Pithy thoughts – 13

பால்வீதி பார்க்க

அந்த அராபியப் பாலைவனத்துக்கு

சகாக்களுடன்

சென்றிருந்தேன்

அரபுச் சட்டத்துக்கு

அஞ்சி மதுபானம்

எடுத்துப் போகவில்லை

ஆனாலும் கில்லாடி பிரபு

எனக்காகக்

கொண்டு வந்திருந்த

ஒரே ஒரு போத்தலை

தீர்த்தம்போல் குடித்துத்

தீர்த்தோம் எல்லாரும்

மூத்தவன் என்பதால்

என் பங்கு அதிகமாச்சு

மணலில் படுத்தால் தேள் வரும்

பாலைவனத் தேள்

உயிரைக் குடிக்குமென்று

உள்ளே போகச் சொல்லி

கூடாரத்தைக் காண்பித்தான் பிரபு

பால்வீதிக்கு முன்னால்

உயிரும் மயிரும் ஒண்ணு

என்று சொல்லி

துண்டை உதறி மணலில் போட்டு

மல்லாந்து படுத்தேன்

காலையில் பார்த்தால்

கண்ணெதிரே ஓடிக் கொண்டிருந்தது

பெருந்தேள் ஒன்று

இளஞ்சூரியக் கதிரொளி

பட்டுத் தெறிக்கும்

மணல் மேட்டுப்

படுகைகளைக் காட்டி

பெண்ணுடலின் மேடுபள்ள

மென்றான் பிரபு

யதாபூதம் சூன்யம்

என்றேன்

நான்