தமிழின் எதிர்காலம்

நான் ஒற்று ஒழுங்காகப் போடாததற்கு அவ்வப்போது சாரு சுளுக்கெடுப்பார். சரி குழந்தைகளிடம் தமிழ் எந்தளவுக்கு புழங்குகிறது என்று பார்க்க, மதிய உணவு வேளையில் ,

செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொல்லி என்னா மீனிங் என்றேன் .

ஆழி : காது கேக்காம அடைச்சிகிட்டா , வயிறு பசிக்கும். அப்ப வயித்துக்கு சாப்பாடு குடுக்கணும்.

இமயா : காதுக்கு உணவில்லாத போது , காது தன் சத்தை கொஞ்சம் வயித்துக்கும் அனுப்பும்.

ஆனாலும் ஆழி சொன்னதில் ஒரு லந்து லாஜிக் இருந்தது. பசி காதடைக்கிது என்று சொல்வோம் அல்லவா ? அப்படி காதடைக்கும் வரை சாப்பிடாமல் அறிவுச் செல்வத்தைக் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு , பசி காதடைத்ததும் செவிக்கு உணவு(அறிவு) வருவது தடைபடும் அல்லவா ? செவிக்கு உணவில்லாமல் போகும். அப்போது சாப்பிடலாம். வயிற்றுக்கு ஈயலாம்.

சரி போய்த்தொலையட்டும் என்று , என்ன மேட்டர் என்று விளக்கினேன்.

“அப்பா , ஆனா அம்மா எனக்கு ஊட்டிகிட்டே , பாடம் சொல்லித் தருவாளே ?” என்றான் ஆழி.

நம் தலைமுறையில்தான் நாம் , குறள் , நன்னெறி , பழமொழி , ஆத்திச்சூடி , நாலடியார் , நான்மணிக்கடிகை என எதைச்சொன்னாலும் மாங்கா மடையர்கள் மாதிரி தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டுச் சென்றோம். அதனால்தான் எதையும் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் நம் இஷ்டத்துக்கு பில்ஸ்டைன் சொசைட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த பழமொழி , நீதி நூல் டகால்டி எல்லாம் இந்தத் தலைமுறை குழந்தைகளிடம் வேலைக்காகாது.

புதிதாக நீதி நூல்கள் , அறநூல்கள் , ப்ராக்டிக்கலாக எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எதுகை , மோனை , சந்தம் கிந்தம் என்று இனிமேல் டுபான்ஸ் விட முடியாது.

அடுத்து , உப்பிட்டவரை என்று மனதில் தோன்றியது , எதற்கு வம்பு என்று , மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

மேலே உள்ளது அராத்து முகநூலில் எழுதியது.

இந்த க்ஷணம் நான் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை கடைசிக் கட்டப் பிழை திருத்தம் மற்றும் editing செய்து கொண்டிருக்கிறேன்.  காலையில் மூன்று மணிக்கே எழுந்து விடுகிறேன்.  என்னுடைய புத்தகங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை, இந்த நாவல் அவசரமாக வர வேண்டும்.  அதற்கான சமூகக் கட்டாயம் இருக்கிறது.  இந்தக் காலகட்டத்தை விட அந்த நாவலுக்கு ஒரு வாகான சூழல் அமையவே போவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நாவல்.  அப்படியானால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.  தருண் ஒரு நாவலை ஐந்தாறு ஆண்டுகள் எழுதுவார்.  ஆக, பிறகு நடக்கப் போவதை முன்னாலேயே யூகித்து எழுதியிருக்க வேண்டும்.  (இப்படி மற்றவர்களுக்கு ஜோதிடம் சொல்பவர்கள் தன் விஷயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள்.  அது வேறு கதை).  அந்த நாவலுக்குப் பின்னட்டைக் குறிப்பு வேண்டும் என்றாள் காயத்ரி.  இன்று வஃபாதார் என்ற அத்தியாயத்தைத் திருத்திக் கொண்டிருந்தேன்.  அத்தியாயம் பூராவுமே மேற்கோள்களாகக் கொடுக்கக் கூடியதுதான்.  உதாரணமாக இது:

எமது ஆசான் சொன்னார், பரிசுத்தத்தின் வலிமை விசுவாசத்தால் ஆனது. கேள்விகள் காகங்களைப் போன்றவை. எங்கும் தென்படும். கருஞ்சிறகுகளை அடித்துக் கொண்டு, உரக்கக் கரைந்து கவனம் கோருபவை அந்தக் காகங்கள்.  ஒவ்வொன்றின் மீதும் நீ கல்லெறிய வேண்டிய அவசியம் இல்லை. புதிய கேள்விகள் என்று எதுவுமே இல்லை என்பது விசுவாசிகளுக்குத் தெரியும். விடை கிடைப்பதற்கான தகுதி வாய்ந்த எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே எழுப்பப்பட்டு, விடையளிக்கப்பட்டு விட்டன. சந்தேகத்தின் புழு, கேள்வியின் காக்கை போன்றவற்றைப் புறக்கணித்து வெளியேற்றிவிடு. பாதை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நாம் அதில் நடந்தாலே போதும். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதை மீண்டும் கண்டுபிடிப்பது எப்படி நற்குணத்தின் செயலாகும்?

இப்படிப்பட்ட கடுமையான நேர நெருக்கடியில் இருந்தாலும் அராத்துவின் பதிவைப் பார்த்து உடனடியாக பதில் எழுத வேண்டும் என்று தோன்றியது.  மேலும், இது அராத்துவுக்குச் சொல்லும் பதில் அல்ல.  அப்படியிருந்தால் ஒரு போன் பண்ணிப் பேசியிருப்பேன்.  ரெண்டு நிமிடத்தில் முடிந்திருக்கும்.  அதை விட்டு விட்டு இங்கே எழுதும் காரணம், இது எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினை.  எல்லோரும் இதைத் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்.  நான் ஒற்றுப்பிழைகளைப் பற்றி மட்டும் பேசவில்லை.  ஒற்றுப்பிழை இருந்தால் அதைத் திருத்திப் படித்துக் கொள்ள முடியும்.  ஆனால் ஆங்கிலத்தைக் கலந்து கலந்து தமிழையே சாக அடிக்கிறார்கள்.  அதுதான் என் பிராது. 

உங்களுக்கே நன்றாகத் தெரியும்.  நான் மொழி வெறியன் அல்ல.  மொழித் தூய்மை காக்கப்பட வேண்டும் என்று நினைப்பவனும் அல்ல.  தாராளமாக ஆங்கிலம் கலந்து எழுதுங்கள்.  ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு அருமையான வார்த்தைகளே தமிழில் நடைமுறையில், புழக்கத்தில் இருக்கும்போது ஆங்கிலத்தில் எழுதினால் தமிழ் செத்துப் போகும். 

இதில் எனக்கு சந்தேகமே இல்லை.  நான் நன்றாகத் தமிழ் எழுதுவதாகப் பல நண்பர்கள் சொல்வதுண்டு.  ஆனால் தேவைப்படுகின்ற சமயத்தில் என்னை விமர்சிக்கவும் தயங்காத காயத்ரி என் ப்ளாகில் சில பல பிழைகளைப் பார்ப்பதாகச் சொன்னாள்.  வாஸ்தவம்தான்.  பிளாகில் எழுதுவதை நான் திரும்பப் படிப்பதில்லை.  அவள் சொன்னவுடனே இப்போது திரும்பப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.  இனி வரும் பதிவுகளில் பிழை இருக்காது. 

உரைநடை இயல்பாக இருக்க வேண்டும்.  அதுதான் நல்ல உரைநடை.  மேலே அராத்து பத்தியை கவனியுங்கள்.   என்னா மீனிங் என்றேன். மிகவும் சரி.  ஏனென்றால், அது உரையாடல்.  அதை எழுத்தில் பதிவு செய்யும் போது என்னா அர்த்தம் என்றேன் என்று எழுதினால் அது பொய். அவர் ஆழியிடம் என்னா மீனிங் என்றுதான் கேட்டார்.  எனவே அதில் தப்பு இல்லை. 

அடுத்து, ஆழி சொன்னதில் ஒரு லந்து லாஜிக் இருந்தது.  ஆழி சொன்னதில் ஒரு தர்க்கம் இருந்தது என்று எழுதினால் லந்து போய் விடும்.  எனவே லாஜிக்கை மன்னிக்கலாம்.  ஆனாலும் எல்லா இடத்திலும் லாஜிக் என்று உரைநடையிலேயே எழுதினால் உதைதான்.   

என்ன மேட்டர் என்று விளக்கினேன்.  இங்கேதான் பிரச்சினை.  இது உரையாடல் இல்லை.  உரைநடை.  என்ன விஷயம் என்று விளக்கினேன்.  மேட்டர் என்று எழுதினால் தமிழ் சாகும்.  ஏற்கனவே எழுதி விட்டேன்.  தமிழ் இருந்தால் என்ன, செத்தால் என்ன?  மனிதனின் அதிக பட்ச ஆயுள் 100.  மொழியின் ஆயுளோ கணக்கிடவே முடியாதது.  எனவே அதைப் பற்றி ஒரு அற்ப மனிதனான நான் கவலைப்படக் கூடாது.  ஆனால் இந்த வழியாகப் போனால் புதை மணலில் விழுந்து சாவாய் என்று முன்கூட்டியே சொல்ல முடியும்.  ஏனென்றால், ஆயிரம் பேரில் 990 பேர் இப்படித்தான் எழுதுகிறார்கள்.  இளம் எழுத்தாளர்களும் இப்படியே.  பத்து பேர்தான் – ஆயிரத்துக்குப் பத்து பேர்தான் சரியாக எழுதுவது. 

மேட்டர் என்றால் ஆங்கிலம்; விஷயம் மட்டும் பரவாயில்லையா என்றால் பரவாயில்லைதான்.  சம்ஸ்கிருதம் – தமிழ் எல்லாம் ஒன்றுக்கொன்று உறவு கொண்டவை.  இந்த நிலம் சார்ந்தவை.  இலக்கண ரீதியாகவும் இன்னும் பல்வேறு மொழியியல் அடிப்படைகளும் ஒன்றானவை.  ஆங்கிலம் சுத்தமாக இதற்குச் சம்பந்தம் இல்லாதது.  அது இங்கே சேராது. 

அடுத்து, இந்த பழமொழி , நீதி நூல் டகால்டி எல்லாம் இந்தத் தலைமுறை குழந்தைகளிடம் வேலைக்காகாது.  டகால்டி போன்ற வார்த்தைகள் எல்லாம் தமிழில் சேர வேண்டும்.  அதேபோல் டுபான்ஸ்.  இது எதுவுமே பிரச்சினை இல்லை.  சொல்லப்போனால் தமிழுக்கு இதெல்லாம் வரவு.  ஆனால் பிரச்சினை எது என்றால், புதிதாக நீதி நூல்கள் , அறநூல்கள் , ப்ராக்டிக்கலாக எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த ப்ராக்டிக்கல்தான் பிரச்சினை.  இதற்குத்தான் அருமையான தமிழ் வார்த்தைகள் இருக்கின்றனவே?  நடைமுறை என்பது ஒரு வார்த்தை.  இப்படி எழுதலாம்:

புதிதாக நீதி நூல்கள், அறநூல்கள் போன்றவற்றை இன்றைய காலகட்டத்திற்கேற்ப எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.   

இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இப்படி ஒரு 20 வாக்கியங்கள் சாத்தியம்.  வாக்கிய அமைப்பையே மாற்றித்தான் ஆக வேண்டும்.  ஏனென்றால், இதையெல்லாம் பார்க்கும் வாசகர்கள் அவர்களும் இப்படியே எழுத ஆரம்பிக்கிறார்கள்.  எழுத்தாளன் என்றால் சும்மா வேஸ்ட் என்று நாம்தான் விரக்தியின் காரணமாக நினைக்கிறோம்.  ஆனால் சமூகம் அப்படி நினைக்கவில்லை.  எழுத்தாளர்களை  முன்னுதாரணங்களாகத்தான் சமூகம் பார்க்கிறது.  இங்கே நானே வேஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேன்.  இப்படி தவிர்க்க முடியாதபடி இருந்தால் பரவாயில்லை.  ”நீங்கள் பயன்படுத்தினால் தவிர்க்க முடியாதது; நாங்கள் பயன்படுத்தினால் தமிழ் செத்து விடுமா?” என்று கேட்டீர்களானால் என்னிடம் பதில் இல்லை.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

Post navigation

ஜோக்கா? சீரியஸா? : சிறுகதைஇன்று (6.2.2021) மாலை ஐந்து மணிக்கு இலக்கிய உரை