8. டென் டௌனிங்கில் ஒரு சந்திப்பு (சிறுகதை)

இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் மூத்த எழுத்தாளர்கள் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.   உதாரணமாக, வண்ணநிலவன் ஆயிரம் ரூபாய் கொடுத்து என்னுடைய எக்ஸைல் நாவலை வாங்கினால் அதை எனக்குச் சேரும் பாவம் என்றே கருதுவேன்.  (அம்மாதிரி அதிபயங்கர விபத்தெல்லாம் நடந்து விடாது, சும்மா ஒரு கற்பனை!) வண்ணநிலவன் போன்ற ஒரு லெஜண்டரி எழுத்தாளர் என் புத்தகத்தை ஆயிரம் ரூபாய் கொடுத்து  வாங்குவதா?  அதே மாதிரிதான் அசோகமித்திரன் என்னுடைய புத்தகத்தைக் காசு போட்டு வாங்குவதும்.  நல்லவேளை, இந்த மூத்த எழுத்தாளர்களெல்லாம் என்னை வெறுப்பவர்கள் என்பதால் அப்படிப்பட்ட பாவம் எதுவும் எனக்குச் சேரவில்லை.  ஆனால் அவர்களின் அதிவிருப்பத்திற்குரிய ஜெயமோகனின் புத்தகங்களை அவர்கள் காசு போட்டு வாங்க நேர்ந்திராது.  ஜெ. இதிலெல்லாம் கவனமாக இருப்பார்.

பா. ராகவன் என்கிற பாரா என்னிடம் தன் புத்தகங்களை நேரிலேயே கொண்டு வந்து கொடுப்பதாகவும் அதற்காக என் வீடு தேடி வருவதாகவும் ஒருமுறை சொன்னார்.  குரோம்பேட்டையிலிருந்து வர வேண்டும்.  ஸ்கூட்டரில்தான் வருவார்.  என்னதான் பத்து கி.மீ. வேகத்தில் வந்தாலும் இந்தக் கோடைக்காலத்தில் ஸ்கூட்டரில் வரச் சொல்லி அவரை நான் வதை பண்ண மாட்டேன்.  அவரிடம் கார் உண்டு.  ஆனால் அதை அவர் பயன்படுத்துவதில்லை என்று கேள்விப்பட்டேன்.  அதனால் அவருக்காக நானே கார் ஏற்பாடு செய்து விடலாம்.  என்னுடைய பிள்ளைகளிடம் சொன்னால் பிரமாதமாகச் செய்து விடுவார்கள்.  பிரச்சினையே இல்லை.

ஆனால் என்னை வீட்டில் சந்திப்பதுதான் பிரச்சினை.  மக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலைப் படித்திருந்தால்தான் நான் இப்போது சொல்லப் போவது உங்களுக்குப் புரியும்.   அவ்வளவு சிரமம் வேண்டாம், வேறோர் எளிய உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.  வ.உ. சிதம்பரம் பிள்ளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டபோது செக்கிழுத்தார் இல்லையா? அப்படி லோல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருத்தரை நீங்கள் ஜெயிலில் போய்ப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?  உங்களை அவருக்குப் பிடித்திருந்தாலுமே கூட அந்தச் சூழலில் அவரால் உங்களை வரவேற்க முடியுமா?  ஆனானப்பட்ட இயேசு கிறிஸ்துவே சிலுவையில் அறையப்பட்டு ஆணிகளும் முள்கம்பிகளும் உடலின் தசைகளைக் குத்திக் கிழித்தபோது வாதை தாங்க முடியாமல் ஏன் என்னைக் கைவிட்டீர் பிதாவே என்று கதறவில்லையா?  யேசுவா கதறினார்?  அவருக்குத் தெரியும், அவர் தீர்க்கதரிசி என்று.  ஜெருசலேம் போனால் தன்னைச் சிலுவையில் அறைவார்கள் என்று தெரிந்தேதான் போனார்.  ஆனாலும் அவருடைய தேகம் கதறியது.  தேகத்திலிருந்து வடித்த குருதி கதறியது.  அப்படி ஒரு தீர்க்கதரிசியினாலேயே உடலின் வாதை தாங்க முடியவில்லை என்கிறபோது சாதாரண ஒரு மானிடனான நான் எம்மாத்திரம்?  அதிலும் உலக மகா சொகுசுப் பேர்வழியான நான் ’இம்மாதிரி’ விஷயங்களையெல்லாம் பேனைப் பெருமாளாக்கிய கதையாக அல்லவா பார்ப்பேன்?

எம்மாதிரியான விஷயங்கள் என்று குன்ஸாகச் சொல்லி விடுகிறேன்.  அவந்திகா நள்ளிரவு ஒரு மணிக்குப் படுத்து எட்டரைக்கு எழுவாள்.  எழுந்ததும் வீடு பெருக்கி துடைப்பாள்.  ஒன்பதரை மணிக்குக் கீழே பூனைகளுக்குச் சாப்பாடு கொடுக்கக் கிளம்புவாள்.  சாப்பாடு கொடுப்பது என்றால் அது மட்டும் அல்ல. பூனைகளின் மலஜல விஷயங்களையும் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.  பத்துப் பதினைந்து பூனைகள்.  அதில் மூன்று பூனைகள் ஆளுக்கு மூன்று என்று குட்டி போட்டிருக்கின்றன.  இதோடு பூனை முடிந்தது.  பயப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.  இது பா. ராகவன் பற்றிய கதை.  பதினோரு மணிக்கு மேலே வருவாள்.

என்னுடைய தினப்படி அட்டவணையை நான் பலமுறை எழுதி விட்டேன் என்றபடியால் இங்கே வேண்டாம்.  சிலதை மட்டும் ஞாபகப்படுத்தி விடுகிறேன்.  பூனைகளுக்கு சிக்கனை வேக வைத்து அவந்திகா கீழே எடுத்துப் போகத் தயாராக வைக்க வேண்டும்.  அவந்திகா கொலைப் பசியோடு பதினோரு மணிக்கு மேலே வருவதற்குள் அவளுக்கு இட்லி ஊற்றி வைக்க வேண்டும்.  பிறகு பதினொன்றரையிலிருந்து அவளது வீட்டுப் பணி ஆரம்பித்து விடும்.  தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றுவது, குளியறைகளைச் சுத்தப்படுத்துவது, பணிப்பெண் வரவில்லையானால் பாத்திரம் தேய்ப்பது இன்ன பிற.  பம்பரம் மாதிரி வேலை செய்து கொண்டே இருப்பாள்.  என்னையும் பம்பரம் மாதிரி எடுபிடி வேலைகளுக்கு அழைத்துக் கொண்டே இருப்பாள்.  பணிப்பெண் வந்தால் அவளுக்கு வேலை குறையாது, அதிகமாக ஆகி விடும் என்பதுதான் இந்த இருபத்தெட்டு ஆண்டு குடும்ப வாழ்வில் எனக்குப் புரியாத அதிசயம்.  எனக்கே புரியாத விஷயத்தை உங்களுக்குச் சொன்னால் எப்படிப் புரியும்?  ஒரு ஒளிப்பதிவு எடுத்துப் போட்டால்தான் நம்புவீர்கள்.  இதற்கிடையில் பன்னிரண்டு மணிக்குக் குசினிக்குச் செல்லும் நான் அரிசி களைந்து வைப்பேன்.  பருப்பும் வைப்பேன்.  காய்கறி நறுக்குவேன்.  பூண்டு வெங்காயம் உரித்து வைப்பேன்.  பன்னிரண்டிலிருந்து ஒன்றேகால் ஆகும்.  பசியில் மயக்கம் வரும் நிலைக்கு வந்து நிற்பேன்.  அவந்திகா வீட்டு வேலையெல்லாம் முடிந்து இரண்டு மணிக்கு சமைக்க வந்து மூன்றேகாலுக்கு முடிப்பாள்.  எனக்கு அதற்குள் பசி மயக்கம் முற்றி, பசியும் ஒருவகையாக மரத்துப் போய் மூன்றரை மணி அளவில் ஏதோ பேருக்குக் கொஞ்சம் உண்பேன்.  நேற்று பணிப்பெண் வராததால் (இன்றும் வரவில்லை) அவந்திகா சமைக்க வர இரண்டரை.  நான் சாப்பிடும்போது மூன்றரை.  இந்தக் கொரோனா காலத்தில் எல்லாப் பயலும் வெய்ட் போடுகிறான், எனக்குப் பத்து கிலோ குறைந்து விட்டது.  அறுபத்தெட்டிலிருந்து அம்பத்தெட்டு.  ஆனால் அவந்திகாவுக்கு இதில் செம குஷி.  ஏனென்றால், இதுவரையில் எனக்கு எடுத்த ரத்தப் பரிசோதனையில் முதல் முதலாக கொழுப்பு, ரத்த அழுத்தம், ஷுகர் எல்லாமே சரியான அளவில் வந்துள்ளன.   மூன்று வேளையும் அரிசி சாப்பிட்டும் ட்ரைக்ளிஸரைட் கட்டுக்குள் காண்பிக்கிறது.  அசந்து விட்டேன்.  ஆக, பட்டினி கிடந்தால் ஆரோக்கிய மயிராக இருக்கலாம் போல. 

ஸ்விக்கி என்ற செயல்முறை நடப்பில் வந்ததிலிருந்து இரண்டு தினங்களுக்கு ஒருமுறை ஸ்விக்கிதான் என்னைக் காப்பாற்றியது.  இந்தச் சூழ்நிலையில் சாவகாசமாக நான் பாராவை மாலை நான்கு மணிக்குள் சந்திப்பது சாத்தியமா?  போனில் பேசுவது கூட சாத்தியம் இல்லை.  அவந்திகா கொதிக்கும் குக்கரைக் கையில் வைத்துக் கொண்டு சமையல் மேடையில் ஒரு துணி போடு என்று கதறுவாள்.  கக்கூஸில் இருந்தாலும் நான் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவேன்.

நாலு மணியிலிருந்து ஐயாவுக்கு ஜாலி.  ஒரு அழைப்பு இருக்காது.  முழுச் சுதந்திரம்.  ஆனால் மாலையில் அவந்திகாவின் ஆன்மீக வகுப்பு நடக்கும்.  தினம் அல்ல.  ஒன்று விட்டு ஒருநாள்.  ஆன்லைன்தான்.  ஆனால் பேசினால் தொந்தரவாக இருக்கும்.  சரி, ஆன்மீக வகுப்பு இல்லாத நாளில் சந்திக்கலாமே என்றால், நானும் பாராவும் ஏதாவது பேசுவது மறுநாள் எனக்கும் அவந்திகாவுக்கும் கடுமையான வாதப் பிரதிவாதத்துக்கு ஏதுவாக அமையக் கூடும்.  அப்படி அமையாமல் நான் யாரையுமே வீட்டில் சந்தித்தது இல்லை.  இது எல்லாம் தெரிந்துதான் சுந்தரம் என் வீட்டுக்கு வந்தபோது (சுந்தரம் பெயர் சுந்தரம் இல்லை; பெயரை மாற்றியிருக்கிறேன்.  இப்போதெல்லாம் யார் பெயரைப் போடுவது என்றாலும் பயமாக இருக்கிறது.  என்னை hurt பண்ணி விட்டீர்கள், தயவுசெய்து அதை எடுத்து விடுங்கள் என்று போன் வந்து விடுகிறது.  ஒருவேளை அவர் மனசுக்குள் திட்டிக் கொண்டு கம்மென்று இருந்தாலும் அவர் நண்பர்கள் நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்) சுந்தரம் என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.  கம்மென்று வந்தார்.  கம்மென்று கணினியில் சிலபல வேலைகளைச் செய்தார்.  கம்மென்று போய் விட்டார்.  அவந்திகாவிடம் மட்டும் என்னம்மா, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்.  அவந்திகா ஒரு குழந்தை.  ”எப்படிப்பா சுந்தரம், எப்டி இருக்கே.  ஏன் நம்ம வீட்டுப் பக்கமே வர்றதில்லை?” என்று வெகுளியாகக் கேட்டாள்.  அவந்திகா போன்ற வெகுளியைப் பார்ப்பது இந்தக் காலத்தில் அரிதுதான்.

மறுநாள்.  எனக்கு வயிற்று வலி என்று தெரியாத்தனமாகச் சொல்லி விட்டேன்.  நெஞ்சு வலி தவிர வேறு எந்த வலி வந்தாலும் நான் வீட்டில் சொல்வதில்லை.  மேலே படியுங்கள்.  காரணம் தெரியும்.  “எனக்குத் தெரியும் சாரு.  வயிற்று வலி வரத்தான் செய்யும்.  எல்லாம் வாய்வு.  ஏன் தெரியுமா?  சொன்னால் கண்டபடி கத்துவே.  எல்லாம் இந்த சுந்தரத்தோடு வெளியே போய் வெளியே போய் சாப்பிடுவதால்தான்.   அவர் எப்டி இருக்கார் பார்த்தியா?  இருபத்தஞ்சு வயசுல இப்டி வச்சிருக்கலாமா உடம்பை?  ம்?  நான் ஒன்றும் பாடி ஷேமிங் பண்ணலை.  அவருக்கு உடம்பு வாகு கூட அப்டி இருக்கலாம்.  உனக்கு ஒத்துக்காதே?  இப்போ பார், நீ படுற அவஸ்தையை?  உனக்கு வயித்து வலின்னா என்னால சும்மா இருக்க முடியுதா?  எனக்குத்தானே மனசுக்குக் கஷ்டமா இருக்கு?  ஏன் போய் அவரோட அப்படிச் சாப்பிடணும்?  யார் கூட சேர்றமோ அவர் மாதிரிதான் இருப்போம்.  இப்டித்தான் அந்த சீனி கூட சேர்ந்துக்கிட்டு (அப்பாடா, சீனியின் பெயரை மட்டும்தான் தைரியமாகப் போட முடிகிறது!) குடி குடின்னு குடிச்சே.  அவருக்கு ஒண்ணும் பண்ணல.  ஏன்னா அய்யங்கார்ப் பசங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.  (அவள் சொன்னது ஜாதி குறித்த வார்த்தை.  இங்கே அதைத் தணிக்கை செய்து மாற்றி விட்டேன்!) அவனுங்களுக்கு எதை எப்போ நிறுத்தணும்னு தெரியும்.  அவர் ரெண்டு பெக்குனா நீ எட்டு பெக் போடுவே.  எனக்குத் தெரியாதா என்ன?”

ஒரு வயிற்று வலிக்கு இத்தனை பெரிய லெக்சர்.   இதற்கு மேல் சுந்தரத்தை என் வீட்டுக்குள் விடுவேனா?  கதைப் போக்கில் ஒன்றைச் சொல்ல விட்டு விட்டேன்.  ”சுந்தரத்தின் அப்பாவும் ரொம்ப குண்டுதாம்மா” என்று குறுக்கிட்டதற்குத்தான் ”நான்தான் சொன்னேனே சாரு, அது அவரோட உடல் வாகா இருக்கலாம்னு.  ஆனால் உங்க அப்பா ஒல்லியாச்சே” என்றாள். 

அதனால் எக்காரணத்தைக் கொண்டும் ராகவனை என் இல்லத்தில் சந்திக்கக் கூடாது என்று இன்று காலை முடிவெடுத்து எங்கே சந்திப்பது என்ற திட்டத்தையும் வகுத்து விட்டேன்.  இந்தக் கதையே அது பற்றியதுதான்.  ஆக, இப்போதுதான் கதையே ஆரம்பம்.  மட்டுமல்லாமல் ராகவன் சற்றே குண்டு.  ஆனாலும் அவர் குரோம்பேட்டையில் இருப்பதால் அடிக்கடி அவரும் நானும் சந்தித்து தினமும் மாலை நேரத்தில் வடை பஜ்ஜி போண்டா என்று உள்ளே தள்ள வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.  அப்படி ஆகியிருந்தால் நான் பாராவை எப்போதுமே வீட்டுக்கு வெளியேதான் சந்திக்க நேரும் என்பது மட்டும் அல்லாமல் பாராவுக்கு போன் கூட மிக மிக ரகசியமாகத்தான் பண்ண வேண்டியிருந்திருக்கும்.  இத்தனைக்கும் நான் பாராவின் மீது பயங்கரமாகப் பொறாமைப் படுபவன்.  ஒருத்தன் எப்படி ஐயா வெஜ் பேலியோவாக வாழ முடியும்?  அதுவும் உணவின் ரசிகனான இருந்து கொண்டு?  உணவின் மீதான விருப்பத்தை விட ஆரோக்கியத்தின் மீதான அவர் விருப்பம் மீதுதான் எனக்குப் பொறாமை.  இன்று காலையில் எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது.  எதுடா மனுஷனுக்கு சந்தோஷம்?  ஒரே வார்த்தைதான் பதில்.  ஆரோக்கியம்.  அவ்வளவுதான்.

சரி, வேலையைப் பார்ப்போம்.  பாராவை நான் டென் டௌனிங்கில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  அதிர்ச்சி அடையாதீர்கள்.  சென்னையிலேயே எனக்கு ரொம்ப இஷ்டமான இடம் அதுதான்.  அது ஒரு பப் என்றுதான் எல்லோருக்கும் தெரியுமே தவிர அது ஒரு அருமையான உணவகம் என்று பலருக்கும் தெரியாது.  பகலில் போனால் குடிக்காமலேயே பிரமாதமாகச் சாப்பிடலாம்.  பல சேட்டுப் பெண்டிர் அங்கே அப்படி சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.  பாரா ஒரு டீட்டோட்டலர்.  நான் குடியை நிறுத்தி விட்டவன்.  ஆக, ரெண்டு பேரும் போய் விரும்பியதைச் சாப்பிடலாம்.  ஆனால் மாலையில் போக முடியாது.  போவதானால் இரண்டு பெண்களும் எங்களுடன் வர வேண்டும்.  ஆண்களுக்கு மட்டும் என்றால் அனுமதி இல்லை.  Stags not allowed என்று சொல்லி அவ்மானப்படுத்தி அனுப்பி விடுவார்கள்.  மேலும், பாராவுக்கு நிரந்தரமாகவும் எனக்கு சமீப காலமாகவும் இந்த விஷயத்தில் ரொம்ப நல்ல பேர் இருப்பதால் வாடகைப் பெண்களையும் அழைத்துச் செல்ல முடியாது.  ஆனால் என் நண்பர் மணி போன் செய்து சொன்னால் விட்டு விடுவார்கள்.  மணியும் டென் டௌனிங் ஓனரும் வாடா போடா நண்பர்கள்.  ஆனால் அப்படிப் போவதில் ஒரு சிக்கல் உண்டு.  எல்லோரும் ஜோடி ஜோடியாக இருக்கும் போது, அல்லது, 80 சதிவிகிதம் பெண்களாகவே இருக்கும்போது நாங்கள் மட்டும் ரெண்டு ஆண் முண்டங்கள் உட்கார்ந்திருந்தால் பார்க்க நன்றாக இருக்குமா?  எனவே பாராவை பகலிலேயே வரச் சொல்ல வேண்டும். 

ஆஹா, எனக்கு இப்போது ஒரு சந்தேகம்.  நெற்றியில் ஸ்ரீசூர்ணமோ விபூதியோ இட்டிருந்தால் டென் டௌனிங் உள்ளே விடுவார்களா?  ஹரன் பிரசன்னாவிடம்தான் போன் போட்டுக் கேட்க வேண்டும், பாரா நெற்றியில் ஏதாவது இட்டிருப்பாரா என்று.    

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai