திருவாரூரில் ஒரு சின்ன வேலை

பொறாமை பற்றி சமீபத்தில் ஒரு கதை எழுதினேன் இல்லையா, ஜக்கியை வைத்து.  அது கதை என்பதால் ஒரு திசையில் போய் விட்டது.  எதார்த்தம் என்னவென்றால், எனக்கு ஜெயமோகனின் வாசகர்கள் மீதுதான் பொறாமை.  ஏன் என்று இதைப் படித்து முடித்தால் உங்களுக்குப் புரியும்.  ஒரு நண்பர்.  ரொம்ப இளைஞர்.  வாசகர் வட்டத்தின் உள் வளையத்தைச் சேர்ந்தவர்.  சொந்த ஊர் திருவாரூர்.  திருவாரூரில்தான் வசிக்கிறார்.  தினந்தோறும் எனக்கு ஏதாவது இசை பற்றிய லிங்குகளை வாட்ஸப்பில் அனுப்புவார்.  95 சதம் எனக்கு உதவாது.  அஞ்சு சதம் ரொம்ப அருமையாக இருக்கும். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவாரூரில் ஒரு தெரு பற்றிய ஒரு சின்ன விவரம் கேட்டிருந்தேன்.  எந்த பதிலும் இல்லை.  சென்னைக்கும் வந்தார்.  பார்த்தேன்.  அந்த விவரம் பற்றி ஒரு பேச்சும் இல்லை.  பிறகு நானே நினைவூட்டினேன்.  இதோ நாளை என்றார்.  நேற்று காலை வரை தகவல் இல்லை.  மற்றபடி பேச்சு வார்த்தையெல்லாம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. 

நேற்று காலை அவருக்கு போன் பண்ணி அந்தத் திருவாரூர் மேட்டரை ஞாபகப்படுத்தினேன்.  இன்று மதியத்துக்குள் தேவை என்றேன்.  அதாவது, இன்று 21-ஆம் தேதி மதியம்.  வரவில்லை.  வராதது பற்றி எனக்குக் கவலையே இல்லை.  ஆனால் எப்போது வரும் என்ற தகவல் வந்திருக்க வேண்டும்.  இன்னும் ஒரு மாதம் ஆகும் சாரு என்று கூட சொல்லலாம்.  அல்லது, என்னால் இயலாது சாரு என்றும் சொல்லலாம்.  ஆனால் இந்தியாவில் உள்ள அத்தனை இளைஞர்களும் அப்படியே விஷயத்தைக் கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.  இந்தியா குட்டிச் சுவராகப் போவதற்கு இளைஞர்களின் இந்த மனோபாவம்தான் காரணம்.   இந்த மனோபாவம் இல்லாதவர்கள் ஐஏஎஸ் ஆகிறார்கள்.  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்கிறார்கள்.  நமக்கு வந்து சேர்வதெல்லாம் கடைந்தெடுத்த தறுதலைகளாக இருக்கின்றன. 

ஏன் ஐயா, திருவாரூரில்தான் வசிக்கிறீர்கள்.  ரெண்டு தெரு தள்ளி ஒரு வீடு.  அந்த வீடு எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்பது எனக்குத் தெரிய வேண்டிய விவரம்.  இதைத் தெரிந்து கொள்ள பத்து நிமிடம் ஆகும்.  ஏன், அஞ்சு நிமிடம்தான் ஆகும்.  அதை விட்டு விட்டு, கண்டு கொள்ளாமலேயே விட்டு விட்டு மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் என்னிடம் நொட்டிக் கொண்டிருந்தால் என்னய்யா நட்பு அது? 

சரி, யாரேனும் நண்பர்கள் திருவாரூரில் வசிக்கிறீர்களா?  அல்லது, அக்கம்பக்கத்தில்.  எனக்கு சில விவரங்கள் தேவை.  அதைத் தெரிந்து கொள்ள அஞ்சு நிமிடம்தான் ஆகும்.  அதை எனக்குத் தெரிவிக்க வேண்டும்.  அவ்வளவுதான்.  அதைச் செய்ய முன்வரும் நண்பர்கள்/வாசகர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

charu.nivedita.india@gmail.com