இந்திரா நகரில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் எனக்கு இரண்டு நூல்களை ஸ்கேன் செய்ய வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன். முடியாமல் கிடக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் சின்மயா நகரிலிருந்து மைலாப்பூருக்கு வந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த ரோஜா முத்தையா நூலகம். இந்திரா நகரில் இருந்தாலும் கூட சின்மயா நகரிலிருந்து அங்கே போவது எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இப்போதைய நேர நெருக்கடியில் என்னால் இந்திரா நகர் வரை செல்ல முடியவில்லை. ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் பிஸி. இன்னொரு நண்பரை சென்ற வாரம் கேட்டேன். அவர் எனக்கு இதுபோல் பல காரியங்களைச் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் சமீப காலத்தில் அவர் தகவல் தொடர்பு விஷயத்தில் மிகவும் பலவீனனாக இருக்கிறார். எனவே அவரோடு சேர்ந்து என்னால் படகு ஓட்ட முடியாது போல் இருக்கிறது. அவர் இளைஞர். இந்தத் தகவல் தொடர்பு விஷயத்தில் இளைய தலைமுறையினர் அத்தனை பேருமே பூஜ்யத்துக்கும் கீழே இருக்கிறார்கள். இளைஞர் சென்ற வாரமே செல்கிறேன் என்றார். ஆனால் பொங்கல் குறுக்கிட்டது. பிறகு இன்று செல்வதாக உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டு நாலைந்து நாள் இருக்கும். நேற்று இதை நினைவூட்டி ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாமா என்று நினைத்தேன். ஏனென்றால், இன்று அவர் உறுதியாகச் செல்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டால் நலம் என்று நினைத்தேன். அவரால் முடியாவிட்டால் மாற்று ஏற்பாடு செய்யலாம். பிறகு இந்த வேலை கொடுத்த மன உளைச்சலால் நினைவூட்டல் செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன். இன்று பூராவும் அவர் ரோஜா முத்தையா சென்றாரா இல்லையா என்றே பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்தது. அவரிடமிருந்து இந்த நொடி வரை எந்தத் தகவலும் இல்லை. எத்தனையோ வேலைகள் வந்திருக்கலாம். அவர் செய்வது ஒரு உதவி. இன்று செய்தே முடித்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் இன்று செல்வதாக இருந்த வேலை – செல்ல முடியாமல் போனால் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப எத்தனை நேரம் ஆகும்? எனக்கு வேலை முடிந்ததா இல்லையா என்பது பற்றி எப்போதுமே கவலை இல்லை. ஆனால் அது பற்றிய தகவலைக் கொடுக்க வேண்டும். ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாருமே இதில் சரியாக இருப்பதில்லை என்பதே என் அனுபவம். அதிலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள் தகவல் தொடர்பில் பூஜ்யத்துக்கும் கீழே.
இப்போது விஷயம். இரண்டு புத்தகங்கள் ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து ஸ்கேன் செய்ய வேண்டும். அதற்காக நான் பெரிய பெரிய ஏற்பாடெல்லாம் செய்து வைத்து விட்டேன். அங்கே போய் புத்தகத்தின் தலைப்பைச் சொல்லி பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் மறுநாள் வரச் சொல்வார்கள். போய் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை எனக்கு நேரிலோ கொரியலோ அனுப்பலாம்.
சினிமாக்காரர்கள் போல் எழுத்தாளர்களுக்கும் நிறைய ஊதியம் வந்தால் உதவியாளர்கள் வைத்துக் கொள்ளலாம். நமக்கு எல்லாமே நட்புதான். நம்முடைய நட்பு சல்லிக்காசுக்கு மதிப்பு இல்லை என்பதால் இப்படி ஒரு சின்ன விஷயத்துக்காக இரண்டு மாதம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. இப்படி என் ப்ளாகில் எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது.
சென்ற தலைமுறை இப்படி இல்லை. க.நா.சு.வை முதல் முதலாகச் சந்தித்த போது கரிச்சான் குஞ்சு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து நமஸ்கரித்தார் என்று படித்திருக்கிறேன். இத்தனைக்கும் க.நா.சு. கரிச்சான் குஞ்சுவை விட ஏழு வயதுதான் பெரியவர். இதை க.நா.சு. கரிச்சான் குஞ்சுவிடம் குறிப்பிட்ட போது, இலக்கியத்தில் நீங்கள் பீஷ்மரைப் போல என்று பதில் சொல்லியிருக்கிறார். நமக்குக் காலிலெல்லாம் விழ வேண்டாம். காரியம் நடந்தால் போதும். அந்தப் புத்தகம் கிடைத்தால் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலுக்குப் பயன்படும். மற்ற எல்லா நூலகங்களிலும் தேடி விட்டேன். ரோஜா முத்தையாவில் இருக்கிறது. அந்த நூலகம் திங்களிலிருந்து வெள்ளி வரை காலை பத்திலிருந்து மாலை ஐந்து வரை இயங்கும். யாரேனும் நண்பர்கள் சென்று பார்க்க முடியுமா? எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com