புதுமைப்பித்தன் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர்தான் காசில் கொற்றத்து என்பதற்கு அர்த்தம் சொல்லி – அதாவது அது பகடி என்று – அடிக்குறிப்பு கொடுத்துத் தொலைத்திருக்கிறார் என்று சத்தியமாக எனக்குத் தெரியாமல் போய் விட்டது. இதை நான் கொஞ்சமும் யூகிக்கவில்லை. யூகிப்பதும் சாத்தியம் இல்லை. ஒரு படைப்பாளியே கதைக்கும் கதையில் அவன் ஆடியிருக்கும் பகடி சிலம்பத்துக்கும் அவனே விளக்கம் சொல்லுவான் என்று யார்தான் யூகிக்க முடியும்? எனவே புதுமைப்பித்தனை நம்பி வெங்கடாசலபதியைக் குறை சொன்னதற்காக சலபதியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அந்தப் பதிவை நீக்கி விட்டேன்.
மேலும், பெருமாள் முருகனுக்கும் நன்றி. இது சம்பந்தமாக என் மீது அதிக பட்ச நடவடிக்கை எடுக்காமல் என்னைத் தன் பிளாகில் அவமானப்படுத்தி சொற்களால் மிரட்டியதோடு நின்றதற்காக பெருமாள் முருகனுக்கும் நன்றி.
பெருமாள் முருகனின் மிரட்டலை பின்வரும் அவரது பதிவில் காணலாம்:
”சாருநிவேதிதா ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ கதையை வாசித்திருந்தால் அதன் முதல் அடிக்குறிப்புப் பகடியை அறிந்திருப்பார். இரண்டாம் குறிப்பையும் கதையுடன் இணைத்துப் புதுமைப்பித்தன் கொடுத்தது என்பதைப் புரிந்திருப்பார். கதையை அவர் வாசிக்காமல் குறிப்பை மட்டும் கண்டு சலபதி செய்த பிழை என முடிவு செய்துவிட்டார். பெரும்பிழையைக் கண்டறிந்த மாதிரி சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார்:”
பெருமாள் முருகனின் மொழியை கவனியுங்கள். வன்மம் பொங்கப் பொங்க எழுதியிருக்கிறார். கதையையே வாசிக்கவில்லை என்கிறார். கதையை வாசிக்காமல் குறிப்பை மட்டும் கண்டு சலபதி செய்த பிழை என்று முடிவு செய்து விட்டேனாம்!!! குற்றம் சாட்ட வேண்டுமானால் அதில் கொஞ்சமாவது நாகரீகம் பேண வேண்டாமா? கதையைப் படித்ததில் வேண்டுமானால் பிழை இருக்கலாம். கதையைப் படிக்காமலேவா நான் ஒருவர் மீது குற்றம் சொல்லுவேன்? அதிலும் புதுமைப்பித்தன் இப்படி அடிக்குறிப்பு எழுதியிருக்க மாட்டார் என்று நினைத்தே, அதை வெளிப்படையாகச் சொல்லியே அதை எழுதினேன். பார்த்தால் அது புதுமைப்பித்தனின் அடிக்குறிப்பு. அதற்காக கதையையே படிக்கவில்லை என்று முடிவு செய்வதா? ஒன்றுமில்லை, வன்மம். பெருமாள் முருகன் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறார். அப்படியானால் பெருமாள் முருகனின் கதைகளைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொன்னதற்காக அவரது ரசிகர் ஒருவர் பொதுவெளியில் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து, ரவுடிகளை
அழைத்துக் கொண்டு வந்தும் மிரட்டி, கொல்லாமல் விட மாட்டேன் என்று ஐம்பது பேருக்கும் இருந்த கூட்டத்தில் சபதம் எல்லாம் செய்து, நான் ஒரு வார காலம் போலீஸ் பந்தோபஸ்தோடு அலைந்தது பற்றி நான் உடனேயே மறந்து விட்டேன். யாரோ செய்ததற்கு பெருமாள் முருகன் என்ன செய்வார்? ஆனால் அந்த ரவுடி அப்படி என்னை மிரட்டியதற்கு அவர் சார்ந்திருந்த அமைப்பு கூட என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. கொலை மிரட்டல் விட்டு ஒரு வார காலம் உயிருக்கு பயந்து வெளியே போய் வந்து கொண்டிருந்தேன். அதற்கே யாரும் கவலைப்படவில்லை. இப்போது பதிவை நீக்கச் சொல்லி பெருமாள் முருகன் மிரட்டுகிறார். சரி, நீக்கி விட்டேன்.
ஆனால் நான் பெருமாள் முருகனையும் வெங்கடாசலபதியையும் பாராட்டி எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று பெருமாள் முருகனுக்குத் தெரியுமா? என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தொகுதிகள் பற்றி இருவரும் கேள்வியாவது பட்டிருப்பார்களா? அந்தத் தொகுதிகளில் பக்கத்துக்குப் பக்கம் அவர்கள் இருவரது பெயர்களைத்தான் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறேன். வெறும் நன்றி அல்ல. தமிழிலேயே சலபதியைப் போன்ற ஆய்வாளரைக் காண்பது அரிது என்று சொல்லியே நன்றி தெரிவித்திருக்கிறேன். காரணம், ஏ.கே. செட்டியாரின் காந்தி ஆவணப் படச் சுருள்களை அவர் எவ்வளவு பாடுபட்டு சேகரித்தார் என்று எனக்குத் தெரியும். அது மட்டும் அல்லாமல், எழுத்தாளர்களிடையே பெருமாள் முருகனைப் போன்ற ஒரு ஆய்வாளர் இல்லை என்று பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் எழுதியிருக்கிறேன். ஏனென்றால், பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் நான் எடுத்துக் கொண்ட முன்னோடிகள் அத்தனை பேரின் தொகுதிகளையும் காலச்சுவடு பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. அதில் பலதுக்கு பெருமாள் முருகன்தான் ஆய்வுரையும் பதிப்புரையும் எழுதியிருக்கிறார். தொகுத்திருக்கிறார். குறிப்பாக, கு.ப.ரா. தொகுதிக்கு பெருமாள் முருகன் எழுதியுள்ள பதிப்புரையும் தொகுத்த விதமும் அற்புதமானது. பெருமாள் முருகனின் கதைகள்தான் எனக்குப் பிடிக்கவில்லையே தவிர என் ஆய்வுகளுக்கு பெருமாள் முருகனின் பதிப்பும் பதிப்புரையும் மிக உதவியாக இருந்தது என்பதைப் பக்கத்துக்குப் பக்கம் பதிவு செய்திருக்கிறேன். ஏன் பக்கத்துக்குப் பக்கம் என்றால், என் கட்டுரை ஆறு பகுதிகள் கொண்டது என்றால், ஒவ்வொரு பகுதியிலும் அந்த நன்றியைத் தெரிவிப்பது என் வழக்கம். அந்தத் தொடர் தினமணி இணைய தளத்தில் வந்தது. அதையெல்லாம் பெருமாள் முருகன் கேள்வி கூடப் பட்டிருக்க மாட்டார். விமர்சனத்துக்கு மட்டும் வன்மத்தோடு வருவார்கள். பாராட்டைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
காரணம், அவர்களெல்லாம் இலக்கியப் புனிதர்கள். நானோ சாக்கடையாக வர்ணிக்கப்படுபவன். சமீபத்தில் டி. தர்மராஜ் தன் முகநூலில் ஒருத்தரது பதிவை எடுத்துப் பகிர்ந்திருந்தார். தர்மராஜ் பற்றி நான் தினந்தோறும் என் பதிவுகளில் பாராட்டி எழுதி வந்தேன். ஃபூக்கோ கற்றவர், அயோத்திதாஸ் பண்டிதர் பற்றி நூல் எழுதியவர். ஒரு நல்ல புத்திஜீவி என்ற முறையில் மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன். அவர் பகிர்ந்திருந்த பதிவில் பார்த்தால் எடுத்த எடுப்பில் ஏதோ கடவுள் துணை என்று ஆரம்பிப்பது போல தமிழகத்தின் சாபக்கேடான சாரு நிவேதிதா என்று ஆரம்பித்து சாக்கடை அது இது என்று எழுதியிருந்தது. இதை ஏன் பேராசிரியர் தர்மராஜ் பகிர்ந்திருக்கிறார் என்று பார்த்தால் அவரைப் பற்றிப் பாராட்டாக ஒரு வரி அதில் இருந்ததுதான். ஆக, நான் பாராட்டுவது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் எவனோ ஊர் பேர் தெரியாத சல்லிப் பயல் என்னை தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று ஆரம்பித்து உங்களைப் பாராட்டினால் அதை எந்தக் கூச்ச நாச்சமும் இல்லாமல் பகிருவீர்கள்? இதை நான் அவருக்கு வாட்ஸப்பில் அனுப்பினேன். எதுவுமே கேட்கவில்லை. அந்த ஆள் என்னைத் திட்டிய பகுதியை மட்டும் அனுப்பினேன். எந்தப் பதிலும் இல்லை.
காரணம், ஆய்வாளர்களும், படித்தவர்களும் புத்திஜீவிகளும் பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களும் என் பெயரைச் சொன்னாலே தீட்டு என்று நினைக்கிறார்கள். அதனால்தான் என்னை நம்பி மோசம் போய் விட்ட ஜெயமோகனை (ஜெயமோகனின் வார்த்தைகள்: நான் சாரு நிவேதிதாவை நம்பியே அக்குறிப்பை எழுதினேன். என்னிடம் வேங்கடாசலபதி பதிப்பித்த நூல் இல்லை.அது கொஞ்சம் அவசர நம்பிக்கை என்று தெரிகிறது. எதற்கும் அ.இரா.வேங்கடாசலபதியிடம் ஒரு மன்னிப்பை கோரிவிடுகிறேன்.) ஒருத்தர் ”இலக்கியக் கற்பு நெறி வழுவி விட்டீர்கள்” என்று எழுதியிருக்கிறார். பாவம் ஜெயமோகன், வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் என்னைப் பாராட்டினார். அதற்கே ஒருத்தரிடம் மன்னிப்பும் இன்னொருத்தரிடம் கற்பு நெறி தவறினாய் என்ற பழிச்சொல்லும் வாங்க வேண்டியதாகி விட்டது. நான் சலபதி, பெருமாள் முருகன் போக ஜெயமோகனிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம், புதுமைப்பித்தன் தான். சத்தியமாக அவர்தான் இப்படி அடிக்குறிப்பு எழுதி என்னை அடியில் தள்ளி விட்டார் என்று நினைக்கவே இல்லை.
இங்கே நான் ஜெயமோகனின் வாசகர்களை நினைத்து ரொம்பவும் வருத்தப்படுகிறேன். உலகத்திலேயே ஜெ. அளவுக்கு எழுதிய ஆள் எவரும் இல்லை. அப்படிப்பட்டவரின் எழுத்தை ஒன்று விடாமல் படித்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் புத்தி மட்டும் நடிகர் விஜய் ரசிகனை விட ஒரு மில்லி மீட்டர் அளவுக்குக் கூட வளரவில்லையே அது ஏன்? உங்களுக்குப் பிரியமான எழுத்தாளர் தவறு செய்து விட்டதாகத் தோன்றும் போது திட்டுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள், செய்யுங்கள். அது ஏன் ஐயா கற்பை இழுக்கிறீர்கள்? கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு (தமிழ் மீடியம்) படிக்கும் கிராமத்துப் பையன் எதையோ படித்து விட்டு அ. மார்க்ஸிடம் வந்து சேருவான். புரிதலிலும் அறிதலிலும் அவனை விட மோசமாக இருக்கிறீர்களே ஐயா? விமர்சிப்பதற்கு வேறு வார்த்தையா கிடைக்கவில்லை?
இது போக, நான் எழுதிய காசு மேட்டர் பற்றி ஜெயமோகன் நாலு வார்த்தை எழுதியிருக்காவிட்டால் பெருமாள் முருகனின் பார்வைக்கே இது வந்திருக்காது. ஏனென்றால், புனிதர்களான அவர்கள் இந்த அசிங்கத்தின் பக்கம் பார்க்கவே மாட்டார்கள்.
மேலும், இந்த விஷயத்தில் – அதாவது இந்த அடிக்குறிப்பு விஷயத்தில் நான் ரொம்பவும் குழம்பிப் போனதற்குக் காரணம், வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தன் புத்தகத்தில் பலப் பல இடங்களில் அடிக்குறிப்புகளும் அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அது அத்தனையையும் புதுமைப்பித்தன்தான் கொடுத்திருக்கிறார் என்றே இப்போது நான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அப்படியானால் புதுமைப்பித்தனுக்கும் கோனார் நோட்ஸ் எழுதியவருக்கும் வித்தியாசமே இல்லை.
மேலும், புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுதியை மூன்று பேர் தொகுத்திருக்கிறார்கள். மூவருமே என் மதிப்புக்குரியவர்கள். மூவருமே என் பெயரைச் சொன்னால் தீட்டு என நினைப்பவர்கள் என்பது வேறு விஷயம். அது முக்கியம் அல்ல. மூவருமே மிக மிகச் சிறந்த பதிப்பாசிரியர்கள், ஆய்வாளர்கள். இந்த மூவரில் நான் இருவரை மிக உயரத்தில் வைத்தே பார்க்கிறேன். ஒருவர் ஆ. இரா. வெங்கடாசலபதி. இன்னொருவர் சி. மோகன். மூன்றாமவர், எம். வேதசகாயகுமார். மோகன் தொகுத்திருக்கும் நூல்களே அவரது அபாரமான திறமைக்குச் சான்று. மோகனைப் போன்ற ஒரே ஒரு எடிட்டர்தான் தமிழில் உண்டு. அவர் க்ரியா ராமகிருஷ்ணன். மோகனின் எடிட்டிங் திறமைக்கு ஒரு சான்று. உமாபதி நடத்திய தெறிகள் பத்திரிகையில் வந்த எஸ். சம்பத்தின் இடைவெளி ஒரு பிரதி. மோகன் எடிட் செய்து க்ரியாவில் வந்த இடைவெளி மற்றொரு பிரதி. இரண்டும் இரண்டு வெவ்வேறு நாவல் போல் இருக்கும். நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றால், தெறிகளில் வந்த வடிவத்தைத்தான் அழகிய சிங்கர் பதிப்பித்துள்ளார். மோகன் எடிட் செய்தது இணையத்தில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட மோகன் தொகுத்த புதுமைப்பித்தன் தொகுதியைக்கூட வாங்காமல் நான் ஆ.இரா. வெங்கடாசலபதியின் தொகுப்பைத்தான் வாங்கினேன் என்றால் சலபதி மீது நான் கொண்டிருக்கும் மதிப்புதான் காரணம். சலபதியின் இதுவரையிலான பதிப்பு அனுபவங்கள் குறித்த என் மரியாதைதான் காரணம். பெருமாள் முருகன் இந்த அளவுக்கு என்
மீது பாய்கிறாரே, எம். வேதசகாயகுமார் புதுமைப்பித்தன் பதிப்பு விஷயத்தில் என்ன சொல்கிறார் என்று ஏன் பெருமாள் முருகன் கவலைப்படவில்லை? நான் உடனடியாக அந்தப் பதிவை நீக்கியது பெருமாள் முருகனின் மிரட்டலுக்குப் பயந்து அல்ல, புதுமைப்பித்தனே கொடுத்த அடிக்குறிப்பு என்று தெரிய வருவதால். இதை பெருமாள் முருகன் சாதாரணமாகவே சொல்லியிருந்தால் நீக்கியிருப்பேன். இப்படி கதையையே படிக்கவில்லை என்று வன்மம் தோய்ந்த வார்த்தைகளைக் கக்க வேண்டியதில்லை. இத்தனை பாய்கிறவர் வேதசகாயகுமாரை ஏன் அப்படியே விட்டு விட்டார்? வேதசகயாகுமாரின் வார்த்தைகள் இணையத்தில் அப்படியே இருக்கின்றனவே? கீழே பாருங்கள். முழுக்கட்டுரையையும் வாசிக்க சுட்டியைத் தந்திருக்கிறேன்.
வேதசகாயகுமாரின் ஆய்வுக் குறிப்புகளைப் படிக்கும்போது ஒருவர் கண் கசியாமல் இருக்க முடியாது. கீழே சில பத்திகள்:
ஆய்வில் முன் செல்ல இடையூறாக இருந்தது முதன்மை ஆதாரமான புதுமைப்பித்தன் கதைகளின் ஒழுங்கின்மை. எனக்கு முன்னமே பேரா ஜேசுதாசனின் மாணவரான ஆ.சுப்பிரமணிய பிள்ளை புதுமைப்பித்தனின் படைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்று விட்டிருந்தார். இந்த ஒழுங்கின்மை குறித்து அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை. தூய்மையான தரவுகள் தேவை என்று எனக்கு பட்டது. எனவே கதைகளின் காலம் ,வெளிவந்த ஊடகம் ஆகியவற்றை திரட்ட வேண்டியிருந்தது.
அப்போது புதுமைப்பித்தன் கதைகளின் எண்ணிக்கை குறித்து கூட உறுதி இல்லாமல் இருந்தது.ஒருதொகுப்பில் இடம் பெற்ற கதையையே மற்ற தொகுப்புகளிலும் சேர்த்து தொகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்திருந்தனர். கதைகளின் காலம் ஊடகம் போன்ற விசயங்களை அறிவதற்கு எந்த வழியும் இல்லை. புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் அவரது படைப்புகளுக்கு உரிமை கொண்டாடினர். தாங்கள் வெளியிட்டதாகச் சொல்லி இல்லாத கதைதொகுப்புகளின் பட்டியல்களைக் காட்டினர். வெளியிட்டவர்கள் கையில் கிடைத்த எல்லாவற்றையும் அவர் கதைகளாக சேர்த்துக் கொண்டனர். உயிரோடு இருந்த போதும் அவர் படைப்புகள் வணிக நோக்கில் சுரண்டப்பட்டன. இப்போதும் சுரண்டப்படுகின்றன.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில்புதுமைப்பித்தன் வீட்டைத்தேடி ஒரு நாள் முழுக்க அலைய வேண்டியிருந்தது. அன்று இலக்கிய வாசகர் மத்தியில் கூட புதுமைப்பித்தன் அத்தனை பிரபலமல்ல. லாட்டரி பரிசு விழுந்த அம்மா வீடு என்று கேட்ட போதுதான் வீடு அடையாளம் காட்டப் பட்டது. புதுமைப்பித்தன் வீட்டில் அவரது நூல்களின் ஒரு பிரதிகூட இல்லை. தமிழக முதல்வர் வாசிப்பதற்காக அவை எடுத்துச் செல்லப்பட்டன எனும் தகவல் மட்டுமே கிடைத்தது. புதுமைப் பித்தனின் வாழ்க்கை பற்றிய தகவல்களைத் தயக்கமின்றி அவர் மனைவி கமலா விருத்தாசலம் என்னிடம் பகிர்ந்துகொண்டார். புதுமைப்பித்தனுக்கு கல்கி அனுப்பிய பணவிடைக்கான ரசீது ஒன்று தன்னிடம் இருப்பதாகச் சொன்னார்[புதுமைப்பித்தன் முக்கியமான கலாச்சார நசிவு சக்தியாகக் கண்ட கல்கியிடம் அவர் மனைவி அவர் மறைவுக்கு பின்பு நிதியுதவி பெற்றது குறித்து சில விமரிசனங்கள் இருந்தன. கமலா விருத்தாசலம் புதுமைப்பித்தனே அப்படி உதவி பெற்றுக் கொண்டவர் என நிறுவ விரும்பினார் . அடுத்த நாள் தேடித்தருவதாகச் சொன்னார். அடுத்தநாள் காணவில்லை என்றார். புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்களோ கைப்பிரதிகளோ தன்னிடமில்லை என்றார். ஆனால் சமீபத்தில் அவரிடமிருந்து இளைய பாரதியால் பெறப்பட்ட கடிதங்கள் ‘ ‘கண்மணி கமலாவுக்கு ‘ ‘ என்ற பேரில் அச்சு வடிவம் கண்டன.
பிறகு எம். வேதசகாயகுமார் வ.ரா. வீட்டு வாசலில் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து பிரதிகளைப் பெற்ற கதை இது:
புதுமைப்பித்தனின் படைப்புகள் வெளியான ஆரம்பகால மணிக்கொடி இதழ்களை வ ரா வீட்டில் காண முடியும் என ராமையா வழிகாட்டினார். இதற்காகவே இரு முறை சென்னை வந்தும் திருமதி வ.ரா என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார். மிக சொற்பமான உதவிப்பணத்திலும் சொந்தப் பணத்திலும் நான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த காலம் அது. பி எஸ் ராமையாவை போய்க் கேட்டபோது அவை வரலாற்றின் பதிவுகள் என்ற முறையில் அவற்றைப் பார்க்க எனக்கு உரிமையுண்டு என்றார். உரிமைகள் தரப்படுபவை அல்ல போராடி பெறப்படுபவை என்றார். அவர் வழிகாட்டியதன் பேரில் வ ரா வீட்டு முகப்புத் திண்ணையில் காலை முதல் அந்தி வரை அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். மூன்றாவது நாள் பக்கத்து வீட்டு பெண்கள் எனக்காகக் குரல் கொடுத்தனர். கடைசியில் அந்த கதவு எனக்காக திறக்கபட்டது. எவரையுமே சந்திக்க மறுக்கும் அந்த அம்மா எனக்கு மாம்பழச் சாறு தந்தார். என் போராட்டம் ஒரு உண்ணாவிரதம் என அவர் கருதியிருக்கலாம்.
பாரதியின் இந்தியா இதழ்கள் முழுக்க இருந்தன. பாரதி எழுதிய வேறு இதழ்களும். இரண்டு நாட்களை அவற்றைப் படிப்பதற்கென்றே ஒதுக்கினேன். இந்தியா இதழில் வெளிவந்த கருத்துப் படங்கள் என்னை கவர்ந்தன. இடையிடையே வ ரா வின் ஜெயில் டைரிகளை வாசித்தேன். 5 நாட்கள் மிகவும் பயனுள்ளவையாக கழிந்தன.ஆறாவது நாள் ஒருவர் வந்தார். திருமதி வா ராவின் தம்பி என்றார். என்னை பலவந்தமாக அந்த அறையை விட்டு வெளியேற்றினார். சிறு தொகை தருவதாக சொல்லி பார்த்தேன். அவரோ ஒவ்வொன்றுக்கும் தனித்தொகை என்றார். திருடும் குணமோ 5000 ரூபாயோ இருந்திருந்தால் அன்றே இந்தியா இதழ்கள் என் கைக்கு வந்திருக்கும் ,பிற்பாடு நேர்ந்த முக்கியமான ஒரு ஆய்வுப் பிழை நேர்ந்திருக்காது [இந்தியா இதழில் பாரதி வேலை பார்த்தபோது அவற்றில் வெளிவந்த கருத்துப் படங்கள் ஆ.இரா வேங்கடாசலபதியால் ‘ ‘பாரதியின் கருத்துப் படங்கள் ‘ ‘ என்ற பேரில் பாரதியால் உருவாக்கப் பட்டவை என்று சொல்லி பதிப்பிக்கப் பட்டன. நமது வழிபாட்டு மோகம் அதை அப்படியே எற்க வைத்ததுமல்லாமல் தொகுப்பாளரூக்கு நட்சத்திர அந்தஸ்தை பிரபல இதழ்கள் மூலம் உருவாக்கித் தரவும் செய்தது. பாரதி இந்தியா இதழில் அதன் கருத்துத் தரப்பை தீர்மானிப்பவர்களில் ஒருவர் மட்டுமாகவே இருந்தார். அவர் அதை நடத்தவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் கூட அக்கருத்துபடங்கள் பாரதியின் கருத்துப்படி, உத்தரவின்படி வரையப்பட்டவை என சொல்ல திட்டவட்டமான புற ஆதாரம் வேண்டும். இந்நூல் அச்சில் இருக்கும் போதே ஆய்வாளரிடம் நான் இதைச் சொன்னேன். ஆதாரம் உண்டு, நூலில் சொல்லப்பட்டுள்ளது என்றார் அவர். ஆனால் நூலில் அப்படி எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு பரபரப்புக்குப் பிறகு பாரதி ஆய்வாளர்களிடம் எந்த மரியாதையையும் உருவாக்காமல் நூல் நூலகத்தில் ஒதுங்கியது. ஆனால் தொகுப்பாளர் அவர் உத்தேசித்ததை அடைந்தார். வணிக ரீதியான பரபரப்பு நோக்கங்களுடன் நடத்தப்படும் பொறுப்பற்ற ஆய்வுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்]
1979ல் புதுமைப்பித்தன் கதைகளை கால வரிசைப்படி தொகுத்தேன். புதுமைப்பித்தனின் புனைபெயர்கள் அனைத்தையும் முதற்கட்ட சான்றாதாரங்களுடன் தொகுத்தேன். அவை வெளிவந்த இதழ்களை அசலை பெரும்பாலும் தேடி எடுத்து பட்டியலிட்டேன். புதுமைப்பித்தனுடன் சம்பந்தமுள்ளதாக பொதுவாக எவரும் கருதாத ஜோதி இதழ்களை கண்டடைந்து அவர் கதைகள் சிலவற்றை தேடியெடுத்தது அன்றைய சூழலில் முக்கியமான விஷயம் என்று பலரும் கூறினார்கள். ராமையா அப்போது வெளிநாட்டு தமிழ் இதழ்களில் எழுதுவது தான் லாபமாக இருந்தது என்று சொன்னதன் அடிப்படையில் தான் ஜோதி இதழில் புதுமைப்பித்தனின் கதைகளை தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பட்டியலை உடனடியாக சுந்தர ராமசாமிக்கு படிக்க தந்தேன்.விபரங்களை தன் புரிதலுக்கே பயன்படுத்துவதாகவும் வெளியிடுவதில்லை என்றும் சொன்னார்.தேடி எடுத்த கதைகளை ரகஸியமாகப் பாதுகாக்க வேண்டும் எனும் உணர்வு எனக்கு இருக்கவில்லை.உடனுக்குடன் கமலா விருத்தாசலத்துக்கு ஒரு பிரதியை தந்தேன்.கொல்லிப்பாவையில் 5 கதைகளையும் வண்ணமயில் இதழில் ஒரு கதையையும் வெளியிட்டேன்.20 வருடம் முன்பு புதுமைப்பித்தனின் முழுக்கதைகளையும் படித்திருந்தவர்கள் சிற்றிதழ்ச் சூழலிலேயே மிகவும் குறைவு.பிரபல இதழ்களின் வாசகர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.புதுமைப்பித்தன் குறித்து ஒரு விவாதம் உருவாக்க நானும் ராஜ மார்த்தாண்டனும் பலவகையிலும் முயன்றோம்.ஆய்வின் முடிவுகளை வெளியிட இன்னொரு காரணமும் இருந்தது.அன்று இப்போது போல புதுமைப்பித்தனுக்கு நட்சத்திர மதிப்பு இருக்கவில்லை.அவரை விற்க நிறுவனங்கள் போட்டிய்ிடவும் இல்லை.வணிக ஆய்வாளர்கள் தோன்றி ஆய்வுகளை சுவீகரித்துக் கொள்ளும் நிலையும் இருக்கவில்லை.
என் கள ஆய்வின் விளைவாக புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய பல ஒழுங்கின்மைகளை நீக்க முடிந்தது.புதுமைப்பித்தன் எழுதாத கதையான ‘ ‘மனநிழல் ‘ ‘அவரது தொகுப்பில் இடம் பெற்றிருந்ததை கண்டுபிடித்து நீக்க முடிந்தது.அது புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் எழுதியது என்று அவரது அசல் தொகுப்பைக் கண்டடைந்து புறச்சான்றுகளுடன் நிறுவ முடிந்தது.நடைச் சித்திரமாக வந்த ‘ ‘திருக்குறள் குமரேச பிள்ளை ‘ ‘சிறுகதையல்ல என்று அடையாளம் காட்ட முடிந்தது.ஆறு சிறுகதைகளைப் புதிதாக வாசக கவனத்துக்குக் கொண்டுவரவும் முடிந்தது.முடிவாக புதுமைப்பித்தன் கதைகளின் எண்ணிக்கை மொத்தம் 102 என்று நிறுவவும் முடிந்தது.இந்த எண்ணிக்கையில் இருந்து பல வித மான ஆய்வு மாறுதல்களை நோக்கி எளிதாக நகர முடியும். புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் மட்டுமே இன்னும் என் முன் சவாலாக நிற்கின்றன.புற ஆதாரமின்றி ஏதும் முடிவாக சொல்லக் கூடாத விஷயம் அது.எந்தத் துறையானாலும் அசல் ஆய்வை செய்துள்ள எவரும் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தார் வெளியிட்ட ‘ ‘அன்னையிட்ட தீ ‘ ‘ தொகுப்பில் எனது ஆய்வின் முடிவுகள் தங்கள் கண்டுபிடிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன.நிதியுதவி பெற்று ஆய்வு செய்யும் ஒரு தொகுப்பாளர் அதற்கு கணக்கு காட்டும் பொறுப்பில் இருப்பவர் இப்படி செய்வது நெறி மீறல் மட்டுமல்ல, நேர்மையின்மையும் கூட!
என் ஆய்வேட்டின் பிரதி கிட்டத்தட்ட 7 வருடங்களாக சுந்தர ராமசாமி இல்லத்தில் [காலச் சுவடு அலுவலகம்] இருந்தது . என் பட்டியல் மீது எனக்கு ஒரு உணர்வு ரீதியான பிடிப்பு உண்டு.ஓர் இளம் ஆய்வாளனின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் அதன் பின்னால் உண்டு.என் ஆய்வுக்கு இன்றியமையாதது அல்ல எனினும் இந்த ஆய்வை நான் மேற்கொண்டதற்கு பின்னால் உள்ளது புதுமைப்பித்தன் மீது எனக்குள்ள அன்பும் ஆர்வமும் தான்.அந்த உழைப்பு அங்கீகரிக்கபடவேண்டும் என்று நினைக்கிறேன்.இதில் உள்ளது சுய நலம் மட்டுமல்ல.அதுவே ஆய்வு நேர்மை.மேலும் ஆய்வுகள் செய்யப்பட அவசியமான ஊக்கம் அப்போதுதான் உருவாக முடியும்.மேலும் இப்போக்கு இனிவரும் காலங்களில் மேலும் பெரிய வணிீக நிறுவனங்களால் ஆ ய்வுகள் சுரண்டப்படவும் வழிவகுக்கும்.
இந்த ஆய்வேடு பிரசுரமான கதையையும் சொல்லவேண்டும்.சுந்தராமசாமி இதன் முக்கியத்துவத்தை பலரிடம் சொல்லியிருக்கிறார்.[இப்போது சொல்வாரா தெரியாது].பிரசுரிக்குமாறு என்னை ஊக்கப்படுத்தினார்.கிரியா இதை வெளியிட வேண்டும் என அதன் பங்குதாரர்களான மதுரை சிவராமனும் ,சுந்தர ராமசாமியும் விரும்பினார்கள்.ஆகவே அதை அவர்களுக்கு அனுப்பினேன்.ஆனால் பதில் ஏது இல்லை. கிரியா ராமகிருஷ்ணன் அவர் சாதாரண ராமகிருஷ்ணனாக இருந்தபோதே எனக்கு நன்கு அறிமுகமானவர்.அவரை நேரில் பார்க்க போனேன்.கணிப்பொறியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் என்னை சந்தித்த போது தான் பொட்டலம் கூட பிரிக்கப் படாத என் நூல் பிரதியை எடுத்துவரச் சொல்லி கணிப்பொறி திரையை விட்டு கண்ணை எடுக்காமலேயே ஆய்வை புரட்டி பார்த்து இதை மூன்றில் ஒன்றாக சுருக்கித்தான் பிரசுரிக்க முடியும் என்றார்.அவர் காட்டிய அந்த அலட்சியம் என்னை மிகவும் புண்படவைத்தது .பிரதியை அப்போதே வாங்கி திரும்பிவிட்டேன்.
காலச்சுவடு இதழ் இரண்டாம் முறை வந்தபோது அதனுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன்.என் நூலை அவரே வெளியிடுவதாக சொன்னார் கண்ணன். பொருளாதாரச் சிக்கல் இருப்பதாக சொன்னார்.ஆனால் புதுமைப்பித்தன் பதிப்பக முயற்சி துவங்கியபோது ஆ இரா வேங்கடாசலபதி அதன் ஆசிரியராக ஆகிவிட்டிருந்தார்.என் பட்டியலை மட்டும் ‘ ‘பயன் படுத்தி ‘ ‘ கொள்வதாக கண்ணன் சொன்னார்.நான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டேன்.ஆய்வேடுகளை அப்படிப் பிரித்துப் பிரசுரிப்பது மரபல்ல.ஆய்வேடு பல்கலை கழக சொத்தும் கூட.அனால் காலச்சுவடு நிறுவனம் அந்த பட்டியலை தாங்களே ‘ ‘சொந்த வகையில் ‘ ‘ தேடி எடுத்து கண்டடைந்ததாகக் கூறி பயன்படுத்திக் கொண்டது.
***
இவ்வளவையும் படித்த பிறகுதான் வெங்கடாசலபதி தொகுத்த புத்தகத்தை வாங்கினேன். காரணம், சலபதி புதுமைப்பித்தனை மட்டும் தொகுக்கவில்லை. ஏற்கனவே சொன்னது போல், காந்தி பற்றிய செட்டியாரின் ஆவணப் படம் இப்போது நமக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே, சலபதிதான். விலை மதிப்பே இல்லாத ஒரு பொக்கிஷம் அந்த ஆவணப் படம்.
இறுதியாக பெருமாள் முருகனுக்கு: கதையைப் படிக்காமல் ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் 70 பக்கம், 80 பக்கம் என்று எழுத முடியாது என்பதை ஒரு ஆய்வாளர் என்ற முறையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது, நீங்கள் மட்டுமேதான் அப்படிச் செய்வீர்கள், உங்களுக்குப் பிடிக்காத நான் செய்ய மாட்டேன் என்று பாரபட்சமாக யோசிக்கக் கூடாது. பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளில் அப்படித்தான் ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் அறுபது எழுபது பக்கங்கள் எழுதியிருக்கிறேன். மேலும், இப்போது மாதாமாதம் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் மூன்றரை மணி நேரத்துக்கும் குறையாமல் உரையாற்றுகிறேன். கதைகளைப் படிக்காமல் கதை விட முடியாது. அதிகாலை ஆறு மணிக்கு உரை ஆரம்பித்தால் ஒன்பதரை மணிக்கு முடிகிறது. ஐம்பது பேரிலிருந்து நூறு பேர் வரை கேட்கிறார்கள். இத்தனைக்கும் இது கட்டண உரை.