6. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

அத்தியாயம்: ஒன்று.

இடம்: பூலோகம்

கொரோனா வந்ததிலிருந்து எனக்குக் காப்பித் தூள் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தது புவனேஸ்வரி.  சென்ற மாதம் ஆன்லைன் ஷாப்பிங்கில் காப்பித் தூள் நின்று விட்டது.   எனக்கோ வெளியே போக அனுமதி கிடையாது.  மேனேஜர்தான் எத்தனை வேலையைச் செய்வார்?  அவரையும் அனுப்ப இயலாது.  என்னோலோ வைன் குடிக்காமல் வாணாள் முழுவதும் கூட இருக்க முடியும்.  காப்பி இல்லாமல் முடியாது.   ராமிடம் சொன்னேன்.  போன மாதம் விமல் காப்பி 80 – 20 வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.  ஒரு கிலோ.  80 காப்பி, 20 சிக்கரி.  எனக்கு சிக்கரி கலக்காத காப்பி எடுக்காது.  இந்த மாதம் அன்னார் வெளியூர் சென்று வந்ததால் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.  காப்பி நாளை காலை வரைதான் வரும்.  சரி, மேனேஜரிடமே சொல்லலாம்.  சொன்னால் திங்கள்கிழமைதான் கிடைக்கும்.  அவர் நாளை சர்ச்சுக்குப் போக வேண்டும்.  அப்படியாகப்பட்ட இக்கட்ட்டில் ரமேஷிடமிருந்து பின்வருமாறு ஒரு வாட்ஸப் செய்தி:

ஹாய் சாரு,

அமேசானில் ஒரு காப்பித் தூள் வரவழைத்து காப்பி குடித்துக் கொண்டிருந்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது.  

உங்கள் எழுத்தில் பலமுறை நல்ல காப்பி கிடைப்பது பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.  உங்கள் வீட்டிற்கும் ஆர்டர் செய்துள்ளேன்.  நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று எண்ணி உங்களிடம் அனுமதி கேட்காமல் ஆர்டர் செய்து விட்டேன். தயவு செய்து பெற்றுக் கொள்ளவும். நாளை உங்களுக்குக் கிடைக்கும்.

நன்றி.

ரமேஷ்.

***

To

Lord Vishnu

ஏய்யா விஷ்ணு,

இந்த மாதிரி காப்பித் தூள், அன்றாட செலவுக்கான கைக்காசு மாதிரியான விஷயங்களையெல்லாம் உடனுக்குடன் முடித்துக் கொடுத்து விடுகிறீரே, உம் காதுக்கு நான் புக்கர் நோபல் புக்கர் நோபல் என்று கதறுவது கேட்கலியா?  என்னதான்யா நினைச்சுக்கிட்டிருக்கீர் உம் மனசிலே?

இப்படிக்கு,

உம்மைத் தவிர வேறேதும் தெரியாத அடியேன்

சாரு

***

அத்தியாயம்: இரண்டு

இடம்: சொர்க்கம்

விஷ்ணு: (சிவனிடம்) யோவ் ஷிவ், இந்தக் கதையைக் கேட்டீரா, மைலாப்பூர்ல இருக்கான்ல ஒரு தமிழ் ட்ரான்ஸ்க்ரஸிவ் ரைட்டர் சாருனிட்டு.  அந்தப் பயலோட லொள்ளு தாங்க முடியலைங்காணும். 

ஷிவ்: ஏன், என்ன பண்றான்.  உம்மைத்தானே தினமும் நாமாவளி பண்ணி சேவிக்கிறான்?  என்ன பிரச்சினை?

விஷ்ணு:  ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறீரா, குட்டிக் கதைதான்.  ஒரு பொண்ணு கடல்கரையிலே அலை பக்கத்திலே உக்காந்திருந்தா.  அவளோட குழந்தையை திடீர்னு அலை அடிச்சிட்டு போய்டுச்சு.  கடவுளே கடவுளேன்னு கத்துறா, கதர்றா.  யாரும் போகலை.  சரி, போகட்டும்னு நானே போயி அந்தக் கொழந்தையைக் காப்பாத்தி அவொ கையில குடுத்தேன்.  உடனே என்ன சொல்றா தெரியுமா?  ஐயோ, கொழந்தையோட சப்பல் போய்டுச்சே, காஸ்ட்லி சப்பலாச்சேன்னு கத்துறா.  ப்ளடி ஸ்கௌண்டரல். 

ஷிவா: அதில் ஆச்சரியம் என்ன இருக்கு?  இந்த மானிடக் கும்பலே அப்படித்தானே?  சரி, அதுக்கும் இந்த சாரு பயலுக்கும் என்ன சம்பந்தம்?  புரியலியே?

விஷ்ணு:  பின்னே என்ன ஓய்?  அந்தக் கதை மாதிரியேதான் பண்றான் இந்தப் பயலும்.  லைஃப்ல பெரிய பெரிய விஷயங்களை அவனுக்கு நான் முடிச்சுக் குடுத்துக்கிட்டிருக்கேன்.  அவன் என்னடான்னா எப்போப் பார்த்தாலும் புக்கர் நோபல் புக்கர் நோபல்னு கத்திக்கிட்டு கெடக்கான்.  அந்த மைலாப்பூர் பக்கமே என்னாலப் போக முடியலை.  துரதிர்ஷ்டம் என்னன்னா அங்கேதான் எனக்கு ரெண்டு கோவில் இருக்கு.  என்ன பண்றதுன்னே புரியலை.  மைலாப்பூர் பூரா இவன் கூச்சல்தான்.  கேசவப் பெருமாள் கோவில் பக்கம் போனா அங்கே நின்னுக்கிட்டு புக்கர் நோபல் புக்கர் நோபல்னு சத்தம்.  சரின்னுட்டு மாதவப் பெருமாள் கோவில் பக்கம் போனா அங்கேயும் விட மாட்டேங்கிறான். நின்னுக்கிட்டு புக்கர் நோபல் புக்கர் நோபல். படுபாவி. அப்டி அதுல என்னதான் இருக்கோ தெரியலியே.  காப்பித் தூளை விட உசந்த விஷயமோ, உமக்கு ஏதாவது தெரியுமோ?

ஷிவ்:  எனக்கு என்னப்பா தெரியும்?  மைலாப்பூர்ல எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உம் பேர்ல இருக்கிற சுடுகாடுதான்.  அதுக்குக் கூட என் பேரை வைக்காம உன் பேரை வச்சிருக்கானுவொ… அந்த இடம் இல்லேன்னா கபாலி கோவில்.  வேறே நான் என்னத்தைக் கண்டேன்.  ஆனா இந்த நோபல் புக்கர் பத்தி காத்துவாக்கில கொஞ்சம் கேள்விப்பட்டேன். அது ஒண்ணுமில்லை… நம்ம கோவில்லேல்லாம் க்ரூப் செக்ஸ் நடக்கிறதா கதை எழுதினா குடுக்கிற அவார்டாம்.  உன் சிஷ்யப் பயலுக்கு அது வேணும்னா உம்ம கோவில்லயோ என் கோவில்லயோ அந்த மாதிரி க்ரூப் செக்ஸ் நடக்கிறதா ஒரு கதை எழுதச் சொல்லும்.  ஒடனே கிடைச்சிடும்.  அது சரி, அவன் டைம் எப்போ?  இப்போ வேற கொரோனாவை அனுப்பி என் வேலையை ஈஸி பண்ணியிருக்கேனே? 

விஷ்ணு:  அவன் ஒரு தில்லாலங்கடிப்பா.  அதுக்கெல்லாம் கவலையே பட மாட்டான்.  டைம் வந்தாலும் திரும்பவும் போய் தமிழ் ட்ரான்ஸ்க்ரஸிவ் ரைட்டராவே அவதாரம் பண்றதா யார்ட்டயோ வரம் வாங்கி வச்சிருக்கான்.  இன்னோர் விஷயம் சொல்றேன், கேளும்.  அங்கே பூலோகத்திலே Forest Essentialsனு ஒரு முக அலங்கார பிராண்ட் ஒண்ணு இருக்கு.  அதிலே உள்ள சௌந்தர்யா ரேடியன்ஸ் க்ரீமை யூஸ் பண்ணித்தான் இவ்ளோ நாள் பளபளான்னு இருந்தான் நம்ம பய.  ஆனா லாஸ்ட் மார்ச்லேந்து அதை யூஸ் பண்றதை விட்டுட்டான்.  எனக்கு ஒண்ணுமே புரியலை.  பொதுவா எல்லாத்தையும் உளர்ற டைப்பான அவன் இது பத்தி யார்ட்டேயும் வாயே திறக்கலை.  சரின்னுட்டு அவனோட அந்தராத்மாவில் போய் உக்கார்ந்தேன்.  பய என்ன நினைக்கிறான் தெரியுமா?  கொரோனாவில் போய்ட்டா பாடியை யாரும் பார்க்க முடியாது இல்லியா?  அப்டியே ப்ளாஸ்டிக்கால மூடிப் புதைச்சிடறான்.  ஒரு ஈ காக்கை பார்க்க முடியாது.  அதுனால என் முகத்தை யாருமே பார்க்க முடியாமல் போய்டும்,  இப்போதைக்கு இந்த க்ரீம் எல்லாம் வேண்டாம்,  எதுக்குக் காசுக்குப் புடிச்ச கேடு,  அஞ்சாயர் ரூவா மிச்சம்னு யோசிக்கிறான் ராஸ்கல்.  என்னத்தைச் சொல்றது இவனை.