தாலியறுத்தான் கதை

(எச்சரிக்கை: இந்தக் கதையின் மாடல் ஏற்கனவே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலிலும் எக்ஸைல் நாவலிலும் வந்துள்ளது.  கதாபாத்திரத்தின் பெயர் தனபால். தனபால் மிக இளம் வயதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவன்.  பாப்பாத்தியம்மாள் சாராய பாட்டில்களைக் கடத்தும் போது இவனும் கூடப் போனதால் இவன் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.  அவன் சொன்ன கதைகளே இதில் வந்துள்ளன.  அவன் சொன்ன கதைகளை நான் அந்த நாவல்களில் சேர்க்கவில்லை.  எல்லாம் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  அந்த தனபால் என் பெரியம்மாவின் மகன்.  என் அண்ணன்.  எனவே இந்தக் கதையின் intellectual property என்னுடையது.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் வெளிவந்தே 40 ஆண்டுகள் ஆகி விட்டன…)

முகுந்தன்.  அச்சு அசலாக அந்தக் காலத்து அத்னான் சாமி முகம்.  பால் வடியும் பச்சிளங் குழந்தை முகம்.  ஆனால் முகுந்தன் என்றால் வாசகர் வட்ட நண்பர்கள் அலறி அடித்து ஓடுவார்கள்.  அதனால் இதன் தாத்பர்யம் என்ன என்று கண்டு பிடித்து விட வேண்டும் என்று எண்ணி, அதற்குத் தோதான ஆள் குப்புசாமிதான் என்று அவரைப் பிடித்தேன்.  குப்புசாமி ஒரு ரவுடி.  சில பேர் சண்டைக்கு என்றே அலைவார்கள் பார்த்திருக்கிறீர்களா, அந்த மாதிரி ஆள் குப்ஸ்.  என்னோடு வரும் போது மட்டும் வாலை சுருட்டி வைத்துக் கொள்வார்.  அதையும் மீறி சில சமயம் எகிறுவார்.  நான் ஒரு பார்வை பார்த்தால் போதும், பதுங்கி விடுவார்.  நான் கூட கேட்டேன், ஊரே பயப்படும் ரவுடியான நீங்கள் எப்படி எனக்கு முன்னால் பசு போல் நடந்து கொள்கிறீர்கள் என்று. 

நீங்கள் எனக்கு அப்பன் சாரு. 

அவ்ட்.  அதற்கு மேல் என்ன சொல்ல?  ஆனால் இந்தக் காதல் பேச்சில் எல்லாம் மயங்கி ஆளை அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  எல்லோரும் சேர்ந்து கம்பி எண்ண வேண்டியதுதான்.  அப்படித்தான் ஒருமுறை நானும் சீனியும் குப்ஸும் நல்லக்கண்ணுவும் உஸ்பெகிஸ்தான் போனோம்.  தாஷ்கண்ட்டில் இறங்கிய முதல் நாள்.  நால்வரும் போய் இரவு உணவை முடித்து விட்டு, அப்புறம் சாவகாசமாக வைனில் அமர்வோம் என்று ஏற்பாடு.  பக்கத்தில் இருந்த ஒரு பாகிஸ்தானி உணவகத்தில் வெட்டவெளியில் போட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம்.  மனித நடமாட்டமே இல்லை.  எறும்புக் கூட்டத்தைப் போல் மக்கள் மொய்த்துக் கொண்டிருந்த தேசத்திலிருந்து சென்ற எங்களுக்கு அங்கே இருந்த மயான வெளித் தோற்றம் ஆச்சரியமாக இருந்தது.   தெருவில் தென்படும் ஒன்றிரண்டு பெண்கள் கொள்ளை அழகாக இருந்தார்கள்.  ஆண்கள் அத்தனை பேருமே எதையோ பறிகொடுத்து விட்டதைப் போன்ற பரிதாபகரமான தோற்றம். 

அந்த வெட்டவெளி உணவகத்தில் நாங்கள் நால்வர் மட்டுமே இருந்தோம்.  இரவு மணி எட்டு இருக்கும்.  குப்ஸையும் நல்லக்கண்ணுவையும் விட்டு விட்டு நானும் சீனியும் மட்டும் சரக்கு வாங்க கடைக்குப் போனோம்.  எல்லோருக்கும் கடும் பசி.  இருவரும் உணவு ஆர்டர் கொடுத்து விட்டால் வந்து சாப்பிட்டு விடலாம்.  சரக்கு கடையும் உணவகத்தை ஒட்டியே இருந்தது.  சரக்கை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் குப்ஸ் மட்டும் இருந்தார்.  மூக்கில் லேசாக ரத்தம்.  என்னங்க ரத்தம், நல்லது எங்கே என்றார் சீனி ஆச்சரியத்துடன்.  ”சாருவுக்காகப் பார்த்தேன்.  இல்லேன்னா அந்த ஆளை இந்த தாஷ்கண்ட்டிலேயே வச்சு செஞ்சிருப்பேன்” என்றார் குப்ஸ்.  உணவுக்கு ஆர்டர் கொடுக்கும்போது வாய்த் தகராறு.  அது முற்றி அடிதடி.  இத்தனைக்கும் குப்ஸ் தன் வாழ்வில் மதுவைத் தொட்டதே இல்லை.  ஆனால் இரண்டு பேருமே சண்டைக்கு அலைபவர்கள்.  வந்த இடத்திலா, அதுவும் நான் இருக்கும்போதா பிரச்சினை வந்து விடும் என்று நினைத்தது தப்பாகப் போயிற்று.  ஆனால் வள்ளலாரின் அவதாரமான முகுந்தனைக் கண்டு ஏன் எல்லோரும் ஓடுகிறார்கள் என்பதுதான் இப்போதைய நம் பிரச்சினை.  குப்ஸைக் கேட்டேன்.  ”அட நீங்க வேற சாரு, அந்த ஆளு எப்பவோ என் கிட்ட அடி வாங்கியிருப்பாரு.  உங்க வலது கையா இருக்காரேன்னு விட்டு வச்சிருக்கேன்.”

“சரி, அப்படி என்னதான் பண்ணுவார்?  ஒண்ணு ரெண்டு சொல்லுங்களேன்.”

“ஒண்ணு சொல்றேன் கேளுங்க.  காமராஜர் அரங்கத்தில் உங்கள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது இல்லியா? அப்போ மேடையில் நீங்க.  கீழே நாங்க.  இந்த ஆள் உட்கார்ந்திருக்கார்னுதான் ரெண்டு வரிசை தள்ளிப் போய் உட்கார்ந்தேன். என்னை அப்டியே விட்ருக்கணுமா இல்லியா?  அங்கேர்ந்து கஷ்டப்பட்டு திரும்பி ‘ஹேய் குப்ஸ், ஒரு நிமிஷம்’ என்றார்.  உங்கள்ட்ட எப்டி சொல்றதுன்னு தெரியல.  நடிச்சுத்தான் காமிக்க முடியும்.  ஹேய் குப்ஸ், ஒரு நிமிஷம்ங்கிறதுல பிரச்சினை இல்ல.  இடது கையைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டு, அதாவது, ரேகை இருக்கும் பக்கம் கண்ணாடி மாதிரி அவர் முகம் நோக்கி இருக்கிறது, ஆள்காட்டி விரலை என்னை நோக்கி சுட்டி – கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் தவிர மற்ற மூன்று விரல்களும் மடங்கி இருக்கின்றன – அந்த ஆள்காட்டி விரலைத் தன் பக்கம் மடக்குகிறார்.  அந்த சைகைக்கு என்ன அர்த்தம்? என்னை அவர் அருகே அழைக்கிறாராம்.  ஏய்யா சுன்னி… ஸாரி சாரு, தெரியாமல் கெட்ட வார்த்தை வந்துடுச்சு.  மன்னிச்சிடுங்க.  ’குப்ஸ், ஒரு நிமிஷம் இங்கே வாங்க’ன்னா வந்துட்டுப் போறேன்.  உங்க வலது கை கூப்பிட்டா வர மாட்டேனா.  அந்த பாடி லாங்வேஜ்தான் அவர்ட்ட பிரச்சினை சாரு.  அன்னிக்கே அவரை நான் அடிச்சிருப்பேன். சரி, நல்ல நாளும் அதுவுமா சம்பவம் வேணாம்னு கம்னு இருந்திட்டேன்…”

குப்ஸ் முகுந்தன் பண்ணிய மாதிரி விரல்களை மடித்தே காண்பித்தார்.  கண்ணாடியில் முகம் பார்ப்போம் அல்லவா, அதேபோல் கையை வைத்துக் கொண்டு சுட்டு விரலை மடக்கி அழைப்பது.  செய்து பார்த்தேன்.  கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது.

“சரி, அப்றம்.  அப்டி எதுக்கு உங்களைக் கூப்பிட்டார்?”

”மேடையில ஒங்க பக்கத்துல தண்ணி இல்லியாம்.  என்னை ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு போய் வைக்கச் சொன்னார்.  ’கூடவே முடிஞ்சா அரை லிட்டர் பாட்டிலா வாங்குங்க.  ஒரு லிட்டர் பாட்டில்னா அவர் குடிக்கும்போது சட்டைல சிந்திடுவார்.’  எப்டி? ’அடங்கொக்கா மக்கா, அதை நீயே செய்ய வேண்டியதுதானேடா’ன்னு உள்ளுக்குள்ள பொறுமிக்கிட்டே கிளம்பினேன்.  கதை அதோட முடில.  போய்க் கிட்டிருந்த என்னை மறுபடியும் ‘ஹேய் குப்ஸ்’ என்று அழைத்து அதே மாதிரி இடது கையைத் தன் பக்கம் திருப்பி, ரேகை பக்கத்தைக் கண்ணாடி பார்ப்பது போல் வைத்துக் கொண்டு ஆள் காட்டி விரலைத் தன் பக்கம் நோக்கி மடக்கினார்.  வழக்கம் போல் கட்டை விரல், ஆள்காட்டி விரல் தவிர மற்ற மூன்று விரல்களும் மடங்கி இருக்கு.  எனக்குக் கொலை வெறி ஆய்டுச்சு.  சரி, பரமசிவன் கழுத்துல கெடக்கிற பாம்பு.  நாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கிட்டக்க போனேன்.  ’கூலிங்கா இருந்தா நல்லது’ங்குது பாம்பு. அப்போ மட்டும் கடுப்பா ‘அது எனக்குத் தெரியும், சாரு கூலிங்காதான் சாப்பிடுவார்’னு சொல்லிட்டுக் கிளம்பினேன்.”

ஓ, அந்தக் குழந்தை முகத்துக்கு இப்படியெல்லாம் முகங்கள் உண்டா என்று நினைத்துக் கொண்டு அவந்திகாவிடம் சென்று “ஏம்மா நம்ம முகுந்தனைக் கண்டா கொஞ்சம் பயப்படுறே, யாருக்குமே பயப்பட மாட்டியே?” என்றேன்.  அவள் ரொம்ப சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.  “எனக்கு ஆயுர்வேத டாக்டர்கள் என்றாலே அலர்ஜிப்பா.  அவர்கள் யாரையுமே பிடிக்காது.  ஆனாலும் முகுந்தன் நம்ம பையன்கிறதால அவர் மேல பாசம்” என்றாள். 

“என்னம்மா இது, இத்தனை நாள் அலோபதி மருத்துவம்தான் பிடிக்காதுன்னு சொல்லிட்டிருந்தே, இப்போ ஆயுர்வேதமும் சேர்ந்தாச்சா?”

“நான் என்னப்பா பண்றது?  ஆயுர்வேதமும் எனக்கு ஒத்துக்க மாட்டேங்குதே?”

நேற்றைய கதையில் ஏகப்பட்ட விஷயங்களை விட்டு விட்டேன்.  முக்கியமாக, பரமசிவம்.  சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வந்தாரே, அவர்.  அவரையெல்லாம் நாவலில் விட வேண்டும் என்று வைத்திருந்தேன்.  ஆனால் இதுவுமே ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் தொடராகத்தான் போவதால் இதிலேயே விட வேண்டியதுதான்.  மேலும், சந்தர்ப்பம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?  இதுதான் பரமசிவம் பற்றி எழுத செமத்தியான சந்தர்ப்பம்.   இதை விடத் தகுந்த சந்தர்ப்பம் வருமா, தெரியாது.  பரமசிவத்தின் முழுப் பெயர் மஹா பரமசிவம்.  பலரும் மஹா என்றே அழைப்பதுண்டு.  நான் மட்டும் பரமசிவம்தான்.  ஏனென்றால், நாரணன் தன் அன்னை நரகம் புகாள் என்று என் பாட்டனார் பெரியாழ்வார் பாடியிருக்கிறார்.  புரிகிறதுதானே?  அர்த்தம் சொல்ல வேண்டுமா?  இப்போதெல்லாம் என்ன பெயர் வைக்கிறார்கள்?  வெய்யில் என்று ஒரு பெயர்.  புரட்சி என்று ஒரு பெயர்.  நாராயணன் என்று திவ்யமாகப் பெயர் வைத்தால் அவன் அன்னைக்கு நரகம் இல்லை.  வாணாள் பூராவும் நாராயணனின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறாள் இல்லையா அந்த அன்னை? 

பரமசிவத்தின் பெயர் ஆதியில் பரமசிவம் என்றுதான் இருந்தது.  ரஜினியின் பாபா வந்த பிறகு பரமசிவம் கெஸட்டிலேயே மஹா பரமசிவம் என்று மாற்றிக் கொண்டான்.  அதிலும் மகா என்று போட்டால் மகா கோபக்காரனாகி விடுவான்.  மஹா என்று போட வேண்டும்.  மஹா அவ்தார் பாபாவின் பக்தன் என்று நினைத்து விடாதீர்கள்.  ரஜினி பக்தன்.  அவனுடைய வாழ்க்கையையே திருப்பிப் போட்டவர் ரஜினி.  பாட்ஷா வந்தது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தஞ்சா?  அப்போது பரமசிவம் வயது பத்து.  அவன் ஒரு பெண்மணியின் தாலியை அறுக்க வேண்டி வந்ததும் அப்போதுதான்.  எமனுடைய வேலையை பரமசிவம் ஏன் எடுத்தான் என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.  எல்லோரும் ஜெயமோகன் கதைகளைப் படித்து ரொம்பவே கெட்டுப் போய் விட்டீர்கள்.  இந்தப் பரமசிவம் பயல் தாலி அறுத்தது நேரடியாக தங்கத்தினால் ஆன தாலிக் கொடியை.  எமன் மாதிரி குறியீடாக அல்ல.  அது தேறும் ரெண்டு மூணு பவுன்.  ஒரு பத்து வயசுப் பயலுக்கு ஒரு பெண்மணியின் தாலிக் கொடியை அறுக்கும் அளவுக்கு என்ன தேவை வந்திருக்க முடியும்? 

எல்லாம் ஒரு பந்தயம் பண்ணின வேலை.  செந்தாமரையிடம் போய் நின்று அவள் முகத்துக்கு நேராக ஐ லவ் யூ சொல்ல வேண்டும்.  என்னால முடியுண்டா என்றான் பரமசிவம்.  செந்தாமரைதான் அந்தப் பள்ளிக்கூடத்திலேயே பேரழகி.  பரமசிவம் மற்றும் அவனுடைய வானரக் கூட்டமெல்லாம் அஞ்சாங்கிளாஸ்.  செந்தாமரை ஒன்பதாங் கிளாஸ். அதனால் என்ன, காதலில் அதையெல்லாம் பார்க்க முடியுமா?  பந்தயத்தில் ஜெயித்தால் – அதாவது, செந்தாமரையிடம் ஐ லவ் யூ சொல்லி விட்டால் ஆளுக்கு ஒரு தடவையாக பரமசிவத்தை பாட்ஷா படத்துக்கு நாலு முறை அழைத்துச் செல்ல வேண்டும்.  வானரக் கூட்டம் மொத்தம் அஞ்சு என்பதால் இந்தக் கணக்கு.  பரமசிவம் தோற்று விட்டால் அவன் அந்த நாலு பேரையும் பாட்ஷா படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  மேலோட்டமாகப் பார்த்தால் பந்தயத்தின் வீரியம் புரியாது.  முதல் நாள் முதல் ஷோவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பந்தயத்தின் முக்கியமான ஷரத்து.  வரலாறு காணாத வகையில் பரமசிவம் தோற்று விட்டான். 

யாருமே அதை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.  பரமசிவத்துக்கே ஆச்சரியம்தான்.  ஏனென்றால், அவன் கொஞ்சம் street smart ரகம்.  ஆனாலும் செந்தாமரையின் முன்னே போய் நின்று வாயைத் திறக்கப் போகும் நேரத்தில், அவள் ”டேய் எலிக்குஞ்சு, என்னடா என் முன்னாடி வந்து நின்னுக்கிட்டு முழிக்கிறே,போடா அந்தாண்ட, வுட்டேன்னா ரெண்டு… லூசுப் பய… பெரிய லவ்வர்னு நெனப்பு… முன்னாடி வந்து வெடச்சுக்கிட்டு நிய்க்கிறான்” என்று சொன்னதும் அவனுக்கு மூத்திரம் வருவது போல் ஆகி விட்டது.  இப்படி ஒரு அவமானத்தை அவன் வாழ்க்கையிலேயே அனுபவித்தது இல்லை.  இப்போது நாலு வானரங்களையும் பாட்ஷா முதல் நாள் முதல் ஷோ அழைத்துப் போக வேண்டும்.   எப்படியும் ஆயிரம் ரூபாய் வேண்டும்.  எங்கே போவது?  முடியாது போங்கடா என்று சொல்லி விடலாம்.  சொல்லி விட்டால் அதோடு அவனுடைய சமூக வாழ்க்கை முடிந்து விடும்.  பத்து வயதிலேயே அப்படி வாழ்க்கையைத் தொலைத்து விட்டால் மிச்ச காலம்?  பந்தயம் வைத்தபடி செய்யாவிட்டால் வெளியில் தலை காட்ட முடியாது.  விளையாட்டில் ஒரு பயல் சேர்த்துக் கொள்ள மாட்டான்.  எல்லாம் இந்த வாயால் வந்தது.  வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் இந்த வம்பில் மாட்டியிருக்க வேண்டாம்.  அப்போதுதான் சுப்புணி ஒரு ஐடியா சொன்னான்.  உன்னை அவமானப்படுத்திய செந்தாமரையின் அம்மா தகதகவென்று நகைகளை அப்பிக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கிறாள்.  அதில் ஒன்றை லவட்டி விடு.  அவமானப்படுத்தியவர்களைப் பழி தீர்த்தது மாதிரியும் ஆயிற்று.  பந்தயத்தில் தோல்வி அடைந்ததையும் ஈடுகட்டி விடலாம். 

நகையை லவட்டுவது அத்தனை சுலபமா?  ஆனால் அதற்கு சௌகரியமாக அவன் ஊரில் தெரு விளக்கே கிடையாது.  அதனால் இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்து சுப்புணி சொன்னபடி செந்தாமரையின் அம்மாவின் கழுத்தில் கை வைத்தான் பரமசிவம்.  இவன் இப்போது பார்ப்பதற்குத்தான் ஆள் ஓங்கு தாங்காக இருக்கிறானே ஒழிய அப்போது செந்தாமரை சொன்னது போல் எலிக்குஞ்சுதான்.  அதுதான் அன்றைய தினம் அவனுக்கு உதவியாக இருந்தது. செந்தாமரையின் அம்மா ஒரு பீப்பாய். பீப்பாயின் கைகளுக்கு எலிக்குஞ்சு மாட்டுமா? மின்னலாகப் பறந்து விட்டான்.  கையில் தாலி அகப்பட்டதா இல்லையா என்பது கூடத் தெரியாது.   உயிருக்குப் பயந்து ஓடினான்.  அதுதான் உண்மை.  பரமசிவத்தின் டிராயர் நனைந்திருந்தது.  ஆனாலும் கையில் தாலிக்கொடி ஊசலாடிக் கொண்டிருந்தது.  தாலிக்கொடி பூராவும் ரத்தம். செந்தாமரையால் ஆள் யார் என்று கூட இருட்டில் கவனிக்க முடியவில்லை.  யாரோ சிறு பயல் என்பது மட்டும்தான் புரிந்தது.   இம்மாதிரி செயின் திருடர்கள் சிறுவர்களை வைத்துத்தான் காரியத்தை நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தாள்.  அந்த அதிர்ச்சியிலிருந்தும் கழுத்தில் ஏற்பட்ட காயத்திலிருந்தும் மீள அவளுக்கு நாட்கள் ஆகியது. 

வானரக் கூட்டத்தில் பெரியவனாக இருந்த தென்னவனிடம் தாலிக்கொடியை விற்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எத்தனை பவுன், என்ன விலை, எதுவும் தெரியாது. முதல் நாள் முதல் ஷோ டிக்கட் ஒன்று பிளாக்கில் இருநூறு ரூபாய்.  ஆயிரம் ரூபாய் ப்ளஸ் ஐஸ் க்ரீம் லொட்டு லொசுக்கு செலவுகளுக்கு ஐநூறு ரூபாய்.  என்னது, ஐஸ் க்ரீமுக்கு ஐநூறா?  அடச்சே, கம்னு கெட.  ஒரே நாள்ளயா சாப்ட்டுத் தீக்கப் போறோம்?  ஒரு நாலஞ்சு தடவையாவது சாப்பிட வேணாமா?  ஆக, எல்லாம் சேர்த்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தால்தான் பாட்ஷா முடியும்.  இடையில் ஒருத்தன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி விட்டான்.  இது கவரிங் செயினாக இருந்தால்?  அதையும்தான் பார்த்து விடுவோம்.   ஆனால் சேட் நல்ல மாதிரி.  ஒரிஜினல்தான், கவரிங் இல்லை என்று சொல்லி விட்டார்.  மூணு பவுன் என்று எடையும் சொன்னார்.  எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். 

ஒரு பவுன் என்னா வெலை என்றான் தென்னவன். 

அதெல்லாம் ஆகாதுப்பா, நான் போலீஸுக்கும் மாமூல் குடுக்கணும்.  ஒனக்கு எவ்ளோ வேணும் சொல்லு? 

போலீஸ் என்றதும் தென்னவனுக்கு சர்வ நாடியும் அடங்கி விட்டது.  மெல்லிய குரலில் ஆயிரத்து ஐநூறு என்று சொன்னார்.  சேட்டும் ஒரு வார்த்தை பேசாமல் கொடுத்து விட்டார். 

விஷயம் அதோடு முடிந்திருக்கும்;  யாருக்கும் எதுவும் தெரியாமல் போயிருக்கும்;  ஊரில் வேறொரு பெரிய நகைக் கொள்ளை நடக்காமல் இருந்திருந்தால்.  நகரத்தில் பிரபலமான ஒரு நகைக் கடையில் ஒரு கொள்ளை நடந்து வைத்தது.   நகைக்கடை அதிபர் அரசியல் புள்ளி என்பதால் போலீஸ் முடுக்கி விடப்பட்டு எல்லா சேட்டுகளும் விசாரிக்கப்பட்டதில் இந்த ஜுஜுபி கேஸும் மாட்டி விட்டது.  மற்ற சமயமாக இருந்திருந்தால் ரெண்டு தட்டு தட்டி பரமசிவத்தைத் துரத்தி விட்டிருப்பார்கள்.  ஆனால் கேஸ் ரொம்பப் பெரிதாக ஆகி விட்டதால் எல்லா நகைத் திருட்டும் அம்பலத்துக்கு வந்து பரமசிவம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட போது அவன் வயது பதினொன்று கூட ஆகியிருக்கவில்லை.  கேஸ் வலுவானதற்கு இன்னொரு முக்கிய காரணம், அவன் தந்தை.  ஒரு பிக்பாக்கெட் கேஸில் ஆசாமி அப்போது உள்ளே இருந்தார். 

பரமசிவம் சொன்ன சீர்திருத்தப் பள்ளிக்கூடக் கதைகள் தனியாக ஒரு நாவலுக்கானவை.  நீங்கள் எதிர்பார்ப்பது போலவே செக்‌ஷுவல் அப்யூஸ்தான்.  அந்தக் கதையெல்லாம் அப்படியே 1996-இல் வந்த Sleepers படம் மாதிரியேதான்.  இன்னொரு ஒற்றுமை, இரண்டு கதையுமே நடந்தது ஒரே கால கட்டத்தில்.  ஸ்லீப்பர்ஸ் படத்தில் வானரக் கூட்டம் விளையாட்டாகத் திருடும்போது ஒரு கொலை நடந்து, நான்கு பசங்களும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.  நம் கதையில் கொலை நடக்கவில்லை.  வெறும் செயின் பறிப்புதான்.  அதற்கே பயலுக்கு ஆறு மாதம் கிடைத்தது.  ஆறு மாதமும் சக பயல்களும் வார்டனும் சேர்த்து இவனுடைய வாயையும் ஆசன வாயையும் கிழி கிழி என்று கிழித்து எடுத்து விட்டார்கள்.  பல சமயங்களில் தொண்டைக் குழியே கடப்பாரையால் அடைந்து விடுமாதலால் மூச்சு விட முடியாமல் சாகும் நிலைக்கெல்லாம் போயிருக்கிறான்.  ஆசன வாய் கிழிந்து ரத்தம் கொட்டாத நாளே இல்லை.  ஆனாலும் ஸ்லீப்பர்ஸ் படத்தில் அந்த குரூரத்திலும் ஒரு nuance இருந்தது என்றான் பரமசிவம்.  அவனுடைய கூர்நோக்கு இல்ல அனுபவத்தில் – இப்போதெல்லாம் சீர்திருத்தப் பள்ளியின் பெயர் மாற்றப்பட்டு விட்டதாம் – அந்த நுவான்ஸ் எல்லாம் இல்லை. 

குரூரத்தில் போய் என்னய்யா நுவான்ஸ் என்றேன். 

அட நீங்க வேற சாரு.  ஸ்லீப்பர்ஸில் வரும் பசங்களை அந்த சீர்திருத்தப் பள்ளியின் அதிகாரி ரேப் பண்ணும் போது பைபிளின் வசனங்களை சத்தமாகப் பிரார்த்தனை செய்யச் சொல்வான் இல்லையா?  பின்னால் ஆசன வாய் கிழியும் போது முன் பக்கத்து வாய் பைபிளின் வசனங்களை சத்தமாகச் சொல்ல வேண்டும்.  தேவாலயத்தில் இருப்பது போல் நினைத்துக் கொள் நாயே என்று சொல்வான் கார்டு.  அந்த இடம் ஞாபகம் இருக்கிறதா சாரு?  இத்தனைக்கும் அது நடந்த கதை.  என்னுடைய கதையில் அப்படி நடக்கவில்லை.  அதனால்தான் சொன்னேன், என் கதையில் நுவான்ஸ் இல்லை என்று. 

என்ன செய்வது பரமசிவம்?  நீங்கள் சொல்வது போல் இந்த நாட்டில் குரூரமான சம்பவம் நடந்தால் கூட அதில் நுவான்ஸ் எதுவும் இல்லாமல் தட்டையாகவே இருக்கிறது.  இந்த நாட்டின் சாபம் போல.  

சீர்திருத்தப் பள்ளியில் இருந்த போது பரமசிவத்துக்கு ஒரு விஷயம் புரிந்தது.  படித்தால் இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  படிக்காத காரணத்தால்தான் அப்பன் ஜெயிலிலும் வெளியிலுமாக வாழ்ந்தான்.  சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியே வந்த பரமசிவம் எல்லா வேலைகளையும் செய்தான்.  சுமார் இருபத்தைந்து வித வேலைகள்.  டீக்கடையில் டேபிள் துடைத்தான்.  மளிகைக்கடையில் பொட்டலம் மடித்தான்.  மூட்டை தூக்கினான்.  டாஸ்மாக்கில் வேலை செய்தான்.  லேத்துப் பட்டறையில் கொஞ்ச நாள்.  சைக்கிள் கடை மெக்கானிக்காகக் கொஞ்ச நாள். கறிக்கடையில் எடுபிடி, சாவு வீட்டில் பிணத்துக்கு சாவு டான்ஸ், கல்யாணம் போன்ற விசேஷங்கள் நடந்தால் அங்கே எடுபிடி, சமையலுக்கு உதவி, கட்சிக் கூட்டத்துக்குத் தோரணம் கட்டுவது, கொடி கட்டுவது, சினிமா மற்றும் அரசியல் போஸ்டர்கள் ஒட்டுவது, தோட்டத்தில் வேலி போடுவது, மெஷினுக்குப் போய் மிளகாய் அரைத்துக் கொண்டு வந்து கொடுப்பது, மாட்டாஸ்பத்திரிக்கு மாட்டை ஓட்டிக் கொண்டு போய் கொண்டு வருவது, கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொட்டுவது, சமயங்களில் பாதாள சாக்கடையில் இறங்குவது உட்பட அவன் செய்யாத வேலையே இல்லை என்று சொல்லி விடலாம்.  ஆனால் ஒருபோதும் சட்டத்துக்குப் புறம்பான வேலையில் ஈடுபட்டதில்லை.  அது தன்னைத் திரும்பவும் கம்பிகளுக்கு உள்ளே அடைத்து விடும் என்பதை அவன் உறுதியாக நம்பினான்.  அந்த வாழ்க்கை அவனுக்கு ஒத்து வராது.  அப்பனும் மகனும் ஜெயிலில் இருந்த போது அம்மா எவனுடனோ ஓடிப் போய் விட்டாள்.  வெளியே வந்த அப்பன் இன்னொருத்தியை சேர்த்துக் கொண்டு, கொஞ்ச நாள் வீட்டு புரோக்கராக அலைந்து பிறகு ரியல் எஸ்டேட்டில் இறங்கி, எவன் நிலத்தையோ அநியாயமாக அபகரித்து, அவன் இவனைப் போட்டுத் தள்ளி விட்டான்.  அப்பன் சாவுக்குக் கூட பரமசிவம் போகவில்லை.  பழசே வேண்டாம் என்று இருந்து விட்டான். 

நீங்கள் என்னவோ சினிமாவால்தான் சமூகமே கெட்டது என்று அடிக்கடி எழுதுகிறீர்களே சாரு, உண்மையில் நான் இந்த இடத்தில் உங்களோடு சரி சமமாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு சினிமாதான் காரணம்.  குறிப்பா ரஜினிதான் காரணம்.

”யோவ் என்னய்யா, சந்தடி சாக்கில சரி சமமாங்கிறே?  நீயும் சாருவும் சரி சமமா?” என்று குறுக்கிட்டார் சீனி.

“ஆ, வாருங்கள் நாரதரே… சாரு கிட்ட என்னை மாட்டி விட்டு அப்றம் என்னைத் திட்டி ப்ளாக்ல எழுதறதுக்கு வழி பண்ணாதீங்க தலைவரே…  சாரி சாரு, நான் சொல்ல நினைச்சது இதுதான்.  பாட்ஷா இல்லேன்னா சீர்திருத்தப் பள்ளி இல்லை.  அது நடந்திருக்கலேன்னா வைராக்கியம்னா என்னன்னு எனக்குத் தெரிஞ்சிருக்காது.  படிப்புதான் விடுதலைன்னு தெரிஞ்சிருக்காது.  நீங்களும் கிடைச்சிருக்க மாட்டீங்க.  சீர்திருத்தப் பள்ளி ஒரு நரகம்தான்.  ஆனால் நரகத்தில் இருந்து கொண்டு நரகத்தை அனுபவித்தால்தானே அதை விட்டு விடுதலையாக வேண்டும் என்றே தோன்றும்.  நான் பாட்டுக்கு எல்லோரையும் போல் வீட்டிலேயே இருந்திருந்தால் ஒரு கூலிக்காரனாகத்தான் இருந்திருப்பேன்.  விடுதலையைத் தவிர இன்னொன்றையும் சீர்திருத்தப்பள்ளியில் கற்றுக் கொண்டேன்.  அங்கே இருந்த பலரும் முதல் குற்றவாளிகள் அல்ல.  அவர்கள் அங்கே வந்து சேர்ந்ததன் முக்கியமான காரணம், பழி வாங்க நினைத்ததுதான்.  ஸ்லீப்பர்ஸ் படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நாலு பையன்கள் ஒரு தள்ளுவண்டிக்காரனிடமிருந்து பல ஹாட் டாகைத் திருடித் தின்னத் திட்டமிடுகிறார்கள்.  முதலில் ஒருத்தன் ஒரு ஹாட் டாகை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்.  அவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறான் தள்ளுவண்டிக்காரன்.  ஏன் ஓடினான்?  தன்னிடம் திருடிய சிறுவனைப் பழி வாங்க வேண்டும்.  அதற்காகத் தன்னுடைய தள்ளுவண்டியையே அம்போ என்று விட்டு விட்டு ஓடுகிறான்.  அதற்குள் மற்ற மூன்று பையன்களும் மற்ற ஹாட் டாகுககளைக் காலி பண்ணுகிறார்கள்.  அப்போது தவறுதலாக வண்டி படிக்கட்டுகளில் சரிந்து ஒருத்தன் இறந்து போகிறான்.  எல்லாவற்றுக்கும் காரணம், தன்னிடம் ஹாட் டாக் திருடியனைப் பழி வாங்க வேண்டும் என்று தள்ளுவண்டிக்காரன் நினைத்ததுதான்.    

சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியே வந்ததும் பரமசிவம் பின் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை.   வேலை செய்தான்.  படித்தான்.  இடையிடையே ரஜினி படங்களுக்குக் கட் அவுட் கட்டுவது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டான்.  நாளடைவில் உள்ளூர் ரஜினி ரசிகர் மன்றத்தின் செயலாளர் பதவியும் கிடைத்தது. 

செய்ததெல்லாம் கூலி வேலைதான் என்றாலும் எந்தக் காலத்திலும் அவன் படிப்பை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.  படிப்பு மட்டும்தான் இந்த நரகத்திலிருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.  பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் இல்லை, கண்டது கடியதையும் படித்தான்.  கண்ணில் எதெல்லாம் மாட்டியதோ அது எல்லாவற்றையும் படித்தான்.  பத்திரிகைகளில் வரும் சினிமா விளம்பரத்திலிருந்து வரி விளம்பரம் வரை எதையும் விடுவதில்லை. அப்படியாகத்தான் இந்த நிலைக்கு வந்தது. 

எல்லாம் சரிதான்.  ஆனால் ஒரு ரஜினி ரசிகன் எப்படி என்னுடைய வாசகனாகவும் இருக்கிறான், இருக்க முடியும். அதுதான் என் கேள்வி. 

தலைவருக்கும் உங்களுக்கும் ரொம்ப ஒற்றுமை இருக்கு சாரு.

அய்யோ, இத்தனை காலம் எழுதி இப்படி ஒரு பெயரையா வாங்க வேண்டும் நான்?   என்ன ஒற்றுமை பரமசிவம்?

அவரும் மஹா அவ்தார் பாபா பக்தர்.  நீங்களும் அப்படியே.  அப்புறம் அவரும் வெகுளி.  நீங்களும் வெகுளி.

என்னது, வெகுளியா?

ஆமா, உங்கள் கட்சியின் கொள்கை என்னன்னு பத்திரிகைக்காரன் கேட்டால் ஊழலை ஒழிப்பதுன்னு சொல்லி… விட வேண்டியதுதானே?  இது ஒரு விஷயமா?  கொள்கைன்னு கேட்டாலே தலையைச் சுத்துதுங்கிறாரு நம்ம தலைவரு.

நான்லாம் அப்படியா ஒளர்றேன்?

அதை விட ஜாஸ்தியா சாரு…

யோவ்.

ஆமா சாரு, நித்யானந்தா கடவுளின் அவதாரம்னு சொன்னீங்கல்ல.  அது என்ன பின்ன?

சரி, அதெல்லாம் வேண்டாம்.  நான் உங்க கிட்ட கேட்க நினைச்சது வேற.  ஆனா கேட்டது வேற.  அதனாலதான் நாம் இந்தத் தப்பான முக்குக்கு வந்துட்டோம்.  நான் என்ன கேட்க நினைச்சேன்னா, நீங்கள் கூர்நோக்கு இல்லம் போனது, வந்தது, கூலி வேலை செய்தது, படித்தது, வேலைக்குப் போனதெல்லாம் சரி.  என்னை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?  எப்போது கண்டு பிடித்தீர்கள்?

சொன்னேன்ல சாரு.  கண்டதையும் படிப்பேன்.  அப்படித்தான் எப்பவோ குமுதத்திலயோ விகடன்லயோ உங்களோட ஒரு ரகளையான பேட்டி வந்திருந்திச்சு.  ஒரு பார்ல உட்கார்ந்து கிட்டு பேட்டி குடுத்தீங்க.  அடப்பாவி, நம்ம தலைவர் முன்னாடி எப்டி இருந்தாரோ அப்டி இருக்காரே இந்த ரைட்டர்னு படிக்க ஆரம்பிச்சேன்.  அப்டியே புடிச்சுப் புடிச்சு ராஸ லீலாவைத் தொட்டேன்.  அவ்ளோதான்.  அதுக்கு மேல நான் படிக்கிறதை நிறுத்திட்டேன்.  போதும்.  அதுலயே எல்லாம் இருக்கு.

என்னய்யா இது, அந்யாயமா இருக்கு?  எக்ஸைல்லேலாம் பின்னிப் பெடலெடுத்துப்பேன்யா.

ம்ஹும்.  எதுவுமே வேணாம்.  ராஸ லீலா போதும்.  தலைவரோட படங்கள் போதும்.

உரையாடல் முடிவுக்கு வந்ததை உணர்ந்தாரோ என்னவோ பரமசிவம் சீனியைப் பார்த்து “தலைவரே, எனக்குக் கொஞ்சம் சரக்கு போடுங்க” என்றார்.  உடனே சீனி “யோவ் புண்டை… வாசகர் வட்டச் சந்திப்புக்கு வந்தா புண்டைய விரிச்சுக்கிட்டு ஹாய்யா வந்துரக் கூடாது, அவனவன் சரக்கை வாங்கிட்டு வந்துர வேண்டியதுன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு?  உன் சரக்கு எங்கெய்யா?” என்று கேட்க, பரமசிவம், “இதோ இப்பவே ஜிபேல பணத்தை அனுப்பிட்றேன் தல.  கோச்சுக்காதீங்க.  செங்கல்பட்லேர்ந்து பைக்ல வர்றேன்” என்றார்.

”பணம்தானே?  நானும் ஒனக்குப் பணம் தாரேன்.  நீ பணத்தையே குடி…”

அப்போது குறுக்கே புகுந்த நான் பரமசிவத்துக்கு ஒரு பெக்கைப் போட்டு நீட்டினேன்.  பெக்கை வாங்கி சியர்ஸ் சொன்ன பரமசிவம் சீனியைப் பார்த்து, ”தலைவரே, சாரு சொல்றா மாதிரி ஒங்களுக்கு கிராமரே வர்ல.  அது எப்படி நீங்க பெண் பாலை ஆண் பாலுக்குப் போட்டுப் பேசலாம்?” என்றார்.

அந்த இலக்கண விவாதத்துடன் ஆரம்பித்தது அன்றைய இரவின் வாசகர் வட்டக் கூட்டம்…  

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

***