அசோகமித்திரன் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு இலக்கிய நண்பர் அழகியசிங்கர்தான். அவரை அசோகமித்திரனுக்கு ரொம்பப் பிடிக்கும். வயதான காலத்தில் அசோகமித்திரனுக்கு மிகவும் உதவியாக இருந்தார் சிங்கர். சிங்கரை அசோகமித்திரன் நெருக்கமாக உணர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அழகியசிங்கர் பிரச்சினைகள் இல்லாதவர். அசோகமித்திரன் இருந்த மகன் வீட்டுக்கு (தி.நகர்) அடுத்த தெருவில் இருந்தார் அழகியசிங்கர். மட்டும் இல்லாமல் இருவரும் கலாச்சார ரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். எதில் சாதி இல்லாவிட்டாலும் உணவில் வந்து விடுகிறதே, என்ன செய்வது? நான் அசோகமித்திரனைப் பார்க்கப் போகும் போதெல்லாம் என்ன வாங்கி வரட்டும் சார் என்று கேட்பேனா, என் நச்சரிப்பு தாங்க முடியாமல் மிளகா பஜ்ஜி வாங்கி வாங்கோ என்றார். அதிலும் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி. ரெண்டு மூணெல்லாம் வேண்டாம் என்று அழுத்திச் சொல்லியிருந்தார். எனக்கோ பிரியாணி கடைதான் தெரியும். பஜ்ஜி கடைக்குப் போனதே இல்லை. அது அழகியசிங்கர் டிபார்ட்மெண்ட். மேலும், அவர் ஏற்கனவே அசோகமித்திரனைப் பார்க்கச் செல்லும்போது ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சென்றிருக்கிறார். அதன் பிறகு நான் அசோகமித்திரனை எப்போது பார்க்கப் போனாலும் மிளகாய் பஜ்ஜியோடுதான் போவேன். தி.நகரில் நல்ல மிளகாய் பஜ்ஜி கிடைக்கும் இடம் அழகியசிங்கருக்குத்தான் தெரியும். அநேக தடவைகளில் நான் அசோகமித்திரனை அழகியசிங்கரோடுதான் போய்ப் பார்த்திருக்கிறேன். மைலாப்பூரிலிருந்து மாம்பலம் ஆட்டோவில் போய் அழகியசிங்கர் வீட்டில் இறங்கி, அவருடைய ஸ்கூட்டரில் பஜ்ஜி கடைக்குப் போய் பஜ்ஜி வாங்கிக் கொண்டு அசோகமித்திரன் வீட்டுக்குப் போவோம். அந்தக் கடையில் ஒரே ஒரு பஜ்ஜி வாங்கிய வாடிக்கையாளர்கள் நாங்கள் மட்டுமாகத்தான் இருப்போம். எனக்கு மிளகாய் பஜ்ஜி என்றால் உயிர். ஆனால் தெருக்கடைகளில் சாப்பிட மாட்டேன். அவர்கள் போடும் எண்ணெய் வயிற்றுக்குள் போனால் ஆரோக்கியம் கெட்டு விடும். டி.என்.சி.சி.யில் இம்மாதிரி பஜ்ஜி போண்டா வகையறாக்கள் பிரமாதமாக இருக்கும். எனக்கு போண்டா பிடிக்காது. பஜ்ஜியில் மிளகாய் பஜ்ஜி ஆக இஷ்டம். ஆனியன் பஜ்ஜியும் அடித்துச் சாப்பிடுவேன். கத்தரிக்காய் பஜ்ஜியெல்லாம் மனுசனா சாப்பிடுவான்?
அப்படியே அசோகமித்திரனுக்கு ஒன்று வாங்கும்போது நாமும் ஆளுக்கு ஒன்று வாங்கிச் சாப்பிடலாமே என்று தோன்றும். இந்த மாம்பலம் பஜ்ஜி கடை சுத்தமான எண்ணெயில் செய்வது என்று உத்தரவாதம் தந்தார் அழகியசிங்கர். அப்படிச் சாப்பிட்டால் அப்புறம் அதை அடுத்து காப்பி குடிக்க வேண்டும். அது சாமியார் பூனை வளர்த்த கதை. அசோகமித்திரனோடு பேச வேண்டிய நேரம்தான் வீணாகும். அப்படியும் விடாமல் மூன்றாக வாங்கிப் போய் விட்டால் ஆளுக்கு ஒன்று சாப்பிடலாமே என்று மனம் அலைபாயும். ம்ஹும். அதுவும் சரிப்படாது. அசோகமித்திரனின் சிறிய அறையில் அது ஒத்துவராது. கையில் ஒட்டும் எண்ணெயைக் கழுவ பாத்ரூம் போக வேண்டும். அது எங்கே இருக்குமோ? அவரே மகன் வீட்டு கெஸ்ட். கெஸ்டுக்கு கெஸ்டா? நாக்கை அடக்கிக் கொள்வேன். திரும்பி வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நாக்குக்கும் மனதுக்கும் ஆறுதல் சொல்வேன். திரும்பி வரும்போது ரெண்டு பேரும் சங்கீதா ஓட்டல் போவோம். அங்கே போனால் எனக்குப் பிடித்த ரவா தோசை ஞாபகம் வந்து மிளகாய் பஜ்ஜி மறந்து போகும்.
எனக்கு இன்னொரு பிரச்சினையும் உண்டு. எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது. அசோகமித்திரனும் நானும் எங்காவது போக வேண்டியிருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிதான் பிடிக்க வேண்டும். அதெல்லாம் வேலைக்கு ஆகாது. அதனால் எப்படிப் பார்த்தாலும் அசோகமித்திரனுக்கு அழகியசிங்கர்தான் தோதான நண்பர்.
அசோகமித்திரன் ஒரு ட்ரான்ஸிஸ்டர் வைத்திருந்தார். சினிமாப் பாட்டு
தவிர மற்றதெல்லாம் கேட்பார். முக்கியமான பேச்சுகள், பிபிசி செய்தி, சாஸ்த்ரீய சங்கீதம். அவர் வைத்திருந்த ட்ரான்ஸிஸ்டர் மக்கர் செய்தது. நான் தான் எப்போது பார்த்தாலும் என்ன வாங்கி வரட்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேனா, அதனால் ஒருமுறை ட்ரான்ஸிஸ்டர் விஷயத்தைச் சொன்னார். அடுத்த முறை அதை வாங்கிக் கொண்டு போனேன்.
இரண்டு பிரச்சினைகள். அவருக்கும் எனக்கும் இருந்த கலாச்சார இடைவெளி. இந்த இடைவெளி அவருக்கும் ஜெயமோகனுக்கும் இல்லை. காரணம், அசோகமித்திரனின் எழுத்து பற்றி ஜெ. என்ன நினைக்கிறார் என்பது அசோகமித்திரனுக்கு முக்கியமே இல்லை. அ.மி.யின் எழுத்தில் தத்துவார்த்தம் இல்லை என்பது ஜெ.யின் முடிவு. அது பற்றி அசோகமித்திரனுக்குக் கவலை இல்லை. அசோகமித்திரனின் எழுத்தில் தத்துவார்த்தம் இருக்கிறது என்று நான் சொல்வதைப் பற்றியும் அசோகமித்திரனுக்கு அக்கறை இல்லை. அவருடைய கவனம் எல்லாம் ஜெயமோகனின் எழுத்து பற்றி அவருடைய அனுமானம் என்ன, சாருவின் எழுத்தை அவர் எப்படி எதிர் கொள்கிறார். இந்த இரண்டும்தான் அவருக்கு முக்கியம். இது ஒன்றுதான் எங்கள் இருவருடனான அவரது உறவை நிர்ணயித்தது. கடந்த நூறு ஆண்டுகளில் ஜெயமோகன் மாதிரியான எழுத்தை தமிழ் கண்டதில்லை என்பது அசோகமித்திரனின் தீர்மானம். அவரையும் அடக்கியே இதைச் சொன்னார். என் எழுத்து அவரைப் பொறுத்தவரை இலக்கியமே அல்ல. அதை இத்தனை வெளிப்படையாகச் சொன்னதில்லை. ஆனால் அவர் அப்படித்தான் நினைத்தார் என்று எனக்குத் தெரியும். அது பற்றி நான் கவலை கொள்ளவும் இல்லை. ஒரு தீவிரமான இந்துத்துவ தந்தை, தன் மீது எல்லையற்ற பிரியம் கொண்ட ஒரு மகன் முஸ்லீமாக மாறி விட்டால் அதை எப்படி எதிர் கொள்வாரோ அப்படியேதான் அசோகமித்திரன் என் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் ஒரு அமைதியின்மையையும் பதற்றத்தையும் அடைந்தார்.
அதற்கு நான் என்ன செய்யட்டும்? அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம் “என்ன, இப்போதெல்லாம் சாரு நிவேதிதா உங்களை அடிக்கடி சந்திக்கிறாராமே?” என்று கேட்டிருக்கிறார். கேட்டது யார் என்று தெரியவில்லை. நான் அசோகமித்திரனைச் சந்திப்பதில் அவருக்கு எங்கே வலித்ததோ? உடனே அசோகமித்திரன் என்ன சொல்லியிருக்க வேண்டுமோ அதைச் சொல்லவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக அவர் என்னைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால், நான் அவரை 1979-இலிருந்து சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் நான் கணையாழியில் எழுதி வந்த சிறுகதைகளைப் பற்றி எனக்கு போஸ்ட்கார்ட் எழுதி என்னை ஊக்கப்படுத்தியவர் அசோகமித்திரன் தான். அப்போது அவர் கணையாழியின் ஆசிரியர். ஆண்டு தோறும் தில்லியிலிருந்து விடுமுறையில் தமிழ்நாடு வரும்போது தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த அவருடைய தனி வீட்டில் அவரைச் சந்திக்காமல் போனதே இல்லை. அப்போதெல்லாம் அவர் வீட்டில் ஒரு பூனை இருக்கும். பின்னாளில் அந்தப் பூனை பற்றிக் கேட்ட போது அது அடுத்த வீட்டுப் பூனை என்றார். இவர் பால் ஊற்றுகிறார் என்பதற்காக இங்கே இவர் வீட்டுக்கு வருமாம். தணிகாசலம் செட்டித் தெரு என்று நினைக்கிறேன். அது ஒரு தனி வீடு. சுற்றி வர இடம். சொந்த வீடுதான். பிறகு அதை விற்று விட்டார். அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வந்தது. பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் பஸ் ஸ்டாண்டின் எதிரே அந்த ரோட்டின் முனையில் இருந்த இந்தியன் காஃபி ஹவுஸில் காஃபி குடித்து விட்டுப் பிரிவோம். அப்போதெல்லாம் நான் நல்ல பிள்ளையாய் ஒழுங்காய் கணையாழியில் முள் மாதிரி நல்ல கதைகள் எழுதிக் கொண்டிருந்ததால் அவர் அப்போது ரொம்பப் பிரியமாக இருந்தார்.
என் வருகையைப் பற்றிக் கேட்ட நண்பரிடம் அசோகமித்திரன் இதையெல்லாம் சொல்லவில்லை. இப்போதைய சாருவின் எழுத்து தரும் பதற்றத்தால் சொல்லியிருக்கிறார். “ஆமாம், வந்துண்டிருக்கார். என்ன… குண்டு கிண்டு வச்சுடப் போறாரோன்னுதான் பயமா இருக்கு.” இரண்டு விஷயங்கள். ஒன்று, வாழ்நாள் பூராவும் அன்பு என்பதையே அனுபவித்திராத, வாழ்வின் இருண்ட பகுதிகளையே அனுபவித்த ஒரு ஜீவன் அசோகமித்திரன். அதனால்தான் அவரால் என்னுடைய அன்பைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இன்னொரு காரணம், என் எழுத்து கொடுத்த கலாச்சார அச்சுறுத்தல். ஒரு அமெரிக்க அனாமதேயம் எந்தக் காரணத்தால் என்னை தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று சொல்கிறது? அப்படிச் சொல்வதை ஃபூக்கோ படித்த ஒரு அறிஞர் எதனால் தன் பக்கத்தில் அதைப் பெருமிதத்துடன் பகிர்கிறார்? எதனால் அசோகமித்திரன் என்னைக் கண்டு பதற்றம் அடைந்தார்? தன் வீட்டில் வெடிகுண்டு வைத்து விடுவேனோ என்று எதனால் அஞ்சினார்?
ஏனென்றால் படித்தவன், படிக்காதவன், அறிவுஜீவி, அறிஞன், அனாமதேயம், எழுத்தாளன் எல்லோருக்கும் நான் அந்நியன்.