நேற்று வந்த வெர்னரின்
கடிதத்தைப் படித்ததிலிருந்து
பாவ்லோ கொய்லோவின்
சாகசத் தனிமை
ஞாபகத்தில் வந்து மோதுகிறது
தென் ஃப்ரான்ஸில்
மனித வாடையற்ற ஒரு நிலப்பகுதியில்
ஆறு மாதம்
பிறகு
ப்ரஸீலில்
குடும்பத்தோடு ஆறு மாதம்
வால்டன் வனத்தில்
தோரோ வாழ்ந்தது
இரண்டு ஆண்டுகள்
இரண்டு மாதங்கள்
இரண்டு நாட்கள்
வனம் அலுத்ததும்
நகரத்துக்குச் சென்று விட்டார் தோரோ
என் ஜெர்மானிய நண்பன் வெர்னர்
முப்பத்து மூன்று வயது
ஆய்வு மாணவன்
குடும்பமில்லை
உற்றமில்லை
சுற்றமில்லை
தேசமுமில்லை
பணம் இல்லை
பெண் துணையும் இல்லை
பல்கலைக்கழகம் ஒரு வதைக்கூடம்
சம்ஸ்கிருதப் பண்டிதனான வெர்னர்
இரண்டு
சம்ஸ்கிருத கவிதைகளை
அனுப்பியிருந்தான்
இரு தாமரை மலர்களைத்
தாங்கிப்
பிடித்துக் கொண்டிருக்கிறது
ரோமாவலித் தண்டு
தாமரை மலர்களில் தேன் அருந்திக்
கொண்டிருக்கும் இரு வண்டுகள்
ரோமாவலியின் கீழே இருக்கும்
அடர்வனத்தின் ரகசியங்களைப் பற்றிக்
கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றன
இன்னொரு கவிதை
களைத்து விட்ட காதலனின்
இடத்தை எடுத்துக் கொண்ட
காதலியின் காதணிகள்
லயம் பிசகாத
அவளது ஊஞ்சலாட்டத்தில்
காதிலிருந்து அறுந்து விழுந்து விடுமோவென
அஞ்சுகிறான் ஆடவன்
அவள் தேகத்திலிருந்து
வியர்வை
வெள்ளமாய்
வடிந்தோடுகிறது
”இங்கே
இந்தச் சிறிய நகரத்தில்
பனிக்காலம் தொடங்கி விட்டது
இன்னும் நான்கு மணி கூட ஆகவில்லை
இருள் கவிந்து விட்டது
இந்த ஊரில் எப்படி வாழ்வது சொல்
இந்தியா பற்றித் தெரியாமல் இருந்திருந்தால்
இங்கேயே இப்படியே
இருந்திருப்பேன்
இந்தியாவுக்கு வந்து வந்து
இப்போது அந்த தேசம்
என்னுடைய
தேசம்போல் ஆகிவிட்டது
அங்கே வந்து
ஒரு சம்ஸ்கிருத ஆசிரியனாகப்
பிழைத்துக் கொள்ளலாம்”
என்று எழுதியிருந்த
வெர்னரின் கடிதத்தைப்
படித்ததிலிருந்து
வெர்னரும் நானும்
வேறு வேறல்ல என்று
தோன்ற ஆரம்பித்து விட்டது
சீலேவின் சாந்த்தியாகோ நகரில்
பத்து நாட்கள்
தனித்து விடப்பட்ட போது
அந்த நகரில்
என்னுடைய அடையாளமென்ன
எனக் குழம்பிய தருணம்
ஏனோ இந்த வரிகளைத்
தட்டச்சு செய்யும் போது
ஞாபகம் வருகிறது
to tharvesh (oslo)