மதுவுக்கு இருந்த அவப்பெயரை நீக்கிய கதை…

பொதுவாக காதலில் ஆண்தான் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பெண்ணிடம் கேட்பார்கள்.  உலக வழக்கமே அதுதான்.  ஆனால் என் விஷயத்தில் அது உல்ட்டாவாக நடந்தது.  அவந்திகாதான் கேட்டாள்.  நான் சொன்னேன், ”வேண்டாம், ஏனென்றால் நான் தண்ணி அடிப்பேன், நீயோ தண்ணி அடிப்பது பஞ்சமா பாவம் என்று நினைப்பவள்;  ஒத்து வராது.  மேலும், நான் எக்காரணம் கொண்டும் தண்ணி அடிப்பதை எக்காலத்திலும் நிறுத்துவதாகவும் இல்லை” என்றேன்.  எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.  அவளும் அதெல்லாம் பரவாயில்லை என்று சாமி சத்தியம் பண்ணி கல்யாணம் பண்ணிக் கொண்டாள்.  இப்போது – இருபத்தேழு ஆண்டுகள் கழித்து தன் சத்தியத்தை மறந்து பேச்சு மாறுகிறாள்.  அது தனிப் பிரச்சினை.  ஆனால் எத்தனை தடை வந்தாலும் நமக்கு நம்முடைய வாழ்வை வாழ ஆயிரம் வழிகள் உண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.

என் அகராதியில் குடும்ப நண்பர் என்றால், அவந்திகாவும் நண்பராக ஏற்றுக் கொண்டால் குடும்ப நண்பர்.  குடும்ப நண்பராக இருக்க இரண்டு தகுதிகள் தேவை.  ஒன்று, நண்பர் ஆணாக இருக்க வேண்டும்.  பெண்ணாக இருந்தால் தகுதி இழப்பு.  ஏனென்றால், அது எப்படி ஒரு பெண் ஒரு ஆணோடு பேசலாம்?  ஏம்மா, நீ எத்தனையோ பேரோடு பேசவில்லையா?  ம்… நான் ஆண் பெண் பால் வித்தியாசத்தைக் கடந்தவள்.  அதற்கு மேல் அந்த உரையாடலை நான் நீட்டித்தது இல்லை.  அது எங்கே போகும் என்று தெரிந்ததால்.  இரண்டாவது தகுதி, நபர் குடிக்காதவராக இருக்க வேண்டும்.  இந்த இரண்டு தகுதிகளையும் பூர்த்தி செய்து தேர்ச்சி அடைந்த மூன்று குடும்ப நண்பர்கள் ஸ்ரீராம், செல்வகுமார், ராம்ஜி.  எல்லா விதிக்கும் விலக்கு உண்டு அல்லவா?  ஒரு குடும்ப நண்பர் இருக்கிறார்.  குடிப்பார்.  சிகரெட்டும் குடிப்பார்.  ஆனாலும் குடும்ப நண்பர்தான்.  இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் குடித்து விட்டு கோபத்தில் தன் வீட்டு டிவி பெட்டியை உடைத்து விட்டார்.  மனைவி மேல் கோபம் இல்லை.  மனைவியை ஒரு உறவினர் அவமதித்து விட்டதால் வந்த கோபம்.  உறவை நேரடியாக உதைக்க முடியாது.  அதனால் மாட்டிக் கொண்டது டிவி. 

பஞ்சாயத்து நீதிமன்றம் வந்தது.  “சரி, அதெல்லாம் போகட்டும்.  கோபத்தில் நடக்கிறதுதான்.  நீ இந்த பழக்கத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கிறது நல்லது, இல்லியா?” என்றார் நீதிபதி அவந்திகா.  நண்பரும் “அப்படில்லம்மா, ரொம்பல்லாம் சாப்ட மாட்டேன், வேற வழி இல்ல, அதனால அப்டி நடந்து போச்சு…” என்றார்.  அவந்திகாவும் “இருந்தாலும் கம்மியா சாப்பிடு, விட்டுடறது ரொம்பவும் நல்லது.  சாரு சாப்பிடாததா, இப்போ பாரு, முழுசா விட்டுட்டாரு.  அஞ்சாறு வருஷம் ஆச்சு…  அப்டியே விட்ரு.  நினைச்சா முடியும்” என்றாள்.

பேசி முடித்ததும் நான் “ஏம்மா அவரைப் போட்டு மிஸ்கைட் பண்றே.  சிகரெட்டை விடச் சொல்லு.  தண்ணி அடிக்கிறது ரொம்ப நல்லதாம்… கொரோனா தெறிச்சு ஓடறதாம்…  நிறைய விஞ்ஞானிகள் சொல்றாங்க… அமெரிக்காவில் ரிஸர்ச் பண்ணி ரிஸல்டே போட்ருக்கான்” என்றேன் சீரியஸாக. 

“ம்? அதுக்காக டெய்லி அடிப்பாங்களா?”

“சீச்சீ.  கருமம்.  டெய்லியா அடிப்பான்?  அப்பப்போ அடிச்சா கொரோனாவை எதிர்க்க உடம்புல anti bodies பயங்கரமா எதிர்த்து நிய்க்குமாம்.”

நல்லவேளை, என்னைப் போலவே anti bodies என்றால் என்னைப் போலவே அவளுக்கும் தெரியாது.  ஏன் அந்த வார்த்தையை விட்டேன் என்றால் ஒரு authenticity கருதித்தான். 

“சரி, சிகரெட் லங்ஸைத் தின்னுடுமில்ல?”

நான் தான் சிகரெட் குடிப்பதில்லையே, அப்புறம் என்ன கவலை?  அதனால் துணிச்சலாக என் கருத்தை ஆணித்தரமாகச் சொன்னேன்.  “அதிலென்ன சந்தேகம்.  லங்ஸே காலியாய்டும்” என்று எல்லா பழியையும் சிகரெட் தலையில் போட்டேன்.

எப்படியோ மதுவுக்கு இருந்த அநியாய அவப்பெயரை கொரோனாவை வைத்துக் கொஞ்சமாக நீக்க முடிந்ததில் எனக்கு ஒரு சிறிய சந்தோஷம்தான்.