ஸ்டாலினுக்கு ஒண்ணு ரெண்டு தெரியுமா, கூட்டல் கழித்தல் தெரியுமா, அவர் தந்தையைப் போல் இலக்கியம் தெரியுமா, யாகாவாராயினும் நா காக்க என்பதைத் தப்பு இல்லாமல் திருப்பி சொல்லத் தெரியுமா என்பதெல்லாம் முக்கியம் அல்ல. முதல் மந்திரி ஆவதற்கு இம்மாதிரி கணக்குப் பரிட்சை, மொழிப் பரிட்சையில் எல்லாம் தேற வேண்டிய அவசியம் இல்லை. அவர் மேயராக இருந்த போது சென்னை நிர்வாகத்தை நல்ல முறையில் செய்தார். அவர் தந்தை அளவுக்கு சூதனம் தெரியாதவர். அதுவே அவர் பலமும் கூட. எடப்பாடி, பன்னீர்செல்வம் எல்லாம் முதல் மந்திரி ஆகலாம், தேவ கௌடா எல்லாம் பிரதம மந்திரி ஆகலாம் என்றால் அவர்களை விட ஸ்டாலின் எத்தனையோ மடங்கு தேவலாம்.
மேலும், ஒரு முதல்வரை அல்லது பிரதம மந்திரியை ஒரு சூப்பர் மேனாக எதிர்பார்ப்பது மக்களின் அறியாமையையும் பேதமையையும் காட்டுகிறது. ஹிட்லர் ஒரு சூப்பர் மேன் தான். இன்றைய இந்தியாவுக்கு சூப்பர் மேன்கள் தேவையில்லை. ஸ்டாலின் போன்ற திறமைக்குறைவானவர்களும், ராகுல் போன்ற விடலைத்தனம் மிக்கவர்களும்தான் தேவை. இவர்களால்தான் இங்கே வளர்ந்து கொண்டிருக்கும் ஃபாஸிஸத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.
நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று பீரங்கி முழக்கமிட்டு வரும் பெரிய ஜாம்பவான்கள் கடைசியில் ஃபாஸிஸ்டுகளாக மாறுவதே இதுவரையிலான வரலாறு.ஆனால் ஸ்டாலினும் ராகுலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மீண்டும் மத மாற்ற ஐரோப்பிய கோஷ்டிகளை உள்ளே விட்டீர்களானால் திரும்பவும் அடுத்த தேர்தலில் மக்கள் உங்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, திரும்பவும் மோடியைத்தான் கொண்டு வருவார்கள், இப்போது இருப்பதை விட இன்னும் வலுவாக. எனவே, கவனம்.