நேற்றைய க.நா.சு. உரை இனிதே முடிந்தது. மூன்று மணி நேரம் நிறுத்தாமல் பேசினேன். நாற்பது பக்கங்களுக்குக் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். அதில் பதினைந்து பக்கங்களைத்தான் உபயோகப்படுத்தினேன். அதற்கே மூன்று மணி நேரம். காலை ஆறிலிருந்து ஒன்பது மணி வரை. பிறகு கேள்வி பதில் முக்கால் மணி நேரம். மொத்தம் நாற்பது பக்கக் குறிப்புகளையும் உபயோகப்படுத்தியிருந்தால் மதியம் பனிரண்டு ஆகியிருக்கும். பேசியிருக்கவும் முடியும் என்றே தோன்றியது. வாசகர் வட்டச் சந்திப்புகளில் அப்படித்தானே நடக்கும். என்ன, பக்கத்தில் ரெமி மார்ட்டின் இருக்கும். இப்போது தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. சந்தோஷம் என்னவென்றால், யாருக்குமே இப்படி நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லையாம். பல நண்பர்கள் எழுதியிருந்தார்கள், அவர்களின் வாழ்க்கையிலேயே முதல் முதலாக ஐந்து மணிக்கு எழுந்து கொண்டதாக. ”பரீட்சைக்குப் படிக்கும்போது கூட அதிகாலை நான்கு மணி வரை கூடப் படிக்க முடியும், பிறகு தூங்கி விடுவேன். ஆனால் அதிகாலையில் எழுந்து கொண்டதாக சரித்திரமே கிடையாது.” இப்படி பலர். அதனால்தான் ஒரு வேண்டுகோள் வைத்தேன். எந்தெந்த நாடுகள் என்று எனக்குத் தெரிய வேண்டும் என்று. நூறு பேரில் ஐம்பது பேர் தகவல் தெரிவித்திருந்தார்கள். யுஎஸ், கனடா, மெக்ஸிகோ இன்னும் ஒன்றிரண்டு பெயர் தெரியாத நாடுகள் எல்லாம் சேர்த்து பதினைந்து, இந்தியா – 35. ஆக, இதையே இரண்டாகப் பெருக்கிக் கொள்ள வேண்டியது. இந்தியாவிலிருந்து 70, வெளியிலிருந்து 30. அதனால் நேரத்தை மாற்றி விடலாம் என முடிவு செய்து விட்டேன்.
இனி ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை எட்டரை மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும். நள்ளிரவு பனிரண்டு வரை போகும். அமெரிக்காவில் – அதாவது மேற்குப் பக்கம் சனிக்கிழமை காலை பதினோரு மணியும் கிழக்குப் பக்கம் காலை எட்டு மணியுமாக இருக்கும். இது எல்லோருக்கும் வசதியானது என்று நினைக்கிறேன். ஆக, ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முன்னிரவு எட்டரைக்குத் தயாராக இருங்கள். கோபி கிருஷ்ணன் பற்றிப் பேச இருக்கிறேன்.
மாலை என்பதால் காலையில் எழுந்து கொள்ள முடியாதவர்களும் வர முடியும். வரும் கூட்டத்தில் ஸூம் கூடவே கூகிள் மீட்டையும் திறக்கிறேன். அதிலும் பலர் கலந்து கொள்ளலாம். எனவே நூறு என்ற எண்ணிக்கையைத் தாண்டியும் பலர் என் உரையைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். பொதுவாக நான் செய்கின்ற எதையுமே படு சுத்தமாகச் செய்ய விரும்புபவன். Perfectionist. கோபி கிருஷ்ணனைப் பற்றி என்ன பேச முடியும்? ஜெயமோகன் ஒரு மாதத்தில் எழுதுவதை கோபி நாற்பது ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். மொத்தம் ஆயிரம் பக்கம். அவ்வளவுதான். வாசிக்கவும் சிரமப்படுத்தாத நடை. தினசரிகளைப் படிப்பது போல் படித்து விடலாம். ஆனால் அவர் பிரதியைப் பற்றிப் பேசுவது கடினம். ஏன் என்று என் உரையில் சொல்கிறேன். சாதாரணமாக கோபி பற்றிப் பேசிவிட முடியாது. அதன் பொருட்டு என் நூலகத்தில் உள்ள நான்கு புத்தகங்களைத் தூசு தட்டி எடுத்தேன். இதை நான் ஆகஸ்ட் இருபதுக்குள் முடித்து விட்டுத்தான் கோபியின் எழுத்துக்குள் போக வேண்டும்.
எடுத்து வைத்திருக்கும் புத்தகங்கள்:
1.Dionysis in Literature: Essays on Literary Madness
2. Literature and Madness (Literature, Philosophy, Psychoanalysis) by Shosana Felman
3. Insanity as Redemption in Contemporary American Fiction: Inmates Running the Asylum
(எனக்கு மிகப் பிடித்த நாவல்களான Catch 22, கர்ட் வனேகட்டின் Slaughterhouse – Five, Jerzy Kosinskiயின் Being There ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இவர்களில் ஜெர்ஸி கோஸின்ஸ்கி பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறேன். முடிந்தால் பீயிங் தேர் நாவலை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு வரப் பார்க்கிறேன்.)
ஆக, இந்த உரை இதுவரையிலான என் உரைகளில் மிக முக்கியமானதாக இருக்கும். மேற்கண்ட புத்தகங்களைப் போல் தமிழில் நகுலன் பற்றியும், கோபி கிருஷ்ணன் பற்றியும், என் நாவல்களைப் பற்றியும் ஆய்வு நூல்கள் வந்திருக்க வேண்டும். இங்கே உள்ள பேராசிரியர்களுக்கு எங்கள் பெயரே தெரியாது என்கிற போது என்ன செய்ய முடியும்? அ. ராமசாமியும், டி. தர்மராஜுமே எவ்வளவுதான் செய்வார்கள்? இன்னொரு பக்கம் பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து முருகேச பாண்டியன் எழுதுகிறார். இப்படி மூன்று நான்கு பேரை விட்டால் இங்கே வேறு ஆளே இல்லை. போகட்டும். மேற்குலகில் அப்படி இல்லை. இந்த விஷயத்தில் ஏகப்பட்ட நூல்கள் உள்ளன. என்னிடம் உள்ள நூல்கள் இவ்வளவுதான். இதுவே இங்கே இந்தியாவில் யாரிடமும் – அதாவது தனிநபர்களிடம் – இருக்க வாய்ப்பு இல்லை. அதனால்தான் என் நூலகத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்கிறேன்.
உங்களுக்கு என்னைத் தெரியும். என்னால் எவ்வளவு கடினமான விஷயங்களையும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் புரிந்து கொள்கிறபடியும் சுவாரசியமாகவும் சொல்ல முடியும். எனவே மேற்கண்ட நூல்களின் பெயர்களைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இன்று பேசும் போது சீனி ஒரு யோசனை சொன்னார். நச்சென்று உரையை ஒரு மணி நேரத்தில் முடித்தால் என்ன? நல்ல யோசனைதான். பின்நவீனத்துவத்தில் எதுவுமே சுருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நான் மூன்று மணி நேரம் பேசுவதே சுருக்கம்தான். அந்தக் காலத்துக் கம்பராமாயண சொற்பொழிவுகள் பல இரவுகள் தொடரும். க.நா.சு. எல்லாம் அந்த அளவுக்கு எழுதியிருக்கிறார். நானே நாற்பது பக்கக் குறிப்புகளில் பதினைந்து பக்கம்தான் பயன்படுத்தினேன். அதற்கே மூன்று மணி நேரம்.
இப்போது நாம் அவசர யுகத்தில் இருக்கிறோம். ஐந்து நாள் கிரிக்கெட் இப்போது 20 – 20 ஆக மாறி விட்டது. ஆனால் நான் இந்த விஷயத்தில் பிரம்மாண்டத்தின் பக்கமே இருக்கிறேன். நாம் ஒரு புதிய பாணியை உருவாக்குவோம். இலக்கிய உரை என்றால் மூன்று மணி போகும். ஒரு பெண் எழுதியிருந்தார். மொபைலை இடுப்பில் செருகிக் கொண்டே சமையல். காதில் இயர் ஃபோன். என் உரை. மகள் கேட்டாளாம், மூன்று மணி நேரம் இப்படி என்னம்மா கேட்கிறாய்? சந்தோஷமாக இருந்தது. இலக்கியம் இப்படித்தான் போய்ச் சேர வேண்டும்.
நான் ஒரு perfectionist என்று சொன்னேன். ஒரு தயிர் சாதம் சாப்பிட வேண்டுமானால் கூட பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொஞ்சமாய் இஞ்சி போன்றவற்றை நறுக்கிப் போடாமல் சாப்பிட மாட்டேன். என்னுடைய மூன்று உரைகளின் விடியோவைப் பார்த்தேன். உரை பிரமாதம். அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் விடியோ தரம் குப்பை. சகிக்கவில்லை. சீனியிடம் காரணம் கேட்டேன். ஒரு லட்ச ரூபாய் பழுத்து விடுகிறாற்போல் பதில் சொன்னார். இந்த மொபைல் போனிலிருந்து பேசினால் இவ்வளவுதான் வருமாம். Mac book air என்ற சாதனத்தின் மூலம் பேசுங்கள் என்றார். அதுதான் ஒரு லட்சம் என்றேன். இல்லை, இந்தியாவில் ஒன்றரை ஆகும் என்று இன்னும் புளியைக் கரைத்தார். ஆனாலும் தொடர்ந்து இந்தத் திராபையான விடியோ தரத்தில் பேசி நமக்கு இருக்கும் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் ஒரு முக்கிய காரணம் உள்ளது.
உங்களில் யாருக்காவது ரெமிங்டன் டைப்ரைட்டர் பற்றித் தெரியுமா? படத்தைப் பாருங்கள்.
மேலே உள்ளதுதான் ரெமிங்டன் டைப்ரைட்டர். 1978இலிருந்து 1990 வரை நான் தில்லி அட்மினிஸ்ட்ரேஷனின் சிவில் சப்ளைஸ் துறையில் பணியாற்றியபோது மேற்கண்ட மெஷினில் நாள் பூராவும் உழன்றேன். நான் உபயோகப்படுத்தியது இன்னும் பாடாவதி. மேலே ரெமிங்டன் என்று எழுதியிருக்கும் டப்பா பற்றி யாருக்கும் தெரியாது. அப்படியே பிளந்தமானிக்குத்தான் என்னிடம் கொடுக்கப்பட்டது. பனிரண்டு ஆண்டுகள் அதில்தான் டைப் அடித்தேன். (இடையில் இரண்டு ஆண்டுகள் பாண்டிச்சேரி வந்தது வேறு கதை). தில்லி அப்போது யூனியன் பிரதேசம், தனி மாநிலம் அல்ல. அதனால் அதன் ஊழியர் விவகாரம் எல்லாம் மத்திய அரசின் உள்துறை வசம் இருந்தது. அதனால் நான் சென்னைக்கு மாற்றல் கேட்டபோது முதலில் சிபிஐக்குக் கொடுத்தார்கள். அதைவிடத் தற்கொலை மேல் என்பதால் அதை மறுத்தபோது – மற்றவர்கள் என்றால், அந்தத் துறையின் அதிகாரத்துக்காக ஓடிப் போய் வாங்கியிருப்பார்கள் – இன்கம் டாக்ஸ் கொடுத்தார்கள். சரி என்று புறப்பட்டபோது இன்கம்டாக்ஸ் wet department என்பதால் வெளியாட்களை உள்ளே அனுமதிப்பதில்லை, நாங்கள் சம்பாதிப்பது எங்களுக்கே என்ற கொள்கையோடு அவர்கள் மறுத்து விட்டதால் பிறகு தபால் துறைக்கு அனுப்பப்பட்டபோது, அங்கேயும் எனக்குக் கிடைத்தது ரெமிங்டன் தான். தோளில் ஏர்க் கலப்பையைக் கட்டிக் கொண்டு மாட்டுக்குப் பதிலாக நாமே உழுவது போல் இருக்கும். அல்லது, வ.உ.சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்தாரே அது போல. என்னுடைய இருபது ஆண்டுக் கால அரசு வேலையில் நான் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நினைக்காத நாளே இல்லை எனலாம். ரெமிங்டனில் விரலை வைத்தால் டமக்கென்று விரல் உள்ளே போய் விடும். உங்களுக்குப் புரிகிறமாதிரி உதாரணம் என் மனதில் வந்து விட்டது. காலில் ஷூவை மாட்டிக் கொண்டு தார் சாலையில் நடக்கிறீர்கள். எவ்வளவு சுகம். அதே ஷூவுடன், அல்லது வெறும் காலுடன் பாலைவன மணலில் நடந்திருக்கிறீர்களா, முழங்கால் வரை கால் உள்ளே புதையும் இல்லையா? எடுத்து எடுத்து வைக்க வேண்டும். பத்து அடி நடப்பதற்குள் நுரை தள்ளி விடும். அப்படித்தான் இருக்கும் ரெமிங்டனில் டைப் பண்ணுவது. அதுவும் தில்லி சிவில் சப்ளைஸ், தபால் துறை இரண்டிலுமே அவசரம். உயிர் போகும் அவசரத்தில் லொடக் லொடக் என்று விரல்களை வைத்துக் குத்த வேண்டும். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இப்போதைய கணினியின் கீ போர்ட் அப்படித்தான் இருக்கிறது. ஃபெதர் டச் போட்டால் திரையில் எழுத்தே வருவதில்லை. பளு தூக்குவது போல் வைத்துக் குத்த வேண்டியிருக்கிறது. அதிலும் நான் படு வேகமாகத் தட்டச்சு செய்பவன். சில பத்திரிகை ஆசிரியர் கட்டுரை கேட்டதும் பதினைந்து நிமிடங்களில் அனுப்பி விடுவேன். ஏற்கனவே எழுதி வைத்திருந்தீர்களா என்பார்கள் ஆச்சரியத்துடன். எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதையே இப்போதுதானே தீர்மானம் செய்தோம், எப்படி முன்பே எழுதுவது என்பேன். புயல் வேகத்தில் அடிப்பேன். அதனாலும் கீ போர்ட் இப்படி ஆகியிருக்கலாம். எத்தனை முறை கீ போர்டை மாற்றினாலும் இப்படித்தான் ஆகிறது. இப்படியே குத்திக் குத்தி வலது தோளில் நிரந்தர வலி. இதற்கெல்லாம் ஒரே தீர்வு mac book air தான் என்று தெரிகிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் அதன் விலை ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. இங்கே வாங்குவது சிரமம். அமெரிக்க நண்பர்கள் – அதுவும் ஒருவராக வாங்க இயலாது, ஒரு மாடல் ஆயிரம் டாலர் விலை; இன்னொரு மாடல் ஆயிரத்து இருநூறு டாலர் – ஒரு நாலைந்து பேர் சேர்ந்து வாங்கலாம். முடியுமா என்று யோசியுங்கள். எனக்கு எழுதுங்கள்.
அடுத்த சந்திப்பு ஆகஸ்ட் 29 சனிக்கிழமை இந்திய நேரம் இரவு எட்டரை. கோபி கிருஷ்ணன்.
யாருக்காவது க.நா.சு. பற்றிய என் உரை தேவையென்றால் எழுதுங்கள். லிங்க் அனுப்பி வைக்கிறேன்.
charu.nivedita.india@gmail.com
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai