8. மறுமை நோக்கியதன்று, வறுமை நோக்கியது…

சில மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரு அமெரிக்க வாழ் வாசக நண்பரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.  எங்கள் நகரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில், வர இருக்கும் ஒரு தமிழ் விசேஷ நாளை ஒட்டி உரையாற்ற முடியுமா?  அவர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர்.  முடியும் என்றேன். இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். சரி, மகிழ்ச்சி, அவர்களைக் கேட்டு அடுத்து தொடர்பு கொள்கிறேன் என்றார்.  சரி என்று சொல்லியிருப்பேன், அமெரிக்கத் தூதரகத்தில் இரண்டு மூன்று முறை எனக்கு வீசா கொடுக்காமல் பிச்சைக்காரப் பயலே என்று சொல்லித் துரத்தி அடிக்காமல் இருந்திருந்தால்.  ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்குப் பணம் பற்றிப் பேசவே தெரியாது.  அது தப்பு, கலைஞனுக்கு அழகு அல்ல, மட்டமான புத்தி, கேவலம் என்பதான நினைப்பு இருந்தது.  அமெரிக்கத் தூதரகத்தில் மிகத் தெளிவாக “உங்களிடம் போதுமான பணம் இல்லை” என்று சொன்ன பிறகே பணம் பற்றிய என் கண்ணோட்டம் மாறியது.  உடனே பலரையும் போல் காசே கடவுள் என்று ஓட ஆரம்பிக்கவில்லை.  வீசா பெறுவதற்குத் தேவையான பணத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற உறுதி பூண்டேன்.  அமெரிக்கத் தூதரகம் மட்டும் இல்லை.  ஜெர்மன் தூதரகம், பிரிட்டிஷ் தூதரகம், கனடா தூதரகம் ஆகிய மூன்று இடங்களிலும் இந்தப் பணப் பிரச்சினையால் வீசா மறுக்கப்பட்டேன்.  அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று முறை. 

இதுவே எனக்கு 48 வயது என்றால் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.  வயது 68 என்றபடியால் இதை நான் தீவிரமாக எடுத்துக் கொண்டேன்.  நான் திட்டமிட்டுள்ள சில நாடுகளைப் பார்க்காமல் விடை பெறுவதில் எனக்கு உடன்பாடில்லை.  தோல்வி எனக்குப் பிடிக்காத விஷயம்.  நாம் என்ன ஹெலிகாப்டர் வாங்கவா ஆசைப்படுகிறோம், அல்லது மைலாப்பூரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படுகிறோமா?  கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, தெற்கு மற்றும் வட அமெரிக்கா – இவ்வளவுதான்.  சீனா அடிபட்டு விட்டது.  இனி அங்கே போக முடியாது.  திபெத் மட்டும் போயே ஆக வேண்டும்.

அதனால் அந்த நண்பரிடம் டாட்டா சொல்லி விடாமல் எவ்வளவு பணம் தருவார்கள் என்ற ஆபாசமான கேள்வியைக் கேட்டேன்.  அந்த நேரத்தில் நான் ஒரு விபச்சாரியைப் போல் உணர்ந்தேன்.  அதற்கு அந்தத் தமிழ்ச் சங்க நண்பர்களே காரணம்.  பணம் பற்றி அவர்கள்தானே பேசியிருக்க வேண்டும்?  சினிமா உலகில் ஒருவரது சம்மதம் கேட்டுப் போகிறார்கள் என்றால், அவருக்குத் தேதி ஒத்து வந்து விட்டால் அந்த க்ஷணமே முன்பணத்தை வைத்து விட்டுத்தான் அடுத்த பேச்சையே ஆரம்பிக்கிறார்கள். எவ்வளவு முன்பணம் ஒரு கோடி.  இசையமைப்பாளருக்கு.  நடிகருக்கு அல்ல.  அது வேறு கதை.  இங்கே சம்மதம் சொல்லி விட்டு ஒரு விபச்சாரியைப் போல் நான் பணத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.  நண்பர் நான் கேட்ட பிறகு பத்தாயிரம் தருவார்கள் என்றார்.  அதை அல்லவா முதலில் சொல்லி விட்டுப் பேச ஆரம்பிக்க வேண்டும்?  இருபது ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கை இதையா கற்றுத் தந்திருக்கிறது?

நான் உடனே தெருவோரத்து வேசியைப் போலவே பேரம் பேச ஆரம்பித்தேன். 

“பத்தாயிரத்துக்கு முடியாது.  500 டாலர் வேண்டும்.”

“அவ்வளவெல்லாம் தர மாட்டார்கள் சாரு.  நான் பேசிப் பார்க்கிறேன்.  ஆனாலும் அவர்களால் முடியாது என்றே தோன்றுகிறது.”

“அப்படியானால் விட்டு விடுங்கள்.”

அடுத்து ஒரு அமெரிக்க நகரத்திலிருந்து தமிழ்ச் சங்க நிர்வாகி பேசினார்.  அவருக்கு என்னை ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்துள்ளது.  என்னை என்னுடைய யூட்யூப் உரையின் மூலம் அறிந்திருக்கிறார்.  மற்றபடி என்னைத் தெரியாது.  அதிகம் இலக்கியப் பரிச்சயமும் இல்லை. என்னுடைய ப்ளாக் பற்றியோ என் புத்தகங்கள் பற்றியோ எதுவும் தெரியாது.

”இன்ன மாதிரி எங்கள் ஊர் தமிழ்ச் சங்கத்தில் பேச வேண்டும்.”  ”பேசுகிறேன்.”

“400 டாலர் தருகிறோம்.”

“சரி.”

நூறு பேர் கேட்டார்கள். அந்த நூறில் ஒருவர் மட்டுமே என்னுடைய வாசகர்.  மற்ற அனைவருக்கும் என் பெயர் அன்றைய தினம்தான் பரிச்சயம்.   எல்லோருக்கும் பேச்சு ரொம்பப் பிடித்து விட்டது.  பேசியதற்கு மேல் நூறு சேர்த்து 500 டாலர் கொடுத்தார்கள்.

இலக்கியம் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்குமான வித்தியாசத்தை மேற்சொன்ன உரையாடல்களிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். 

இன்று காலை ஒரு அமெரிக்க நகரிலிருந்து குறுஞ்செய்தி.  எங்கள் ஊர் தமிழ்ச் சங்கத்தில் ஸூம் மூலம் பொங்கல் அன்று பேச முடியுமா?

நண்பர் எனக்குப் பத்து ஆண்டுகளாகத் தெரிந்தவர்.  என் எழுத்தோடு நன்கு பரிச்சயம் ஆனவர்.  பேசுகிறேன் என்றேன்.  சரி, மகிழ்ச்சி.  தமிழ்ச் சங்க நண்பர்களோடு பேசி விட்டுத் தொடர்பு கொள்கிறேன் என்று விடை பெறப் போனார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றால் ஓகே சொல்லியிருப்பேன்.  இப்போது அவரை ஓடிப் போய் பிடித்தேன்.  எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்றேன் தெருவோரத்து வேசியைப் போல.  பத்தாயிரம் ரூபாய் சாரு என்றார்.

”இல்லை.  500 டாலர் வேண்டும்” என்றேன் திரும்பவும் தெருவோரத்து வேசியைப் போல.

ஏன் இவர் வேசி வேசி என்று சொல்லித் தன்னையே அசிங்கப் படுத்திக் கொள்கிறார் என்று உங்களுக்குத் தோன்றும்.  என் மனதில் பட்டதை நான் எழுதுகிறேன்.  ஏன் இவர்கள் என்னை இந்த நிலைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதே என் கேள்வி.  நீங்கள் அல்லவா முதலில் பணத்தைப் பற்றிப் பேச வேண்டும்?  இல்லையா?  பணத்தைப் பற்றிப் பேசவே பேசாமல் ஓடினால் என்ன அர்த்தம்?  முதல் சம்பவம் நடந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் ஆயிரம் மைல் தூரம் இருக்கும்.  ஒருத்தரை ஒருத்தர் தெரியாது.  ஒன்று கிழக்குப் பகுதி.  இன்று நடந்தது மத்தியப் பகுதி.  ஆனால் எப்படி இருவரும் ஒரே வசனத்தைச் சொல்கிறார்கள் பாருங்கள்! 

நான் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என்னைப் பிடித்துப் போட்டு எப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன்.  அதைச் சொன்னேன்.  இப்படி பத்தாயிரம் ரூபாய் என்று சொல்வது என்னை அவமானப்படுத்துவதாகும் என்றேன்.  மேலும், இதை நான் அவரிடம் சொல்லவில்லை.  இங்கே சொல்கிறேன்.  எப்படி அவர்கள் ரூபாயில் பேசலாம்?  அமெரிக்காவில் அவர்கள் ரூபாயிலா பேசுகிறார்கள்?  இந்த இரண்டு பேரும் என் நீண்ட கால நண்பர்கள் என்பதால் மட்டுமே நான் உரையாடினேன்.  இல்லாவிட்டால் அந்தக் குறுஞ்செய்திகளை அப்படியே ரத்து செய்து விட்டு வேலையைப் பார்த்திருப்பேன். 

நண்பர் சொன்னார், லாக் டவுன் காரணமாக ஸ்பான்ஸர் கிடைக்கவில்லை சாரு. 

அடக் கடவுளே.  500 டாலருக்கு ஸ்பான்ஸர்களா?  ஆளுக்குப் பத்து டாலர் கட்டணம் கொடுத்தால் ஐம்பது பேருக்கு 500 டாலர் ஆயிற்றே?  ஆளுக்குப் பத்து டாலர் கூடக் கொடுக்க முடியாத பிச்சைக்காரர்களாகவா அமெரிக்காவில் வாழ்கிறீர்கள்?  அதனால்தான் எழுதினேன், அமெரிக்க இந்தியர்களின் மனோபாவம் எத்தியோப்பிய அகதிகளைப் போல் இருக்கிறது என்று.  அவர்களாவது அகதிகள்.  பரிதாபத்துக்குரியவர்கள்.  இவர்கள் 5000 டாலருக்குக் குறையாமல் மாத ஊதியம் பெறுபவர்கள்.  என் பரிச்சயக்காரர் ஒருவரின் மாத ஊதியம் 8000 டாலர்.  அவர் மனைவியின் ஊதியம் 5000.  மாதச் செலவு 8000 டாலர் ஆகிறது.  மனைவியின் ஊதியத்தைக் கொண்டு சென்னையில் வீடு வீடாக வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்.  நான் அமெரிக்கா சென்றதில்லை என்றாலும் அங்கே ஒரு போலீஸ்காரர், ஒரு தபால்காரர், ஒரு மென்பொருள் பொறியாளர் போன்றோரின் மாத ஊதியம், வீட்டு வாடகை, படிப்புச் செலவு என்ற விவரங்களெல்லாம் தெரியும்.  அங்கே ஓரளவு பிரச்சினை இல்லாமல் கார் போன்ற வாகன வசதியோடு வாழ மாதம் 8000 டாலர் தேவைப்படுகிறது.  ஆனால், என்ன சொன்னாலும் பிரிட்டனை விட அமெரிக்க வாழ்க்கை வசதியானதுதான்.  நான் சொல்வதை பிரிட்டனில் வாழ்ந்தவர்கள்தான் ஒப்புக் கொள்வார்கள்.  கொஞ்சம் வசதி இருந்தால் அமெரிக்காவில் வில்லாவிலேயே அல்லது தனி வீட்டிலேயே ஒரு வளர்ப்புப் பிராணியோடு வாழலாம்.  மேலே சொன்ன நண்பர் கூட அப்படித் தனி வீட்டில் அல்லது வில்லாவில் வாழலாம்.  ஆனாலும் அவர் கீழ் மத்தியதரப் பகுதியில்தான் வாழ்கிறார்.  காரணம், வில்லா என்றால் வாராவாரம் புல் செதுக்க வேண்டும்.  அதுக்கு அலுப்பு.  அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்குப் பொதுவான ஆள்.  அவருக்குக் கூலி. 

ஆனாலும் பத்து டாலருக்குக் கணக்குப் பார்க்கும் அளவுக்கு அமெரிக்க வாழ்க்கை பிச்சைக்காரத்தனமானது அல்ல என்பது எனக்குத் தெரியும்.  எனவே ஒரு எழுத்தாளனைப் பேச அழைத்தால் – ஸூமில் – கௌரவமாக 500 டாலர் கொடுப்பதில் ஒரு அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  இதே ஒரு சினிமாக்காரர் என்றால் ரெண்டு லட்சம் கொடுப்பீர்கள்தானே?  கமல்ஹாசனுக்கு அல்ல.  அம்மாதிரி சினிமாக்காரரைச் சொல்லவில்லை.  மிமிக்ரி தாமு மாதிரி ஆட்களைச் சொல்கிறேன். 

இங்கே நான் ஸூமில் பேசினால் முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கிறது.  நூறு ரூபாயிலிருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள்.  அதைக் கூட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தால் கொடுக்க முடியாதா?  பத்தாயிரம் ரூபாய்.  என்ன பிச்சையா போடுகிறீர்கள்?  என் நண்பர் சொன்ன கதைதான் ஞாபகம் வருகிறது.  ஒரு ஃபேக்டரியில் பிரச்சினை.  ஃபேக்டரி ஓடவில்லை. இவர்களே பல மணி நேரம் முயற்சி செய்கிறார்கள்.  பலிக்கவில்லை. எஞ்ஜினியரை அழைக்கிறார்கள்.  எதையோ ஒன்றை முடுக்குகிறான் எஞ்ஜினியர்.  ஆயிரம் டாலர் கேட்டு வாங்குகிறார்.  என்ன இது, ஒரு ஸ்க்ரூவால் முடுக்கியதற்கு ஆயிரம் டாலரா?  இதற்கு ஒரு டாலர்தான் விலை.  ஆனால் இதைக் கற்றுக் கொள்ள நான் செலவு செய்த பத்து ஆண்டுகளுக்கு 999 டாலர் என்றானாம். 

என்னுடைய 50 ஆண்டுக் கால வாசிப்புக்குத்தான் 500 டாலர்.  மேலும், பட்டிமன்றப் பேச்சாளர் என்ற கூட்டமும், மற்றபடி பட்டிமன்றம் இல்லாத மற்ற பேச்சாளர் கூட்டம் ஒரு பேச்சுக்கு 50000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்கள்.  சும்மா எண்டெர்டெய்ன்மெண்ட் பேச்சுக்கே இப்படி என்றால் ஞானத்தை வாரி வழங்கும் என் போன்றவர்களின் பேச்சுக்கு என்ன மாதிரி தட்சிணை கொடுக்க வேண்டும்?  இதைப் படித்து விட்டு அந்த இரண்டு நண்பர்களும் என் மீது கோபம் கொள்ளக் கூடாது.  என்னுடைய பார்வையை மட்டுமே நான் முன்வைத்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  மேலும், 4000 வருடத்து சரித்திரத்தை – எழுத்தாளனையும் கலைஞனையும் பிச்சை எடுக்க வைத்த தமிழ்ச் சமூகத்தின் சரித்திரத்தை நான் ஒற்றை ஆளாக மாற்றி எழுத முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.  தயை கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.  பசி தாங்க முடியாமல் என்னை அண்டி வரும் பூனைகளையும்  காகங்களையும் நாய்களையும் லாக் டவுன் காலம் என்று சொல்லி நான் துரத்தியடிக்க முடியாது. உங்களிடமிருந்து கிடைக்கும் பணம் சில உயிர்களின் பசி போக்க உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  புறநானூற்றில் பரணர் பேகனைப் பற்றிப் பாடுகிறார்: மறுமையை நோக்கி அவன் ஈகையில் ஈடுபடவில்லை.  பிறர் வறுமையை நோக்கிச் செய்கிறான்.  “ஈதல் நன்றுஎன மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே.”  இதை பரணர் எப்போது பாடுகிறார்?  பசியில் வாடிக் கிடக்கும் பாணர்களை நோக்கிப் பாடுகிறார்.  பேகனிடம் செல்லுங்கள்.  அவன் அடுத்த ஜென்மப் புண்ணியத்தைக் கருதி தர்மம் செய்யவில்லை; பிறர் வறுமையை நோக்கியது அவன் ஈகை.”

இதுதான் நம்முடைய நாலாயிரம் வருஷத்து வரலாறு.  அதைத்தான் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai