170. அந்நியன்

காலையில் எழுந்ததும் ஒரு ஐந்து நிமிடம் எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பேன்.  பொதுவாக எல்லாம் ங்கொம்மா ங்கோத்தா ரக கடிதங்கள்.  எப்போதாவது பாராட்டுக் கடிதங்கள்.  இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவப் பயிற்சியே அந்தக் காலை நேரக் கடித வாசிப்பு.  ஒருவர் ரேஷன் கடையில் கொரோனா நிவாரணமாகக் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வாங்கி எனக்கு அனுப்புகிறார்.  இன்னொருவன் – அவன் எனது புதல்வர்களில் ஒருவன் என்பதால் ஒருமையில் சொல்கிறேன் – இப்போது பாதிரியாக ஆகி விட்டான்.  பாதிரி அங்கியின் உள்பகுதியில் தனக்குப் பிடித்தவர்களின் பெயர்களைப் பொறித்துக் கொள்ளலாம்.  அவரது வாழ்நாள் வரை அது தொடர்ந்து வரும்.  அதில் தன் அம்மா, அப்பா, அடுத்து என் பெயரைப் பொறித்திருக்கிறான்.  ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும்   மாதா, பிதா, குரு என்பதுதான் இந்திய மரபு.  இதையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றால் ங்கொம்மா ங்கோத்தா வசையையும் நான் எந்த மனச் சலனமும் இன்றி ஏற்கத்தான் வேண்டும்.  அதனால்தான் சுஜாதா என்னை மலம் என்று வர்ணித்த போது நான் சலனம் அடையவில்லை.  சுஜாதாவை எடைபோட அவருடைய வர்ணனை எனக்குக் காரணமாக இருக்கவில்லை.  என் சுதந்திரத்தை அது பாதிக்கவில்லை.

அசோகமித்திரனைச் சந்திக்க நான் அவர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சொல்லி விடுவார்.  உங்கள் எழுத்தை என்னால் வாசிக்க முடியவில்லை.  அதை ஒரு முகச்சுளிப்புடன் சொல்வார்.  ஏற்கனவே அவர் முகத்தில் நிரந்தரமாக ஒரு கைப்பு உணர்வு ஏறியிருக்கும்.  அதோடு இதுவும் சேரும்.  அதனால்தான் அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று என் புத்தகம் எதையும் நான் அவரிடம் கொடுத்ததே இல்லை.  ஆனாலும் யாரையும் வாசிக்காமல் விடக் கூடாது என்ற அவரது கொள்கையின் காரணமாக என்னுடைய எல்லா நாவல்களையும் வாங்கிப் படித்து மிகவும் துன்புற்றார். 

ஆனாலும் அவரை நான் சந்தித்துக் கொண்டுதான் இருந்தேன்.  எனக்கும் அவருக்கும் ஒரு தந்தை மகன் உறவு இருந்தது.  சார், உங்களுக்கு என்ன வேண்டும்?  சொல்லுங்கள், வாங்கி வருகிறேன் என்பேன்.  அதெல்லாம் எதுக்குங்க சிரமம் என்பார்.  உங்கள் எழுத்திலிருந்துதான் நான் எழுதக் கற்றுக் கொண்டதே, சும்மா சொல்லுங்க சார் என்பேன்.  அதற்கும் ஒரு பார்வை பார்த்து விட்டு (அப்படியும் என்னால் படிக்க முடியலியே!) நம் தெருவின் முனையில் ஒரு கடை இருக்கும்.  சின்ன பெட்டிக் கடை.  அங்கேதான் தென்னமரக்குடி எண்ணெய் கிடைக்கும்.  முடிஞ்சா வாங்கி வாங்கோ.  பத்து ரூபா இருக்கும்.  இந்த அன்பையும் நட்பையும் நான் அசோகமித்திரன் போன்ற மகத்தான எழுத்தாளர்களுக்கு – முக்கியமாக என் ஆசான்களுக்கு மட்டுமே வழங்க முடியும்.  ஒரு முப்பது வயது இளைஞனுக்கெல்லாம் வழங்க முடியாது.  நான் ஒரு பேராசிரியரைக் குறிப்பிடுகிறேன்.

நேற்று இதே நேரம்.  காலை ஐந்து மணிக்குக் கொஞ்சம் முகநூலில் கண்களை ஓட்டிய போது ஒரு கசப்பான விஷயத்தைக் கண்டேன்.  ஜேன்யூவில் பயின்ற, ஃபூக்கோ தெரிதா பார்த் போன்ற ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களைப் பயின்ற, என் மரியாதைக்குரிய ஒரு பேராசிரியரின் ஒரு கட்டுரையைத் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அராத்து.  அதுதான் எனக்குள் மிகுந்த கசப்புணர்வை ஊட்டியது.  ஒருவேளை நான் அந்தப் பேராசிரியர் பற்றிப் பிறகு எழுதியிருந்ததை – பெயர் குறிப்பிட்டே எழுதியிருந்தேன் – அராத்து படிக்கவில்லையோ என நினைத்தேன், ஆனால் அராத்து அப்படி எதையும் நான் எழுதியதை விடக் கூடியவர் அல்லவே எனவும் தோன்றியது.  என்ன அந்தக் கசப்புணர்வு என்றால்-

யாரோ ஒரு அமெரிக்கவாசி தமிழகத்தின் சாபக்கேடான சாரு நிவேதிதா என்று தன் கட்டுரையை ஆரம்பித்திருந்தார்.  கட்டுரைக்கு உள்ளேயும் சாரு ஒரு கழிசடை, சாக்கடை என்ற அர்ச்சனைகள் இருந்தன.  அந்தக் கட்டுரையை நம் ஃபூக்கோ பயின்ற பேராசிரியர் தன் தளத்திலும் முகநூலில் ”பெருமையுடன்” பகிர்ந்திருந்தார். ஏனென்றால், அந்த அமெரிக்க அனாமதேயத்தின் கட்டுரை பேராசிரியர் பற்றிய பாராட்டுக் கட்டுரை.  அதில் ஏன் எனக்கு அர்ச்சனை என்றால், அந்தப் பிரஸ்தாபக் கட்டுரையை நான் பெரிதும் பாராட்டியிருந்தேன். 

இந்தப் பேராசிரியர் பிராமண சாதியைச் சேர்ந்தவர் அல்ல.  தலித் பின்னணியிலிருந்து வந்தவர்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், தீண்டாமையின் வலியை தன் அளவில் இல்லாவிட்டாலும் கூட வரலாற்றின் மூலமாக மனதளவில் உணர்ந்தவராகவே இவர் இருப்பார்.  அப்படி உணர்ந்தவர் என்னை ஒருவன் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றும் கழிசடை என்றும் சொல்வதைத் தன் பக்கத்தில் பகிர்கிறார் என்றால் என்ன அர்த்தம்?  பழுப்பு நிறப் பக்கங்களையும் மெதுஸாவின் மதுக்கோப்பை, தப்புத் தாளங்கள், கலகம் காதல் இசை போன்ற மகத்தான நூல்களையும் எழுதிய ஒருவன், 45 ஆண்டுகளாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு மூத்த எழுத்தாளன் எப்படி ஐயா ஒரு சமூகத்தின் சாபக்கேடு ஆக முடியும்?  இப்படி ஒருத்தன் சொல்கிறான் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  ஆனால் ஃபூக்கோ பயின்ற ஒரு புத்திஜீவி இதைத் தன் பக்கத்தில் எடுத்துப் போடும் அராஜகத்தை என்னால் தாங்கவே முடியவில்லை.  இந்த வலியை எப்படி அராத்து போன்ற என் நண்பர்களால் உணர முடியவில்லை என்பதும் எனக்குப் புரியவில்லை.  நேற்று நான் அராத்துவோடு பேசினேன்.  அவர் நான் அந்தப் பேராசிரியரின் பெயர் குறிப்பிட்டு என் வருத்தத்தைப் பதிவு செய்ததையும் படித்திருக்கிறார்.  அராத்து அந்தப் பேராசிரியர் இன்னொரு சிக்ஸர் கட்டுரையைத் தன் முகநூலில் பகிர்ந்ததால் இப்போது அந்த சிக்ஸர் கட்டுரை முகநூலில் பெரிதும் விவாதிக்கப்பட்டு பேராசிரியர் ஒரு ராக்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார்.  காரணம், அராத்துவின் பகிர்தல்.  நீங்கள்தானே ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்கலாம்.  ஆனால் என்னைத் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று ஒருவர் சொல்வதில் உங்களுக்குக் கோபம் வரவில்லையா என்று திருப்பித்தான் கேட்க முடியும். 

பேராசிரியர் அப்படிச் சொல்லவில்லை என்றாலும் அவரும் அப்படித்தான் நினைக்கிறார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.  அதையும் நான் எழுதினேன்.  அந்த அமெரிக்க அனாமதயத்தின் கட்டுரையை பேராசிரியர் பகிர்ந்திருந்தார் அல்லவா, அதை நான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பேராசிரியருக்கு வாட்ஸப் செய்தேன்.  ஒரு வரி கூட எதுவும் எழுதவில்லை.  அதற்கும் பேராசிரியரிடமிருந்து ஒரு வருத்தம் இல்லை.  ஒரு பதில் இல்லை.  “போடா ங்கொய்யாலெ” என்ற மனோபாவம்தானே காரணம்? 

அராத்து அந்தப் பேராசிரியரின் கட்டுரையைப் பகிர்ந்ததால் அந்தக் கட்டுரை இப்போது பலராலும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போது அப்படியானால் அந்த சாபக்கேடு விஷயத்துக்கு என்ன பதில் என்று கேட்கத் தோன்றுகிறது?  என் வாசகர்கள், என் வாரிசுகள் யாரும் எனக்கு minions இல்லை. அப்படிப்பட்ட minionsஐ சாமியார்கள்தான் உருவாக்குவார்களே தவிர என்னுடைய சிந்தனாமுறையில் minions உருவாவது சாத்தியம் இல்லை.  ஆனாலும் நண்பர்களுக்குள்ளே ஒரு camaraderie தேவையில்லையா?  என்னை ஒரு சமூகத்தின் சாபக்கேடு என்கிறான் ஒருத்தன், இன்னொருத்தர் அதைத் தன் பக்கத்தில் எடுத்துப் போடுகிறார்.  எடுத்துப் போடும் அவர் இன்னொரு அனாமதேயம் என்றால் நான் கவலையே பட மாட்டேன்.  அவர் ஒரு அறிவுஜீவி.  ஃபூக்கோ பயின்றவர்.  சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகம் பற்றிப் பேசுபவர்.  அந்த சமூகத்திலிருந்து வந்தவர்.  அவரே இந்த இண்டெலக்சுவல் சமூக விலக்கத்தை ஆதரிக்கிறார் என்பது பற்றி என் நண்பர்கள் ஒரு கட்டுரை அல்லவா எழுதியிருக்க வேண்டும்?  அராத்துவும் ஸ்ரீராமும் மனோவும் காயத்ரியும் அல்லவா எழுதியிருக்க வேண்டும்?  ஆனால் என் நண்பர்கள் அத்தனை பேரும் காந்தி மாதிரி.  தன்னை ஜெயிலில் போட்டவனுக்கு ஜெயிலில் இருந்து தன் கையால் ஷூ தைத்துக் கொடுத்த காந்தியின் மனோபாவம்தான் என் நண்பர்களுக்கும்.  கோபமே வராது.  உங்கள் வயதுக்கு, உங்கள் அனுபவத்துக்கு இதையெல்லாம் உதறி விட்டுப் போக வேண்டும் சாரு என்று எனக்கே அறிவுரை சொல்வார்கள். 

நான் தொடர்ந்து இதை எழுதி வருகிறேன்.  தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தவனுக்குத்தான் அந்த வேதனை தெரியும். இன்னொரு உதாரணம் தருகிறேன்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தக விழாவில் எனக்குப் பக்கத்தில் பார்த்தால் வண்ணநிலவன்.  எனக்கு அவர் யுவான் ருல்ஃபோ மாதிரி.  தன் பக்கத்து இருக்கையில் சத்யஜித் ரே அமர்ந்திருந்தது பற்றி எஸ்.ரா. ஒருமுறை எழுதியிருக்கிறார்.  அப்படி ஒரு புல்லரிப்பு எனக்கு.  எஸ்தர் எழுதிய வண்ணநிலவன்.  என் அருகில் நின்று கொண்டிருந்த, இலக்கிய உலகுக்குப் புதிதாய் வந்த நண்பரிடம் வண்ணநிலவனை அறிமுகப்படுத்தி தமிழின் ஒரு லெஜண்டரி ரைட்டர் என்றேன்.  நான் சொல்வதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.  ஏன், வண்ணநிலவனே நம்ப மாட்டார்.  முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் நகர்ந்து விட்டார் வண்ணநிலவன்.  ஒரு வார்த்தை பேசவில்லை.  இத்தனைக்கும் வண்ணநிலவன் ஒரு நடமாடும் வள்ளலார்.  அவர் அதிர்ந்து பேசி கூட யாரும் பார்த்ததில்லை.  சொன்னால் இதை நம்பக் கூட மாட்டார்கள்.  சரி, புகழ்ச்சி பிடிக்கவில்லை போல என்றே நான் எடுத்துக் கொண்டேன்.  பிறகு சில மாதங்கள் கழித்து எஸ்தர் போன்ற அவருடைய சில சிறுகதைகளை நல்ல முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கலாம் என்ற ஏற்பாடுகளைச் செய்தேன்.  முதலில் அவரது அனுமதி பெற வேண்டும் என்று போன் செய்தேன்.  விஷயத்தைச் சொன்னேன்.  ரோபோவிடம் பேசியது போல் இருந்தது.  ம் என்ற வார்த்தையைத் தவிர வேறு ஒரு வார்த்தை இல்லை.  என்னடா இது என்று குழம்பிப் போய், பண்ணலாமா என்றேன்.  ம்ம்ம்ம்ம்ம் சொல்றேன்.  அவ்வளவுதான் கிடைத்த பதில்.  விட்டு விட்டேன்.  சுஜாதா வெளிப்படையாக எழுதினார்.  இவர்கள் நினைக்கிறார்கள். 

அறுபது வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு தமிழ் எழுத்தாளனும் என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும்.  என் எழுத்தின் மீது மரியாதை கொண்ட ஒரே ஒரு மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மட்டுமே.  மற்றபடி என் சகாக்களான எஸ்.ரா., ஜெயமோகன் ஆகிய இருவர் மட்டுமே என்னைப் பற்றிப் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். முருகேச பாண்டியன் என் அத்யந்த நண்பர்.  நாற்பது ஆண்டுகளாக என் எழுத்தைக் கொண்டாடி வருபவர். மற்றபடி யாருமே இல்லை.  ஐம்பது வயதுக்குக் கீழே உள்ள எழுத்தாளர்களில் பலர் என்னை விரும்பிப் படிப்பவர்கள்.  அது வேறு விஷயம்.

ஆ. மாதவனா அல்லது வேறு யார் என்று சட்டென்று ஞாபகம் இல்லை.  ஒரு இளைஞன்.  தலித்.  குடிசைக்கு வெளியே வந்து நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கிறான்.  டேய் நாயே, என்னடா வெளிய வந்து ரவுசு பண்ணிக்கிட்டிருக்கீங்க, பொம்பளப் புள்ளைங்க புழங்குற இடம்டா இது.  தேவ்டியாப் பசங்களா போங்கடா அந்தாண்ட என்பார் பக்கத்து வீட்டுக்காரர்.  இப்படித்தான் எப்போது பார்த்தாலும் அவமானம் தின்கிறார் இளைஞன்.  அவன் தன் நண்பர்களுடன் ஒரு கட்டிடத்தின் கீழே விளையாடிக் கொண்டிருக்கிறான்.  கட்டிடம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.  வாட்ச்மேனும் திட்டுகிறான்.  டேய் தேவ்டியாப் பசங்களா, அந்தாண்ட போங்கடா நாய்ங்களா.  இந்த இளைஞன் நேராக வாட்ச்மேனிடம் போய் தன் அரிவாளால் அவன் தலையை அறுத்து எடுத்துக் கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் போகிறான்.  தலையை வெளியே வைத்து விட்டு உள்ளே போய் சார் நான் ஒரு கொலை பண்ணிட்டேன் என்கிறான்.  பதினேழு வயசுப் பொடிப் பயல்.  ஏய் நாயே அந்தாண்ட போடா லூசுப் பயலே.  இவன் வெளியே போய் அந்தத் தலையை எடுத்துக் கொண்டு வந்து போலீஸ்காரரின் மேஜையில் வைக்கிறான்.  போலீஸ்காரர் அலறுகிறார். 

இந்த சம்பவத்தை மறக்காதீர்கள். மேலே படியுங்கள்.  இரண்டு சம்பவங்கள்.  அவர் ஒரு பிரபலம்.  அவர் எழுதும் கட்டுரைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  அவருடைய நிலையில் இருந்து கொண்டு அப்படியெல்லாம் சமூகநீதியாக சிந்திக்கும் மனிதர்கள் கம்மி.  இல்லவே இல்லை.  அவரை ஒரு புத்தக விழாவில் பார்த்தேன்.  ஒரு குழந்தையைப் போல் ஆர்வத்துடன் அவரிடம் சென்று சார் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன் ரொம்பப் பிடிக்கும் என்று முகமெல்லாம் பல்லாகக் கை கொடுத்தேன்.  கையை உதறிக் கொண்டு நகர்ந்தார்.  என்னால் நம்ப முடியவில்லை.  எனக்கே உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதையே மீண்டும் செய்தேன், சொன்னேன்.  மீண்டும் கையை உதறிக் கொண்டு வேறு பக்கம் சென்று விட்டார்.  பனிரண்டு பதின்மூன்று ஆண்டுகள் இருக்கும்.  மறுநாளே இது பற்றி என் தளத்தில் எழுதினேன். பெயர் குறிப்பிட்டே எழுதினேன்.  அவரும் மைலாப்பூர் போல.  பிறகு என்னைச் சந்திக்கும் போதெல்லாம் மிகவும் நட்புடன் பேசுகிறார்.  காரை நிறுத்தி விட்டுப் பேசுகிறார்.  ஆனால் முதலில் அடைந்த அவமானம் அவமானம்தான்.  அப்போது அராத்து எனக்கு மிக அருகில் இருந்து அந்த அவமானத்தைப் பார்த்தார்.  ஆனாலும் அந்தச் சம்பவத்தைப் பற்றி நான் எழுதியிருக்கக் கூடாது என்றே இப்போது எண்ணுகிறேன்.  அவர் செய்தது என் எழுத்தின் மீதான விமர்சனம்.  அதை நான் அங்கீகரித்திருக்க வேண்டும்.  அந்த விமர்சனம் மரியாதைக்குரியது.  இப்போது அவர் காரை நிறுத்தி விட்டுப் பேசுவது என் எழுத்தின் அதிகாரத்துக்குக் கிடைக்கும் போலி மரியாதை.

முடித்து விடுகிறேன்.  இன்னும் ஒரு சம்பவம்.  கமலை ஒரு புத்தக விழாவில் என்னிடம் அறிமுகப்படுத்தி விட்டார் கமலின் பி.ஆர்.ஓ.  அந்த பி.ஆர்.ஓ. எனக்கும் நண்பர்.  நான் நட்புடன் கமலுக்குக் கை கொடுத்தேன்.  கமல் மிகுந்த வெறுப்பு முகத்தில் தோன்ற கையை உதறி விட்டுப் போய் விட்டார்.  எல்லோரும் பார்த்தார்கள். 

ஒரு நண்பர் கேட்டார்.  ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்பு என்ன ஆயிற்று?  நான் சொன்னேன், முடிந்து ஒரு வருடம் ஆகிறது.  பப்ளிஷரும் கிடைத்தார்.  கொரோனா வந்து முடக்கி விட்டது. என்ன விஷயம் என்றால், அதை யாராவது U.K. based பதிப்பகத்தில்தான் கொடுக்க வேண்டும்.  இந்தியாவில் எல்லா பெரிய பதிப்பகங்களுக்கும் லண்டனில் கிளை உள்ளது. லண்டனில் கிளை இருந்தால்தான் புக்கருக்குப் போட்டியே போட முடியும்.  லண்டனில் கிளை இல்லாவிட்டால் புக்கருக்கு புக் அனுப்பவே முடியாது.  இந்த விஷயமே எனக்கு மார்ஜினல் மேன் வெளிவந்த பிறகுதான் தெரிந்தது.  அதனால் அந்த நாவலால் போட்டியிலேயே கலந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவிலும் அதை ஸீரோ டிகிரி பதிப்பகம் என்று பார்த்து செல்ஃப் பப்ளிஷிங் என்று முடிவு செய்து விட்டார்கள்.  அவர்களாக முடிவு செய்யவில்லை.  நாகர்கோவிலிலிருந்து செய்தி போயிருக்கிறது.  ஆக, யூ.கே. பதிப்பகம் திறக்கும் வரை காத்திருக்கிறேன்.

ஸீரோ டிகிரி நாவல் இந்தியாவின் மிக முக்கியமான ஐம்பது புத்தகங்களில் ஒன்று என்று ஹார்ப்பர் காலின்ஸ் தொகுதியில் வந்திருப்பதால் இங்கே உள்ள பதிப்பகங்களை அணுகுவதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை.  அவர்கள் என்னைத் தனிப்பட்ட முறையிலும் அறிவார்கள்.  ஆனாலும் இந்திய ஆங்கிலப் பதிப்புத் துறை ஒரு கடல்.  சிவகாமியின் நாவல் பெங்குவினில் வந்தது.  யாருக்குத் தெரியும்? 

அதுசரி, ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் நான்கு வருடமாகப் பத்தி எழுதுகிறீர்கள்.  நீங்கள் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கு உங்களுக்கு ஏன் புக்கர் கிக்கர் எல்லாம்?  பரிசுகளின் தரம் பற்றி நமக்குத் தெரியாதா என்றார் நண்பர்.

இப்போது நான் சொன்ன தலை வெட்டியவன் கதைக்கு வாருங்கள்.  தலை வாங்கிய பொடியன் ஜெயிலுக்குப் போய் விட்டு ரெண்டு வருஷத்தில் திரும்பி விட்டான். பக்கத்து வீட்டு ஆள் அவனை ஸார் என்று அழைக்க ஆரம்பித்து விட்டார். 

நான் என்ன ரவுடியா?  அந்த இளைஞனுக்கு ஒரு மனிதத் தலை.  எனக்கு புக்கர் பரிசு.  அப்போது யாரும் என் கையை உதறி விட்டுப் போக மாட்டார்கள் இல்லையா?  அல்லது, அப்போதும் இந்த ஜேஎன்யூ ப்ராடக்ட் ஃபூக்கோ ஆய்வாளர் சாரு தமிழ்நாட்டின் சாபக்கேடு என்ற கட்டுரையைப் பகிர்வாரா? 

தீண்டத்தகாதவனாகத் தன்னை நடத்தும் ஒரு சமூகத்தில் ஒரு தலித் இளைஞன் ஒலிம்பிக் மெடலைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு திரிவது போலத்தான் நானும் இந்த சமூகத்தில் திரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  என் ஆசை நிறைவேற இறையருள் உதவும்.   

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai