ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி

தீவிர இலக்கியம் என்று சொல்ல முடியாத, அதே சமயம் வெறும் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்ட pulp writing என்றும் எடுத்துக் கொள்ள முடியாத பல்வேறு வகையான எழுத்து வகைகள் ஆங்கிலத்தில் உண்டு.  ஹெரால்ட் ராபின்ஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் வகையறாக்களை நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட பொழுதுபோக்கு எழுத்து என்று வகைப்படுத்தலாம்.  ஒவ்வொரு வகை எழுத்துக்கும் சமூகத்தில் தேவை இருக்கிறது.  அவ்வளவுதான் விஷயம்.  சில வளர்ச்சி அடைந்த சமூகங்களில் பொழுதுபோக்கு எழுத்தை 25 சதவிகிதத்தினர் படிப்பார்கள்.  மீதி 75 சதவிகிதம் இலக்கியமாக இருக்கும்.  இங்கே தமிழ்நாட்டில் 99.9 சதவிகிதம் பொழுதுபோக்கு எழுத்தும், பாய்ண்ட் ஒரு சதவிகிதம் இலக்கியமும் படிக்கிறார்கள்.  அதனாலேயே இலக்கியவாதிகளின் புத்தகங்கள் இங்கே நூறு இருநூறு என்ற எண்ணிக்கையில் விற்கின்றன.  எட்டு கோடியில் நூறு என்பது எத்தனை சதவிகிதம் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.  .1 கூட வராது.

இந்த அராஜகமான சூழலால்தான் இலக்கியவாதிகளும் eccentric ஜீவன்களாகத் திரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இத்தனை பிரச்சினைக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பது இலக்கியமும் அல்லாமல் பொழுதுபோக்கு எழுத்தும் அல்லாமல், நடுவாந்திரமாக இருக்கும் ஜனரஞ்சக (popular) எழுத்துதான். அந்த வகை எழுத்துக்குத் தமிழில் இடமே இல்லாமல் போய் விட்டது.  ஆனாலும் சுஜாதா எழுதிய பலவற்றை நாம் வெறும் பொழுதுபோக்கு எழுத்து என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது.  சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை ஒரு இலக்கியப் படைப்பு.    ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் வெகுஜன எழுத்துக்கு ஒரு நல்ல உதாரணம். ஆங்கிலத்தில் சொன்னால் சேத்தன் பகத்தின் இரண்டு மாநிலங்கள் ஒரு நல்ல வெகுஜன நாவல்.  அவர் எழுதிய மற்றவை வெற்றுப் பொழுதுபோக்கு.

ஆங்கிலத்தில் பல உதாரணங்கள் உள்ளன.  மேரி கோரெல்லி வெகுஜன எழுத்துக்கு ஒரு சிறந்த உதாரணம்.  ஏராளமாக எழுதியிருக்கிறார்.  எடுத்தால் கீழே வைக்க முடியாது.  அவருடைய தெல்மா என்ற பெரிய நாவலை என் கல்லூரிப் பருவத்தில் ராப்பகலாக அமர்ந்து படித்திருக்கிறேன். 

தமிழில் முன்பு இருந்தது.  இப்போது சுத்தமாக இல்லை.  சுஜாதாவுக்குப் பிறகு அவரது genreஇல் எழுத ஆளே வரவில்லை.  இந்த நிலையில் ராம்ஜி நரசிம்மன் எழுதிய அல்லிக்கேணி என்ற நாவல் முகநூலில் தினமும் வெளிவந்த போது அதற்கு ஏராளமான வாசகர்கள் உருவானார்கள்.  வாஸ்தவத்தில் இது போன்ற நாவல்கள் குமுதம், விகடன் போன்ற வெகுஜன இதழ்களில் வெளிவந்து லட்சக்கணக்கான பேரால் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாசிப்பு என்பதே இல்லாமல் போய், ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் ஒன்று, வெறும் பொழுதுபோக்கு எழுத்து, இல்லாவிட்டால் தீவிர இலக்கியம் என்று ஆகிவிட்ட நிலையில் நான் சொல்வதும் ஆசைப்படுவதும் யாருக்கும் புரிய வாய்ப்பில்லை. 

ஒரு காலத்தில் உ.வே. சாமிநாதய்யரின் என் சரித்திரம் ஆனந்த விகடனில் இரண்டு வருட காலம் வாராவாரம் தொடராக வந்தது என்பது இன்று விகடனின் மேனேஜிங் டைரக்டருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.  பாருங்கள், இப்போது “எடிட்டர்” காணாமல் போய் விட்டார்.  அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது “மேனேஜிங் டைரக்டர்”!  பத்திரிகைகள் போய் விட்டன.  கார்ப்பொரேட் கம்பெனிகள் வந்து விட்டன.  இதை  வெளிப்படையாகச் சொல்வதற்குக் கூட இன்று தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லை. என்ன செய்வது?  அவரவருக்கு வயிறும் அவரை நம்பி ஒரு குடும்பமும் இருக்கிறதே?  வாயை மூடிக் கொள்ள வேண்டியதுதான்.

எங்கோ போய் விட்டேன்.  ஆக, Popular writing என்ற பிரிவில் தரமான எழுத்து என்பதற்கு உதாரணமாக வந்துள்ளது ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி.  இப்படிப்பட்ட வெகுஜன எழுத்துக்கு அடிப்படை, எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி இருந்தாலே அது தீட்டு என்று சொல்பவர்கள் இலக்கியவாதிகள்.  நான் ஆரம்பத்திலிருந்தே இம்மாதிரி புனிதங்களுக்கு எதிரானவன்.  இலக்கியத்திலேயே அப்படி விறுவிறுப்பாக எழுதுபவர்களாக லக்ஷ்மி சரவணகுமார், அய்யனார் விஸ்வநாத், அராத்து என்று பலர் இருக்கிறார்கள். 

அல்லிக்கேணியை வாசித்த பலர் அது ஒரு விறுவிறுப்பான சினிமாவைப் போல் இருப்பதாகச் சொன்னார்கள்.  எஸ்.ராமகிருஷ்ணனும் அப்படித்தான் எழுதியிருந்தார்.  அப்போதே நினைத்தேன், ராம்ஜி தன் காரியத்தில் வெற்றி அடைந்து விட்டார் என்று.  உண்மையில் இந்த நாவல் சினிமாவாகவும் எடுக்கப்படக் கூடியதுதான்.  இந்த நாவலில் நான் பார்த்த இன்னொரு நல்ல விஷயம், எந்தவித பாசாங்கும் இல்லாதது.  அது ஒருத்தரின் தலையில் இருக்கிறது.  நாலு வரி எழுதியதுமே நம் ஆட்களுக்கு நாம் பெரிய பிஸ்தா என்று தோன்றி விடுகிறது.  உடனே அந்த சைத்தான் மண்டையில் போய் உட்கார்ந்து கொண்டு ஆட்ட ஆரம்பித்து விடுகிறான்.  என்ன நடக்கும்?  புட்டுக் கொள்ளும். 

திரும்பவும் சொல்கிறேன்.  சேத்தன் பகத்திடம் “உங்களுடைய டூ ஸ்டேட்ஸ் படித்தேன்.  நன்றாக இருந்தது.  எங்கள் மைலாப்பூர்க்காரர்கள் கூட மைலாப்பூரை அத்தனை சுவாரசியமாக எழுதியதில்லை” என்று சொன்னேன்.  அவர் என்ன சொன்னார் தெரியுமா?  ”பாஸ், நீங்களா அந்த நாவலைப் படித்தீர்கள்?  இதை விட எனக்கு வேறு என்ன கௌரவம் வந்து சேர வேண்டும்?”   இந்த அடக்கம்தான் ஒரு வெகுஜன எழுத்தாளனின் சொத்து.  தான் பெரிய இலக்கியவாதி என்ற சைத்தான் மூளைக்குள் போய் உட்கார்ந்து விட்டால் இருப்பதும் போய் விடும். 

சேத்தன் பகத்திடம் நான் கண்ட அடக்கம் ராம்ஜியிடம் இருக்கிறது.  அதனால்தான் அத்தனை பெரிய உற்சாகமான வரவேற்பையும், பாராட்டையும் தலைமேல் ஏற்றிக் கொள்ளாமல் தான் கண்ட வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார். 

ராம்ஜிக்கு என் வாழ்த்துக்கள்.

அல்லிக்கேணியை நீங்கள் பின்கண்டவாறு வாங்கிக் கொள்ளலாம். 270 ரூ விலையுள்ள இந்த நாவல் இப்போது ரூ.200க்குக் கிடைக்கிறது.

https://tinyurl.com/allikkeni