அ-காலம் பற்றி…

டியர் சாரு,
அ-காலம் முடிந்த பின்பு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனாலும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. பயணக் கட்டுரைகள்  இப்படித்தான் இருக்கும் என்ற முன்தீர்மானத்துடன் ஆரம்பித்தேன். நான் நினைத்தது அல்லது இதற்கு முன்பு வாசித்த அனுபவக்கட்டுரைகள் இந்த ரகத்தில் இருக்கும்:

“நாங்கள் ஏர்போர்ட் சங்கீதாவில் காலை உணவை முடித்த போது  இந்த வடையை பதினைந்து நாள் கழித்து தான் பார்க்க முடியும் என்று நண்பர் சொன்னார், அப்பொழுதுதான் எனக்கு நாம் பயணம் செய்யும் தூரம் உரைத்தது…”

இப்படி ஆரம்பித்து எந்த நகருக்குச் சென்றாலும் அங்குள்ள தமிழர்கள் வீட்டில்/ சங்க விழாவில் பங்கெடுத்து நன்கு உரையாற்றிய பின்பு முக்கிய பகுதிகளுக்கு சென்று அதைப் பற்றி விவரித்து அந்தக்கட்டுரைகளை முடிப்பார்கள்.

அ-காலம்தொடரை ஒரு benchmark-ஆகப் பார்க்கிறேன். சென்ற இடம், விழாக்கள், முக்கிய வர்ணனைகள் என்று எழுதாமல், அந்நிலங்களின் அரசியலும், அந்த அரசியலை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்வும், அதைப் பதிவு செய்யும் இலக்கிய ஆக்கங்களும், இலக்கிய ஆளுமைகளின் வாழ்வும் என்று நிலத்தின் மணலை ஒரு பிடி எடுத்துக் கொடுத்து இருக்கிறது இந்தத் தொடர். அதனால் இதில் ஒரு உயிர்ப்புத் தன்மை இருக்கிறது, அடுத்த பதிவிற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இலக்கியம் படிப்பது வாழ்வியல் அனுபவத்திற்கும், அழகியலுக்கும், அகம் சார்ந்த கேள்விகளுக்கும் என்று எனக்கு நானே வரையறை வைத்திருந்தேன். இலக்கியப் படைப்புகள் பேசும் அரசியலை  உணராமல் இருந்தது பிழை என்று இந்தத் தொடரின் மூலம் புரிந்தது.
ஒரு சமுதாயம் பல layer-களால் ஆன கேக் போன்றது, ஒரு சிறந்த எழுத்தாளன் மட்டுமே அந்த layer கலையாமல் ஒரு துண்டை வெட்டி எடுக்க முடியும். அவனது படைப்பு தனிமனிதன்  அல்லது ஒரு திரள் சந்திக்கும்   சமுதாய அடுக்குகள் தரும் அழுத்தத்தை /சிக்கலை மிகச் சரியாக பிரதிபலிக்கும். (ஒரு விமர்சன நூலில் படித்த வரி)

எனக்கு ஒரு மிகச் சிறந்த கேக் உண்ட திருப்தி இருக்கிறது, அதேநேரம் கேக் தீரப் போகிறது என்று வருத்தமாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் என்னை ஒரு அங்குலமேனும் நகர்த்திச் செல்லும் சாருவிற்கு நன்றிகள்.
நன்றி 

ராம் 

நன்றி ராம். ராம் குறிப்பிடும் அ-காலம் தொடர் bynge.in என்ற செயலியில் வருகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன்களில் டவுன்லோட் செய்ய முடியும். (பிஞ்ஜ் டாட் இன்)