எக்ஸைல்

Autofiction என்ற இலக்கிய வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள்.  இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு.  நடையும் விவரணங்களும் baroque பாணியில் அமைந்திருக்கின்றன.  ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டிடக் கலை.  உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகே பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம்.  இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் அந்த மயன் மாளிகைக்கு ஒப்பானவை.
சாரு நிவேதிதாவின் வழக்கமான பாணியில் இல்லாமல் செவ்வியல் மரபில் எழுதப்பட்ட இந்த நாவல் ஐயாயிரம் ஆண்டுகள் நீண்ட தமிழர்களின் ஞான மரபை அகத்தியர், தேரையர், தொல்காப்பியரிலிருந்து தொடங்கி, இன்றைய முள்ளிவாய்க்கால் வரை ஆவணப்படுத்துகிறது.  

மரம், செடி, கொடி, பாம்பு, யானை, எலி, பூனை, நாய், பல்லி, குரங்கு, மீன் என்று பல்லுயிர்களையும் பேசும் இந்த நாவலில் மனித வர்க்கத்தைப் பற்றி மிகக் குறைவாகவே காண முடியும்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற சித்தன் வாக்கு வெகு சுவாரசியமான நடையில் நாவலாக விரிந்திருக்கிறது.  இந்தப் பக்கங்களில் இதை ஒரு நாவலாகவும் ஒருவர் வாசிக்கலாம். வாழ்க்கை பற்றிய ஒரு வழிகாட்டி நூலாகவும் கொள்ளலாம். 

மேற்கண்ட பின்னட்டைக் குறிப்புடன் உள்ள என்னுடைய எக்ஸைல் என்ற நாவலின் மூன்றாம் பதிப்பு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் வெளியீடாக இன்று வந்துள்ளது. சுமார் ஆறு ஏழு ஆண்டுகளாக விற்பனையில் இல்லாத நாவல். இது வெளிவந்த போது ஆயிரம் பிரதிகள் விற்றது. பிறகு இரண்டாவது பதிப்பில் ஆயிரம் பிரதிகள். அத்தோடு சரி. இப்போது எத்தனை பிரதிகள் அச்சடித்தீர்கள் என்று கேட்டேன். அந்த நம்பரைக் கேட்டவுடன் ‘ஏன்தான் தமிழில் எழுதுகிறோமோ?’ என்று மனதுக்குள் நொந்து கொண்டேன். ஏழெட்டு ஆண்டுகள் கழித்து மூன்றாம் பதிப்பு வந்தாலும் இத்தனை கம்மியாகவா வருவது? இப்படித்தான் சென்ற ஆண்டு எழுதினேன். ஒரு பதிப்பாளர் முகநூலில் என்னைத் திட்டினார். இது என்ன பதிப்பாளர் சம்பந்தப்பட்ட விஷயமா? வாங்குகிறவர்கள்/ வாசகர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா இது? அதிக எண்ணிக்கையில் விற்றால் பதிப்பாளர் ஏன் நூறு இருநூறு என்று அச்சடிக்கப் போகிறார்?

எக்ஸைல் வெளிவந்த காலத்திலிருந்து இன்று வரை இது பற்றி உற்சாகமாகப் பேசி, இந்த நாவலைக் கொண்டாடித் தீர்த்த நண்பர் ந. முருகேச பாண்டியனுக்கும், எக்ஸைல் விரைவில் வெளிவர வேண்டும் என்ற விஷயத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்த நண்பன் வினித்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்போதைய மூன்றாம் பதிப்புக்காக எக்ஸைல் நாவலை வைரத்தைச் செதுக்குவது போல் செதுக்கியிருக்கிறேன். நான் எழுதியதிலேயே எனக்கு ஆகப் பிடித்தது எக்ஸைல்தான். இனியொரு முறை என்னால் அப்படி எழுத முடியாது. நினைத்துப் பார்க்கவும் இயலாது.

ஆயிரம் ரூபாய் விலையுள்ள எக்ஸைல் இப்போது ஜூலை முதல் தேதி வரை 750 ரூபாயில் உங்களுக்குக் கிடைக்கும். அதற்கான விவரம் கீழே:

https://tinyurl.com/pudhiyaexile