வால்மீகிக்கு வந்த சந்தேகம்…

எனக்கு ஒரு தந்தை கடிதம் எழுதினார். 

”நானும் என் மனைவியும் எங்கள் ரத்தத்தைச் சிந்தி பிள்ளையைப் படிக்க வைத்தோம்.  எங்கள் சக்திக்கு மீறி, எங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்து உயர் படிப்பு கொடுத்தோம்.  இப்போது வேலைக்குப் போய் அவன் எங்களை கவனிக்கவே இல்லை.  வயதான காலத்தில் கொடும் மன உளைச்சலாக இருக்கிறது.” அந்த நீண்ட கடிதத்தின் சாரம் இது.  நான் கேட்டேன், பிள்ளையைப் படிக்க வைத்ததை ”பிற்காலத்துக்கான சேமிப்பு” என்று நினைத்துச் செய்தீர்களா?  அல்லது, பிள்ளையின் மீது கொண்ட அன்பினால் செய்தீர்களா?  அன்பையும் பண்பையும் காண்பித்து வளர்த்திருந்தால் பிள்ளைக்கும் அன்பும் பண்பும்தானே மிகுந்திருக்கும்?  பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு வளர்த்தால் குழந்தைகளும் அப்படித்தானே இருக்கும்? 

ராபர்ட் ஸ்வபோதாவின் அகோரா என்ற நூலில் விமலானந்தரின் விளக்கங்களைப் படித்த பிறகு என் நீண்ட நாள் குழப்பங்கள் தீர்ந்தன.  எனக்கு ஒருத்தர் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  பணம் அல்ல.  வேறு மாதிரி கடன்.  அதனால் எனக்கு அவர் மீது கடும் காட்டம்.  இந்த உணர்வுடனேயே நான் மேலே போயிருந்தால் அடுத்த பிறவியிலும் அவருக்கு நான் செய்ததைத் திரும்பச் செய்ய வேண்டியிருந்திருக்கும்.  ஏனென்றால், நான் அவருக்கு முந்தின பிறவியில் பட்ட கடனையே இப்போது அடைத்திருக்கிறேன்.  அப்படி நினைக்காமல் அவர் மீது பகை கொண்டால், இந்தக் கடன் வசூல் பல ஜென்மங்கள் தொடர்ந்திருக்கும்.  எனவே எனக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பித்து விட்டேன்.  ’ஆஹா, கர்ம வினை தீர்ந்தது.  தப்பினோம்.’ 

அந்தத் தந்தைக்கு இரண்டு பதில்களைச் சொன்னேன்.  நீங்கள் அன்பை விதைத்திருந்தால் அன்புதான் விளையும்.  அப்படியே அன்பை விதைத்து இந்த உதாசீனம் விளைந்திருந்தால் அது உங்களின் கர்ம வினை.  அப்பாடா கடன் தீர்ந்தது என்று நீங்கள் இதற்காக மகிழ்ச்சியே அடைய வேண்டும்.  கர்ம வினை என்பது நம்முடைய வங்கிச் சேமிப்பு மாதிரிதான்.  சென்ற பிறவியில் என்ன சேர்த்தோம் என்பதுதான் இந்தப் பிறவியின் இன்ப துன்பங்களைத் தீர்மானிக்கிறது.  ஆக, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கடவுளின் கைகளில் இல்லை.  உங்கள் கைகளில் இருக்கிறது.  அப்படியானால் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?  படிக்க வைத்த பிள்ளை நம்மை மறந்து விட்டால் நமக்கு எத்தனை மன உளைச்சல் வருகிறது? அப்படி இருக்கும்போது நம்மை உருவாக்கிய கடவுளுக்கு அல்லது இயற்கைக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?

தினமும் நான் எழுந்ததும் ஐந்து நிமிடம் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.  உறக்கம் என்பது ஒரு சின்ன மரணம் இல்லையா?  இன்று காலை மீண்டும் பிறந்திருக்கிறோமே?  எல்லா உடல் உறுப்புகளும் நன்றாக வேலை செய்கின்றன.  முக்கியமாக மனமும் நன்றாக இருக்கிறது.  ஆக, வாழ்வதற்கு இன்றைய ஒரு நாள் கிடைத்திருக்கிறது.  அதை நாம் முழுமையாக வாழ்ந்து தீர்க்க வேண்டும்.  ரொம்ப ஆன்மீகமாகப் போகிறேனா?  GOT தெரியும் இல்லையா?  தெரியவில்லையானால் நீங்கள் தலைமுறை இடைவெளியில் இருக்கிறீர்கள் என்று பொருள்.  இளைஞர்களிடம் கேளுங்கள், சொல்வார்கள். 

Game Of Thrones சீரியலில் வரும் குள்ளன் டிரியன் அந்தத் தொடரிலேயே எல்லோரையும் கவர்ந்த ஒரு பாத்திரம்.  குள்ளனாக இருந்தாலும் ரொம்ப ரகளையான ஆள்.  அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் குடி, குட்டி எல்லாம் உண்டு.  அவன் பேசுகின்ற வசனங்களே ஒரு ஜோர். தத்துவவாதியாகவும், ரவுடியாகவும், முற்றும் துறந்த முனிவனாகவும், பொறுக்கி மாதிரியும் பேசுவான். ஒரு சில உதாரணங்கள்: ”குள்ளனின் நிழல்தான் ரொம்பவும் நீண்டது”. ”என் தம்பியிடம் கத்தி இருக்கிறது, என்னிடம் புத்தி இருக்கிறது.  கத்தியைத் தீட்ட கல்லும் புத்தியைத் தீட்ட நூலும் தேவை.”  ஏன் இப்படி 24 மணி நேரமும் குடித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்கும் ஒருத்தரிடம் டிரியன் சொல்கிறான்:  ”24 மணி நேரமும் போதையில் இருப்பதென்பது எவ்வளவு கடினமான விஷயம் தெரியுமா?” டிரியன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான்.  அப்போது அவன் பேசும் வசனம்: ”நான் எங்கிருந்து ஆரம்பிக்கட்டும்?  நான் கெட்டவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.  நான் செய்த குற்றங்களும் பாவங்களும் கணக்கில் அடங்காதவை.  பொய் சொல்லியிருக்கிறேன்.  ஏமாற்றியிருக்கிறேன்.  சூதாடியிருக்கிறேன்.  வேசிகளிடம் போயிருக்கிறேன்.  ஆனால் என்னால் வன்முறையில் ஈடுபட முடியாது.  அதே சமயம் என் பொருட்டு மற்றவர்களை வன்முறையில் ஈடுபடச் செய்ய முடியும்.  எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது ஒரு வேலைக்காரி நதியில் குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.  கரையிலிருந்த அவள் உடைகளைத் திருடிக் கொண்டு வந்து விட்டேன்.  கண்ணீரும் கம்பலையுமாக அவள் அரண்மனைக்கு நிர்வாணமாகத்தான் திரும்ப வேண்டியிருந்தது.  நான் கண்ணை மூடிக் கொண்டு விட்டாலும் அவளுடைய அம்மணமான உடம்பை என்னால் கற்பனை செய்ய முடிந்தது.”

அவனிடம் அவன் காதலி கேட்பாள்: உனக்கு என்னிடமிருந்து என்னதான் வேண்டும் டிரியன்?

டிரியன்:  இன்றுதான் இந்த உலகத்தில் நீ வாழப் போகும் கடைசி நாள் என்று நினைத்தபடி என்னை நீ போகம் பண்ண வேண்டும்.

இந்த வாக்கியத்திலிருந்துதான் என்னுடைய ஆன்மீக ஞானம் கிடைத்தது.  ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போது ”ஆகா, இன்று நான் உயிரோடு இருக்கிறேன்.  நாளை இருப்பேனா என்று தெரியாது.  இன்றே கடைசியாகவும் இருக்கலாம்.”  அந்த நினைவே என்னை உற்சாகப்படுத்தி என் வேகத்தைக் கூட்டுகிறது.  அதோடு, படுக்கையை விட்டு எழுந்து கொள்வதற்கு முன் பூமிக்கும் சூரியனுக்கும் காற்றுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் நன்றி சொல்லி விட்டே கிளம்புவேன்.   

நமக்கெல்லாம் தெரிந்த இரண்டு பேரின் வாழ்வில் கடவுள் செய்த அதிசயத்தைப் பார்ப்போம்.  கவி காளிதாசன் கவிஞனாவதற்கு முன் விறகுவெட்டியாக இருந்தான்.  வடி கட்டின முட்டாள்.  பார்க்கவும் அசிங்கம்.  அந்த நாட்டு இளவரசிக்கு அரசர் வரன் தேடினார்.  இளவரசியோ மெத்தப் படித்தவள். திமிர் பிடித்தவளும் கூட.  என்னை விவாதத்தில் வென்றவனையே மணப்பேன் என்று சொல்லி விட்டாள்.  ஒருத்தனாலும் அவளை வெல்ல முடியவில்லை.  மனம் வெறுத்துப் போன அரசன் மந்திரியை அழைத்து இந்த நாட்டிலேயே கடைந்தெடுத்த முட்டாளை அழைத்து வா என்றான்.  அதுவா கஷ்டம்?  காளிதாசன் அழைத்து வரப்பட்டான்.  மகளிடம் ஆளைக் காண்பிக்காமலேயே “அதி புத்திசாலி” என்று சொல்லி மணமும் முடித்து வைத்தான் அரசன். 

முதலிரவு.  விறகுவெட்டி ஒரு ஓரத்தில் ஙே என்று விழித்தபடி உட்கார்ந்திருக்கிறான்.  இவளுக்கோ தாபம் மேலிட்டது.  அந்த நேரம் பார்த்து ஒரு ஒட்டகம் தன் இணையை அழைக்கும் சப்தம் கேட்டது.  இளவரசி அதையே சாக்காக வைத்து “ஒட்டகம் அழைக்கிறது” என்று சம்ஸ்கிருதத்தில் சொல்கிறாள்.  அந்தக் காலத்தில் படித்தவர்கள் சம்ஸ்கிருதம் பேசுவார்கள்.  படிக்காத பாமரர்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியாது; அவர்கள் பாலி பேசுவார்கள்.  காளிதாசனுக்கு அவள் சொன்ன உஷ்ட்ர என்பதற்கு அர்த்தம் விளங்காததோடு மட்டுமல்ல, அவனால் உஷ்ட்ர என்பதை உச்சரிக்கக் கூட முடியவில்லை. சம்ஸ்கிருதத்தில் உஷ்ட்ர என்றால் ஒட்டகம். இவனோ ”உட்ரு, உட்ரு” என்கிறான்.  இளவரசிக்குப் புரிந்து விட்டது.  அரசர் தன்னைப் பழி வாங்கி விட்டார்.  ”மூடனே, உனக்கு சம்ஸ்கிருதம் தெரியாததோடு மட்டுமல்ல; நான் எதற்காக அதைச் சொன்னேன் என்றுகூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  எழுந்து ஓடி விடு” என்று சொல்லி விரட்டி விடுகிறாள்.  நேராக காளி கோவிலுக்கு வந்து புலம்புகிறான் விறகுவெட்டி.  “இந்த அவமானமெல்லாம் எனக்குத் தேவையா?” என்று கேட்டுக் கதறுகிறான்.  காளி அவனுக்கு தரிசனம் தந்து அவன் நாக்கில் தன் விரலை வைக்கிறாள்.  இன்று வரை சம்ஸ்கிருத மொழியில் காளிதாசனை மிஞ்ச ஆள் இல்லை.  இங்கே நம்மையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.  நாமும்தான் கடவுளிடம் போய் ஏதேதோ கேட்கிறோம்.  விரதமெல்லாம் இருக்கிறோம்.  ஆனால் எதுவும் நடப்பதில்லை.  சரி, இது கலி காலம் என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறோம்.  காளிதாசனும் கலியுகத்தில்தான் வாழ்ந்தான்.  அவனுக்கு மட்டும் ஏன் நடந்தது என்றால், அவன் ஒன்பது ஜென்மங்களாக காளியை முழுமனதோடு வணங்கி வந்தான்.  அதன் பலனே இந்தப் பத்தாவது ஜென்மத்தில் கிடைத்தது.  போன ஜென்மத்தில் பொய், புரட்டு, ஏமாற்று வேலை, திருட்டு, துரோகம், வஞ்சகம் எல்லாம் பண்ணி விட்டு இந்த ஜென்மத்திலும் ஒரு ஈ காக்கைக்குக் கூட ஒரு துரும்பை எடுத்துப் போடாமல் கோவிலுக்குப் போய் மொட்டை போட்டு என்ன பயன்? 

இன்னொருவர் வால்மீகி.  வழிப்பறிக் கொள்ளைக்காரர்.  கையில் துட்டு இல்லாவிட்டால் ஆளையே தீர்த்துக் கட்டி விடுவார்.  அவர் செய்த புண்ணியம் அவரிடம் வந்து மாட்டினார் நாரதர்.  நாரதரிடம் துட்டு இல்லை.  அப்படியானால் நீ செத்தாய்- இது வியாசர்.  ”நான் சாகத் தயார்.  ஆனால் ஒரே ஒரு கேள்வி.  நீ எதற்குக் கொள்ளையடிக்கிறாய்?” “என் குடும்பத்தைக் காப்பாற்ற.” “சரி, நீ கொள்ளையடித்துக் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் உன் குடும்பத்தார்.  அதேபோல் என்னைக் கொலை செய்வதால் உண்டாகும் பாவத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்களா?” வால்மீகிக்கு சந்தேகம் வந்தது.  போய்க் கேட்டார்.  ஒருத்தரும் தயாராக இல்லை.  திரும்பி வந்து நாரதரிடம் சரணடைந்தார்.  “ராமா” என்ற வார்த்தையை ஜெபம் செய் என்றார் நாரதர்.  சம்ஸ்கிருதம் தெரியாத வால்மீகியால் அதைக் கூட சொல்ல முடியவில்லை.  அப்படியானால், மரா என்று திருப்பித் திருப்பிச் சொல் என்றார்.  மரா என்றால் சம்ஸ்கிருதத்தில் கொலை என்று பொருள்.  வால்மீகிக்கு அது தெரியும் இல்லையா?  உட்கார்ந்து தவம் செய்த உடம்பில் புற்று வரும் அளவுக்கான காலம் சென்றது.  ராமாயணம் எழுதப்பட்டது.  அதற்குப் பிறகே ராமாயணம் நடந்தது.  ஆம், ராமாயணம் ஸ்க்ரிப்ட் எழுதப்பட்ட பிறகுதான் அந்தக் கதை நடந்தது.   

குமுதம் டிசம்பர் 2, 2020

***

 

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai