அழியாத ரேகைகள்: சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள்

சென்ற ஆண்டு என் நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் ராமசேஷனும் பூரிக்குச் சென்றிருந்தனர். ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.  நான் ஆடம்பரமாகத் தங்குவேன், விமானத்தில்தான் செல்வேன், இதெல்லாம் ராகவனுக்குக் கட்டுப்படி ஆகாது என்றார் ராகவன்.  நானே தனியாக விமானத்தில் கிளம்பிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டிருப்பேன்.  ஆனால் எனக்கு அப்போது கடும் வேலை.  அங்கே போனவர் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கினார்.  நண்பரின் வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள்.  தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம்.  அதில் ஒரு புத்தகம் சுதா மூர்த்தியின் Here There and Everywhere.  எழுதியவரின் பெயரைப் பார்த்து விட்டு எடுத்துப் படித்திருக்கிறார்.  உடனே அவருக்கு என் ஞாபகம் வந்திருக்கிறது.  நிச்சயம் சாருவுக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும். 

இதை அவர் நாகேஸ்வர ராவ் பார்க்கில் வைத்துச் சொன்னபோது “இத்தனை நாள் பழகியும் தப்பு செய்து விட்டீர்களே, சுதா மூர்த்தியை எல்லாமா நான் படிப்பேன்?” என்று கேட்டேன்.  (ராகவன் பொதுவாக எல்லாவற்றையும் படிக்கக் கூடியவர்.  ஒரு கபடி விளையாட்டு வீரர் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதினாலும் படிப்பார்.   வாசிப்பில் எந்தப் பாகுபாடும் வைத்துக் கொள்ள மாட்டார்.  நான் அதில் ரொம்பக் கறார்.  எனக்குத் தேவையானதை மட்டுமே படிப்பேன்.  அதையும் தவிர,  எனக்குப் பொதுவாகவே பிரபலங்கள் எழுதுவதைப் படிப்பதில் துளியும் இஷ்டம் இருப்பதில்லை.  ஆனால் அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சம்பவத்தைச் சொன்னார்.  அந்தச் சம்பவம் என்னை அப்படியே உலுக்கி விட்டது.  எல்லா மனிதர்களிடமும் கதை இருக்கிறது.  மணியன் பிள்ளை என்ற திருடர் நமக்கு நூற்றுக்கணக்கான கதைகள் சொல்லவில்லையா?  ரஜினியிடம் ஆயிரம் கதைகள் இருக்கும்.  ஆனால் சொல்ல முடியாது.  சுதா மூர்த்தி சொல்லும் கதைகள் யாருக்கும் தொந்தரவு தராதவை.  ஆனால் இந்திய மரபின் ஞானத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவை என்பதால் லட்சக்கணக்கான மனிதர்களின் மனதை ஈர்த்தவை.  அக்கதைகள் கன்னடத்தில் வந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டிருக்கின்றன. 

நம்முடைய கலாமும்தான் எழுதினார்.  லட்சக்கணக்கான பேர்தான் வாங்கினார்கள்.  ஆனால் என்னால் ஒரு பக்கத்தைக் கூடத் தாண்ட முடியவில்லை.  தமிழ்ச் சூழலால் அப்படிப்பட்ட எழுத்தைத்தான் உருவாக்க முடியும்.  கலாமைச் சொல்லிப் பயனில்லை.  இந்த சூழல் அப்படி.  இன்னொரு கன்னட உதாரணம் சொல்கிறேன்.   ஜி.ஆர். கோபிநாத் எழுதிய Simply Fly: A Deccan Odyssey  என்ற புத்தகத்தைப் படித்து மிரண்டே போனேன்.  பக்கத்துக்குப் பக்கம் மேற்கத்திய இலக்கியத்திலிருந்தும் தற்காலக் கன்னட இலக்கியத்திலிருந்தும் மேற்கோள் கொடுத்துக் கொண்டே போகிறார் மனிதர்.  தற்காலக் கன்னட இலக்கியத்திலிருந்து அந்த நூலில் இடம் பெறாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு இருந்தது.  மேலும் என்ன விசேஷம் என்றால், அதெல்லாம் வெறும் மேற்கோள்களாக மட்டுமே இல்லை.  அப்படியே கதையோடு கதையாக ஒன்றிக் கிடந்தன.  நான் படித்த மறக்க முடியாத வாழ்க்கை வரலாற்று நூல்களில் அதுவும் ஒன்று.  இதை நான் ஒரே அமர்வில் படித்து முடித்தேன்.  படித்து விட்டு, சீனியை அழைத்து இதைப் படித்தீர்களா என்று கேட்டேன்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்து விட்டு, உங்களையும் படிக்கச் சொன்னேன், நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றார். 

கோபிநாத்தின் புத்தகம் ஒரு இலக்கியவாதியின் புத்தகத்தைப் போலவே இருந்தது.  ஆனால் கோபிநாத் இலக்கியவாதி இல்லை.  இது எப்படி நடந்தது?  கன்னடச் சூழல்.  அங்கே ஒரு விமானப்படை வீரர் கூட அனந்தமூர்த்தியையும் பைரப்பாவையும் படித்திருக்கிறார்.  இங்கே ஜனாதிபதியாக இருந்தவருக்கே சுஜாதாவைத் தாண்டி யாரையும் தெரியவில்லை.  இந்த நிலையில் சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்பு உங்களுக்கு ஒரு அருமையான அனுபவத்தைக் கொடுக்கும்.  அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை.  தான் சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுதுகிறார்.  இந்த நூலில் எனக்கு ஆகப் பிடித்தது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கோவில் குருக்கள் சுதாவிடம் சொன்னதுதான்.  ஒரு மகத்தான காவியத்தில் நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு மகத்தான ஞானத்தை அந்த குருக்கள் போகிற போக்கில் சுதாவிடம் சொல்கிறார்.  அது என்ன என்று இங்கே நான் எழுதப் போவதில்லை.  படித்துப் பாருங்கள்.  இது போன்ற நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும்.  காயத்ரியின் மொழிபெயர்ப்பு பிரமாதமாக இருந்தது என்று சொன்னால் மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை என்று பொருளாகி விடும்.  ஒரு நல்ல மொழிபெயர்ப்பின் அடையாளம் அது மொழிபெயர்ப்பு என்றே தெரியக்கூடாது.  தெரியவே கூடாது.  இந்த நூல் தமிழிலேயே எழுதப்பட்டது போல் உள்ளது.  காயத்ரி மென்மேலும் இது போன்ற பணியைச் செய்ய வேண்டும். 

புத்தகத்தின் பெயர் அழியாத ரேகைகள்.  புத்தகம் வாங்க விவரம் கீழே. 250 ரூ. புத்தகம் 200க்குக் கிடைக்கிறது.