அன்பான சாரு,
தாங்கள் சொல்வது சரி. நாம் மலேசியாவிலும் தமிழகத்திலும் சந்தித்துள்ளோம். மலேசியா போலவே தமிழகத்திலும் உரையாடியுள்ளோம். அப்படி உங்கள் வாசிப்பு, இலக்கியம் குறித்த பார்வையை அறிந்தவன் நான். அதைவிட விரிவாக எழுத்தில். உங்களின் ஊரின் மிக அழகான பெண் குறித்து எழுதியும் பேசியும் இருக்கிறேன். ஒருவகையில் தாங்கள் மேற்கோள் காட்டிய நூல்களையும் சினிமாவையும் தேடி வாசித்துள்ளேன், பார்த்துள்ளேன். உங்கள் வழி நான் பெற்றவை அதிகம். எனவே என் மனப்பதிவில் தாங்கள் உலக இலக்கியம் அறிந்தவர்.
நீங்கள் குறிப்பிடும் பெண் எழுத்துக் கட்டுரையில் நான் தமிழ் இலக்கிய வாசிப்பு குறித்து பேசியிருந்தேன். அதில் பரந்த உலக இலக்கிய வாசிப்பு உள்ள தாங்கள் தமிழ் இலக்கியஙகளை வாசிக்காததைக் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் சொல்ல இரண்டு காரணஙகள்.
முதலாவது, நம் உரையாடலில் தமிழின் சில முக்கியமான ஆக்கங்களை நீங்கள் வாசிக்கவில்லை என்று சொன்னதன் அடிப்படையில். அடுத்து, தமிழில் பாலியல் குறித்த சிக்கலை எழுதுபவர் இல்லை என நீங்கள் சொன்னதும் சு.வேணுகோபால் புனைவுகள் குறித்த என் அவதானிப்பும் அப்போது உங்களிடம் நான் முன் வைத்த மறுப்புகளும் அடிப்படையில் அமைந்தவை.
சாரு, இப்போது அக்கட்டுரையை வாசிக்கையில் அவ்வரி அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவ்வரி உங்களை கீழ்மைப் படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. போகிற போக்கில் உங்களை அவமானப்படுத்தும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அவ்வரி உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
எப்படியாயினும் அந்த உரையைக் கேட்டவுடன் உங்களிடம் பேசிவிடவே தோன்றியது. அரூ கேள்விகளை நீங்கள் தவிர்த்துள்ளீர்கள் எனத்தெரிந்தபோது நீங்கள் மனவிலகலில் உள்ளீர்கள் என அறிந்துகொண்டேன். அதோடு அராத்து நூல் வெளியீட்டில் உங்களிடம் பேச முயன்றபோதும் தவிர்த்துவிட்டீர்கள்.
என் சொற்கள் உங்களை நோகடித்துள்ளது. அது இவ்வளவு ஆழமானது என நினைக்கையில் வருத்தமாக உள்ளது.
(இதைத் தாங்கள் பிரசுரிக்கலாம் சாரு. பொதுவில் ஒருவரை நோகடித்தால், அதற்காக வருந்தினால் அதைப் பொதுவில் சொல்வதே முறை.)
ம.நவீன்.
அன்புள்ள நவீன்,
பொதுவாக பல நண்பர்கள் – பொது வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி – இப்படி ஒரு பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ள நேரும்போது அதை அப்படியே புறக்கணித்து விட்டு மேலே சென்று விடுவார்கள். அது எத்தனை பெரிய நஷ்டம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் அவர்கள் எதிர்கொள்வது ஒரு பிரச்சினையே அல்ல. அந்தப் பிரச்சினையை அவிழ்த்து விடுவதற்கு, அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு அது ஒரு வாய்ப்பு. மக்கள் அந்த வாய்ப்பைத் தட்டிக் கழித்து விடுகிறார்கள். ஒரே காரணம், பிரச்சினையை கண்ணுக்குக் கண் கொண்டு காண்பதற்கு அச்சம். அதனாலேயே அதை எதிர்கொள்ளாமல் கடந்து விடுவது.
நீங்கள் அப்படி இல்லாமல் இந்தப் பிரச்சினையை தைரியமாக எதிர்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்.
சமகாலத் தமிழ் இலக்கியத்தில் என் வாசிப்பு கம்மிதான். ஆனால் உங்களைச் சந்தித்த போது இருந்ததை விட இப்போது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு உங்களின் பேய்ச்சியைக் கூட காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன். (பதிப்பகத்தாரிடம் சொல்லி எனக்கு ஒரு பிரதி அனுப்பச் சொல்லியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்!) நான் உங்களைச் சந்தித்த வேளையில் பழுப்பு நிறப் பக்கங்கள் எழுதியிருக்கவில்லை என்றே நினைக்கிறேன். பிறகு நான் 1980 வரையிலான எல்லா மாஸ்டர்களையும் வாசித்து விட்டேன். ஆனாலும் அதற்குப் பிறகான சமகால எழுத்தாளர்களைப் படிக்கவில்லை. உதாரணமாக, ஜோ டி. குரூஸ், சு. வேணுகோபால், சு. வெங்கடேசன் போன்றோர். பழையவர்களிலும் நீல. பத்மநாபன், மேலாண்மை செ. பொன்னுசாமி, பொன்னீலன், கி. ராஜநாராயணன், ச. தமிழ்ச்செல்வன், விழி பா. இதயவேந்தன் போன்றவர்களைப் படித்ததில்லை. ஆனாலும் புதியவர்களில் தமிழ்ப் பிரபா, சரவணன் சந்திரன், நடுவாந்திரமானவர்களில் அய்யனார் விஸ்வநாத் போன்றவர்களைப் படித்து விட்டேன். இலங்கையில் நான் படித்தவர்கள் ஷோபா சக்தியும் கலாமோகனும், எஸ். பொன்னுத்துரையும். மற்ற மிகப் பெரிய ஆளுமைகள் உண்டு. படிக்காதவர்களின் பட்டியல்தான் பெரியது. ஆனால் ஒரு எழுத்தாளரின் சில படைப்புகளைப் படித்து, சிலவற்றைப் படிக்காமல் இருப்பதும் நடப்பதுண்டு. அதில் ஒருவர் லக்ஷ்மி சரவணகுமார். அவருடைய கொமோரா, ரூஹ் இரண்டும் இன்னும் படிக்கவில்லை. பா. ராகவன் இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இரா. முருகன் அத்தனையும் படித்து விட்டேன்.
ஆனால் தனக்கு அடுத்த சந்ததியின் எழுத்தை ஒரு மூத்த எழுத்தாளன் படித்தே ஆக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அசோகமித்திரனோ, அ. மாதவனோ, நீல. பத்மநாபனோ என்னுடைய எழுத்தைப் படித்ததில்லை என்று சொன்னால் எனக்கு அது பற்றி எந்த ஆச்சரியமும் இராது. ஒரே விதிவிலக்கு, இந்திரா பார்த்தசாரதி. அவர் எல்லோரையும் படித்து விடுவார். அதேபோல் நான் வா.மு. கோமுவின் பல நாவல்களைப் படித்திருக்கிறேன். பலதைப் படிக்கவில்லை. இது போதும் என்றே நினைக்கிறேன். நேரம் இல்லை. இருக்கும் நேரத்தில் நான் நீல. பத்மநாபனையும், தோப்பில் முகமது மீரானையும் படிக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு எழுத்தாளனும் நம் ஆசான்களைப் படித்தே ஆக வேண்டும். அது நீங்களானாலும் சரி, நான் ஆனாலும் சரி. நாம் அனைவரும் படித்தே ஆக வேண்டிய மாஸ்டர்கள்: சி.சு. செல்லப்பா, க.நா.சு., புதுமைப்பித்தன், தர்மு சிவராமு, கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சார்வாகன், தி.ஜ. ரங்கநாதன், ந. சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி, எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், மௌனி, லா.ச.ரா., நகுலன், ஆதவன், அசோகமித்திரன், ஆ. மாதவன், எஸ். சம்பத், தஞ்சை ப்ரகாஷ், ப. சிங்காரம், கோபி கிருஷ்ணன். இவர்களையெல்லாம் படிக்காமல் ஒருவர் உரைநடை எழுத வருவது தகாத காரியம். இவர்கள் எழுதியதைப் படிப்பது மட்டும் அல்ல. இவர்கள் எழுதியது எல்லாவற்றையும் படித்தாக வேண்டும்.
குறிப்பாக சு. வேணுகோபால் பற்றி நீங்கள் எழுதியிருப்பதால் என் பதில். எனக்கென்று சில தேர்வுகள் உள்ளன. என்னுடைய நண்பர்கள் – குறிப்பாக ஜெயமோகன் – சிலரின் கடும் சிபாரிசு இருந்தால் ஒழிய நான் எனக்கு அடுத்த தலைமுறையினரைப் படிப்பதில்லை. வேணுகோபால் பற்றி ஜெ. எழுதியிருக்கிறாரா? எழுதியிருப்பாராக இருக்கும். ஆனால் எனக்கு அவர் எழுதியது வேணுகோபாலைப் படிக்கத் தூண்டுதலாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இதற்கிடையில் பா. வெங்கடேசனை விட்டு விட்டேன். சமகால எழுத்தாளர்களில் என்னை ஆகக் கவர்ந்தவர் என்று பா. வெங்கடேசனைச் சொல்ல வேண்டும். அவருடைய பாகீரதியின் மதியம் என்ற நாவல் உலக நாவல் இலக்கியத்திற்கே ஒரு சவாலாக விளங்கக் கூடியது. அப்படி ஒரு நாவலை என் உலக இலக்கிய வாசிப்பில் இதுவரை வாசித்ததில்லை. அத்தனை எழுத்தாளருக்குமே அது ஒரு விஞ்ச முடியாத சவால். இது ஒன்றும் போகிற போக்கில் அடித்து விடுவதல்ல. இதே கருத்தை சுமார் முக்கால் மணி நேரம் விளக்கிப் பேசியும் இருக்கிறேன். யூட்யூபில் கேட்கக் கிடைக்கும்.
என்ன இருந்தாலும் மற்ற மாநிலத்தைக் காட்டிலும், மற்ற வெளிநாட்டு எழுத்தாளரைக் காட்டிலும் நாம் பரவாயில்லைதான். வெளிநாடுகளில் என்னைப் போன்ற ஒரு எழுத்தாளரிடம் போய் ஜெயமோகன் பற்றி கருத்து கேட்டால், அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லையே என்று வெகுளியாக பதில் சொல்வார்கள். ஜெயமோகனும் சாரு பற்றி அப்படித்தான் சொல்வார். அதுதான் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நிலைமை. நான் கலந்து கொள்ளும் சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகளில் அவர்கள் ஆல்பெர் கம்யு, காஃப்கா போன்றவர்களைத் தவிர வேறு சமகால எழுத்தாளர்களில் ஒருத்தரைக் கூடப் படித்ததில்லை. நாம்தான் ரொம்ப எதிர்பார்த்து ரொம்பத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கே பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வேலை இது. உண்மையில் பார்க்கப் போனால் சு. வேணுகோபால்தான் சாரு நிவேதிதாவின் ஆறு நாவல்களையும் படித்துக் கருத்துச் சொல்ல வேண்டுமே ஒழிய சு. வேணுகோபாலை சாரு படிக்க வேண்டிய அவசியமே இல்லை. எனக்குக் கரிச்சான் குஞ்சு தெரியாது என்று சொன்னால்தான் தவறு.
மற்றபடி நாம் பழசை மறந்து விட்டு மேலே செல்வோம்.
மேலும் ஒரு விஷயம். ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் தன்னுடைய முதல் நாவலை என்னிடம் கொடுத்து “நீங்கள் இதைப் படித்து உங்கள் கருத்தைச் சொல்ல முடியுமா?” என்று கேட்கும் போது எனக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. நீங்கள் என்னுடைய நாவல்களைப் படித்திருக்கிறீர்களா, ஒரு வரி எழுதினீர்களா என்பதே அது.
இது நவீனிடம் நான் சொல்வது அல்ல. நீங்கள் என்னைப் படித்திருக்கிறீர்கள். அது எனக்குத் தெரியும். சு. வேணுகோபாலை முன்வைத்து இதைச் சொல்கிறேன்.
சென்னை வந்தால் சொல்லுங்கள். ஒரு மாலையில் சந்திக்கலாம். இந்தக் கொரோனா முடிந்ததும் சிங்கப்பூர், மலேஷியா வருவேன். வரும்போது சந்திப்போம். சிங்கப்பூரில் எனக்கு நண்பர்கள் அதிகம். ஆனால் மலேஷிய நிலமும் மக்களும் வாழ்க்கையும் என்னை எப்போதுமே கவர்ந்து இழுக்கக் கூடியவை. போர்னியோவை இன்னும் நான் பார்த்ததில்லை. பினாங்கைப் பார்த்த போது என் சொந்த ஊரில் இருப்பது போல் இருந்தது. அந்த உணவும் கடற்கரையும் மக்களும். ஆனால் கோலாலம்பூரின் தமிழர்கள்தான் ரொம்பவும் பயமுறுத்தினார்கள். குறிப்பாக மதுபான விடுதிகளில். இப்போது மதுவை விட்டு விட்டதால் அங்கே செல்ல வேண்டிய துன்பம் இல்லை.
சாரு