முகமூடிகளின் பள்ளத்தாக்கு முடிந்து எக்ஸைலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு ஆண்டு சுமையை இறக்கி வைத்து விட்டது போல் ஆசுவாசமாக இருக்கிறது. இன்று வரை நான்கு புத்தகங்களை ஸீரோ டிகிரி பதிப்பகத்திடம் கொடுத்திருக்கிறேன்.
மயானக் கொள்ளை – நாடகம்
மாயமோகினி – கவிதைத் தொகுதி
லத்தீன் அமெரிக்க சினிமா
முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்)
இது எல்லாம் புத்தக விழாவிலேயே வந்து விடுமா என்று சொல்ல முடியாது. வந்தால் நல்லது. எல்லா எழுத்தாளர்களுமே புத்தக விழாவில் தம் புத்தகம் வந்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்பதால் நான் அந்தப் போட்டியில் ஈடுபடுவதில்லை. அடிப்படையில் எனக்கு சென்னை புத்தக விழாவே பிடிக்காது. சென்னையில் நடக்கும் புத்தக விழா புத்தக விழாவே இல்லை. ஏனென்றால், அது இலக்கியத்துக்கே சம்பந்தம் இல்லாதவர்களின் கையில் – அதிகாரத்தில் – இருக்கிறது. புத்தக விழாவினால் இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பாளர்களும் பயன் பெறுகிறார்கள் என்று அந்தப் பதிப்பாளர்களே சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், தினந்தோறும் உளவியல் ரீதியாகச் சித்ரவதை செய்து கொண்டிருக்கும் கணவனைப் பற்றி “என் கணவர் ஒரு அருமையான மனிதர்” என்று இந்தியப் பெண்கள் பொதுவெளியில் கருத்துப் பகிர்வதோடு மட்டுமின்றி, தாங்களே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா, அதே மனோபாவத்தைச் சேர்ந்ததுதான். பதிப்பாளர்கள் அப்படி நினைக்கவில்லை என்றால் மன உளைச்சல்தான் மிஞ்சும்.
சென்னை புத்தக விழா ஏன் எனக்குப் பிடிக்கவில்லை என்றால், கேரளத்தில், மும்பையில், தில்லியில், சில வெளிநாடுகளில் நடக்கும் புத்தக விழாக்களைப் பார்த்திருக்கிறேன். கல்கத்தா புத்தக விழாவுக்குச் சென்றிருக்காவிட்டாலும் கேள்விப்பட்டிருக்கிறேன். நம் பத்ரியே எழுதியிருக்கிறார். அவற்றோரு ஒப்பிட்டால் சென்னை புத்தக விழா ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு, அவ்வளவுதான். மற்ற பல ஆண்டுகளை விட சென்ற ஆண்டு பரவாயில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். குறிப்பாக நீங்கள் இத்தனை லட்சம் பேர் வந்து போகும் புத்தக விழாவில் உள்ள கழிப்பறை வசதியைப் பார்க்க வேண்டும். வி.எஸ். நைப்பால் சொன்ன கக்கூஸ்தான் என்ற வார்த்தைதான் ஞாபகம் வரும். நமது நாட்டின் அவமானச் சின்னம் நமது பொதுக் கழிப்பறைகள். அதிலும் புத்தக விழாவுக்குச் செல்லும் பெண்களின் நிலைமை கொடுமையிலும் கொடுமை. அந்தக் கழிப்பறைப் பக்கமெல்லாம் அவர்கள் எட்டிக் கூடப் பார்க்க முடியாது. பரிதாபம். போன ஜென்மத்தில் கொடும் பாவம் பண்ணினவர்கள்தான் இந்தியாவில் பெண்களாகப் பிறந்திருக்கிறார்கள்; தமிழ் எழுத்தாளர்களாகப் பிறந்திருக்கிறார்கள்.
ஆனாலும் சில சுவாரசியங்களும் இருக்கத்தான் இருக்கின்றன. எழுத்தாளர்களைக் கொண்டாடும் வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு எனக்கு என்னிடம் கையெழுத்து வாங்கின வாசகர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து விட்டு, இதை விட நோபல் பரிசு கூடப் பெரிதில்லை என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியை இந்த ஆண்டு அவர்களுக்குக் கொடுக்க முடியாதவனாக இருக்கிறேன். இதற்காக அவர்கள் என்னை க்ஷமிக்க வேண்டும். அவர்களுக்காகத்தான் வெளியே வராமல் இருக்கிறேன். நாவலை முடிக்க வேண்டும். நேற்று கூட வினித் சொன்னார். உங்கள் அ-புனைவு நூல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. நாவல் ஐந்தோ ஆறோதான். என்ன இது? அதிலும் எக்ஸைல் எட்டு ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை. 2021-இல் மட்டும் இரண்டு புதிய நாவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதில் ஒன்று, ஏப்ரலிலேயே வந்து சேரும்.
அதற்காக நான் எதையெல்லாம் இழக்கிறேன் என்பதையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். முந்தாநாள் ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் என்ன கேட்டாலும் – என் சக்திக்கு உட்பட்டதாக இருந்தால் – தருவேன். அவ்வளவு நெருக்கம். இப்போது ஒரு இயக்குனர் பேசுவார், பேசுங்கள் என்றார். பேசினேன். ஒரு படத்துக்கு வசனம் எழுத வேண்டும். ஏழு லட்சம் தருவதாகச் சொன்னார். திரைக்கதையை அனுப்பி விடுவார். நான் வீட்டிலிருந்தபடியே எழுதித் தர வேண்டும். அவ்வளவுதான். ஒரு வார வேலை. யோசிக்கவே இல்லாமல் மறுத்து விட்டேன். ஏழு லட்சம் எனக்குப் பெரிதுதான். ஆனால் அந்த இரண்டு நாவல்களும் ஏழு லட்சத்தை விடப் பெரிது. நேரம் இப்போது பணத்தை விடப் பெரிதாக இருக்கிறது.
சென்ற மாதம் ஒருவர் அசோக நாவலின் வெப்சீரீஸ் உரிமையைக் கேட்டார். (அது மட்டும்தான், நாவல் உரிமை என்னுடையது). இன்னும் எழுதியே முடிக்கவில்லை என்றேன். பரவாயில்லை, கையெழுத்து வேண்டும். பதினைந்து லட்சம். நான் மறுத்து விட்டேன். நான் இது போன்ற விஷயங்களில் அராத்துவையும் ராம்ஜியையும் கலந்து கொள்ளாமல் முடிவு சொல்ல மாட்டேன். அவர்களிடமும் நான் இது பற்றி இன்னும் பேசவில்லை. இப்போதைக்குப் பேச வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், தற்சமயம் என் கவனம் முழுக்கவும் மரத்தில் உள்ள ஒரே ஒரு கனியின் மீதுதான். இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான நாவல். அது எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாக முடியாத பணி. மேலே இருந்து வந்த உத்தரவு. என் கையில் எதுவும் இல்லை. நான் ஒரு கருவி. அவ்வளவுதான். மற்றபடி அந்த நாவலை இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஒருத்தருக்கும் பிடிக்காது. அதை நான் அசோகாவை முடித்துக் கொடுத்து சமன் செய்து விடுவேன். கவலையில்லை.
மூன்று நண்பர்களுக்கு ஒரு நீண்ட அத்தியாயத்தை அனுப்பினேன். அவர்களில் ஒருவர் அராத்து. அதகளம் என்றார். உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்றல்லவா நினைத்தேன் என்றேன். லந்து பண்ணனும்னு முடிவு பண்ணீட்டிங்க, பண்ணுங்க. நீங்க லந்து பண்ணினா ரசிக்காம இருக்க முடியுமா என்றார். இன்னொரு நண்பருக்கு அனுப்பினேன். ஆளைச் சொன்னால், நாவலையே இன்னதென்று கண்டு பிடித்து விடுவீர்கள். எடிட்டிங், பிழை திருத்தம் ஆகியவற்றுக்காக அனுப்பினேன். செய்து கொடுத்தார். மற்றபடி ஆள் வாயே திறக்கவில்லை. நாம் சும்மா இருப்போமா? வேறு ஏதையோ கேட்பது போல் போன் போட்டுப் பேசி விட்டு, உதவி செய்ததற்காக நன்றி சொன்னேன். அதற்கு மேல் நண்பரால் வாயைக் கட்ட முடியவில்லை. சுவாரசியமா இருந்தது என்றார். ஆஹா,. திட்டாமல் விட்டாரே அது போதும் அது போதும் என்று விட்டு விட்டேன். ஏனென்றால், நண்பர் பளிச் பளிச்சென்று அபிப்பிராயத்தைச் சொல்லி விடும் பழக்கம் உள்ளவர். என்னிடம் மட்டும். இன்னொருவர், காயத்ரி. மொழி புரியலப்பா சுத்தமா உள்ளயே போக முடியல, கோணங்கி எழுதுறா மாதிரி இருக்கு. (கவனம், முதல் நண்பருக்கு நான் அனுப்பின அத்தியாயம் இது இல்லை!) எனக்கு உடனே உச்சிமுடியைப் பிடித்து உலுக்கியது போல் ஆகி விட்டது. அராத்து இதைத்தான் லந்து என்று குறிப்பிட்டது. சரி, காயத்ரிக்கே புரியவில்லை என்றால் வேண்டாம், மாற்றி விடுவோம் என்று முடிவு செய்வோம். மேலும், எடுத்த எடுப்பில் கோணங்கி பெயரைக் கேட்டதும் வேறு ஒரு மாதிரி ஆகி விட்டது. சீனியையே மீண்டும் அழைத்தேன். எதுவும் சொல்லிக் கொள்ளாமல் அனுப்பிய பிரதியின் மொழி பற்றிப் பேசினேன். “சிலர் அந்த மொழி புரியலை என்கிறார்களே சீனி?” “எந்த மடையன் சொன்னது?” என்று மேலும் திட்டப் போனவரை அசமடக்கி, பெண் பால்ங்க என்றதும் தணிந்து விட்டார். ஓ, காயத்ரியா, அவங்க கருத்துக்கும் என் கருத்துக்கும் என்னிக்கு ஒத்துப் போயிருக்கு, நீங்க அந்த ஸ்டைல்லயே எழுதுங்க என்றார். ஏதோ கோணங்கி மாதிரி என்று இழுத்தேன். சேச்சே, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.
சரி, இவர்கள் எல்லோரும் குழப்புகிறார்கள் என்று எனக்குத் தெரிந்த ஒரு காமன்மேனிடம் கொடுத்தேன். படித்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணி, இந்த நாவல் முடியும் வரை உங்களுக்கு இது சம்பந்தமாக என்னென்ன உதவியெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.
அந்த வேலையையும் நிறுத்தி விட்டுத்தான் வினித் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் இப்போது எக்ஸைல் எடிட்டிங், பிழை திருத்த வேலையை எடுத்திருக்கிறேன். மூன்று நாட்களில் முடித்து விடலாம். பார்ப்போம்.
இறுதியாக, பணம் தேவைதான். ஆனால் அது சினிமாவின் மூலம் வேண்டாம். எழுத்தின் மூலம் கிடைத்தால் போதும். முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்பித் தாருங்கள்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai