ஒன்பதாவது மாடியிலிருந்து…

அன்பிற்குரிய சாரு,

அரூ சிறுகதைப் போட்டி குறித்து நேற்று நீங்கள் எழுதியுள்ள பதிவை வாசிக்க நேர்ந்தது. தற்கால இளைஞர்களின் புனைவெழுத்து என்கிற அந்தக் கட்டுரையின் வாயிலாக இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிற என்னைப் போன்ற இளைஞர்களின் கண்களை நீங்கள் திறந்துவிட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். 

எல்லா கதைகளும் ஜெயமோகன் எழுதியது போலவே இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஜெ.மோ. போல ஒரு கதையாவது எழுதிவிட முடியுமா என கனவு காணும் எண்ணற்றவர்களின் மொழியிலும் அவர் பாதிப்பு தென்படவே செய்யும். யாரும் பிறந்ததும் சுவாசிக்க சொல்லிக் கொடுப்பதில்லை தான். ஆனால் நடக்க, பேச என எல்லாவற்றையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளும். இலக்கியத்தின் குழந்தைகளும் அப்படித் தான். அதிலிருந்து வெளியே வர விமர்சன களமும் காலமும் தேவைப்படும். ஒவ்வொருவருக்கும் தன்னையே சீர் தூக்கிக் கொள்ள ஒரு பயிற்சியும் தேவைப்படும்.

அரூ நடத்திய கடந்த ஆண்டு போட்டியிலும் இந்தாண்டுப் போட்டியிலும் என் கதைகள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகியுள்ளன. சென்ற முறை உங்களது அறிமுகக் கட்டுரை அத்தனை தூரம் என்னை ஈர்த்தது. அதிலிருந்த கதைகளை எல்லாம் தேடிப் போய் வாசித்தேன். கட்டுரை தன்மையிலிருந்து கதையாக மாற மொழியை இலகுவாக கையாள முயற்சித்திருக்கிறேன். ஓரளவுக்கு அது வேலையும் செய்திருக்கிறது.

அதற்கான வழிகாட்டியாக அல்லது விமர்சிக்கும் மூத்த எழுத்தாளராக உங்களைப் பார்க்க முயற்சிக்கிறேன். இந்த மெயிலை எழுதக் காரணமே அந்தப் பதிவின் கடைசி இரு வரி தான்.

வருங்காலத் தமிழ் இலக்கியம் உருப்படுவதற்கான வழியே இல்லை என வருத்தப்பட்டுள்ளீர்கள். எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது உங்களது வருத்தத்தைப் பார்த்து.   

பிரபாகரன் ஷண்முகநாதன்

அன்புள்ள பிரபாகரன்,

வருங்காலத் தமிழ் இலக்கியம் உருப்படுவதற்கான வழியே இல்லை என்ற என் வார்த்தையெல்லாம் சும்மா ஒரு எரிச்சலில் சொன்னது.  அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இப்போதும் சில எழுத்தாளர்கள் தனித்துவமாக எழுதத்தான் செய்கிறார்கள்.  அதேபோல் எழுதுபவர்கள் பெருகினால் நலம்.  பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற ஒரே ஒரு நாவலில் மயிலன் சின்னப்பன் தமிழ் வாசகர் அனைவருக்கும் தெரிய வந்ததைப் போல தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்.  இன்னும் ஒரு பா. வெங்கடேசனும் திடீரென்று வந்து சேருவார்.  ஆனால் தொடர்ச்சியாக தமிழே எழுதத் தெரியாமல் பெரும் இலக்கணப் பிழைகளுடன் எழுதப்படும் படைப்புகளைப் பார்க்கும் போது ஆயாசமாக இருக்கிறது. 

ஆனால் ஜெயமோகனைப் போலவே எழுத முற்படுபவர்களுக்கு மீட்சியே இல்லை என்பது மட்டும் எனக்கு சந்தேகமில்லாமல் தெரிகிறது.  உங்களுக்கெல்லாம் ஜெயமோகனின் கதைகள் மட்டுமே தெரியும்.  ஆனால் எனக்கு ஜெயமோகன் எங்கிருந்து வந்தார் என்று தெரியும்.  அந்த ஊற்றுக்கண் இருக்கும் இடத்திலிருந்து யாரேனும் ஆரம்பித்தால் நானும் வரவேற்பேன்.  அதற்கு பௌத்தத்திலிருந்தும் ஆதி சங்கரரிடமிருந்தும் தொடங்கி தேவிப்ரஸாத் சட்டோபாத்யாய வரை வர வேண்டும்.  ஒரு பத்து வருட காலம் படிப்பைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது.  ஜெயமோகன் சு.ரா. பள்ளியிலிருந்து வந்தவர்.  ஆனால் அவரிடம் சு.ரா.வின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?  ஜெயமோகனிடம் நீங்கள் யாருடைய ரேகையையும் பிடிக்க முடியாது.  காரணம், எல்லா முன்னோடிகளையும் படித்து உள்வாங்கிக் கொண்டு புதிதாக உருவாக்குபவர் அவர்.  ஜெயமோகனைப் போல் ஒரு கதையாவது எழுதி விட மாட்டோமா?  நோக்கமே தப்பாக இருக்கிறதே? அவர் அந்த ஒரு கதையை எழுத ஓராயிரம் புத்தகங்களைப் படித்தவர் ஆயிற்றே? 

நான் சென்ற ஆண்டே இது பற்றி எழுத நினைத்தேன்.  எழுதவில்லை.  ஆனால் யுவனும் இதேபோல் நினைத்திருக்கிறார் என்கிறபோது இது பற்றி நாலு வரி எழுதத் தோன்றியது.  மற்றபடி இது பற்றி விவாதிக்க நான் தயார் இல்லை.  ஏனென்றால், இது அவரவர் விருப்பம்.  யாரையும் திருத்துவதும் கூட என் நோக்கம் அல்ல.  என்னுடைய இயல்பே எப்படி என்றால், ஒரு பெண் ஒன்பதாவது மாடியிலிருந்து குதிக்கப் போகிறேன் என்று படு பயங்கரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் சொன்ன போது “என்னை ஆயுள் தண்டனைக்கு ஆளாக்கி விடாதே தாயே” என்று சீரியஸாகச் சொன்னவன் நான்.  தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கு வழி என்னிடம் கேட்டால் தவறாமல் சொல்லி விடக் கூடிய ஆள்தான் நான்.  ஆனால் ஒன்பதாவது மாடியிலிருந்து வாழ்வின் last call செய்யக் கூடாது. மற்றபடி அவனே முடிவெடுத்து விட்டான்.  அப்புறம் நாம் யார் தடுக்க?  கொலை செய்யப் போகிறேன் என்று சொன்னால் தடுக்கலாம்.  அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.  தற்கொலை செய்து கொள்ளப் போகிறவனைத் திருத்தினால் அவனால் வேறு யாராவதுதான் தற்கொலை செய்து கொள்வான்.  எதற்கு நமக்கு இந்தப் பொல்லாப்பெல்லாம்?  வங்காள விரிகுடாவுக்கு வழி கேட்டால் உடனடியாக வழி சொல்லி விடுவேன். 

சந்தோஷமாக இருங்கள்.  காலம் பெரிய ஆசான். 

சாரு