அபிலாஷின் ஒரு பதிவைப் பார்த்தேன். கொல்லாமையின் அறம் காரணமாக சைவ உணவுக்கு மாற இருப்பதாக. நல்ல முடிவு. ஆனால் அதற்கு முன் எது சைவ உணவு என்பதற்கு அவர் தொல்காப்பியரின் புல்லும் மரனும் ஓரறிவினவே என்ற சூத்திரத்தைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன்படி மீனுக்கு இரண்டு அறிவே உண்டு. தாவரத்தை விட ஒரு படி மேலே. மாடு நாய்க்கெல்லாம் அஞ்சு அறிவு. அதெல்லாம் மனிதனைக் கொன்று சாப்பிடுவது போல. ஒரே ஒரு முறை கறிக்கடைக்குப் போய் நாட்டுக் கோழியைக் கொல்வதையும் அப்போது அது கதறும் கதறலையும் பார்த்தால் நீங்கள் அப்புறம் சிக்கனே சாப்பிட முடியாது. அதேபோல் ஆட்டுத் தொட்டிக்குப் போய் ஆட்டை அறுக்கும்போது அது கதறும் கதறலையும் பார்க்க வேண்டும். நான் அதனால் மீன் மட்டும் சாப்பிடுகிறேன். மீன் வலைக்கு வந்ததுமே இறந்து விடுகிறது. நாம் சாப்பிடுவது இறந்த மீனின் சதை. அதிலும் நான் விரால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். ஏனென்றால், அதை நம் கண் முன்னே அடித்து தான் கொல்கிறார்கள். உயிரோடுதான் விரால் வாங்க முடியும்.வீட்டில் அசைவம் என்றால் மீன் மட்டும்தான் சாப்பிடுகிறேன். அதுவும் வாரம் ஒருமுறைதான் சாத்தியப்படுகிறது. இத்தனைக்கும் பிறகு மதுரைக்குப் போனால் ஆட்டு மூளை, ஆட்டுக்கால் சூப், ஈரல் வறுவல் என்றால் விட மாட்டேன். அப்போது கொஞ்ச நேரம் உயிரோடு இருந்த ஆட்டை மறந்து விட்டு, சாப்பிட்டு விடுவேன். அடுத்த ஜென்மத்திலாவது ஒரு சமணனாகப் பிறக்க வேண்டுதலுடன். கருணாநிதியிடம் என் ஆச்சரியம் என்னவென்றால், எப்படி அவர் எழுபது வயதுக்கு மேல் அசைவத்தை விட்டார் என்பது. அல்லது, அந்தத் தகவல் தவறா?திருமாவெல்லாம் எனக்கு ஒரு அதிசயம். பிறந்ததிலிருந்தே சைவம் என்றால் எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அசைவம் சாப்பிட்டு விட்டு அதை விடுவதெல்லாம் மனித எத்தனத்தை மீறிய செயல்.தொல்காப்பியர் சொல்படி மீன் மட்டும் சாப்பிட்டுப் பழகுங்கள். சமணர் மாதிரி மாற வேண்டாம்.
இன்னொன்றும் கவனித்திருக்கிறேன். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் நாளடைவில் இப்படித்தான் மாறி விடுகிறார்கள். அடியேனும் அப்படியே…