தற்கால இளைஞர்களின் புனைவெழுத்து

தொடர்ந்து இக்கால இளைஞர்களின் புனைவெழுத்துகளைப் படிக்கும்போது கசப்புணர்வே எஞ்சுகிறது. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இப்போது எழுத வருபவர்களுக்குத் தமிழே எழுதத் தெரியவில்லை. கடுமையான பிழைகள். சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவர்களுடைய 10 சிறுகதைகளை ஒரு பிழையில்லாமல் திருத்தி – என்னென்ன பிழைகள் என்று கோடிட்டுக் காட்டி – பதினோராவது கதை எழுது என்று சொன்னால் முதல் கதையில் என்ன பிழைகள் இருந்ததோ அதே பிழைகள்தான் பதினோராவது கதையிலும் காணக் கிடைக்கின்றன. கொஞ்சமும் கற்றுக் கொள்வதில்லை. எனக்கு யாருமே கற்றுக் கொடுக்கவில்லை. நானும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் பிழையில்லாமல்தான் தமிழ் எழுதுகிறேன். குழந்தை பிறந்ததும் யாராவது அதை உட்கார வைத்து சுவாசிக்கக் கற்றுத் தருகிறார்களா? ஆனா ஆவன்னாவும் எழுதப் படிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். மூன்றாம் வகுப்பு வரை. அதோடு முடிந்தது கதை. அதற்குப் பிறகு நாங்களே படித்ததுதான்.

அரூ நண்பர்கள் வைத்த அறிவியல் குறுநாவல் போட்டிக்கு சென்ற ஆண்டு நடுவராக இருந்த போது மிரண்டு போனேன். பெரும்பாலான பேருக்குத் தமிழ் எழுத வரவில்லை. ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள். அடுத்து எல்லா கதைகளையுமே ஜெயமோகன் எழுதினது போல் இருந்தது. அதாவது, அவருடைய வெண்முரசு மொழியைக் காப்பி அடித்திருக்கிறார்கள். எதற்கு? அறிவியல் புனைவுக்கு!!! விளங்கிடும் என்று நினைத்துக் கொண்டேன். பல கதைகள் ஒரே கட்டுரை மயம். சில கதைகளை ஒரு பாரா கூட படிக்க முடியவில்லை. அதற்கு முந்தின ஆண்டு ஜெயமோகன் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்த முதல் பரிசு கதையைப் படித்தேன். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எழுதின அறிவியல் புனைவு மாதிரி இருந்தது. அட பயங்கரமே!

இப்போது இந்த ஆண்டும் அப்படித்தான் போல. இந்த ஆண்டு நடுவர் யுவன் சந்திரசேகர். அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:

”அறிவியல் புனைவு எழுத முனைபவர்கள், தத்துவவாதியின் குரலில் ஏன் பேசவேண்டும்! சங்கத் தமிழ் மொழியில், கவிதைநடையில் பேச வேண்டிய அவசியமென்ன?

இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கும் அநேகர், ஜெயமோகனின் மொழியில் மயங்கி, அதில் சிக்குண்டவர்களாகவே தென்படுகிறார்கள். மஹாபாரதத்தை மீட்டுருவாக்குவதற்காகக் கைக்கொண்ட மொழியொழுக்கை, தனது பிற கதைகளுக்கேகூட ஜெயமோகன் கையாண்ட மாதிரித் தெரியவில்லை. இதில், தார்மீகமான இன்னொரு பரிமாணமும் உண்டு; பல்லாண்டுகால உழைப்பு மற்றும் தேர்ச்சியின் பயனாக ஓர் எழுத்தாளர் தமக்கென வனைந்தெடுத்த மொழிநடையை அப்பட்டமாக நகல் செய்வது, ஒருவிதத்தில், உழைப்பின்மையின் சான்றுதான். துப்பறியும் கதைகளுக்கும், மர்மக் கதைகளுக்கும் தாம் பயன்படுத்திய அதே நடையில்தான் அறிவியல் புனைவுகளை எழுதினார் சுஜாதா. ஆனால், அது அவரே உருவாக்கிக்கொண்ட பிரத்தியேக நடை.

இலக்கண வழுக்களும், சொற்பிழைகளும் மொழி ஒழுங்கின்மையும் தனது சிறப்பியல்புகளாகக் கொண்ட புதிய தலைமுறை ஒன்று உருவாகிவிட்டது என்பதை இந்தக் கதைகளும் மெய்ப்பிக்கின்றன. ‘பரிசோதனை’ என்பதை ‘பாதுகாப்பு’ என்று எழுதியிருக்கிறார் ஒருவர்! ஒருவேளை, நூலாக வரும்போது பதிப்பாளர்கள் உழைத்து நேர் செய்தால் உண்டு. மொழிப் பிரக்ஞை மிகமிகக் குறைவாக இருக்கும் முகநூல் சூழலின் பாதிப்பு என்றே இதைக் கருதுகிறேன். ஆனாலும், ‘மனத்தில் டோப்பாமைன் சுரந்தது’ என்பதுபோன்ற தர்க்கப் பிழைகளை அறிவியல் புனைவுலகம்கூட மன்னிக்காது! இன்னொரு கதையில், கொலையுண்டவர் எந்த அளவு வலியை அனுபவித்தார் என்பதற்கான அளவை அலகு பேசப்படுகிறது. கொல்வதற்கு முன்னால் அளவைக் கருவியைப் பொருத்திவிட்டுக் கொலை செய்ய வேண்டும்; அல்லது, பிரேதத்தினுள் மேற்படி வலி அளவு சிதையாமல் சேகரமாகி இருக்கும் என்று நிறுவியாக வேண்டும்…

அறிவியலைச் சாக்காக வைத்து உளவியல் பேசலாம்; சமூகவியல் பேசலாம்; ஆன்மவியலும் பேசலாம். அது எந்தவிதமான வாசிப்பை விரும்பும் வாசகரையும் ஈர்ப்பதற்கு வாய்ப்புண்டு. அறிவியலை மட்டுமே, கட்டுரைத் தொனியில் பேசினால் அது எப்படிப் பொதுவாசக மனத்தில் அதிர்வுகளை உருவாக்கும்?”

வருங்காலத் தமிழ் இலக்கியம் உருப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஒருத்தருடைய நடையைக் காப்பி அடித்து எழுதி யாரும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.