சின்ன வயதிலிருந்தே – சுமார் பத்து வயதிலிருந்து – ஜோதிடர்களோடு எனக்குத் தொடர்பு உண்டு. நான் கொஞ்ச காலம் நாஸ்திகனாக இருந்த போது கூட ஜோதிட நம்பிக்கையைக் கைவிடவில்லை. ஆனால் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரத்தை மட்டும் ஒருபோதும் செய்ததில்லை. கதை கேட்பது போல் கேட்டுக் கொள்வேன். பல மறக்க முடியாத அனுபவங்கள். எல்லாவற்றையுமே அவ்வப்போது எழுதியிருக்கிறேன். இரண்டு பேரை எந்நாளும் மறக்க இயலாது. ஒருவர் வேங்கைவாசல் கிராமத்தில் இருப்பவர். வயதானவர். ஜோதிடத்தாலேயே கோடீஸ்வரர் ஆனவர். தெருவில் க்யூவே நிற்குமாம். சங்கராபரணம் படத்தில் வரும் சோமையாஜுலு மாதிரி இருப்பார். அவரை விட உயரம். நான் பார்த்த காலத்தில் முதுமை காரணமாக ஜோதிடம் பார்ப்பதை நிறுத்தியிருந்தார். ரொம்பத் தெரிந்தவர்களுக்காக அவ்வப்போது பார்ப்பார் போல. அவருக்கு வந்த அபரிமிதமான வருமானத்தில் வீட்டுக்கு எதிரிலேயே பெரிய கோவில் ஒன்றைக் கட்டியிருக்கிறார் என்றால் அவரது செல்வாக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என்னை அழைத்துப் போன நண்பர் ஒரு காங்கிரஸ் புள்ளி. ஜோதிடர் ஜோதிடத்தைத் தவிர ஒரு வார்த்தை பேச மாட்டாராம். ஆனால் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். என் கட்டங்களைப் பார்த்ததுமே நான் வேறு ஆள் என்று தெரிந்து விட்டது அவருக்கு. ஆனால் வழக்கம்போல் எழுத்தாளன் என்ற ஜாதியில் அவர் யாரையுமே சந்தித்திராததால் என் தொழிலை என்ன முயன்றும் அவரால் அனுமானிக்க முடியவில்லை. ஆசிரியரா என்றார். சினிமாவில் எழுதுபவரா என்று வழக்கம்போல் கேட்கவில்லை. அதெல்லாம் அவருக்குத் தெரியாது போல. சரஸ்வதி கடாட்சம் பெற்றவர் என்று திரும்பத் திரும்ப சொல்லி விட்டு என்னதான் தொழில் என்று வாய்விட்டே கேட்டு விட்டார். என் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கை போல் அல்ல என்பதால் அதையும் மிகத் துல்லியமாகச் சொன்னார். எதிர்காலத்தைச் சொன்னதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? ஏதோ ஆசீர்வாதமாகக் கொள்ள வேண்டியதுதான்.
அவருடைய வாழ்க்கை பற்றிச் சொன்னார். அவரிடம் வந்து செல்லும் பெரிய இடத்துப் பெண்மணிகள் பற்றிச் சொன்னார். திராவிடத் திலகங்களெல்லாம் அடக்கம். அதெல்லாம் என் நண்பருக்குப் பெருத்த ஆச்சரியம். கடைசியில் வாசல் வரை வந்து வழியனுப்பினார். நான் தர்மசங்கடத்துடன் மறுத்தபோது, உங்களிடம் இருக்கும் சரஸ்வதி தேவிக்கான என் நமஸ்காரம் என்றார். அவருடைய துல்லியமான கணிப்பைப் பார்த்து மிரண்டு போன நான் அவந்திகாவை அழைத்துச் சென்றேன். அவந்திகா தன் ஜாதகத்தை யாரிடமும் காண்பிக்க மாட்டாள். இவர் மட்டும் விதிவிலக்காக இருக்கட்டுமே என்றதால் அரை மனதுடன் வந்தாள். ஜாதகத்தைப் பிரித்தார். சில நிமிடங்கள் மௌனம். பிறகு ஜாதகத்தை மூடி அவள் கையில் கொடுத்து விட்டு, “அம்மா, நான் தான் உங்களைத் தேடி வர வேண்டும். உங்கள் ஜாதகத்தை யாரிடமும் காண்பிக்க வேண்டாம்” என்று சொல்லி இரண்டு கைகளையும் கூப்பினார். வேறு எதுவுமே சொல்லவில்லை.
இன்னொருவர். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன். அவரிடம் நெருங்க யாரும் அஞ்சுவர். காரணம், மரணத்தையும் சேர்த்து சொல்லுவார். எனக்குத்தான் மரணம் பற்றி அச்சமே இல்லையே? அதனால் தைரியமாகப் போனேன். இந்த தைரியத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த உடல் சட்டை மாதிரி. இது பழசானால் உதறி விட்டு வேறொரு உடலில் தொற்றிக் கொள்ளலாம். சர்வ நிச்சயமாகத் தமிழ்நாட்டில் எழுத்தாளனாகப் பிறக்க மாட்டேன். ஏனென்றால், பத்து புண்ணிய ஜென்மங்களுக்குத் தோதான தர்ம காரியங்களையும் நற்காரியங்களையும் இந்த ஜென்மத்தில் செய்து விட்டேன். தமிழ்நாட்டில் எழுத்தாளனாகப் பிறந்தவர்கள் அத்தனை பேரும் – சுந்தர ராமசாமி மற்றும் பெருமாள் முருகன் இருவர் நீங்கலாக அத்தனை பேரும் – முந்தின ஜென்மத்தில் கொடூரமான பாவம் பண்ணினவர்களாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாவுக்கு எட்டு பேர் வருவார்களா? ஒரு பிச்சைக்காரனுக்குக் கூட அதை விட அதிகம் இருப்பார்களே ஐயா? சரி, அதை விடுங்கள். அடுத்த ஜென்மத்தில் அநேகமாக நான் ஒரு ஐரோப்பிய நாட்டில் மொஸார்ட் மாதிரியான இசைக் கலைஞனாகவே பிறப்பேன் என்று நினைக்கிறேன். ஆக, இந்த உடல் ஒரு சட்டை.
மரண பயமின்மைக்கு இன்னொரு காரணம், ஜாதகம் பார்த்த அத்தனை பேருமே எனக்கு சொன்ன ஆயுளுக்கு இன்னும் கொஞ்ச காலம் இருக்கிறது. அதனால் சாவகாசமாக இருக்கலாம். ஆனாலும் இந்த அசோகா நாவலை முடிக்கும் வரை கொரோனாவிடம் மாட்டக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அசோகா முடிந்து விட்டால் கொரோனாவுக்கும் கவலையில்லை.
மரணத்தையும் சொல்லும் ஜோதிடரிடம் சென்றேன். எல்லாம் தெரிந்த கூட்டம். ரொம்பத் தெரிந்த கூட்டம். ஏடாகூடமாக ஒன்றும் சொல்லவில்லை. (ஆனால் தனியாக அவர் புதல்வரிடம் சாருவுக்குப் பெண் தொடர்பு நிறைய இருந்தது போல் தெரிந்தது, அவரிடம் சொல்லவில்லை என்றாராம். ஏன், சொல்லியிருக்கலாமேப்பா, இந்த எழுத்தாளருங்கள்ளாம் அப்படித்தானே, உனக்குத் தெரியாதா என்ன என்று மகன் கேட்க, அதற்குப் பெரியவர், இப்போ இல்லேல்ல, அதான் சொல்லவில்லை, இப்போ ஆள் தங்கம் என்றாராம்!)
இப்போது ஒரு நண்பர். டாக்டர் குமரவேள். பெரிய ஜோதிடர். அவரிடம்தான் இன்னும் கேட்கவில்லை. ஏனென்றால், அவர் என் தீவிர வாசகர். என்னைப் பற்றின எல்லா விபரமும் என் எழுத்திலிருந்தே அறிந்தவர். சொல்வதாக இருந்தால் எதிர்காலம்தான் சொல்ல வேண்டும். என் எதிர்காலம் ஒரே ஒரு விஷயத்தைத்தான் எதிர்நோக்கி இருக்கிறது. பணம். பணம் இருந்தால் பயணம் சாத்தியம். இல்லையேல் இல்லை. மற்றபடி ஒரு துறவிக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்? இந்தப் பண விஷயத்தில் நான் எந்த ஜோதிடத்தையும் இனி நம்பப் போவதில்லை. ஏனென்றால், அந்த வேங்கைவாசல் ஜோதிடரின் வார்த்தையே இதில் பொய்த்து விட்டது. கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்றார். வீட்டுக் கூரைதான் பிய்ந்து பிய்ந்து விழுந்து மரண பயம் காட்டியது. மற்ற எதுவும் கொட்டவில்லை.
இதெல்லாம் இப்போது பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியனின் ரிஷப ராசி பலன்களைக் கேட்டதும் ஞாபகம் வந்தது. ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானின் பார்வை பெற்றவர்களாம். சுக்கிரனின் அருள் இருப்பதால் பணத்துக்குப் பிரச்சினையே இருக்காதாம். (இவர் மீது கன்ஸ்யூமர் கோர்ட்டில்தான் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.) அடுத்து, காதல், காமம், எதிர்பாலின ஈர்ப்பு ஆகியவற்றுக்குத் தாரகன். (தப்பு, தப்பு) உல்லாசப் பிரியர்கள். அன்பானவர்கள். பேச்சு கவர்ச்சியாக இருக்கும். அவர்களின் வார்த்தைக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள் (காயத்ரி, அராத்து மாதிரி பொடி வாண்டுங்க கூட கட்டுப்பட மாட்டேங்குது!) ரிஷபராசிக்காரர்கள் ஒரு வழிகாட்டுதலோ ஆலோசனையோ சொன்னால் அது சரியாக இருக்கும். ரொம்ப சரி. என் ஆலோசனைப்படி நடந்த ஒரு நண்பன் திஹார் ஜெயிலில் இருக்கிறான். முக வசியம் இருக்கும். மகாலக்ஷ்மியின் பார்வை இருக்கும். (அது யார்? விலாசம் என்ன?) சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்களாதலால் வசியத்தன்மை கொண்டவர்கள். அன்பு, நேர்மை, நாணயம், நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். செயல்வீரர்கள். கிருஷ்ண பரமாத்மா கூட ரிஷபராசிதான், அதனால் எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதது போல் இருப்பார்கள், மற்றவர்களின் பிரச்சினையையும் தன் பிரச்சினையாக நினைப்பார்கள். கைவிட்டு விட்டு ஓட மாட்டார்கள். தந்தையைப் போல் அரவணைக்கக் கூடியவர்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். நல்லவர்கள். நாணயமும் நேர்மையும் தன்மானமும் இவர்களுக்கு உயிரை விட முக்கியம். இரக்க சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களை உபசரிப்பதில் இவர்களை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. பதற்றம் அடைவது இவர்களின் பலஹீனம். சிறுவயதிலேயே அவமானங்களையும் நம்பிக்கைத் துரோகத்தையும் சந்திப்பார்கள். ஆனாலும் கலங்க மாட்டார்கள். இசையிலும் ஆன்மீகத்திலும் அதீத நாட்டம் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். எதிலும் திருப்தியும் அடைய மாட்டார்கள். நல்ல மனம், நல்ல பண்பு, உயர்ந்த சிந்தனை இது அத்தனையின் மொத்த வடிவமாக இருப்பார்கள். ராசி எண் 5. ராசியான கடவுள் மஹா லக்ஷ்மி, ஸ்ரீரங்கம் பெருமாள். பெருமாளை நன்றாகத் தெரியும். (அந்த மஹாலக்ஷ்மிதான் யார் என்று தெரிய மாட்டேங்கிறது.) சிநேகமான ராசி: கன்னி ராசி. ராசிக் கல்: வைரம். (இதோ முதல் வேலையா வாங்கிடறேன்) பதற்றம் தவிர இவர்களின் இன்னொரு பலஹீனம்: இவர்களில் ஒரு சாரார் மாவா போடுவார்கள், இன்னொரு சாரார், அடிக்கடி சந்தா/நன்கொடை கேட்டு நச்சரிப்பார்கள். இந்த இரண்டையும் விட்டு விட்டால் இன்னும் சிறப்பாக முன்னேறலாம்.
உங்கள் ராசி பலன் பார்க்க: பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்: 94427 27693, 70103 82302
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai