12. Aura…

வாசகர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்கு க்ஷமிக்க வேண்டும்.  காலை நாலு மணிக்கு எழுந்து முன்பெல்லாம் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.  இப்போது அந்த தியானத்தை விட மேன்மையான ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  நான் இப்படிச் சொல்வதன் பொருள் உங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் என் நாவலை வாசிக்கும்போது தெரியும்.  It’s not a transgressive novel as has always been.  இது வேறு வகையானது.  மும்முரமாக அதில் ஈடுபட்டிருப்பதால் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை.  காலை நாலு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை அந்த வேலைதான்.  ஒரு பக்கம் அசோகா பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறது.  அது கொஞ்சம் பெரிய திட்டம்.  இது சின்னது.  ஆனால் கடுமையாக வேலை வாங்குகிறது. 

இதற்கிடையிலும் அவ்வப்போது இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பேன். இப்போது அப்படி ஒரு சூழ்நிலை.  நான் தான் நான் பார்த்ததிலேயே ரொம்ப வெகுளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் என்னை விடவும் படு வெகுளிகள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நேற்று தெரிந்தது.  அவர் என் 15 ஆண்டுக் கால வாசகர், நண்பர்.  அவர் பெயர் அடிக்கடி என் கட்டுரைகளில் தலை காட்டும்.  அருமையான கடிதங்கள் எழுதுவார்.  நீண்ட கடிதங்கள்.  அவற்றையும் பிரசுரிப்பேன்.  பிழைகள் இல்லாத கடிதங்கள் என்பதால் சந்தோஷமாகவும் இருக்கும்.  முன்பு என்றால் பெயரையே போட்டிருப்பேன்.  ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் இனிமேல் வாழ்நாளில் ஒருத்தர் பெயரையும் போடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.  விதிவிலக்கு, மூவர்.  இந்த மூவரிடம் மட்டும் என்ன வேண்டுமானாலும் உரிமை எடுத்துக் கொள்ளலாம்.   பாருங்கள், எத்தனை மிரண்டு போய் விட்டேன் என்று.  அவர்கள் பெயரைக் கூட போடவில்லை.  மூவரில் ஒருவர் ஸ்ரீவில்லி. ராகவன்.  ராகவன் ஒரு முட்டாள் என்று கூட எழுதலாம்.  மறுநாள் பார்க்கில் வந்து “சார், என்ன சார் என்னைப் பற்றிய உண்மையை இத்தனை தெளிவாக எழுதி விட்டீர்கள்?  இதையேதான் சார் நான் அம்பது வருஷமா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள் ஒருத்தர்தான் சார் கரெக்டா எழுதியேப்ட்டீங்க” என்று அட்டகாசமாகச் சிரித்தபடி சொல்வார்.  துளிக்கூட கோபமே வராது.  ஆண்டாளின் ”வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக” என்ற வரிகளை வாழ்ந்தே காட்டுபவர் ராகவன். 

விஷயத்துக்கு வருகிறேன்.  அந்த நண்பரின் பெயரை பரமன் என்று வைத்துக் கொள்வோம்.  அவர் ஒரு எழுத்தாளரின் பண்ணை வீட்டுக்குப் போயிருக்கிறார்.  இங்கே எல்லார் பெயரையுமே போடலாம்.  ஆனால் பெயரைப் போட்டாலே சாரு திட்டுகிறார் என்று எல்லோரும் சொல்வதால் எல்லோரையும் எக்ஸ் ஒய் என்றே சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது.  வேறு வழியில்லை.  பண்ணை வீட்டுக்கு அறிஞரும் சென்றிருக்கிறார்.  யார் பெயரைச் சொன்னாலும் அறிஞர் பெயரை நான் சொல்வதாக இல்லை.  அவரை அறிஞர் என்று ஜெ. சொல்லித்தான் எனக்கே தெரியும்.  உங்களுக்குத்தான் தெரியுமே, ஜெ.வுக்கும் எனக்கும் துருவ வித்தியாசம் என்று.  ஜெ.வுக்கு அறிஞர் என்றால் எனக்கு?  நான் சொல்ல மாட்டேன்.  அறிஞரின் பொழுதுபோக்கு என்னவென்றால், யார் அவரை விமர்சித்தாலும் கேஸ் போட்டு விடுவார்.  நம்முடைய கைலாஸா சாம்யார் போல.  அறிஞர் இடதுசாரி என்றாலும் இந்த விஷயத்தில் வலதும் இடதும் ஒரே மாதிரி இருக்கிறதுகள்.  அப்படி ஜெ. மீதே கேஸ் போட்டது இடது.  ஜெ.வுக்கு கேஸெல்லாம் சும்மா பிஸாத்து.  ஜே.வுக்கு வரும் தபால்களில் இப்போதெல்லாம் கணிசமான அளவுக்கு வக்கீல் நோட்டீஸ்களும் உண்டு போல.  நாகர்கோவிலுக்கும் கேஸுக்கும் ரொம்பத் தொந்தம் போல.  ஒன்று, நாரோயில்காரன் கேஸ் போடுகிறவனாக இருக்கிறான், இல்லாவிட்டால் கேஸ் போட்டவனுக்காகக் கோர்ட்டுக்கு அலைய வேண்டியவனாக இருக்கிறான்.

சரி, கேஸ் கூட முக்கியம் இல்லை.  நீதிமன்றத்தில் வக்கீல் பார்த்துக் கொள்வார்.  அந்த அறிஞர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில் இருந்த வாசகங்களைத்தான் என்னால் மறக்கவே முடியாது.  கார்ல் மார்க்ஸையும், எங்கெல்ஸையும், க்ராம்ஸியையும், மாயகாவ்ஸ்கியையும் படித்த ஒருவரா இப்படியெல்லாம் ஆபாசமான மொழியில் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடியும்?  முடியும்.  உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த நொடியில் இதை வாசிப்பதை நிறுத்தி விட்டு – உங்களிடம் என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவல் கைவசம் இருந்தால் அதில் ஆரம்பப் பக்கங்களில் வரும் பாலா என்ற கேரக்டருக்கு சூர்யா எழுதும் கடிதங்களைப் படித்துப் பாருங்கள்.  அந்த பாலாதான் இந்த அறிஞர். 

என்னால் அந்த அறிஞரை மறக்கவே முடியாது.  மார்க்சீயம் என்ற மனிதார்த்தத் தத்துவம் எப்படி ஃபாஸிஸமாக மாற முடியும் என்பதை நான் அந்த பாலாவைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்.  1980.  தில்லி.  People’s Union for Civil Liberties – PUCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த நிறுவனத்தின் அலுவலகம் நான் வேலை செய்து கொண்டிருந்த ராஷனிங் டிபார்ட்மெண்ட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் – பழைய தில்லியில் – இருந்தது.  அப்போது பாலா எனக்கு ஒரு கார்ல் மார்க்ஸ்.  ஒரு லெனின்.  ஒரு மா சே துங்.  ஒரு சே குவேரா.  கடைசியில் பார்த்தால் அவர் ஒரு பண்ணையார். ஜான் பால் சார்த்தர் படித்த பண்ணையார்.  குடித்த டீ கிளாஸை என் கையில் கொடுத்து வைக்கச் சொல்வதிலிருந்து என்னை ஒரு பண்ணை அடிமை போல் நடத்தியது வரை எல்லாம் கூட மன்னிக்கத்தக்கது.  ஆனால் அவருக்கு நான் சொல்லும் அத்தனை விஷயங்களுமே பொய்யாகத் தெரிந்தது.  ஒரு உதாரணம்.  இந்தப் பத்தியில் 1980 என்று எழுதியிருக்கிறேன் இல்லையா?  அது உண்மையில் 1981ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது.  எனக்கு இதிலெல்லாம் துல்லியமாக ஞாபக சக்தி கிடையாது.  உடனே சாரு ஒரு பொய் சொல்லி என்றும், புரட்சிக்கு எதிரானவன் என்றும், பெட்டி பூர்ஷ்வா என்றும் முடிவு கட்டி விடுவார்.  மற்ற விவரங்களை நான் சொன்ன நாவலில் படித்துப் பாருங்கள்.

அவரைப் பொறுத்தவரை சாரு என்ற பெயரை சொல்லிப் பாருங்கள், அவருக்கு உடனடியாக உடம்பு பூராவும் வேர்த்துக் கொட்டும்.  அவர் ஒரு மலை வாசஸ்தலத்தில் இருந்த போதிலும்.  ஏனென்றால், அவர் எனக்கு எழுதின ஒரு ஃபாஸிஸ்ட் கடிதத்துக்கு நான் எழுதிய நீண்ட மறுப்புக் கடிதத்தின் ஒரு வார்த்தையைக் கூட இன்னும் அவரால் மறந்திருக்க முடியாது.  நான் எழுதின நீண்ட மறுப்புக் கடிதமும் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் உள்ளது.   என் பெயரை உச்சரித்தாலே அவருக்கு வேர்த்துக் கொட்டுவது மட்டும் அல்லாமல் கோபத்தில் கையெல்லாம் நடுங்கும்.  அத்தனை கோபம்.  அதிகாரம் இல்லை சாமி.  இருந்திருந்தால் என்னை சிறையில் தள்ளியிருக்கலாம்.  முடியவில்லை.  அடக்கப்பட்ட சீற்றம் வியர்வையாகவும் கை நடுக்கமாகவும் வெளிப்படுகிறது.

இப்போது என் வெகுளி நண்பருக்கு வருவோம்.  அவர் பெயர் என்ன?  ம்… பரமன்.  அந்தப் பரமன் ஒரு எழுத்தாளரின் பண்ணை வீட்டுக்குப் போனார்.  அந்தப் பண்ணை வீட்டுக்கு அறிஞரும் வந்திருந்தார்.  பரமன் அறிஞரைப் பார்த்துப் பரவசப்பட்டார்.  அப்படிப் பரவசப்பட வேண்டும் என்று ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு கவிதைத் தொகுதி போட்டிருக்கும் 25 வயது இளைஞனைக் கூடப் பார்த்துப் பரவசப்படலாம்.  இலக்கியத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர்களும் மார்க்சீயவாதிகளும் தொடர்ந்து படித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  கைலாசபதியையும் சிவத்தம்பியையும் கூடத்தான் பார்த்துப் பரவசப்படலாம்.  நம்முடைய முதல்வர் கருணாநிதி?  அவருடைய அந்திமக் காலத்தில் – தொண்ணூறைத் தாண்டிய வயதில் ராமானுஜர் பற்றி ஒரு தொலைக்காட்சித் தொடர் எழுதி பிராமண சமூகத்தினரிடையே பெரும் பாராட்டைப் பெறவில்லையா?  ஓரிரு காட்சிகளைப் பார்த்து விட்டு யாரோதான் எழுதிக் கொடுக்கிறார்களாயிருக்கும் என்று நினைத்தேன்.  ஆனால் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் எனக்கும் பழக்கம் என்பதால் அவரேதான் எழுதுகிறார் என்று தெரிந்து கொண்டேன்.  இப்படி பரவசப்படுவதற்கு எத்தனையோ பேர் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.  என்ன பிரச்சினை என்றால், என் பெயரைக் கேட்டாலே கோபாவேசத்தில் துடிதுடிக்கக் கூடிய ஒரு அறிஞரை சந்தித்து விட்டு வந்த பரமன், ரொம்ப வெகுளியாக, என்னிடம் அதே பரவசத்தோடு பேசியதோடு அல்லாமல் அடுத்த வாரம் அந்த அறிஞரைக் காண அந்தப் பண்ணை வீட்டுக்கு என்னையும் அழைத்துப் போகிறேன் என்று வெகுளியாகவே சொன்னார். 

நான் எழுதுவதையெல்லாம் பரமன் படிக்கிறாரா இல்லையா என்ற சந்தேகமே வந்து விட்டது எனக்கு.  அல்லது, அதையும் இதையும் பொருத்திப் பார்க்கத் தெரியவில்லையா?  அறிஞரைப் பற்றி நான் நக்கலாக சமீபத்தில் கூடப் பலதும் எழுதியிருக்கிறேனே?  பௌதிகத்தில் வரும் ம்யூ பற்றியெல்லாம் எனக்குப் பாடம் எடுத்த பரமனுக்கு இதையும் அதையும் எப்படிப் பொருத்திப் பார்க்கத் தெரியாமல் போனது? 

பரமனிடமே இதையெல்லாம் விளக்கியிருக்கலாம்.  எனக்கு என்னவோ அதெல்லாம் வேண்டாம் என்று தோன்றியது.  எதற்குப் பழைய கதையெல்லாம்?  ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து அந்தக் கதை ஒரு மணி நேரம் ஓடும்.  அத்தனை நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.  ஆனாலும் பரமனின் பரவசப் பேச்சினூடே நான் புரிந்து கொண்டது என்னவென்றால், அவர் என்னைப் பற்றி அறிஞரிடம் எதுவும் பேசவில்லை என்பதுதான்.  பேசியிருந்தால் பெரிய ரசாபாசம் ஆகியிருக்கும். 

பரமனின் பண்ணைச் சந்திப்பில் இன்னொரு அதிசயம் நடந்திருக்கிறது.  பரமனின் குறுஞ்செய்தியை அப்படியே தருகிறேன்.

சாரு,

————————-யில் இருக்கிறேன்.  இரண்டு நாட்களுக்கு முன் ——————வுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு 25 வயது சகோதரர் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  அதிகம் பேசிக் கொள்ளவில்லை.  இன்று மற்றுமொரு நண்பர் வீட்டில் இருந்த போதும் அதே நண்பர்.  கிளம்பும்போது என்னைக் கேட்டார், நீங்கள் சாருவின் வாசகரா என்று.  ஆமாம், ஏன் என்றேன்.

இல்லை, உங்கள் aura-வில் சாருவின் எழுத்தின் பிரதிபலிப்பு தெரிகிறது,  என் அக்காவிடம் சொல்லிக் கொணடே இருந்தேன், அதை உறுதி செய்து கொள்ளவே கேட்டேன் என்றார்.

மிக்க நெகிழ்ச்சியான தருணம் அது, மிக்க நன்றி சாரு – என்னோடு எப்போதும் இருப்பதற்கு…

முக்கியமாக இந்த உரையாடல் (மஹா அவ்தார்) பாபாஜி முன்னிலையில் நடந்தது.   சென்னை திரும்பியதும் ப்ரூ ரூமில் ஒரு கேப்பச்சினோ சாப்பிடுவோம். 

அன்புடன்

பரமன்.  

பார்த்தீர்களா, நான் மட்டும் ஆன்மீகத்தில் நுழைந்திருந்தால் பெரிய லெவலுக்குப் போயிருக்கலாம்.  இப்போது என்றால், எங்கேயாவது எழுத்தாளர் பயிலரங்கம் நடந்தால் போய் கலந்து கொள்ளலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அதை விடுங்கள்.  அந்தப் பையன் யார் என்று பதில் கேள்வி அனுப்பினேன்.  பரமன் அனுப்பிய பதில்:

பெயர் பிரவீன்.  எஞ்சினியரிங் படித்து விட்டு நாலு வருடம் வேலை செய்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று படித்துக் கொண்டும் யோசித்துக் கொண்டும் இருக்கிறார்.  உங்கள் எழுத்தை வாசித்து விட்டு உங்களுக்கு மிக நெருக்கமானவராகி விட்டார்.  அவர் சென்னை வரும்போது சந்திப்போம். 

இப்படி ஒரு என்கவுண்ட்டர் மட்டும் நடந்திராவிட்டால் இந்தப் பதிவையே எழுதியிருக்க மாட்டேன்.  இரண்டு வெவ்வேறு சம்பவங்கள்.  எதிரும் புதிருமாக.  ஒரு நண்பர் இன்னொரு நண்பரோடு இரண்டு மூன்று தினங்களாகத் தங்கிப் பேசிக் கொண்டிருக்கிறார்.  இடையில் என் பெயரே உச்சரிக்கப்படவில்லை.  இருந்தாலும் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு அந்த நண்பர் என் தீவிர வாசகர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.  அந்த அளவுக்கு சில நண்பர்களின் ஆளுமையிலேயே அடிப்படை மாற்றங்களை என் எழுத்து கொண்டு வந்துள்ளது என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் விஷயம்.  இந்த ஒட்டு மொத்த சம்பவக் கோர்வையிலும் நான் பெரிதும் ரசித்த ஒரு விஷயம், aura என்ற வார்த்தைப் பிரயோகம்தான். 

பயங்கரம்…  

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai