என் எழுத்தை எப்போதும் விரும்பிப் படிக்கும் இளைஞர்கள் அதே ஆர்வத்துடன் நான் அவ்வப்போது இசை குறித்து எழுதும் கட்டுரைகளையும் படிக்கிறார்கள் என்று அறியும் போது மகிழ்ச்சி அடைகிறேன். படிப்பதோடு மட்டும் அல்லாமல் நான் குறிப்பிடும் இசைக் கலைஞர்களையும் கேட்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அதிகரிக்கிறது. இதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. Despacito பாடலை இளைஞர்கள் கேட்பதில் ஆச்சரியம் இல்லை. நான் கங்குபாய் ஹங்கலையும் கிஷோரி அமோங்கரையும் பற்றி எழுதுவதைப் படித்து விட்டு அவர்களையும் கேட்கிறார்கள் என்பதே என் உவகைக்குக் காரணம். ஒரு இருபது வயது தமிழ் இளைஞன் கிஷோரி அமோங்கர் கேட்கிறான் என்பதுதான் செய்தி. தமிழ் இளைஞன் என்பது முக்கியம். இங்குள்ள சினிமா ரசனை இளைஞர் சமுதாயத்தை மேன்மையான சங்கீதத்திலிருந்து அந்நியமாக்கி வைத்திருக்கிறது.
பலமுறை எழுதியிருக்கிறேன், தஞ்சையின் காற்றிலும் நீரிலும் இசை கலந்திருக்கிறது என்று. அந்தக் காற்றை சுவாசித்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள் இசையிலிருந்து தப்ப முடியாது. அருண்மொழி நங்கை கீழத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து, அதிலும் இசை குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது அவருடைய இன்னும் இரண்டு கட்டுரைகள் வாசிக்கக் கிடைத்தன. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு இசை கேட்பது போலவே இசை பற்றிப் படிப்பதும் பிடிக்கும். இசை ஒரு அற்புதம். எல்லா கலைகளும் அற்புதமானவைதான் என்றாலும் இசை மட்டுமே நம்மை கடவுளின் பக்கத்தில் கொண்டு செல்கிறது. கடவுளை நம்பாதவர்கள் வேறு விதமாக இதைப் பொருள் கொள்ளலாம். மனிதனை மனித நிலையிலிருந்து உயர்த்துவது இசை. இசை பற்றி எழுதுவதும் அதைப் படிப்பதுமே ஒரு இன்பம். லலிதா ராம் எழுதும் கட்டுரைகள் ஒரு அதியற்புதமான இசைக் கச்சேரியைக் கேட்கும் இன்பத்தைத் தருபவை. ஆனால் என்ன காரணத்தினாலோ இசை குறித்த எழுத்து இங்கே தமிழில் வெற்றிடமாகவே இருக்கிறது. எழுதக் கூடியவர்கள் எழுதுவதில்லை. இந்த நிலையில் அருண்மொழி நங்கை தொடர்ந்து எழுதுவது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அதிலும் அவர் கிஷோரி அமோங்கர் பற்றி எழுதியிருப்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி. என் காலத்தோடு ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஒரு கட்டம் முடிவுக்கு வருகிறது என்று சொன்னவர் அல்லவா கிஷோரி அமோங்கர்! அகங்காரம் அல்ல. அவரைப் போல் சங்கீதத்தை உயிர் மூச்சாகக் கொண்டவர்களின் தலைமுறை முடிவுக்கு வருகிறது என்பதையே வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டார். இப்போது தொழில்முறை excellence இருப்பதைக் காண்கிறோம். கிஷோரி அமோங்கருக்கு இசை என்பது உயிர் மூச்சு.
எங்கள் ஊர்ப் பெண்ணான அருண்மொழி நங்கை தொடர்ந்து இசை பற்றி எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவருடைய முதல் கட்டுரை ஒரு கதை போல் இருந்தது. ஜானகிராமன் நாவலின் ஒரு அத்தியாயம் போல் என்று எழுதத்தான் கை வருகிறது. ஆனால் அடிக்க வருவார்கள். அந்த மாதிரி எழுதினாலே எனக்கு ஜானகிராமன் தான். அற்புதமான காஃபியையும், அதியற்புதமான கொழுந்து வெற்றிலையையும் சுவைக்கும் போது தஞ்சாவூர் ஞாபகம் வருவது போல… அதில் என்ன தப்பு இருக்கிறது?