அஜித் – மீண்டும்

அஜித் தன்னோடு செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்ஃபோனைப் பிடுங்கி எறிந்தார். கேட்டால், என் அனுமதி இல்லாமல் ஏன் எடுத்தார் என்பார். இவ்வளவுதான் இந்த நடிகர்கள். ஆனால் பெரிய கனவான் வேஷம் போடுவார்கள். எல்லாமே வேஷம்தான். இவர்களால் வீதிக்கு வந்து ஒரு க்ஷணம் கூட நாகரிகமாக நடந்து கொள்ள இயலாது. எதிராளி நாகரிகம் காக்கவில்லையே என்று சொல்ல முடியாது. அந்த ரசிகர்களின் பணத்தில்தானே பத்து கோடி இருபது கோடி என்று சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்களுடைய சம்பளம் என்ன அஜித்? இந்திய ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு? நடிகர்களை விட சம்பளம் அதிகமாக வாங்கும் ஒருத்தர் கூடக் கிடையாது. அதாவது, உழைப்புக்காக. அம்பானி போன்றவர்கள் வாங்கலாம், அது கம்பெனியின் லாபம். ஆனால் தனிநபராக உடலால் உழைப்பதற்கு இருபது கோடி முப்பது கோடி வாங்கும் – அதிலும் மூன்றே மாதத்துக்கு – ஒரே தொழிலாளி நடிகர்தான். அது ரசிகனின் பணம்தானே? அவன் செல்ஃபி எடுக்க வந்தால் முடியாது தம்பி, வழி விடு என்று சொல்ல வேண்டியதுதானே? போனைப் பிடுங்கியா தூக்கி எறிவீர்? நீங்கள்தான் கனவான் என்று சினிமா உலகில் அறியப்படுகிறீர்கள்!

மேற்கண்ட பதிவை இன்று மதியம் போல் வெளியிட்டிருந்தேன்.  உடனே என்னுடைய வாசகர்கள் சிலர் அஜித் போனை வாங்கித் தூக்கி எறியவில்லை, போனை வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாக்கு அளித்து விட்டு வந்து அந்த ரசிகரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார் என்று எழுதினார்கள்.  உடனே நான் என் பதிவை நீக்கி விட்டேன்.  யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல என்பதால்.  பிறகு அந்த முழு காணொலியையும் பார்த்தேன்.  அவர் போனைத் திருப்பிக் கொடுக்கும் போது அந்த ரசிகர் தலை தாழ்த்தி ஏதோ கடவுளிடமிருந்து வாங்கிக் கொள்வது போல் வாங்குகிறார். 

நான் கேட்கிறேன், செல்ஃபி வேண்டாம் என்று பணிவாகச் சொல்லவே முடியாதா?  பணிவாகக் கூட சொல்ல வேண்டாம், சாதாரணமாகக் கூட சொல்லக் கூடாதா?  ஏன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கூடாது?  ஏன் எடுத்தவுடனே கையைப் பயன்படுத்துகிறீர்கள்?  வாங்கித் தூக்கி எறியவில்லை.  சரி.  ஆனால் ஒருக்கணம் யோசித்துப் பாருங்கள்.  நீங்கள் என் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுக்க முயல்கிறீர்கள்.  நான் உடனே உங்கள் போனைப் பிடுங்கி – வாங்கி என்பது தவறான பிரயோகம் – போனைப் பிடுங்கி என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் என்ன ரௌத்திர தாண்டவம் ஆடுவீர்கள்?  எத்தனைத் தொலைக்காட்சிகளில் எழுத்தாளனின் அராஜகம் என்று செய்தி வரும்?  அது ஏன், நடிகர்கள் மட்டும் எது செய்தாலும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?  நான் பேசுவது எனக்குக் கடிதம் எழுதிய நண்பர்களை நோக்கி.  இன்னமும் கமல் பற்றிய என் விமர்சனத்துக்கு ஆபாசக் கடிதங்களும் மிரட்டல் கடிதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. 

ஹலோ, மிரட்டல் கடிதம் எழுதும் அன்பர்களே, என்னிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை.  என் உயிர் கூட என்னுடையது அல்ல.  என்னை நீங்கள் அடித்தால் அந்த அடி அன்றைய தினம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.  நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.  கொல்லவும் செய்யலாம்.  மரணத்தைக் கண்டு அஞ்சியன் தானே உங்கள் மிரட்டலைக் கண்டு அஞ்சுவான்?

அஜித்தும் சரி, மற்ற பெரும்பாலான நடிகர்களும் சரி, வெளியே வந்தால் அந்தக் காலத்துப் பண்ணையார் போலவே நடந்து கொள்கிறார்கள்.  கோடிகளில் சம்பளம் வாங்குகிறீர்கள் இல்லையா?  அதற்கான விலைதானே ஐயா இது?  உங்களை என்ன நாங்கள் காமன்மேன் போல் நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?  அப்படியானால் ஒரு படத்துக்குப் பத்து லட்சம் சம்பளம் வாங்கத் தயாரா?  பத்து கோடி அல்லவா வாங்குகிறீர்கள்?  அப்படியானால் உங்களுக்குப் பத்து கோடியை எடுத்துக் கொடுக்கும் உங்கள் பக்த கோடிகள் செல்ஃபி எடுக்கப் பிரியப் படுவார்கள்தான்.  அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டமும் அராஜகமும்?  இதற்கிடையில் அஜித்தை பக்கா ஜெண்டில்மேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதுதான் பெரிய நகைமுரணாக இருக்கிறது?  ஒரு பத்திரிகையாளர் உங்களை தல என்று சொல்லாமல் அஜித் சார் என்று சொல்லிவிட்டார் என்பதற்காக அவருக்குக் கிடைத்த மண்டகப்படியை யாரால் மறக்க முடியும் தல?