மூவர்

இறையன்பு ஐ.ஏ.எஸ். காஞ்சீபுரம் கலெக்டராக இருக்கும் போதிருந்து என் நண்பர். காஞ்சீபுரத்தில் பகல் நேரத்தில் எல்லோரும் தறி நெய்யப் போய் விடுவதால் சிறுவர்களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை என்று இரவுப் பள்ளியை ஆரம்பித்து சிறார்களை அந்தப் பள்ளியில் படிக்கச் செய்தார் இறையன்பு. இதை இறையன்பு என்னிடம் சொன்னதில்லை. அந்த இரவுப் பள்ளியில் படித்து பல பெரிய வேலைகளுக்குச் சென்ற நண்பர்கள் மூலம் பல ஆண்டுகள் கழித்து நான் கேள்விப்பட்டு இறையன்புவிடம் கேட்ட போது சிரித்துக் கொண்டே ஆமாம் பாஸ் என்றார். எல்லோருக்கும் உதவுவதில் முன்னணியில் நிற்பார். கடுமையான படிப்பாளி. எல்லாவற்றையும் விட ஆரோக்கியம் பேணுபவர்.

சில ”கதாநாயக” ஐஏஎஸ் போல் அல்லாமல் விளம்பரத்தையும் விரும்ப மாட்டார். ஆனால் இன்றைய உலகில் மார்க்கெட்டிங் பண்ணினால்தான் பிழைக்க முடியும் இல்லையா? அதைப் பற்றியும் கவலைப்படாமல் கடந்த பத்து ஆண்டுகளாக வனவாசம் இருந்தார். அப்போதெல்லாம் நான் அவரிடம் சொல்வேன், இத்தனை திறமையான ஒரு அதிகாரியை இப்படி ஃபைல்களைப் புரட்ட வைத்து விட்டார்களே, உங்கள் உழைப்பெல்லாம் மக்களுக்கு அல்லவா கிடைக்க வேண்டும் என்பேன். இப்போதும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது பாஸ், நான் இருக்கும் துறைகளையெல்லாம் சீரமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று பதில் சொல்வார்.

அவரைப் போல் எளிமையாக உடுத்துபவரை நான் அதிகார மட்டத்தில் கண்டதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு உரையாடலில் சிரித்துக் கொண்டே ”நான் வெளிநாடே சென்றதில்லை, தெரியுமா?” என்றார். முதல் வேலையாக குடும்பத்தோடு வெளிநாடு சென்று வாருங்கள் என்று கண்டிப்புடன் சொன்னேன். சென்று வந்தாரா இல்லையா தெரியவில்லை.

அவருடைய முதல் தகுதி, செயல் வீரர். செயல் வீரர்கள் யாவரும் ஆரோக்கியம் பேண வேண்டும். அதற்கு ஒரு யோகியைப் போல் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும். இறையன்புவும் அப்படியே. அவரை நான் காஞ்சீபுரம் கலெக்டராகப் பார்க்கும்போது எப்படி இருந்தாரோ அதே மாதிரியே உடலை வைத்திருக்கிறார். அதையெல்லாம் பற்றி தினமுமே அவர் இளைஞர்களுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்.

அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலாளராக நியமித்திருப்பதன் மூலம் தன்னுடைய நிர்வாகம் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்பதைக் கோடி காட்டியிருக்கிறார். ஏனென்றால், இறையன்பு ஐஏஎஸ் உள்ளதை உள்ளபடி சொல்பவர் என்ற பெயர் எடுத்தவர். வெறும் முகஸ்துதி செய்பவர்களையே பக்கத்தில் வைத்திருந்த முதல்வர்களைக் கண்ட மாநிலம் இது. இந்தக் கெட்ட வழக்கத்தை முதல்வர் ஸ்டாலினின் முதல் நகர்வே செம்மையாக மாற்றியிருக்கிறது. முதல்வருக்கு வாழ்த்துகள்.

அடுத்து, தங்கம் தென்னரசு. சொல்லவே வேண்டியதில்லை. சாதனைகளை நிகழ்த்தியவர். உதயசந்திரன் ஐஏஎஸ்ஸோடு எனக்கு நேரடிப் பழக்கம் இல்லாவிட்டாலும் அவரது செயல்பாடுகள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் முதல்வரின் தனிச் செயலாளர். இவர்களும் அமைச்சரவையில் உள்ள திரு பழனிவேல் தியாகராஜன் போன்ற இளைய தலைமுறையினரும் தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன், வாழ்த்துகிறேன்.

பதவியேற்ற உடனேயே கொரோனா இரண்டாம் அலை என்ற மிகப் பெரிய சவால் அவர்களின் முன்னே நிற்கிறது. அதை எதிர்கொள்வதற்கான அனுபவமும் திறமையும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது புதிய குழுவுக்கும் இருக்கிறது. இறையருள் துணை நிற்க வேண்டும்.