அநேகமாக இனிமேல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி எழுத மாட்டேன். புத்தகம் வெளிவந்த பிறகுதான். ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை. ஓரளவுக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கும் நான் தான் இப்படிச் சொல்கிறேன். பின்வரும் பகுதி நாவலின் கடைசி அத்தியாயத்தில் வருகிறது. அதைப் படித்த பிறகு இது பூனைகளைப் பற்றிய நாவலோ என நினைத்து விடாதீர்கள். நாவலின் இந்தப் பக்கத்தில் மட்டுமே பூனைகள் – அதுவும் பிறந்தவுடனேயே இறந்து போகும் குட்டிகள் வருகின்றன. நாவல் வந்த பிறகுதானே நாவலைப் பற்றிச் சொன்னால் நல்லது? ஆனாலும் இந்தப் பத்தியை உங்களோடு இப்போதே என்னால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
”இலவம் பஞ்சு மரத்தின் கைகள் மற்றும் விரல்களின் ஊடாக சூரியனின் முதற் கதிர்கள் உட்புகுந்தபோது நான் அந்தச் சிறிய அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என் தலையைக் கைகளால் பற்றிக் கொண்டு, என் வாழ்க்கையில் முதல் முறையாக அழுதேன். சில மணி நேரத்துக்கு முன்பு அவற்றைக் கந்தல் துணிகளுடன் அந்தப் பெட்டியில் விட்டபோதும் அவை முழுக்க உயிரோடு இருந்தன. அவற்றின் பாதங்கள் – உடலின் அளவுக்குப் பொருந்தாத பெரிய பாதங்கள் – என் விரல்களைப் பற்றி இழுப்பதையும், நம்பிக்கையின் கண்களோடு அவை என்னைப் பார்ப்பதையும் உணர்ந்தேன். அவற்றின் மிகச் சிறிய உடலுக்குள் உயிர் துடிக்கும் பிரம்மாண்டத்தை நான் உணர்ந்திருந்தேன். இப்போது எந்தக் காரணமுமின்றி இறந்துவிட்டன. தொடங்கும் முன்னரே முடிந்து விட்டன. நான் எதையோ சரியாகச் செய்யத் தவறியதால் இறந்து விட்டன.
நான் அந்தக் குட்டிகளுக்காக அழுதேன். ஆனாலும் அவற்றுக்காக மட்டுமல்லாமல் எனக்காகவும், நான் இதுவரை அறிந்த இனி ஒருபோதும் அறிய முடியாத எல்லோருக்காகவும் அழுவதாகத் தோன்றியது. பார்வதி எனக்குத் தேநீர் கொண்டுவந்தபோது கண்ணீர் என் கன்னங்களில் வழிந்து வாயோரங்களில் கரித்திருந்தது. நான் போற்றத் தொடங்கியிருக்கும் அவளது சொற்களற்ற ஞானத்தின் காரணமாக, எதுவும் சொல்லாமல் என் தலையை அணைத்துப் பிடித்திருந்துவிட்டுச் சென்று விட்டாள். துயரத்தின் ஊற்றுகளை கேள்வி கேட்கவும் முடியாது, புரிந்து கொள்ளவும் முடியாது…”