தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்திருப்பீர்கள். அப்புவின் அம்மா அலங்காரம்தான் கதையின் பிரதான பாத்திரம். அவளுடைய கணவன் தண்டபாணி ஒரு வேதவிற்பன்னர். அலங்காரத்துக்கு சிவசு என்ற பணக்கார நிலக்கிழாருடன் தொடர்பு. ரகசியத் தொடர்பெல்லாம் இல்லை. அலங்காரத்தின் வீட்டுக்கே வெளிப்படையாக வந்து போய்க் கொண்டிருப்பவர்தான். ஒருநாள் சிவசு அலங்காரத்தின் வீட்டுக்கு வந்திருக்கும்போது தண்டபாணி மேல்தளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். சிவசு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து அலங்காரத்திடம் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது தண்டபாணிக்குக் கேட்கிறது. தண்டபாணி குளித்து முடித்து விட்டார். வெளியே வர மனசில்லை. வந்தால் அந்த சிவசுவைப் பார்க்க வேண்டும். தண்டபாணிக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை நேரம்தான் குளியலறையிலேயே ஈரத்தோடு நிற்பது? வந்து விடுகிறார் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் படித்தது.
இன்னொரு இடம். அல்லது அதே காட்சியில்தானா? நினைவில்லை. ஆனால் காட்சி என் மனதை விட்டு அகலவே அகலாது. ஊஞ்சலில் அமர்ந்து சிவசு ஆடம்பரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பதினாறு ஆண்டுகள் வெளியூர் சென்று வேதம் படித்து விட்டு வீட்டுக்கு வருகிறான் அப்பு. ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் சிவசுவை அப்பு தன் தம்பி என்றே நினைத்து அவன் பெயர் சொல்லி அழைக்கிறான். அப்புறம்தான் தெரிகிறது, அது சிவசு மாமா என்று. கதை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அச்சு அசலாக சிவசு மாதிரியே அப்புவின் தம்பி.
இந்த நாவல் 1966-இல் வெளிவந்து தி.ஜானகிராமனை எல்லோரும் சபித்தார்கள். பந்துக்கள் அவரைக் குடும்பத்திலிருந்து பிரஷ்டம் செய்தார்கள். அவரும் தில்லி போய் விட்டார். அவரைச் சார்ந்த சமூகமும் அவரைப் படித்ததாகத் தெரியவில்லை. அப்போது. அவர் உயிரோடு இருந்த போது. அவருக்கும் பெரிதாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஆசை இல்லை. தஞ்சாவூர்க்காரர்களே அப்படித்தான். ஆனால் ஒன்று, தான் எழுதும் எழுத்து பற்றி அவருக்குத் திடமான அபிப்பிராயம் இருந்தது. இது ஒன்றும் காமாசோமா எழுத்து அல்ல என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது.
அவருடைய பேட்டிகள், அவரது நண்பர்களின் பேட்டிகள் எல்லாவற்றையும் படித்தபோது நான் வந்து சேர்ந்த முடிவுகளே இவை. மேலும், அந்த அம்மா அலங்காரம் தி.ஜா.வின் குடும்பத்தைச் சேர்ந்த தி.ஜா.வுக்கு மிக நெருங்கிய சொந்தம்தான். குடும்பத்தில் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் சபித்திருப்பார்கள்? வேறு வழியே இல்லை. எழுத்தாளன் என்றாலே சாபம் தின்பவன் தான்.
சென்ற மாதம் ஒருநாள் ஒரு நண்பர் என் மீது மிகுந்த அக்கறையோடு “ஏன் தான் நீங்கள் இப்படி எதிர்மறையாகவே எழுதி எழுதி எல்லோருடைய சாபத்தையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள்? நீங்கள் எழுதிய எழுத்துக்கு எங்கேயோ இருக்க வேண்டிய ஆளல்லவா நீங்கள்? எல்லோருடைய சாபமும்தான் உங்களை பாதிக்கிறது. இனிமேல் பிறருடைய சாபத்துக்கு ஆளாகாதீர்கள்” என்றார். அவர் கூறியது நூற்றுக்கு நூறு சரி. ஏனென்றால், என் முகம் பார்த்து ஆரூடம் சொன்ன ஒரு பெரியவரும் இதையேதான் சொன்னார். அவர் சொன்னதை நான் நம்பியதற்குக் காரணம், என்னுடைய கடந்த காலம், நிகழ்காலம் இரண்டையும் மிகச் சரியாக கணித்தார்.
சாபத்துக்குப் பயந்தால் எழுத்து வராது. கனவான்கள் எழுத்தாளராக இருக்க முடியுமா? சந்தேகமாக இருக்கிறது. அசோகமித்திரன் இருந்தார். ஆனால் அதெல்லாம் ரொம்பவும் அரிதாக நடக்கும் விஷயம். எல்லா எழுத்தாளர்களுமே சாபம் தின்பவர்கள்தாம். எம்.வி. வெங்கட்ராம் மட்டுமே சாபம் கொடுத்தார். அது வேறு விஷயம்.
நான் பட்டினி கிடக்கும் போதெல்லாம் என் மித்திரர்களும் சத்ருக்களும் கொடுத்த சாபம் பற்றியே நினைப்பேன். சாபங்கள் என் பசியாய் எரிகின்றன. இன்று காலை மூன்றரைக்கு எழுந்தேன். ஒரு மணி நேரம் தியானம். பிறகு எக்ஸைல் வேலை. எட்டு மணிக்குக் காஃபி குடிக்கப் போனால் சமையல் எரிவாயு தீர்ந்து விட்டது. பசியில் மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. எரிவாயுவை மாற்றலாம். 17 கிலோ சிலிண்டரைத் தூக்க வேண்டும். பசி மயக்கம். நான் ஒரு கிலோவைக் கூடத் தூக்கக் கூடாது. 17 கிலோவைத் தூக்கினால் என்னைத் தூக்க வேண்டி வந்து விடும். ஒரு முறுக்கை எடுத்துத் தின்றேன். பசி கொன்றது. இன்னொரு முறுக்கை எடுத்துத் தின்றேன். பசி தீவிரமானது. சரி, இன்றைக்குச் சேர்த்த கொழுப்பு போதும் என்று ஹீட்டரை எடுத்துப் போட்டு பாலைக் காய்ச்சி, டிகாக்ஷன் எடுத்து காஃபியைக் குடித்தேன். மணி ஒன்பதரை. நேற்று மாலை நாலு மணிக்கு சாப்பிட்ட மதிய உணவோடு சரி. நாலு மணிக்கு மதிய உணவு சாப்பிட்டால் இரவு எங்கிருந்து பசிக்கும்? இரவு எப்போதுமே சாப்பிடுவதில்லை. பசி கொன்றது. மூன்றரையிலிருந்து இப்போது ஒன்பதரை. ஆறு மணி நேரம். கொலைப்பட்டினி. அவந்திகாவை எழுப்பினேன். அவள் ஒரு மணிக்குப் படுத்தாளோ இரண்டுக்குப் படுத்தாளோ. ஒருவரை நள்ளிரவில் எழுப்பினால் எப்படி எழுந்து பார்ப்பார்களோ அப்படி அரைகுறையாய் விழித்தாள்.
நான் கணினியின் பக்கம் வந்து விட்டேன். சென்ற மாதம் கேட்ட சாபம் குறித்த பேச்சு ஞாபகம் வந்தது. அதற்காக கனவானாக மாற முடியுமா என நினைத்துக் கொண்டே ‘நாமே சிலிண்டரைத் தூக்கி மாற்றி விட வேண்டியதுதான்’ என்று போனேன். அவந்திகா எழுந்து வந்தாள்.
விஷயத்தை உடனே சொன்னாள் அதிர்ச்சி அடைவாள் என்று ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு சொன்னேன். அவள் இதோ ஒரு ரெண்டு நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி ஏதோ பூனை வேலையில் ஈடுபட ஆரம்பித்தாள். பதினைந்து நிமிடம் ஆகும் என்று உறுதியாகத் தெரியும். நானே சிலிண்டரைத் தூக்கி வைத்து இட்லி போட்டு சாப்பிட்டேன். ஐம்பது வயது வரை நான் வெய்ட் லிஃப்டர் என்பதெல்லாம் ஞாபகம் வரக் கூடாது. இப்போது 17 கிலோ தூக்கியதில் லேசாகக் கொஞ்சம் மாறுபாடு தெரிகிறது. சாபம்தான்.
இதோ இன்னொரு சாபத்துக்கான ஏற்பாடு. சேனன் எழுதிய சித்தார்த்தனின் விநோத சம்பவங்கள் என்ற நாவலைப் பற்றி வரும் 27-ஆம் தேதி ஸூம் மூலம் பேசுகிறேன். சேனன் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதால் ஒப்புக் கொண்டேன். நாவலை எடுத்தேன். பின்னட்டையைப் பார்த்தேன். பின்னட்டையில் சித்தார்த்தனின் விநோதச் சம்பங்கள் என்று இருந்தது. பின்னட்டையில் தப்பு இல்லாத புத்தகமே இல்லை என்ற அளவுக்குத் தமிழ்ச் சமூகம் கேடு கெட்டுப் போயிருக்கிறது என்று எழுதினால் இதைப் பதிப்பித்த என் அன்புக்குரிய நண்பர் – நான் சோறு இல்லாமல் பட்டினி கிடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மூட்டை மூட்டையாக என் வீட்டுக்கு அரிசி கொண்டு வந்து கொடுத்த நண்பர் எனக்கு சாபம் விடுவார் என்றால் நான் இன்னமும் பட்டினி கிடந்து சாகவே விரும்புகிறேன். ஏனென்றால், சாபம் தின்பவனே எழுத்தாளன்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை. எழுத்தாளன் அப்படி நினைக்க முடியாது. உப்பு என்பது இங்கே அரிசி. நான் வேலையை விட்டு விட்டு வருமானம் இன்றிப் பட்டினி கிடந்தபோது – 15 ஆண்டுகளுக்கு முன்பு – என் வீட்டுக்கு மூட்டை மூட்டையாக அரிசி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த நண்பர்தான் அதன் பதிப்பாளர். இதோ, அவரிடமிருந்தும் சாபம் வாங்கியாயிற்று.
இதை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம், ஏன் இதை அந்த நண்பரிடமே போன் மூலம் சொல்லியிருக்கலாமே? இது ஒரு சமூக நோய். என் நண்பர் மட்டுமே செய்யும் தவறு அல்ல. ஒவ்வொரு புத்தகத்திலும் இப்படி நான் பிழைகளைப் பார்க்கிறேன். ஒரே ஒரு புத்தகத்தில் இப்படி இருந்தால் இதை நான் பொருட்படுத்தவே போவதில்லை. ஆனால் பெரும்பான்மையான புத்தகங்களில் இப்படி என்றால், இதை நான் ஒருத்தனாவது சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும். செய்கிறேன். சாபம் தின்கிறேன்.
வேறு யாராக இருந்தாலும் நான் நாவலை வைத்து விடுவேன். படிக்க மாட்டேன். ஆனால் சேனன் போன்ற நண்பர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அந்த வலி எனக்குத் தெரியும். அதனால் படித்து விடுவேன். பேசுவேன்.
இது அத்தனையும் இன்று ஜெயமோகன் எழுதிய பிறழ்வெழுத்து என்ற கட்டுரையைப் படித்த போது ஞாபகம் வந்தது. இத்தனைக்கும் இது 2011-இல் வெளிவந்தது. இது எப்படி என் கண்களில் படாமல் போனது என்று ஆச்சரியம். பட்டிருந்தால் ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்து என்பதற்குப் பதிலாக நான் பிறழ்வெழுத்து என்றே பயன்படுத்தியிருப்பேன். ட்ரான்ஸ்க்ரஸிவ் என்பதற்குத் தமிழில் என்ன சொல்லலாம் என்றே எனக்குக் குழப்பமாக இருந்தது. பிறழ்வெழுத்து ஒரு நல்ல பதம். Transgressive என்பதன் பொருள் violation of moral and social boundaries. பிறழ்வெழுத்து சரியாக வரும். ஜெயமோகனின் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையில் ஒரு பகுதியை மிகவும் ரசித்தேன்.
”ஆனால் முழுமையான பிறழ்வெழுத்து தமிழில் மட்டுமல்ல, பிற இந்திய மொழிகளிலும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்திய மொழிகளில் முதன்மையான பிறழ்வெழுத்தாளரான சாரு நிவேதிதா கூட தன்னை தொடர்ச்சியாக மறுவரையறை செய்து முன்வைக்கவேண்டியிருக்கிறது.சாருவின் ஆன்மிக, அரசியல், அறவியல் தோற்றமளித்தல்கள் மார்க்கி தெ சாத்-க்கோ, புக்கோஸ்வ்ஸ்கிக்கோ தேவைப்பட்டதில்லை. இது நம்முடைய வாசிப்புச் சூழல், நமது கூட்டு உளவியலின் அழுத்தத்தின் விளைவு.”
அழுத்தம் என்னுடையது. ஆன்மீக, அரசியல், அறவியல் தோற்றமளித்தல்கள். Postures. பிரமாதம். ஒரு உளவியல் நிபுணர் என் மனதின் உள்ளே சென்று வெளிச்சத்தை அடித்தது போல் எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட posturesக்குக் காரணத்தையும் அவரே சொல்லி விட்டார். கூட்டு உளவியல். சமூகச் சூழல்.
இன்று காலை யோசித்துக் கொண்டிருந்தேன், சாபம் என்றால் இந்தியச் சமூகத்தில் சாப விமோசனமும் உண்டே, நம்முடைய விமோசனம் எங்கே என்று பகவானிடம் கேட்டேன்.
ஒன்பது மணிக்கு பிச்சைக்காரன் ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார். ஜெயமோகனுக்கு நன்றி. இதை இப்போதாவது எனக்கு வாசிக்கக் கொடுத்த பிச்சைக்காரனுக்கும் நன்றி.