தமிழும் மலையாளமும்

பிஞ்ஜ் செயலியில் பாராவின் தொடர்கதையும் என்னுடைய தொடரும் வருகின்றன. அவரை 1000 பேரும் என்னை 926 பேரும் இன்று காலை வரை படித்துள்ளனர். தன் தொடருக்கு வாராவாரம் விமர்சனம் எழுதுபவர்களுக்கு தொடர் முடிந்து விருந்து கொடுப்பதாக எழுதியிருக்கிறார் பாரா. இதற்குப் போட்டியாக என்ன செய்யலாம் என்றால் படிப்பவர் அத்தனை பேருக்குமே ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் கொடுக்கலாம். பணத்துக்குத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆனால் கேரளத்தில் என்ன நிலைமை தெரியுமா? பென் யாமின் எழுதின ஆடு ஜீவிதம் என்ற நாவல் மூன்று லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. அந்த நாவலில் சாரு நிவேதிதா என்ற தமிழ் எழுத்தாளரும் ஒரு பாத்திரமாக வருகிறார். நாவலில் மூன்று பக்கம் வருகிறார். ஆச்சா, ஆடு ஜீவிதம் நாவலுக்கு இலவச விளம்பரமும் ஆயிற்று!!! இப்படியெல்லாம் இலவச விளம்பரம் கொடுத்தாலும் காலச்சுவடுக்காரர்கள் என்னைத் திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.

மலையாள எழுத்தாளனின் நிலையையும் தமிழ் எழுத்தாளர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். பென் யாமின் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவரைத் தெரியாத மலையாளியே கிடையாது. விரைவில் அவர் புக்கர் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய அத்தனை நாவல்களும் தரமான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் பூராவும் அவர் அறியப்பட்ட எழுத்தாளராக இருக்கிறார்.

அவரிடம் கேட்டேன், என்னை எப்படி ஒரு கேரக்டராக உள்ளே கொண்டு வந்தீர்கள் என்று.

பதில்: நீங்கள் எனக்குப் பிடித்த எழுத்தாளரா இல்லையா என்பது கேள்வியே அல்ல. சாரு நிவேதிதா எங்களின் கலாச்சார வாழ்வில் ஒரு அங்கம்.

ஆடு ஜீவிதம் மலையாள நாவலில் ஒரு இடத்தில் ஒரு பஸ் ஸ்டாண்டில் எழுத்தாளர் சாரு நிவேதிதா மேடையில் நின்று பேசிக் கொண்டிருப்பதாக அறிமுகம் ஆவேன்.

தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதும் என்னை ஆயிரம் தமிழர்கள் வாசிப்பதும், என்னைத் தங்கள் தேசத்தின் கலாச்சார அடையாளமாகப் பார்க்கும் ஒரு மலையாள எழுத்தாளனும்… என்ன ஒரு வரலாற்று முரண்!!!