5. ஒரு சீரியஸ் இலக்கியக் கதை போல் தோற்றமளிக்கும் செக்ஸ் கதை (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

அந்தத் தீவின் பெயர் யாவ் நாய் (Yao Noi).  பாங்காக்கிலிருந்து தெற்கே 660 கி.மீ. தூரம் சென்றால் அந்தமான் கடலில் உள்ள ஒரு குட்டியூண்டு தீவு.  இதற்கு மேல் தீவு பற்றிய விவரம் வேண்டாம். கொடுத்தால் இது பயணக் கட்டுரை ஆகி விடும்.  ஆனால் இதுவோ குட்டிக் கதை. (இரட்டை அர்த்தத்திலும் படித்துக் கொள்ளலாம்.)  ஒரு இலக்கியக் கருத்தரங்குக்காக சிங்கப்பூர் செல்ல இருந்தது எனக்கு.  அப்படியே ஒரு எட்டு வேறு ஏதாவது ஊருக்கும் போய் வரலாம், நீயும் சேர்ந்து கொள்ளேன் என்றேன் கொக்கரக்கோவிடம்.  வியட்நாம் கியட்நாம் போகலாமே என்பது என் எண்ணம்.  ஆனால் கொக்கரக்கோ யாவ் நாய் போகலாம் என்றான்.  தாய்லாந்தில் மற்ற எல்லா பிரபல இடங்களையும் பார்த்தாயிற்று.  கொக்கரக்கோவுக்கு நானும் கொக்கரக்கோவும் மட்டும் என்றால் அலுப்படிக்கும்.  ஒரு சின்ன ஜமாவாவது வேண்டும் அவனுக்கு.  என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் மூணு பேரை சேர்த்துக் கொண்டோம்.  விநாயகம், செந்தில், தேவா. கொக்கரக்கோவும் சேர்த்து நாலு பேரும் யாவ் நாய் போய் எனக்காகக் காத்திருப்பது.  நான் மட்டும் சிங்கப்பூரிலிருந்து யாவ் நாய் போய் விடுவது.  சும்மா இப்படி நாலு வரியில் எழுதி விடலாம்.   போய்ப் பார்த்தால் தெரியும்.  அடிமைப் பெண் படத்தில் எம்ஜியார் குகையிலிருந்து வெளியுலகத்துக்கு வரும்போது அவரிடம் நீங்கள் சிங்கப்பூரிலிருந்து யாவ் நாய் வந்து விடுங்கள் என்று சொன்னால் அவர் என்ன செய்திருப்பார்?  அப்படித்தான் இருந்தது எனக்கு.  சிங்கப்பூரிலிருந்து பாங்காக் போய் அங்கிருந்து விமானம் பிடித்து ஏதோ ஒரு ஊருக்குப் போய் இறங்கி, அங்கிருந்து பஸ்ஸில் ஏதோ ஒரு ஊருக்குப் போய் – அது கடற்கரை – அங்கிருந்து ஃபெர்ரி பிடித்து யாவ் நாய் தீவுக்குப் போய் அங்கிருந்து வேனில் இந்தப் பையன்கள் தங்கியிருக்கும் விடுதியை அடைய வேண்டும்.  அதை விவரித்து எழுதினால் இது பயணக் கட்டுரை.  வேண்டாம். 

எப்படியோ ஒரு உலக அதிசயத்தைப் போல் நான் விடுதியைக் கண்டு பிடித்து அறையை அடைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இரவு மணி ஒன்பது.  ஒன்பதாம் நம்பர் அறை என்றாள் ரிஸப்ஷனிஸ்ட்.  இதிலெல்லாம் ஒன்றும் குறியீடு இல்லை.  அவள் சொன்னதே ஒன்பதாம் நம்பர் அறைதான்.  முதலில் நான் அவளை டான்ஸர் என்றே நினைத்து விட்டேன்.  தக்கினியூண்டு ஜட்டி.  மேலே ஒரு ரிப்பனால் சுற்றிக் கட்டியிருந்தாள்.  அதுதான் ஆடை.  அறையின் சாவியைக் கேட்டேன்.  உள்ளே உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாள்.  அறைக்குப் போய்த் தட்டினேன்.  உள்ளே மூன்று ஓங்குதாங்கான பெண்கள் ரிஸப்ஷனிஸ்ட் அணிந்திருந்த ஆடையையே தோற்கடிக்கும் விதத்தில் துணி என்று சத்தியம் செய்தாலும் நம்ப முடியாத ஒரு வஸ்திரத்தைச் சுற்றிக் கொண்டும் சுற்றாமலும் நின்று கொண்டிருந்தார்கள்.  வேறு ஏதோ அறைக்குள் வந்து விட்டோம் போலிருக்கிறதே, என்ன பிரச்சினை ஆகப் போகிறதோ என பயந்து விட்டேன்.  ஆனால் அவர்களில் ஒருத்தி “நீங்கள்தானே சாரு?  உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்” என்றாள்.  ‘இது என்னடா ஏடாகூடம்’ என்று பயம் அதிகரித்தது. உடனடியாக நண்பர்களுக்கு போன் பண்ணி இந்த அழகிகள் எல்லாம் யார்  என்று கேட்டேன்.  மூவரும் ருஷ்யப் பெண்கள்.  பாலியல் தொழிலாளிகள் அல்ல. (அது சரி, யார்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்கள்?) விநாயகத்தின் நெருங்கிய தோழிகள்.  விநாயகம் மலேஷியாவில் பணி புரிகிறார்.  அடிக்கடி தாய்லாந்து வருவார்.  குறிப்பாக யாவ் நாய்.   அப்போது பழக்கமானவர்கள்.  நல்ல பெண்கள்.  குறிப்பாக நடன பார்களில் டான்ஸ் ஆட நமக்குக் கம்பெனி கொடுப்பார்கள்.  நால்வரும் ஏதோ ஒரு பப்பில் இருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவதாகவும் அந்த அழகிகளோடு ஜாலியாக இருக்குமாறும் சொன்னார்கள்.  அது என்ன ஜாலி என்று எனக்குப் புரியவில்லை.  சத்தியமாகப் புரியவில்லை.

தாய்லாந்தில் பல இடங்களில் லைவ் ஷோ என்ற ஒன்று நடக்கும்.  ஒரு கிழவியைப் போட்டு ஒரு ஆள் சர்க்கஸ்காரன் மாதிரி பலவித நிலைகளில் செக்ஸ் பண்ணுவான்.  பார்க்கவே கண்றாவியாக இருக்கும்.  அந்த ஆள் மாதிரி உணர்ந்தேன் நான்.  ஆண் பெண் சரீர சேர்க்கை என்பது வெறுமனே தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பது மாதிரிதானா?  தாய்லாந்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

மூவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தது.  அவர்கள் என்னைத் துகிலுரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.  நான் முந்தின பத்தியின் இறுதியில் சொன்னதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவர்களிடம் சொன்னேன்.  ஆமாம்தான், இல்லையும்தான் என்றார்கள் மூவரும்.  அந்த சீரியஸான உரையாடல் எல்லாம் இங்கே நமக்குத் தேவையில்லை.  பிறகு அவர்களிடம் தஸ்தயேவ்ஸ்கி தெரியுமா எனக் கேட்டேன்.  மூவருக்குமே தெரிந்திருந்தது.  ஒருத்தி படித்தும் இருந்தாள்.  பிறகு டர்க்காவ்ஸ்கி தெரியுமா எனக் கேட்டேன்.  மூவருக்கும் தெரியவில்லை.  அவருடைய படங்கள் சிலதைப் பற்றி விளக்கினேன்.  குறிப்பாக சேக்ரிஃபைஸ் பற்றி.  பிறகு ட்சைக்காவ்ஸ்கி பற்றித் தெரியுமா எனக் கேட்டேன்.  ம்ஹும்.  மூவருக்கும் தெரியவில்லை.  சொன்னேன்.  இரண்டரை மணி நேரம் கழித்து நண்பர்கள் வந்து சேர்ந்தனர்.  வந்ததும் விநாயகத்திடம் ஒருத்தி “ஒன்றுமே நடக்கவில்லை” என்றாள்.  விநாயகத்தின் முகத்தில் ஒருக்கணம் அதிர்ச்சி.  ஆனால் அதை அவர் காண்பித்துக் கொள்ளாமல் சரி வாருங்கள், எல்லோரும் சாப்பிடப் போகலாம், சாருவுக்குப் பசிக்கும் என்றார். 

எல்லோரும் கிளம்பினோம். 

’இதெல்லாம் ஒரு கதையா?  கதையில் மூன்று குட்டிகள் வந்தால் குட்டிக் கதை என்று சொல்லி விடுவதா?’ என்று கேட்பீர்கள்.  அவசரப்படாதீர்கள். 

”என்னய்யா இது அநியாயம், இரண்டரை மணி நேரம் வேஸ்ட்” என்றேன் நண்பர்களிடம்.  ”நீங்கள் பல கதைகளிலும் கட்டுரைகளிலும் கலவி என்றால் இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா?  அதனால்தான் மேலே ஒரு வெப்கேம் வைத்து அந்த இரண்டு மணி நேர ஆட்டத்தை ஷூட் பண்ணி விடலாம் என்று நினைத்தோம்.  ஆனால் ஒன்றுமே நடக்கவில்லையாமே?  எல்லாம் வேஸ்ட்” என்றார் விநாயகம். 

“அடப் பாவிகளா, இது குருத் துரோகம் இல்லையா?  நீங்களே இப்படிப் பண்ணலாமா?  நான் மட்டும் ஏதாவது பண்ணியிருந்தால் என் நிலைமை என்ன ஆவது?” என்றேன் உச்சக்கட்ட பதற்றத்திலும் ஆவேசத்திலும்.

“பதட்டம் வேண்டாம் சாரு.  எல்லாம் உங்களுடைய காலம் முடிந்த பிறகுதான் வெளியே வரும்.  ஒரு மானுடன் இரண்டு மணி நேரம் கலவி கொண்டான் என்பது எப்பேர்ப்பட்ட அதிசயம்!  அதைப் பதிவு செய்வது எவ்வளவு பெரிய வரலாற்று ஆவணமாக இருக்கும்!”

“யோவ் லூசு… ரெண்டு மணி நேரம் என்பது ‘முன் விளையாட்டை’யும் சேர்த்து ஐயா.  ரெண்டு மணி நேரமும் பிஸ்டன் மாதிரியா இயங்கிக் கொண்டிருப்பான் ஒரு மனிதன்?  அது சரி, இதெல்லாம் unethical காரியம் இல்லையா?  கொக்கரக்கோ, நீயும் இதற்கு உடந்தையா?”

“அதை அப்படிப் பார்க்கக் கூடாது சாரு.  உன்னைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் பதிவு செய்கிறோம் என்கிறபோது இதையும் பதிவு செய்து விடலாமே என்றுதான்.  மேலும், நான் இருக்கும் இடத்தில் உனக்கு ஏதாவது ஆபத்து வர விடுவேனா?  எல்லாமே உன் காலத்துக்குப் பிறகுதான்.  நீயே போன பிறகு இப்படி ஒரு சி.டி. வருவது பற்றி உனக்கு என்ன கவலை, சொல்?  மேலும், அதுதான் எதுவும் நடக்கவில்லையே, அப்புறம் என்ன?” என்றான் கொக்கரக்கோ.

“அடப் பாவிங்களா, அங்கே விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துல ஜெயமோகனுக்கு புக்கர் வாங்கிக் குடுக்கலாமா, நோபல் வாங்கிக் குடுக்கலாமான்னு ஒவ்வொர்த்தனும் முயற்சி பண்ணிட்டிருக்கான். நீங்க என்னடான்னா இப்டி பண்றீங்க. நானே ஒரு ட்ரான்ஸ்க்ரஸிவ்னா நீங்க எனக்கு மேல இருக்குறீங்களே, இது ந்யாயமா?”

எப்படியோ தஸ்தயேவ்ஸ்கி, டர்க்காவ்ஸ்கி, ட்சைக்காவ்ஸ்கி ஆகிய மூன்று இஸ்கிகளும் என்னை அன்று காப்பாற்றி விட்டார்கள்.  அவர்களுக்கு என் வந்தனம்.