அன்புள்ள ஜெயமோகனுக்கு…
இதை நான் உங்களுக்கு ஒரு அந்தரங்கக் கடிதமாகவே எழுத விரும்பினேன். ஆனால் இதோ அடுத்த மாதம் எனக்கு அறுபத்தேழு வயது ஆகப் போகிறது. இது நாள் வரை என் வயது பற்றி ஒருக்கணம் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. வயது பற்றிப் பேசுபவர்களிடம் கூட சீ, அந்தாண்ட போ என்றுதான் விழுந்திருக்கிறேன். எப்போதுமே இருபத்தைந்தின் மனநிலைதான். ஆனால் முதல் முறையாக வயது பற்றி நினைத்தே ஆக வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது. இரண்டு இரண்டு பேராக மருத்துவமனை போகிறார்கள். முப்பதும் அறுபதும். முப்பது திரும்பி வருகிறது. அறுபது விடைபெற்று விடுகிறது. ஆக, இந்த வயதுக்கு மேல் என்ன அந்தரங்கம் என்றுதான் வெளிப்படையான கடிதம்.
நீங்கள் ”சாருவை நம்பி” என்று எழுதியிருந்தது என்னை மிகவும் புண்படுத்தி விட்டது. உங்கள் ஆயுள் பரியந்தம் நீங்கள் வாழ்ந்த ஒரு துறையில் வாழும் ஒருவனைப் பார்த்து நீங்கள் எப்படி அந்த வார்த்தையைச் சொல்லலாம்? எனக்கு என்ன சலபதி எதிரியா? அல்லது, எந்த வேலையையாவது அரையும் குறையுமாகச் செய்யும் வழக்கம் உடையவனா நான்? எதிலுமே பர்ஃபெக்ஷன் பார்க்கும் ஆள் நான் என்பது உங்களுக்குத் தெரியாதா? போர்ஹேஸின் பெயரை போர்ஹே போர்ஹே என்று எல்லோரும் சொன்னபோது அதை ஏன் கண்டித்தேன்? ஸ்பானிஷின் மொழியின் சிறப்பே அதன் ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தே ஆக வேண்டும் என்பதுதான். மௌன எழுத்து என்பதே ஸ்பானிஷில் இல்லை. அப்படி மௌன எழுத்து இல்லாத ஒரே ஐரோப்பிய மொழி என்பதில் ஸ்பானிஷ்காரர்களுக்கு ரொம்பப் பெருமையும் கூட. அப்படி இருக்கும்போது அதில் போய் ஃப்ரெஞ்சைப் போல் ஒரு எழுத்தை மௌனமாக்குகிறார்களே என்ற வருத்தத்தை விட, போர்ஹேஸை முதல் முதலாகத் தமிழில் அறிமுகப்படுத்திய தர்மு சிவராமு இதையெல்லாம் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் விளக்கிச் சொல்லியிருக்கிறார். இவ்வளவு விஷயமும் தர்மு சிவராமு எழுதியது. நான் எழுதியது அல்ல. அதை நாம் எல்லாம் படித்தும் கவனம் இல்லாமல் போர்ஹே என்கிறோம். தர்முவின் கவிதை ஞாபகம் இருக்கிறது. கட்டுரைகள் ஞாபகம் இல்லை.
இந்த அளவுக்கு சுத்தம் பார்க்கிற என்னை நம்பினால் என்ன பிரச்சினை ஆகி விடும்? உங்கள் வாசகர் ஒருத்தர் என்னை நீங்கள் பாராட்டி விட்டதால் கற்பு நெறி பிறழ்ந்து விட்டதாகச் சொல்கிறாரே, அவருக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? ஆசான் என அழைத்தால் போதுமா? அடிப்படை மரியாதை வேண்டாமா? பிரச்சினை என்ன தெரியுமா? பிடிக்கிறதோ இல்லையோ நீங்கள் என்னை வாசித்திருக்கிறீர்கள். என் இடம் உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாசகர் எவரும் என் புனைவுகளை வாசித்ததில்லை. அவர்கள் வாசிக்கவே நினைத்தாலும் அது அவர்களால் முடியாது. அவர்களுக்கு அந்தப் பயிற்சி இல்லை. அதனால் அவர்களுக்கும் நஷ்டம் இல்லை. எனக்கும் நஷ்டம் இல்லை. ஆனால் உங்களுக்கு புத்தி சொல்லக் கூடாது இல்லையா? என்ன விஷயம் தெரியுமா? ”நீங்கள்ளாம் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா ஜெயம், நீங்க போயி அந்த ஆளைப் பாராட்டி வச்சிங்களே, இப்போ பாருங்க, சந்தி சிரிக்கிது. உங்களுக்கு எதுக்கு இந்த வம்பு?” இதைத்தான் உங்களுக்கு புத்தி சொல்லும் உங்கள் வாசகர்கள் சொல்ல நினைக்கிறார்கள்.
போகட்டும். மற்றவர்கள் நினைப்பது போல் அல்லது பெருமாள் முருகன் இப்போது என் மீது அவதூறு சொல்வது போல் (கதையையே படிக்கவில்லை) நான் போகிற போக்கில் அந்த அடிக்குறிப்புக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. புதுமைப்பித்தன்தான் அந்த அடிக்குறிப்பை எழுதியிருக்கிறார் என்று இப்போது நான் புகைப்பட நகலைப் பார்த்தால்தான் நம்புவேன் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், பக்கத்துக்குப் பக்கம் அடிக்குறிப்பும் அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாமே பித்தன்தான் கொடுத்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. எடுத்த எடுப்பில் இரண்டாவது கதையிலேயே பாருங்கள். ”ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் (graph) போட்டுக் காட்டுவது போல் கோடுகள் நிறைந்த முகம், பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டுகள் மாதிரித் தொங்கும் காதுகள்…” இங்கே பாம்படம் என்பதற்கு மேல் ஸ்டார் அடையாளமிட்டு அடிக்குறிப்பில் பாம்படம் என்பது ”திருநெல்வேலி ஜில்லாவில் பெண்கள் காதில் அணியும் ஓர் ஆபரணம்” என்ற விளக்கம் உள்ளது. இந்த அடிக்குறிப்பு தினமணி இணையதளத்தில் உள்ள கதையில் இல்லை. ஆக, இது பதிப்பாசிரியரே போட்ட அடிக்குறிப்புதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. பாம்படத்துக்கே அடிக்குறிப்பு போடும் ஒரு பதிப்பாசிரியர்தான் காசில் கொற்றத்துக்கும் அடிக்குறிப்பு போட்டிருக்கிறார் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது, சொல்லுங்கள்? இந்தக் கதை காந்தி பத்திரிகையில் 25.4.1934இல் வெளிவந்தது. எந்த எழுத்தாளராவது 1934-இல் பாம்படத்துக்கு அர்த்தம் எழுதுவானா? ஆக, இதை பதிப்பாசிரியர்தானே எழுதியிருக்கிறார்? இப்படி பக்கத்துக்குப் பக்கம் அடிக்குறிப்புகளாகவே உள்ள புத்தகத்தில் வரும் காசில் கொற்றத்து அடிக்குறிப்பை மட்டும் நான் எப்படி பித்தன் எழுதியதாக எடுத்துக் கொள்வது? இப்போது வன்மத்தோடு பொங்கிக் கொண்டு வரும் பெருமாள் முருகனும் உங்கள் கற்பு பற்றிப் பேசும் வாசகரும், சாரு தவறு செய்து விட்டார் என்று புகார் சொல்லும் வாசகரும் என்ன சொல்வார்கள்? என்னிடம் மன்னிப்புக் கேட்பார்களா?
இது தவிர, அதாவது அடிக்குறிப்பு தவிர, பிரதிக்கு உள்ளேயும் அடைப்புக்குறி போட்டு விளக்கம். பக்கம் 64. சங்குத்தேவனின் தர்மம்.
”நீ என்ன சாதி?
நாங்க வெள்ளாம் புள்ளெக! நீரு?
நான் தேவமாரு!”
இப்படித்தான் புதுமைப்பித்தன் எழுதியிருக்க வேண்டும். ஆனால் நம் உரையாசிரியர் வெங்கடாசலபதி எழுதுகிறார்:
நீ என்ன சாதி?
நாங்க வெள்ளாம் புள்ளெக! (வேளாளர்கள்)! நீரு?
நான் தேவமாரு.
இது என் sensibilityயை சாட்டையால் அடிக்கிறது. ஏங்க, மேலே உள்ள contextஇல் வெள்ளாம் புள்ளெக என்பதற்கு அர்த்தம் தேவையா? இதையும் பித்தன் தான் எழுதினார், அவர்தான் அடைப்புக்குறிக்குள் விளக்கம் போட்டார் என்று பெருமாள் முருகன் சொல்லுவாரா? இப்படி பக்கத்துக்குப் பக்கம் அடைப்புக்குறி போட்டு கோனார் நோட்ஸ் போடுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபணையே இல்லை. ஆனால் அட்டையில் ”புதுமைப்பித்தன் சிறுகதைகள் – ஆய்வாளர் டாக்டர் ஆ.இரா. வெங்கடாசலபதி உரையுடன்” என்ற பெயருடன் இருக்க வேண்டும். எனக்கு consumer என்ற முறையில் சில உரிமைகள் உள்ளன. நான் வாங்கும் புத்தகம் யார் எழுதினது என்று எனக்குத் தெரிய வேண்டும். புதுமைப்பித்தன் எழுதியதா? அல்லது, பித்தனும் உரையாசிரியரும் சேர்ந்து எழுதியதா? இப்போதும் சொல்கிறேன், இந்த அடைப்புக்குறியெல்லாம் புதுமைப்பித்தன்தான் போட்டார் என்றால் மீண்டும் மீண்டும் சலபதியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நான் தயார். பேசாமால் நான் சி. மோகனின் புதுமைப்பித்தன் கதைகளையே வாங்கியிருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை. இத்தனைக்கும் மோகனை அடித்துக் கொள்ள எடிட்டிங்கில் ஒரே ஒருத்தர்தான் இருக்கிறார். இருந்தும் மோகனை வாங்காததற்குக் காரணம், அவர் கதைகளை வகைப்படுத்துகிறார் என்பதுதான். பித்தன் கதைகளை மேஜிகல் ரியலிசக் கதைகள், துப்பறியும் கதைகள், எதார்த்த கதைகள் என்று பிரித்துப் பிரித்து பகுதி பகுதியாக வருகிறது அவர் தொகுத்த நூலில். கோபி கிருஷ்ணன் தொகுப்பு மோகனின் பதிப்பில் பிரமாதமாக இருந்தது. ஆனால் உள்ளேயிருந்து சில குரல்கள் என்ற கோபியின் நாவலை “பதிவுகள்” என்று வகைப்படுத்தி விட்டார் மோகன். இப்படி வகைப்படுத்துவது பிரதிகளை ஒரு விதத்தில் மூடி விடுகின்றன. உண்மையில் உள்ளேயிருந்து சில குரல்கள் ஒரு நாவல். அதைப் பதிவுகள் என்று வகைப்படுத்தியது மிகவும் தவறு. அதை ஒரு அத்துமீறல் என்றே சொல்வேன்.
இன்னும் பாருங்கள். பக்கம் 66. பொன்னகரம். சந்திரன் இல்லாத காலங்களில் – இப்படிச் சொன்னால் புரியாதாம். அடைப்புக்குறியில் விளக்கம் : (கிருஷ்ண பட்சத்தில்)
பதிப்பாளரா? புதுமைப்பித்தனா?
இது மிஷின் யுகம் என்ற கதையில் – பக்கம் 111
ஒரு ஓட்டலுக்குப் போகிறார் கதைசொல்லி. என்னவெல்லாம் இருக்கு என்று கேட்கிறார். உடனே கடல்மடை திறந்தது போல் பக்ஷணப் பெயர்கள் வருகிறது. இவர் “ஸேவரி எதாகிலும் கொண்டா!” என்கிறார். போதாதா? இல்லை. ”ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா!” ஸேவரி என்றால் கார பக்ஷணம் என்று தெரியாது பாருங்கள். அடைப்புக்குறிக்குள் விளக்கம். கொடுத்தது பித்தனா? பதிப்பாசிரியரா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இங்கே நான் எல்லா பக்கங்களிலிருந்தும் எடுத்துக் கொடுக்கவில்லை. புரட்டியதில் கண்ணுக்குப் பட்டதை மட்டுமே தருகிறேன். 850 பக்க புத்தகத்தில் பட்டியல் போட்டால் அது ரொம்பப் பெரிதாக இருக்கும்.
சிற்பியின் நரகம் பக்கம் 333
யவனனும் சந்நியாசியும் பேசிக் கொள்கிறார்கள். இது யவனன் பேசுவது: உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால்தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜுபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத்தாழ்வில்லை.
அடிக்குறிப்பு: ஜுபிட்டர்: யவன இதிகாசங்களில் குறிப்பிடப்படும் தேவர்களுக்கு அரசன். கிரங்களில் வியாழம்.
(இது புதுமைப்பித்தனின் அடிக்குறிப்பாக இருக்கலாம்.)
விநாயக சதுர்த்தி
ஆனால் மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப்போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டி விட்டான்.
அடிக்குறிப்பு: அடுக்களைத் தாலி: அந்தரங்கமாகச் சென்று தாலி கட்டுவது, கந்தவர்வ விவாகத்திற்குச் சமமான பழக்கம்.
அடிக்குறிப்பு யார்? பித்தனா? பதிப்பாசிரியரா?
ஒரு நாள் கழிந்தது கதை. பக்கம் 384
இன்னா இந்த மிளவொட்டியிலே மூணு துட்டு இருக்கு; அதெ எடுத்துக்கிட்டுப் போங்க!
மிளவொட்டி (மிளகுப் பெட்டி) – ஐந்தரைப் பெட்டி என்பது சகஜமான பெயர்.
மூணு துட்டு – ஓர் அணா; ஒரு துட்டு என்பது பாண்டி நாட்டில் நான்கு தம்பிடி.
இந்த அடிக்குறிப்புகளைப் பார்த்தாலே இது பதிப்பாசிரியர் போட்டது என்றுதானே அர்த்தமாகிறது? அதனால்தான் எனக்கு காசு மேட்டரிலும் பதிப்பாசிரியரின் அடிக்குறிப்பு என்று சகஜமாக, எந்தச் சந்தேகமும் இல்லாமல் இருந்தது. இந்த அடிக்குறிப்பும் பித்தன் தான் போட்டார் என்றால் மீண்டும் ஒரு மன்னிப்பு.
கதை மனித யந்திரம்:
வீசம் படி பின்னைக்கு எண்ணை குடுங்க.
அடிக்குறிப்பு: பின்னைக்கு எண்ணை – புன்னைக்காய் எண்ணெய்
அதே கதை:
என்ன அண்ணாச்சி? இன்னந் தேரமாகலியா?
அடிக்குறிப்பு: தேரம் – நேரம்
இன்னம் ரெண்டு மூணு புள்ளியைப் பாத்துவிட்டுத்தான் கடையெடுக்கணும். எனக்குச் செல்லும்.
செல்லும் – நேரம் செல்லும்.
கிட்டத்தட்ட பரிமேலழகர் உரையே நடந்து கொண்டிருக்கிறது. இப்படிச் செய்தால் நீல பத்மநாபனின் நாவல்களுக்கு அடிக்குறிப்பை மட்டுமே இன்னொரு புத்தகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்குத் திருவனந்தபுரம் பாஷையைக் கொண்டது அந்த நாவல் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டுமா?
கதை நாசகாரக் கும்பல். அவன் ஒரு கொண்டையன்கோட்டையான். (மறவர்களுக்குள் ஒரு கிளை)
1937-இல் எழுதிய இந்தக் கதைக்கு ஜாதிப் பெயரின் விளக்கத்தைப் போட்டது உரையாசிரியரா? ஆசிரியரா?
இது எல்லாவற்றையும் விட ஒரு இடம். நினைவுப் பாதை. வைரவன் பிள்ளையின் மனைவி இறந்து விட்டாள். பிள்ளை வாசலில் வந்து உட்கார்ந்திருக்கிறார்.
“இன்னும் விடியவில்லை. …வாசல் தெளிக்கும் சப்தங்கூடக் காலையின் வரவை எதிரேற்கவில்லை. ஏன், ’துஷ்டிக்காக’ அழுகிறவர்கள் கூட எழுந்திருக்கவில்லை என்றால்…
இதில் என்ன புரியவில்லை. துஷ்டிக்காக என்பதற்கு அருகில் அடைப்புக்குறி போட்டு (இழவுக்காக) என்று இருக்கிறது. இதனால்தான் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இப்படியே பக்கத்துக்குப் பக்கம். ஒரிஜினல் புத்தகத்தைப் படிக்கிறோமா, உரை நூலைப் படிக்கிறோமா என்றே சந்தேகம் வரும் அளவுக்கு அடைப்புக் குறிகளும் அடிக்குறிப்புகளும் இருந்தால் நான் என்ன நினைக்கட்டும்? எது பித்தனுடையது, எது தொகுப்பாளருடையது? எல்லாமே புதுமைப்பித்தன்தான் செய்தது என்றால் என்னிடம் பதில் இல்லை.
ஆனால் இந்த விஷயத்துக்கு இவ்வளவு எகிறிக் குதித்து மிரட்டும் பெருமாள் முருகன் ஜெர்ரி பிண்ட்டோ விஷயத்தில் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? கீழே பாருங்கள்:
தமிழில் கிளாஸிக் என்று கருதப்படும் ஜேஜே சில குறிப்புகள் சலபதியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் கந்தர்வகோளமாகி இருப்பதை கிழிகிழி என்று கிழித்துத் தோரணம் கட்டியிருக்கிறார் ஜெர்ரி பிண்ட்டோ. என்ன செய்யலாம்? பிண்ட்டோவை யார் கேட்பது? மதிப்புரை வந்தது ஹிண்டுவின் அகில இந்தியப் பதிப்பில். சரி, இதையாவது விடுங்கள், இது ஆங்கில மொழிபெயர்ப்பு விஷயம். இது சலபதியின் துறை அல்ல. ஆனால் இதே புதுமைப்பித்தன் கதைகளின் தொகுப்பு பூராவும் என்னுடையது என்று அதே நாகர்கோவில்காரரான எம். வேதசகாயகுமார் சொல்கிறாரே? அவரை என்ன செய்தீர்கள்? மறுப்பு ஏதாவது வந்துள்ளதா? வேதசகாயகுமாரின் பதிப்பு எதுவும் சரியில்லை என்று வெங்கடாசலபதி தன் முன்னுரையில் சொல்கிறார். ஆனால் வேதசகாயகுமாரோ அடிப்படையே தகர்க்கிறார். கீழே இணைப்பு:
2001 இல் வெளியிடப்பட்ட பதிவு இது. திண்ணையில் வந்துள்ளது. ஒரு அடிக்குறிப்புக்காக என் மீது அவதூறு சொல்லி பதிவை எடுக்கச் சொல்லி மிரட்டும் பெருமாள் முருகன் இந்தப் புதுமைப்பித்தன் ஆய்வே தன்னுடையது என்றும் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் வேதசகாயகுமார் சொல்கிறாரே, அது எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டு? ஏன் இன்னும் இந்தப் பதிவை எடுக்க வைக்கவில்லை? சாரு நிவேதிதாவின் ஒரே ஒரு அடிக்குறிப்பு விஷயத்தை – அதுவும் நான் தமிழ் முறையாகக் கற்றவன் இல்லை, எது சரி என்று தெரியவில்லை என்று சந்தேகாஸ்பதமாக எழுதியதற்கே பதிவைத் தூக்கு என்று சொல்கிறவர்கள் வேதசகாயகுமாரை ஏன் தொடவே இல்லை?
உண்மையில் நான் ஒரு ஆய்வாளரை நம்பி வாங்கியதற்காக வருத்தப்படுகிறேன். இப்போதும் சொல்கிறேன். இந்த அடிக்குறிப்புகள், அடைப்புக்குறி விளக்கங்கள் எல்லாமே புதுமைப்பித்தன் போட்டதுதான் என்றால் இந்த முழுக் கடிதமும் அர்த்தமற்றதாகி விடும். ஆனால் அப்படி இருக்க சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். பித்தன் அத்தனை insensitive படைப்பாளி இல்லை. இப்படி விளக்கங்கள் கொடுப்பதும் தப்பே இல்லை. ஆனால் விலை கொடுத்து வாங்கும் – உங்கள் நிறுவனத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் ஒரு நுகர்வோனுக்கு இந்த விவரங்கள் தெரிய வேண்டும். அவன் இது ஒரு ஒரிஜினல் புத்தகம் என்று நம்பித்தானே வாங்குகிறான்?
இவ்வளவு கூட எழுதியிருக்க மாட்டேன். ஒரு மறுப்புத் தெரிவித்தால் சாதாரணமாகப் போயிருக்கக் கூடிய இந்த விஷயத்துக்கு சம்பந்தமே இல்லாமல் பெருமாள் முருகன் வந்து மிரட்டியதாலும், உங்கள் (ஜெயமோகன்) வாசகர்கள் இதுதான் சாக்கு என்று என் மீது வசை பொழிந்ததாலும், சாருவை நம்பி எழுதி விட்டேன் நீங்கள் எழுதியிருந்ததாலும் இத்தனையும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு இன்னும் எத்தனை பெருமாள் முருகன்கள் படை வரப் போகிறதோ, பெருமாளுக்கே வெளிச்சம்.
கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது.
என்றும் அன்புடன்
சாரு