப்பிட்டுச் சொல்ல என்னை அனுமதியுங்கள். இப்படியெல்லாம் தடை போடுவதால் என் எண்ண ஓட்டம் அறுபடுகிறது. தங்குதடையில்லாமல் பேசுவதோ எழுதுவதோ எப்படி, இவருக்குப் பயந்து, அவருக்குப் பயந்து, ஐயோ இப்படி எழுதினால் அவர் கோவிப்பாரே, அப்படி எழுதினால் அவர் கோவிப்பாரே என்று பயந்து பயந்து எழுதினால் அப்புறம் என்னுடைய எழுத்து என்னுடைய எழுத்து போலவே இருக்காது. மேலும், தப்பாக இருந்தாலும் இருக்கட்டுமே? தப்பாக எழுதுவதற்குச் சுதந்திரம் இல்லையா? தப்பாகச் சிந்திப்பதற்குச் சுதந்திரம் இல்லையா? வெஜிடபிள் மாதிரி உட்கார்ந்திருப்பதை விட தப்பாக எழுதலாம் இல்லையா? சரி தப்பு பற்றி யோசிக்காமல் எழுதினால்தானே சுதந்திரமாகச் சிந்திக்க முடியும்? சரி தப்புகளை விட ஒரு எழுத்தாளனின் இயக்கத்துக்கு சுதந்திரம்தானே முக்கியம்?
அதனால் இப்போது நான் பெயரைச் சொல்கிறேன். செந்தில்குமார் எழுதிய கழுதைப் பாதை என்ற நாவலைத்தான் பெயர் குறிப்பிடாமல் சொன்னேன். அந்தப் பாணி எழுத்தில் உள்ள போதாமையைச் சொன்னேன். அது என் உரிமை அல்லவா? அப்படிப்பட்ட எழுத்தை எழுதுவதற்கு செந்தில்குமாருக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அப்படிப்பட்ட எழுத்தை வெளியிட ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமையும் அதை விமர்சிக்கவும் எனக்கு இருக்கிறதுதானே?
இன்னொன்றையும் பெயர் குறிப்பிட்டே எழுதுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கோபம் கொள்ள வேண்டாம். இது பதிப்பகத்தின் தவறு அல்ல. அல்லவே அல்ல. தமிழ்நாட்டின் வாசிப்புச் சூழலின் பிரச்சினை இது. இது பற்றி எழுதினால்தான் இதற்கான மீட்சி கிடைக்கும். பேசவே பேசாவிட்டால் இப்படியே அம்பது காப்பி, நூறு காப்பி என்று போய் விடும். கலாப்ரியாவுக்கு 70 வயது ஆகிறது. ஒரு முன்னோடி கவிஞர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கு திரும்பினாலும் கலாப்ரியாதான். அவருடைய சசி தான். இளைஞர்களின் கனவு நாயகன் கலாப்ரியா. எனக்கும் மிகப் பிடித்த கவிஞர். அவர் ஒரு நாவல் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மிகுந்த சிரமப்பட்டு அதன் பெயர் வேனல் என்று அறிந்து, மிகுந்த சிரமப்பட்டு அதை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்றும் தெரிந்து கொண்டேன். வாங்கினேன். என்ன ஒரு அதிர்ச்சி தெரியுமா? ஒரு அதிர்ச்சி அல்ல; ரெண்டு மூணு அதிர்ச்சிகள். முதல் அதிர்ச்சி, அந்த நாவல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்படி ஒரு நாவல் வெளிவந்ததே யாருக்கும் தெரியாது. புத்தக பைண்டிங்கும் ஏதோ பன்னண்டாம் வகுப்பு கணித நூல் மாதிரி இருக்கிறது. காரணம் பதிப்பகம் இல்லை. தரமான அச்சகத்தில் அச்சிட்டால் நாவலின் விலையை 1000 ரூ. வைக்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் 2000 பிரதிகள் அச்சடிக்க வேண்டும். 200 பிரதி என்றால் இப்படித்தான் பன்னண்டாம் வகுப்பு கணக்குப் புஸ்தகம் மாதிரி இருக்கும்.
இதெல்லாம் ஊரின் மிக அழகான பெண் நூலில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தபோது உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai