தியாகபிரம்மத்தின் புகழ் பெற்ற கிருதிகளில் ஒன்று தொரகுநா இடுவண்டி. பிலஹரி ராகத்தில் அமைந்தது. இது ஒரு சினிமாவிலும் இடம் பெற்று விட்டதால் மலினமான புகழையும் அடைந்து விட்டது. போகட்டும். இதை எனக்குப் பிடித்த சங்கீதக் கலைஞர்கள் எப்படியெல்லாம் அனுபவம் கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பலருடையது கிடைக்கவில்லை. குறிப்பாக வோலட்டி வெங்கடேஸ்வரலு, முசிறி சுப்ரமணிய ஐயர், முடிகொண்டான் வெங்கடராம ஐயர், அரியக்குடி போன்றோரது தொரகுநா கிடைக்கவில்லை. ஆனால் வீணை எஸ். ராமனாதனின் தொரகுநா கிடைத்தது. என்ன துயரம் என்றால், பல்லவி அனுபல்லவியை அடுத்து நேராக மூன்றாவது சரணத்துக்குப் போய் விடுகிறார். அப்போதுதான் புரிந்தது, பெரும்பாலான கலைஞர்கள் கீர்த்தனங்கள்/கிருதிகளை முழுசாகப் பாடுவதில்லை என்பதும், முதலில் கொஞ்சமும் கடைசியில் கொஞ்சமும்தான் பாடுகிறார்கள் என்பதும். இதை என்னால் புரிந்து கொள்ளவோ ஏற்கவோ முடியவில்லை. சிம்ஃபனி என்றால் ஒன்றரை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை போகும். தொரகுநா இடுவண்டி போன்ற நீண்ட பாடல்களைப் பாடி முடிக்க எப்படியும் இரண்டு மணி நேரம் வேண்டும். அதை எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை? எஸ். ராமனாதன் போன்ற மேதைகளே இப்படிச் செய்திருக்கிறார்கள் என்கிறபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சாஸ்த்ரீய சங்கீதம் போன்ற மகத்தான கலைகளைக் கூட fast food noodles மாதிரி கொடுக்கலாமா? அது நியாயமா?
எப்படியிருந்தாலும் வீணை எஸ். ராமனாதன் பாடிய தொரகுநா இடுவண்டியைக் கேட்டுப் பாருங்கள். சினிமாவில் வந்த மாதிரி இதைப் பாடுவது சுத்த ஜனரஞ்சகம். ராமனாதன் பாடுவதே சங்கீதத்துக்கான மரியாதை தருவதாகும்.
மேலும், இந்தக் கிருதியின் சாகித்யத்தையும் தமிழிலோ ஆங்கிலத்திலோ வாசித்துப் பாருங்கள். ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த் போன்ற கவிகளையும் மிஞ்சிய கவித்துவம் மிளிரும். மொழிபெயர்ப்பிலேயே அதை நீங்கள் கண்டு கொள்ளலாம். அநாயாசமான கற்பனை. கட்டிடக்கலையில் Baroque என்று சொல்வார்கள் இல்லையா, பிரம்மாண்டம். இதை மொழியில் சிருஷ்டித்துக் காண்பித்தவர் ஸ்பானிஷ் இலக்கியத்தில் Alejo Carpentier. தமிழில் தியாகபிரம்மத்தின் இது போன்ற சில கீர்த்தனங்களைப் படிக்கும்போது அந்த Baroque என்ற பதம்தான் ஞாபகம் வருகிறது. ஏன் படிக்கும்போது என்று எழுதியிருக்கிறேன் என்றால், கேட்கும்போதுதான் Two minute noodles-ஆக சுருக்கி விடுகிறார்களே பாடகர்கள், அதனால்தான். தியாகபிரம்மத்தின் ஒரு சில பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். தியாகபிரம்மத்தின் கீர்த்தனைகளை எனக்குத் தெரிந்து தமிழில் டி.எஸ். பார்த்தசாரதிதான் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார். இதைத் தவிர வேறு மொழிபெயர்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. மொழிபெயர்ப்பில் குளறுபடி இல்லை. தவறுகள் எதுவுமே இல்லை. ஆனாலும் இதைச் சிறந்த மொழிபெயர்ப்பு என்று சொல்ல மாட்டேன். பல இடங்களில் மொழிபெயர்ப்பு பொழிப்புரையாகப் போய் விடுகிறது. பட்சிராஜன் என்று தியாகராஜர் தெலுங்கில் எழுதினால் பார்த்தசாரதி அதை கருடன் என்று எழுதுகிறார். பிறைசூடன் என்று மூலத்தில் இருந்தால் பரமசிவன் என்று தமிழில் இருக்கிறது. தியாகராஜர் எதையுமே நேரடியாகச் சுட்டுவதில்லை. ஆகுபெயர்களையே பயன்படுத்துகிறார். கிட்டத்தட்ட இயேசு கிறிஸ்துவின் மொழி. எளிமையான தெலுங்கு. சின்ன சின்ன உவமானங்கள். அதே சமயம் தொரகுநா மாதிரியான விஸ்தாரமான Baroque style பாடல்களும் உண்டு. ஆனால் பார்த்தசாரதியின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாக இல்லாமல் அர்த்தம் சொல்வதாக இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா மொழிகளுக்குமே நெருக்கமான உறவு உண்டு. எனவே கூடுமானவரை மொழிபெயர்ப்பின் போது மூலமொழிக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டுமே ஒழிய மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு விசுவாசமாக இருக்கக் கூடாது. ஏனென்றால், நாம் அடிப்படையில் ஒரு மொழிபெயர்ப்பை ஏன் படிக்கிறோம்? தியாகராஜர் கீர்த்தனைகளையே எடுத்துக் கொள்வோம். தெலுங்கு தெரியாததால் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கிறோம். அப்படி இருக்கும்போது தெலுங்கு மூலத்தில் “எவரேனும்” என்று இருந்தால் தமிழில் யாரேனும் என்று ஏன் எழுத வேண்டும்? பிரியமான என்று தெலுங்கில் இருந்தால் அதை அன்பான என்று ஏன் மாற்ற வேண்டும்? பிரியமான என்றே பயன்படுத்தினால் என்ன? ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களில் வில்லியம் ஜாக்ஸன் மொழிபெயர்ப்பு மிக நன்றாக உள்ளது. ஆனால் அவர் கொஞ்சம் கீர்த்தனைகளைத்தான் மொழிபெயர்த்திருக்கிறார். அதே சமயம், தியாகராஜர் என்ன பாடினாரோ அதே வார்த்தையைத்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். பட்சிராஜன் என்றால் கருடன் என்று மாற்றவில்லை. எனக்கு நேரமில்லை. இருந்தால் ஒரு நூறு கீர்த்தனங்களை மூலத்தைச் சிதைக்காமல் மொழிபெயர்த்துத் தரலாம். சுமார் இருபது கீர்த்தனங்களை அப்படி மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன்.
இப்போது வீணை எஸ். ராமனாதனைக் கேளுங்கள். ஏன் பாடகருக்கு வீணை என்ற அடைமொழி என்றால், அவர் வீணையிலும் விற்பன்னர். அவர் காலத்தில் வீணை எஸ். ராமனாதன் என்றே அவரை அழைப்பார்கள். 1980களில் அவர் வெளியிட்ட சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற நூலில் அவர் பெயர் வீணை எஸ். ராமனாதன் என்றே கண்டுள்ளது.