சாருவை ஒரு பிரதியாக வாசித்தல்: ஆர். அபிலாஷ்

எனது நீண்ட கால நண்பரும், சக எழுத்தாளரும், பெங்களூர் க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியருமான அபிலாஷ் மேற்கண்ட தலைப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு உரையாற்ற இருக்கிறார். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவது அபிலாஷின் ப்ளாகில் எழுதியிருப்பது:

http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_55.html

http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_55.html

நண்பர்களே,
சாருவை வாசிப்பதில் பல குழப்பங்கள், இடர்கள் நமக்கு உள்ளன. இவை அவர் நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதாலோ, ஒரு transgressive எழுத்தாளர் என்பதாலோ மட்டுமல்ல. மிக முக்கியமாக சாரு தன் காலத்து பின்நவீன எழுத்தாளர்களிடம் இருந்தே முழுக்க வேறுபட்டவராக தனித்துவமானராக இருக்கிறார். அவர் தன் படைப்புகளை தன்னிடம் இருந்து துண்டித்து படைப்பாளி-படைப்பு எனும் இருமையை ஏற்படுத்துவது இல்லை. 
இன்று ஒரு எழுத்தாளனுக்குள் மூவர் இருக்கிறார்கள் – தனிமனிதன் (அவன் சமூக மனிதனாகவும் இணைய உலகில், நுகர்வு உலகில் இருப்பதால் இரண்டையும் சேர்த்தே தனி-சமூக மனிதனாகப் பார்க்கிறேன்), எழுத்தாளன், படைப்புலகம். இந்த பிளவு இல்லாத சொற்பம் எழுத்தாளர்களே நம் மத்தியில் இருக்கிறார்கள். இதற்கு முன்னோடியாக உடனடியாய் நம் நினைவில் தோன்றும் படைப்பாளிகள் ஜி.நாகராஜனும், புக்காவஸ்கியும். அந்த அளவுக்கு படைப்பூக்கத்தில் ஏற்படும் தனிமனித உடைவில், நெகிழ்நிலையில் ஒரு தனிமனிதன் தன்னையும் ஆட்படுத்துவது சுலபம் அல்ல. சாருவுக்கு அது இயல்பாகவே வருகிறது. அவர் தன்னையே எழுதிக்கொள்கிறார், அவர் எழுதும் முகநூல் குறிப்புகள், சாட் ரூம் அரட்டைகள், அன்றாட உரையாடல்கள், சின்னச் சின்ன நிகழ்வுகள் என ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் சாரு தன்னை எழுதிக்கொள்கிறார், தன் உடலை ஒரு கணினி தட்டச்சுப் பலகையாக பயன்படுத்துகிறார், இப்படி எழுதுவதை இலக்கியத் தகுதியற்ற உளறல்கள், ஆனால் மாறாக இலக்கியம் என்பதோ பிரக்ஞையுடன் தெளிவுடன் திட்டமிடலுடன் படைக்க வேண்டிய ஒன்று என அவர் கருதுவதில்லை. ஆகையால் சாரு தன் நாவல்களில் ஒரு கதைக்களத்தை, பாத்திரங்களை திட்டமிட்டு அவற்றை ஒட்டி எழுதுவதில்லை. அவருடைய ஒரு நாவலைத் திறந்து அங்கு அவர் யாருக்கோ எழுதிய கடிதம், மின்னஞ்சல், ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதம் வரும் போது ஒரு வாசகன் குழப்பம் அடைகிறான். ஏன் இது ஒரு கதையோட்டத்தின் பகுதியாக நம்பும்படியாக வருவதில்லை எனக் கேட்டுக்கொள்கிறான். இந்த கேள்வியின் மற்றொரு பொருள் இது: சாரு ஏன் தன்னை தன் எழுத்தில் இருந்து உடைத்து தனியே உற்பத்தி ஒரு பண்டமாக பண்ணித் தருவதில்லை? சாருவின் நூலை காசு கொடுத்து வாங்கினால் அவரே ஏன் நம் கையைப் பிடித்துக்கொண்டு நம் வாசிப்பறை வரை அச்சுபிசகாமல் வந்து விடுகிறார்? நான் சாருவை வாசிக்கிறேனா சாரு எழுதியதை வாசிக்கிறேனா? சாரு உண்மை, அவர் எழுதியது உண்மையைப் போன்ற பொய் என இல்லாமல் சாருவும் உண்மை அவர் எழுதியதும் உண்மை எனும் குழப்பம் ஏன் ஏற்படுகிறது? அவர் ஏன் ஒரு ‘கதைசொல்லியாக’ இருந்து என்னிடம் இருந்து சௌகர்யமான ஒரு தொலைவை ஏற்படுத்துவதில்லை? ஒரு கட்டுரை, ஒரு கடிதம், ஒரு மின்னஞ்சல், ஒரு சாட் ரூம் அரட்டை இதெல்லாமும் புனைவு தான் என்றால், இவை தொகுக்கப்பட்டு ஒரு நாவலாக முடியும் என்றால் இதுவரை நான் படித்த, இனி படிக்கப் போகிற ‘உருவாக்கப்பட்ட’ நாவல்களை என்ன செய்வது?
இவை புனைவாகும் என்றால் நான் எழுதும் கடிதங்கள், நிலைத்தகவல்கள், நான் குறித்து வைக்கும் to-do பட்டியல், நான் என் மனைவியிடம் காட்டும் காமம், நான் என் நண்பனிடம் கொட்டிய பாசம், நான் என் வேலையிடத்தில் எழுதிய அறிக்கைகள், மென்பொருள் நிரல், ஒரு கட்டிடத்தின் வரைபடமாக நான் வரைந்தது, நான் சவரம் செய்யும் போது சிதறிய மயிர்கள், நான் புணரும் போது சிந்திய விந்து, சைட் அடிக்கும் பெண்கள், நான் சீரியசாக காதலுடன் பார்க்கும் பெண்கள், நான் படிக்கும் அரசியல் செய்திகள், நான் அவற்றைப் படித்து அடையும் சமூகக் கோபம், என் சமூக நீதி, என் தனிப்பட்ட நீதி, என் தெளிவான நேர்கோட்டிலான சிந்தனை, என் வருத்தங்கள், என் கோபங்கள், என் இழப்புணர்வுகள் இத்தனையும் புனைவாகுமா? ஐயோ என்ன பண்ணுவது?
இது உண்மையில் திடுக்கிட வைக்கும் ஒரு கேள்வி. திட்டவட்டமான புனைவாக ‘தம்மை’ பாவிக்கும் புனைவுகள் நம்மை இந்த கேள்வியில் இருந்து பாதுகாக்கின்றன. சாருவின் முக்கியத்துவம் அவர் நம்மை நிர்வாணமாக்கி இந்த கேள்வியை சந்திக்க தயாரிக்கிறார் என்பது. இதுவே சாருவின் அரசியல். இதை எதிர்கொள்ள முடியாத போதே நாம் சாருவின் புனைவுகளைப் படிப்பது பற்றி பல விமர்சனங்களை வைத்து அவரை நிராகரிக்கிறோம். இன்னும் வசதியாக, அவர் புனைவெழுத்தாளர் அல்ல, ஒரு சுவாரஸ்யமான கட்டுரையாளர் மட்டுமே என முத்திரை குத்துகிறோம். 
அதே போல, நம் இலக்கிய மரபில் “சிந்தனை ஓட்டம்” எனும் ஒரு அம்சம் இல்லாத ஒரு எழுத்து சாருவுடையது. சாருவின் நாயகன் வாழும் தனிமனிதன், சிந்திக்கிற, அதனாலே வாழ்வில் இருந்து விலகி நிற்கிற ஒருவன் அல்ல. இதுவும் சாருவின் தனித்துவமான அரசியலே.
ஆகஸ்ட் 9 அன்று மாலை ஆறு மணிக்கு நான் பேசப் போகும் உரையில் இந்த விசயங்களையே சற்று விரிவாக அணுக உத்தேசம்.

ஆர். அபிலாஷ்