ஓம் தன்னிலை மயம் ஜகத்…

ஒருவர் எதுவாகவோ இருக்கிறார். எதுவுமே அற்று இருக்க முடியாது.

அவர் அப்படியே தன்னை வெளிப்படுத்தினால் அது இயல்பாக இருக்கும். மாறாக அவர் வலிந்து தன்னை ஒரு கலககாரனாக, ஞானியாக, புத்திஜீவியாக காட்ட முயன்றால் அது பொலியான பிம்பம் அல்லவா? 

நரேஷ் கரினினாவின் மேற்கண்ட பதிவு.

இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை.  முன்பு நான் ஜாக் தெரிதா படிக்க வேண்டுமானால் புத்தகம் கிடைக்காது.  கிடைத்தாலும் விலை 800 ரூ. இருக்கும்.  நம் சம்பளம் 500 ரூ. இருக்கும்.  அதனால் நாகார்ச்சுனனிடமோ எஸ். சண்முகத்திடமோ புத்தகத்தை ரெண்டு மணி நேரம் கடன் வாங்கி ஸ்டூடன்ஸ் ஸெராக்ஸில் ஒரு பக்கத்துக்கு முப்பது பிஸா கொடுத்து பிரதி எடுத்து பைண்ட் பண்ணி படிக்க வேண்டும்.  இப்போது நீங்கள் ஜாக் தெரிதா (Jacques Derrida), மிஷல் ஃபூக்கோ (Michel Foucault), ரொலான் பார்த் (Roland Barthes), ஜாக் லக்கான் (Jacques Lacan), தெல்யூஸ் (Gilles Deleuz), ஜூலியா க்றிஸ்தவா (Julia Kristeva), ஜான் பொத்ரியார் (Jean Baudrillard) ஆகியோரை ஏழு தினங்களில் படித்து முடித்து விடலாம். ஜாக் தெரிதாவின் ஆய்வுகளின் சுருக்கம் என்று கூகுளில் போட்டால் அஞ்சு பக்கம் வரும்.  அது ஒருநாள்.  அடுத்த நாள் ஃபூக்கோ.  இப்படியே ஏழு நாளில் ஏழு தத்துவவாதிகள். இவர்களைப் படித்தால் மேலே கண்ட சந்தேகங்கள் வராது.  இவர்கள் எல்லோரையும் பற்றி, அவர்களின் தத்துவத்தின் அவசியம் பற்றியெல்லாம் நான் பல நூறு பக்கங்கள் எழுதியாயிற்று. அதனால்தான் என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு மேற்கண்ட சந்தேகங்கள் வராது.

தன்னிலை என்பது – தன்னிலை என்றால் பலருக்கும் புரியாது – அதாவது, அகம் என்பது மயிருக்கு சமானம்.  அகம் என்றே ஒன்று இல்லை.  ஒருவர் எதுவாகவும் இருக்க முடியாது.  ஏனென்றால், ஒருவர் என்பதே ஒரு கற்பிதம்.  ஒரு வைரத்தில் எத்தனை ஆயிரம் பட்டைகள் இருக்கின்றனவோ அதை விடப் பல்லாயிரம் மடங்கு அதிகமான பட்டைகள் ஒருவரது தன்னிலையில் உள்ளன.  எனவே என்னை நான் உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்துவது என்பதே ஒரு கற்பிதம்.  இல்லாவிட்டால் மகத்தான நூல்களைப் படித்த, மகத்தான நூல்களைப் படைத்த ஒரு மகத்தான கலைஞன் ஜெயலலிதாவைப் போலப் பேச முடியுமா?  பேச முடிகிறதே?  இப்படிக் கேட்டால் இதற்குமே அவன் ஒரு மகத்தான விளக்கத்தைச் சொல்லுவான்.  ஒரு தன்னிலை என்பது பல்வேறு முரண்களாலும் கால ஓட்டங்களாலும் கலாச்சார சுழற்சிகளாலும் சரித்திர கதிகளாலும் மரபணுக்களின் தர்க்கத்தினாலும் காலத்தின் ஒழுங்கினாலும் ஒழுங்கின்மையினாலும் இப்படி ஒட்டு மொத்தமான ஒரு பைத்தியக்காரத்தனமான முழுமையின்மையின் விளைவினால் கட்டமைக்கப்படுகிறது.  எனவே தன்னை வெளிப்படுத்துவது, இயல்பாக இருப்பது என்பதெல்லாம் வெறும் புல்ஷிட் என்று அறிக.  ஓம் தத் சத்.