இரண்டு எதிர்வினைகள்:
அன்புள்ள சாரு,
நீங்கள் கேட்டுக்கொண்டபடி உங்களுடைய மிக முக்கியமான உரையை இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன்.கந்தப்பன், தி.ஜ. ரங்கநாதன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை கேட்டு என்னுள் கிளம்பிய துக்கம் என் தொண்டையை அடைத்தது. உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் நீங்கள் துக்கம் விலக தண்ணீர் அருந்தியபொழுது இந்த உரை ஏன் மிக முக்கியமான உரை என்று புரிந்து கொண்டேன். பாலாம்மாள் கலைஞனை சாதனம் , திறமை , பக்தி , அனுக்கிரஹம் என்ற நான்கு நிலைகளாக வர்ணித்தார். யோகக் கலையை கற்றுக்கொண்டிருக்கும் என்னால் நன்றாகவே உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. முயற்சி செய்தால்தான் திறமை வளரும் என்பது எவ்வளவு உண்மையோ பக்தி செய்தால்தான் அனுக்கிரஹம் கிட்டும் என்ற உண்மையை மெல்ல புரியத் தொடங்கியுள்ளேன் . பக்தி என்பது அடுத்தவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது அல்ல , அது வெறும் சடங்கு மட்டும்தான். புகழ்ச்சி வரும் தருணங்களில் கலையை நமக்குக்கற்றுத்தந்த குருவை மறக்காமல் நம் கால்கள் வானுயர குதிக்காமல் இருக்கும் மனப்பக்குவம்தான் பக்தி என்று எனக்கு தோன்றுகிறது. பல தருணங்களில் நான் இந்த நிலையை உணர்வதற்கு நீங்களும் ஒரு காரணம்தான். உங்களால் என் மனதை பாதிக்க முடிகிறது
நன்றியுடன்,
தர்மகுமார். க
தர்மகுமார் குறிப்பிடுவது ந. சிதம்பர சுப்ரமணியன் படைப்புலகம் குறித்த என் உரை. நீங்களும் கேட்க வேண்டியது. கோபி உரைக்கு முன்னதாகக் கேட்டால் நலம்.
அடுத்து அராத்து:
சாரு என்னிடம் பேசும்போது அவர் பெயரை யாரும் எதிலும் குறிப்பிடாததைப் பற்றி லேசாக வருத்தப்பட்டார். அந்த வருத்தம் குழந்தைத்தனமானது. இங்கே நான் குறிப்பிடும் “குழந்தைத்தனமானது” என்ற வார்த்தை வழக்கமாக வசைக்காகவோ அல்லது அவமானப்படுத்தவோ பிரயோகிக்கப்படும். நான் அப்படி இல்லாமல் அதன் ஆர்கானிக் அர்த்தத்தில் குறிப்பிடுகிறேன்.
நான் குறிப்பிட்டது, பிறந்த நாள் அன்று ஒரு குழந்தைக்கு உடை எடுத்துக் கொடுத்தால், அந்தக் குழந்தையின் சகோதர குழந்தைகள் எல்லாம் லேசாக வருத்தப்படும் அல்லவா? எனக்கு 2 குச்சி மிட்டாய், தம்பிக்கு மட்டும் 3 குச்சி மிட்டாய் போன்ற குழந்தைத்தனமான வருத்தம்.
இதில் என்ன சோகம் என்றால் சாருவின் பிறந்த நாளுக்கு மற்ற குழந்தைகளுக்கு உடை எடுத்துத் தருகிறார்கள். அப்போதும் சாரு குழந்தைத்தனமாகவே வருத்தப்படுகிறார். என்ன எழவு ? கொஞ்சம் பெருந்தன்மையான குழந்தைத்தனம்.
நான் அவரிடம் சொன்னது போல எந்த எழுத்தாளரும் உங்கள் பெயரைச் சொல்லப்போவதில்லை. நீங்கள் எழுதுவது வாசகர்களுக்காக, எழுத்தாளர்களுக்கு அல்ல. உங்களுக்கு தனித்துவமான பெரும் வாசகர் பரப்பு இருக்கிறது. அவர்கள் உங்களை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த எரிச்சலில் உழலும் “மற்ற”எழுத்தாளர்கள் எப்படி உங்கள் பெயரைச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
ஒரு குழந்தை மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கிறது. அந்தக் குழந்தை, பிட் அடித்து எழுதியும் எல்லா பாடத்திலும் தோல்வியுற்ற குழந்தையிடம் இருந்து பூங்கொத்து எதிர்பார்க்கலாமா?
கடைசியாக என் கருத்து என்னவென்றால்:- எந்த எழுத்தாளராக வேண்டுமானாலும் இருக்கட்டும். சாருவின் பெயரை பொதுவில் உச்சரிப்பதும் உச்சரிக்காமல் இருப்பதும் அவரவர் தேர்வு. ஆனால் தனிப்பேச்சில் மட்டும் ஏன் காலை நக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. என்னதான் எழவாக இருந்தாலும் எழுத்தாளர் என்ற ஒரு அடைமொழி வந்து விட்டதே, அதற்காகவாவது ஒரு மரியாதையை பராமரிக்க வேண்டாமா?
லௌகீக வாழ்வில் தான் பணக்கார மாமனாரிடம் இளித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு , தனிப்பட்ட வாழ்விலும் பொதுவிலும் ஒரே மாதிரி இருப்பது என்ன அவ்வளவு சிரமமா? குறைந்த பட்சம் எழுத்து விஷயத்திலாவது!
பி.கு: சாருவிடம் நான் சொன்ன திவ்யமான வார்த்தை என்ன என்ற ஆர்வம் எழுந்திருக்கும்.அது பெரிய விஷயம் இல்லை. “குருவி குண்டில கொத்திப் பொறந்த பயலுக.”
***
சீனியிடமும் என் கட்டுரையிலும் நான் சரியானபடி என் தரப்பை விளக்கவில்லை போல. நான் சொல்ல நினைத்தது, என் பெயரைக் குறிப்பிடுவதில்லை என்று அல்ல. என்னிடம் பேசும்போது உங்களிடமிருந்துதான் எழுதவே கற்றுக் கொண்டே என்று சொல்வது. முன்னுரையில் பார்த்தால் அ’விலிருந்து அஃக் வரை எல்லோருக்கும் நன்றி சொல்லி விட்டு என்னை மறந்து விடுவது. இந்த அயோக்கியத்தனத்தையே குறிப்பிட்டேன். மற்றபடி இவர்கள் பெயர் குறிப்பிடுவதாலோ விடுவதாலோ எனக்கு ஒரு தம்பிடி லாபமோ நட்டமோ இல்லை.
தில்லியில் 1985 வாக்கில் நடந்த கதை இது. அவருக்கு என்னை விட 10 வயது கம்மி. சாண்டில்யன் படித்துக் கொண்டிருந்த ஆளுக்கு அசோகமித்திரனையும் நகுலனையும் அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், நவீன நாடகம், இசை, ஓவியம் என்று அந்த ஆளையே புதியதொரு மனிதனாக உருவாக்கினேன். அதற்குப் பத்து ஆண்டுக் காலம் பிடித்தது. பிறகு அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டார். கோணங்கிக்கு சமர்ப்பணம் என்று போட்டிருந்தது. அதில் தப்பே இல்லை. ஆனால் பத்து ஆண்டுக் காலம் நான் கோணங்கியை விமர்சித்துக் கொண்டிருந்த போதெல்லாம் என் கூடவே சேர்ந்து ஜால்ரா அடித்து விட்டு கடைசியில் இப்படிப் பார்த்தது அதிர்ச்சி. இது ஒரு ஏமாற்று வேலை என்று நினைத்தேன். இவருக்குக் கோணங்கி இப்படி என்று பத்து ஆண்டுகளில் ஒரு முறையாவது என்னிடம் தெரிவித்து இருக்கலாம் இல்லையா? இதே கதைதான் இன்று வரை நடந்து வருகிறது என்பதையே குறிப்பிட்டேன். இதற்கு விதிவிலக்காக இருந்து என்னைக் கொண்டாடுபவர்கள் என் நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஒரு பக்கம். நெருங்கிய நண்பர்களில் அராத்து காயத்ரி இருவரையும் குறிப்பிடுவேன். மற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் எனக்குத் தோளுக்குத் தோள் நிற்பவர்கள். இதற்கு அர்த்தம் ஜால்ரா என்பது அல்ல. எஸ். சம்பத்தின் இடைவெளி உலகின் தலைசிறந்த நாவல் என்றால், அது ஒரு போலி என்பார் அராத்து. காயத்ரியின் அதிரடிகளைப் பற்றி தனியாக ஒரு நாவலே எழுதலாம். ஆனால் அதுதான் என் சிந்தனைப் பள்ளியின் தனிச் சிறப்பு. சுதந்திரம். அடிப்படையான அன்பு. எந்தக் காலத்திலும் துரோகத்தின் நிழல் அங்கே விழாது.