(இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் எண் 9-இல் உள்ள “மீண்டும் ஒருவர்” என்ற பதிவையும், 5ஆம் 3-ஆம் எண்களில் உள்ள கூழாங்கல் கட்டுரைகளையும் படித்து விட்டு இதைத் தொடரவும். அவற்றின் தொடர்ச்சிதான் இது.)
அன்புள்ள சாரு அவர்களுக்கு,
வணக்கம்.
உங்களுக்கு நாவலை அனுப்பி வைத்த ஒரு இளம் எழுத்தாளர் பற்றி நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குமான என் கேள்விகளும் சந்தேகங்களும் இவை. இதை எழுத முதலில் தயங்கினாலும் உங்கள் எழுத்தை இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் வாசிப்பவள் என்ற முறையில் இதைக் கேட்கலாம் என்று துணிந்தேன்.
சில நாட்களுக்கு முன்பு நான் எழுதிய இரண்டு சிறுகதைகளை உங்களுக்கு அனுப்பி உங்கள் கருத்தைக் கேட்கலாம் என்றே நான் நினைத்தேன். இன்னும் கொஞ்சம் சரி செய்து விட்டு அனுப்பலாம் என்று இருந்தேன். அதற்குள் இந்தப் பதிவுகள். உங்கள் இடத்திலிருந்து நீங்கள் சொல்வது உங்களுக்கு நியாயமாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் என் இடத்திலிருந்தும் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆரம்ப காலத்தில் நீங்கள் கணையாழிக்கு எழுதிய சிறுகதைகளை அசோகமித்திரன் படித்து அவை பற்றிய தன் கருத்தை எழுதி உங்களை உற்சாகப்படுத்தி போஸ்ட் கார்ட் எழுதுவார் என்று நீங்களே பலமுறை எழுதியிருக்கிறீர்களே, அதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அப்படி நாங்கள் உங்களை நினைப்பதில் என்ன தவறு? சுஜாதாவும் கூட பல இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் இல்லையா? உங்களை மதிப்பதால்தானே நாங்கள் இப்படிச் செய்கிறோம்? இதை நீங்கள் இந்தக் கோணத்தில் பார்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. நீங்கள் இப்போது மிகவும் மாறியிருப்பதாகச் சொல்கிறீர்கள். இருபது ஆண்டுகளாக உங்கள் எழுத்தை வாசித்து வருபவள் என்ற முறையில் அதை நான் நன்றாக உணர்கிறேன். அப்படி மாறி விட்ட நீங்கள் இந்தச் சிறிய விஷயத்தில் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன்? ஒரு முக்கியமான கேள்வி எனக்குள் கிளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த இளம் எழுத்தாளரையே அழைத்தோ மெயிலிலோ என்னால் முடியாதுப்பா, நேரம் இல்லை என்று சொல்லிவிடலாம்தானே? அதற்கு ஏன் இத்தனை கோபம், இத்தனை பிரச்சினை?
ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
அமுதா
நியூ ஜெர்ஸி
அன்புள்ள அமுதா,
உங்கள் கடிதத்தைப் போலவே இன்னும் இரண்டு மூன்று கடிதங்களும் போன் விசாரிப்புகளும் வந்தன. என்னுடைய கருத்துக்கள் பலரையும் கோபப்படுத்தியிருப்பது புரிந்தது. அவர்கள் கோபமாகக் கேட்டதை நீங்கள் மென்மையாகக் கேட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான்.
நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விட்டேனே, ஒரு பெண்ணைப் பார்த்து “நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அவ்வளவு அயோக்கியத்தனமானது இப்படி நாவலை அனுப்புவது என்று. அதுதான் ஏன் என்று யாருக்கும் புரியவில்லை. இல்லையா? புரியும் வரை இதை விளக்க முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.
மணி ரத்னத்துக்கு இப்படி எத்தனை பேர் தங்களுடைய குறும்படங்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள் தெரியுமா? அவர் என்ன செய்வார்? எல்லாவற்றையும் தன் செயலாளர் மூலம் அப்புறப்படுத்திக் குப்பையில் கடாசி விட்டுத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் இதை அவர் வெளியே சொல்ல மாட்டார். யாரையும் இதற்காகக் கோபித்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், அவருக்குத் தன் காரியம் மட்டுமே முக்கியம். சமூகத்தில் இப்படி ஒரு அராஜகம் நடப்பது அவரைப் பொறுத்தவரை சம்பந்தமில்லாத விஷயம். ஆனால் நான் எழுத்தாளன். சமூகத்தில் இப்படி ஒரு இயக்குனரையோ எழுத்தாளரையோ கேட்பது கொடூரமான அத்துமீறல் என்பதை இந்தச் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறேன். இந்த வகையில் இந்தச் சமூகம் மேம்பட வேண்டுமென்று பாடுபடுகிறேன். அதனால் இதை எழுதி உங்கள் வெறுப்புக்கு ஆளாகிறேன்.
நான் எழுதியதை மீண்டும் படியுங்கள். நான் அந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரது சிறுகதைகளைப் பிழைதிருத்தம் செய்து கொடுத்திருக்கிறேன். இந்த வகையில் என்னுடைய இரண்டு முழுமையான மாதங்களை அவருக்காகச் செலவிட்டிருக்கிறேன். அந்தத் தொகுதியை எனக்கு அவர் அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு அவர் என்னிடமிருந்து தலைமறைவாகி விட்டார். அவரது அடுத்த தொகுதி வம்சியிலிருந்து வெளிவந்ததாகக் கேள்விப்பட்டேனே ஒழிய அவரிடமிருந்து அது குறித்து ஒரு வார்த்தை இல்லை. சென்ற ஆண்டு நான் துபய் சென்றிந்த சமயத்தில் இரண்டு வாரங்கள் துபயில் தங்கியிருந்தேன். ஒருநாள் கூட அவர் என்னை வந்து சந்திக்கவில்லை. மதிய வேளையில் என் ஓட்டல் இருந்த தெருவின் அருகில் அவரது அலுவலகரீதியான ஏதோ ஒரு சந்திப்பு இருந்ததால் வந்தவர் என்னைச் சந்தித்து உணவுக்காக அழைத்துக் கொண்டு போனார். அதோடு தலைமறைவு. ஐந்து ஆண்டுத் தலைமறைவுக்குப் பிறகு இப்போது என்னை அணுகி நாவலை அனுப்பி வைத்திருக்கிறேன், ரெண்டு வார்த்தை திட்டுங்கள் என்று கடிதம். எனக்காகத் தன் வாழ்வில் ஒரு நிமிடத்தைக் கூட இழக்கத் துணியாதவர் எப்படி தன் நாவலை நான் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? இது ஏதோ ஒரு இளம் எழுத்தாளர் தன் நாவலை ஒரு மூத்த எழுத்தாளருக்கு அனுப்பி வைக்கின்ற காரியம் அல்ல.
அடுத்த விஷயம். அந்தக் கடிதமே ஒரு அயோக்கியத்தனம். கடிதத்தைப் பாருங்கள். ரெண்டே வரி. ஒரு கடிதத்தில் கூட ஐந்தாறு வரிகள் எழுத அலுப்பு.
டியர் சாரு அப்பா,
ஹௌ ஆர் யூ. உருட்டி பொரட்டி ஒருநாவல் எழுதி இருக்கிறேன். நீங்க படிச்சுட்டு இரண்டு திட்டு தந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.
இவர் சட்டைக் காலரைப் பிடித்தி செவுளிலேயே ரெண்டு கொடுக்கலாமா என்று தோன்றுகிறது எனக்கு. நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா? ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அதை அனுப்பினால் உங்களால் படித்துப் பார்க்க இயலுமா? இப்படி ஒரு அனுமதி கேட்பது இல்லை. இவர்கள்தான் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் செருப்படி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது பொதுவாக இந்தியர்களின் மனோபாவம். தமிழர்கள் இதில் இன்னும் பலபடிகள் மேலே இருக்கிறார்கள். அடுத்தவர்களின் சுதந்திரத்தில் மத யானை நுழைவது போல் நுழைவது. ஒரு அடக்கம் வேண்டாமா? அனுமதி கேட்க வேண்டாமா? முன்பெல்லாம் நாங்கள் ஒரு பத்திரிகைக்குக் கதையை அனுப்பி விட்டு மூன்று மாதங்கள் காத்திருப்போம். மூன்று மாதங்கள் கழித்து தபால்காரர் ஒரு கார்டு கொடுப்பார். தங்கள் கதை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இப்போது இந்தக் கழுதைகளுக்கெல்லாம் என் மின்னஞ்சல் முகவரி தயாராகக் கிடைக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டி விடுகிறார்கள்.
எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால், இவர் என் தளத்தில் நான் எழுதுவதைப் படிப்பதில்லை என்பது. எனவே இப்படி நான் இவரை விமர்சித்து எழுதுவது கூட அவருக்குத் தெரியவில்லை. அமீரக நண்பர்கள் சாரு வாசகர் வட்டம் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறார்கள். அதில் இவர் ஒரு உறுப்பினர். அவரைப் பற்றி நான் எழுதுவதைக் கூட அவர் படிப்பதில்லை என்பதை நான் யூகித்து விட்டதால் அந்த வாசகர் வட்ட நண்பர்களைக் கொண்டு இந்தப் பதிவுகளை அவருக்கு அனுப்பச் சொன்னேன். யாருக்குமே அவர் போன் நம்பர் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறார். அது என்ன தலைமறைவு? குடும்ப வாழ்க்கைதான். வேறு என்ன?
பிறகு நானே இந்தப் பதிவுகளின் இணைப்பைத் தொகுத்து அவருக்கு மின்னஞ்சல் பண்ணினேன். நாரோயில்காரர் ஆயிற்றே? ஒரு வார்த்தை பதில் இல்லை. நான் அடுத்த ஆண்டு நான் துபய் செல்லும் போது, அந்த அன்பர் அந்தக் கடிதத்தையும் படிக்காமல் என்னை லஞ்சுக்கு அழைத்தால் ஓத்தாம்பாட்டுதான். வேறு வழியே இல்லை.
கணையாழியில் அசோகமித்திரன் படித்தார் என்றால், அது அவரது மனோபாவம். நானும்தானே அமல்ராஜ் ஃபிரான்சிஸ், சாதனா போன்ற பல நண்பர்களின் பிரதிகளைப் பிழைதிருத்தம் செய்தும் எடிட் செய்தும் கொடுத்தேன்? ஆனால் அதெல்லாம் ஒரு பரஸ்பர நட்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். எதையும் எந்த உதவியையும் எதிர்பார்த்துச் செய்ததில்லை. சாதனாவின் சிறுகதைகளை அக்கதைகள் கொடுத்த மிகத் தீவிரமான இலக்கிய அனுபவத்தின் காரணமாகச் செய்து கொடுத்தேன்.
மேலும், அசோகமித்திரன் எல்லாம் சென்ற தலைமுறை. அவர் வீட்டுக்கு எதிரில் அரண்மனை போன்ற ஒரு மாபெரும் வீடு இளையராஜாவினுடையது என்பதை அறிந்து அசோகமித்திரனிடம் ”நீங்கள் அல்லவா இப்படி ஒரு வீட்டில் இருக்க வேண்டும்?” என்று சொன்னபோது முகத்தைச் சுளித்தபடி “சேசே. எழுத்தாளன் என்றால் இப்படித்தான் ஒரு சின்னஞ்சிறிய அறையில் இருக்க வேண்டும்” என்றார். அவருடைய மனோதர்மத்துக்கு அவர் வாழ்ந்த முறை சரி. எனக்கு அது தப்பு. நீங்கள் உங்கள் சிறுகதையை அனுப்பியிருந்தால் இவ்வளவு தூரமெல்லாம் எழுதியிருக்க மாட்டேன். அந்தக் கடிதத்தையே பொருட்படுத்தியிருக்க மாட்டேன். இப்போது ஏன் இது பற்றிப் பொங்கிப் பொங்கி எழுதிக் கொண்டேயிருக்கிறான் என்றால், என்னோடு எந்த வகையிலும் தொடர்புபடுத்திக் கொள்ளாத ஒரு ஆள் இப்படி என்னை அப்பா என விளிப்பதன் மூலம் மட்டுமே ஆதாயம் தேடிக் கொள்ளப் பார்க்கிறான். அதனால்தான் இத்தனை ஆத்திரம். மட்டுமல்லாமல் இதைத்தான் எல்லா மனிதர்களும் எல்லா மனிதர்களிடமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதே நேரத்தில் நகைச்சுவை இல்லாத சமூகம் என்ற என் பதிவு குறித்தும் மேலதிக விவரங்கள் தர வேண்டும். என்னோடு பழகுபவர்கள் மட்டும் ஏன் இப்படி எனக்கு புத்திமதி சொல்பவர்களாக மாறி விடுபவர்களாகவும் நான் எப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாகவும் மாறி விடுகிறார்கள் என்றால், ஆரம்பத்தில் என்னை ஒரு எழுத்தாளனாகப் பார்க்கும் அவர்கள் காலப்போக்கில் நான் ஒரு சிறுவனைப் போலவும், குழந்தையைப் போலவும் பழக ஆரம்பிப்பதால் “அடச் சீ, எழுத்தாளன்னா ஒண்ணும் புடுங்கியில்லை, எல்லாம் நம்மைப் போல் ஒரு சாதாப்பயல்தான், சீச்சீ, நம்மை விட மட்டமான பயல்கள், நாமே அவர்களை விடத் தேவலாம், இவன்களெல்லாம் சுத்தக் கேணப்பயல்கள்” என்று நினைக்க ஆரம்பித்து விடுவதுதான். அதனால்தான் ஒரு நண்பர் என்னை ஒரு ஆன்மீக குருவின் பெயரைச் சொல்லி அவரை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொன்ன போது “அவரை விட நான் பல மடங்கு பெரிய ஆள்” என்று சொன்னேன். இதெல்லாம் தலைக்கனத்தில் சொல்வது கிடையாது. இதெல்லாம் அடக்கமின்மையும் கிடையாது. என் உயரம் ஆறு அடி மூன்று அங்குலம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என் உயரம் கேட்டால் ஆறு அடி மூன்று அங்குலம் என்று சொன்னால் அது என் அடக்கமின்மையைக் காட்டும் என்று அஞ்சி, ஐந்தடி ஆறு அங்குலம் என்று சொல்ல முடியுமா? இருக்கும் உயரத்தைத்தானே சொல்ல முடியும்? அதேபோல்தான் நான் சொல்கிறேன், இன்றைய கார்ப்பொரேட் ஆன்மீகவாதிகள் அத்தனை பேரையும் விட நான் பெரிய ஆள் என்று. என் நண்பர் தன்னுடைய கலையில் தான் மாஸ்டர் என்கிறார். அது உண்மைதான். ஆனால் நான் என் கலையில் மாஸ்டர் அல்ல, கடவுள். அப்படித்தான் நினைக்கிறேன்.
ஆனால் என்னோடு பழகும் பெரும்பாலானவர்கள் என்னைத் தன்னோடு சமமானவர்களாக நினைத்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. எழுத்தாளன் என்றால் அவர்களுக்கு யார் என்று தெரியவில்லை. எல்லோரும் சமம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது எப்படி சமமாக முடியும்? நம்முடைய அஞ்சாங்கிளாஸ் கணக்கு வாத்தியாரும் கணித மேதை ராமானுஜமும் ஒன்றா? இமயமலையில் கோமணம் கூட இல்லாமல் மைனஸ் நாற்பது டிகிரி குளிரில் திரிகிறார்களே அகோரிகள் அவர்களும் நீங்களும் ஒன்றா? அந்த அகோரிகளைப் போன்றவர்கள்தான் எழுத்தாளர்கள் என்பதை சராசரி மனிதர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இப்படி சராசரி மனிதர்கள் என்று சொல்வதற்காகக் கோபித்து சிணுங்கக் கூடாது. சிணுங்கினால் அது அகங்காரம். பெரும்பாலான சராசரி மனிதர்கள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அகங்காரம் கொண்டு திரிவதையே நான் காண்கிறேன். அதனாலேயே எனக்கு யாரிடமும் பேசுவதற்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது.
இதெல்லாம் போக, நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது உயிரையே வைத்திருக்கிறீர்கள். அந்தக் காலத்துக் கதை ஒன்றில் ராணியின் உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு கிளியின் வயிற்றுக்குள் இருக்கும் என்பார்கள். அது போல உங்கள் உயிர் உங்கள் குழந்தையிடம் இருக்கிறது. நானோ எல்லோரையும் என் குழந்தையாகப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் எப்படியடா மடிப்பிச்சை கேட்டு பூனைகளுக்கும் காகங்களுக்கும் சாப்பாடு கொடுப்பேன் சொல்? இதற்காக என் சுய கௌரவத்தைக் கூட விட்டுவிட்டுத்தானே செயல்படுகிறேன், அப்புறம் நீயும் நானும் ஒன்று என எப்படிச் சொல்கிறாய்? சேட்டுகள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து புறாக்களுக்கு தானியம் கொடுக்கிறார்கள். நான் மடிப்பிச்சை ஏந்தி பிராணிகளுக்கு உணவிடுகிறேன். ஒருவன் எல்லாவற்றையும் கொடுப்பான். சுய கௌரவத்தை இழக்கத் துணிவானா? நான் துணிகிறேன். அப்புறம் எப்படி நீயும் நானும் சமமாக முடியும்?
***
என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai