முகமூடிகளின் பள்ளத்தாக்கு – இறுதிக் கட்ட வேலைகளை முடித்து விட்டேன். இரவு பகலாக அமர்ந்து இறுதிக் கட்ட பிழை திருத்தம், எடிட்டிங் எல்லாவற்றையும் இப்போதுதான் முடித்தேன். இந்த அளவு உழைப்பை நான் வேறு எந்தப் பிரதிக்கும் இதுவரை கொடுத்ததில்லை. பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் தட்டச்சு செய்திருக்கிறேன். ஆனால் பிழை திருத்தம் என்பது வேறு. மௌஸைப் பிடித்துக் கொண்டே வேலை செய்ய வேண்டும். பன்னிரண்டு மணி நேரம் வலது கையை ஒரே இடத்தில் வைத்து மௌஸை நகர்த்திக் கொண்டே இருந்ததில் – அதிலும் இப்படியே ஒரு வாரம் – கையை நீட்டினால் விரல்கள் நான் ஆட்டாமலேயே தானாகவே ஆடுகின்றன. நரம்புகள் துடிக்கின்றன. நாளை கொஞ்சம் விரல் பயிற்சி செய்து சரி செய்ய வேண்டும்.
நாளை எக்ஸைல் நாவலை எடிட்டிங் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏற்கனவே 300 பக்கம் செய்து முடித்து விட்டேன். இன்னும் 500 பக்கம் இருக்கிறது. பெரிய நாவல். ஏற்கனவே வந்து வாசிக்கப்பட்ட நாவல்தான். ஆனாலும் அது இப்போது வந்தால் 1000 பிரதிகள் மூன்று மாதத்தில் போகும் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்த ஏழெட்டு ஆண்டுகளில் எனக்கு நூற்றுக்கணக்கான புதிய வாசகர்களும் நண்பர்களும் ஏற்பட்டிருக்கிறார்கள். சுமார் 200 பேரின் பெயர்களே எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெரியாது. அதேபோல் பழைய வாசகர்கள் பெரும்பாலும் இடம் பெயர்ந்து விட்டார்கள். இந்தப் புதிய வாசகர்கள் யாரிடமும் எக்ஸைல் இல்லை.
முகமூடிகளின் பள்ளத்தாக்கு – பதிப்பகத்திடம் கொடுத்து விட்டேன். அது போன்ற ஒரு நாவலை நீங்கள் படித்திருக்கவே முடியாது. தயாராக இருங்கள். அதிலிருந்து ஒரு பத்தி:
இந்த உலகின் கதைகளின் மருந்தகத்துக்கு என் பங்களிப்பை இன்றிரவுக்குள் முடிக்கும் அவசரத்தில் இருந்தாலும் இறுதியாக நான் அனுபவிக்கப் போகும் அற்புதத் தருணங்களைத் தவிர்க்கும் அளவுக்கு அச்சத்தில் இல்லை. என் கதையின் இறுதிப் பகுதியைச் சொல்லும் நேரத்துக்குள்ளாக நான் இன்னொரு புதிய இசைப் பதிவை எடுத்தேன். அவர் தகிக்கும் சமவெளிகளின் இதயத்திலிருந்து வந்திருந்த ஒரு மகத்தான இசைக் கலைஞர். அட்டையில் இருக்கும் படம் அவரை உருண்டை முகமும், வழுக்கைத் தலையும், நெற்றியில் சில சாதிச் சின்னங்கள் அணிந்திருப்பவராகவும் காட்டியது. அவரது வலது கை உயர்ந்து, வாய் திறந்து இருந்தது. கால்களைச் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் என் ஆசான் அந்தக் கலைஞரின் இசையை ஒருமுறை, புனித நதியின் கரையிலிருக்கும் தெய்வீக நகரில், காலத்தைக் கடந்த நீரின் மேல் வெளிச்சங்கள் நடனமாடிய இரவுப் பொழுதில் நேரில் கேட்டதாகச் சொன்னார். கண்களை அகல விரித்தபடி அவர் சொன்னார், நான் இறந்து சொர்க்கம் சென்று விட்டேன் என்று நினைத்த அதே நொடி இரு கரைகளிலிருந்தும் பத்து கோடி மரித்த ஆன்மாக்கள் அந்தக் குரலைக் கேட்க எழுந்து வந்தன!