புகழும் துணிச்சலும்…

தமிழ் எழுத்தாளர்களின் அவல நிலை பற்றி தமிழ்நாட்டு முதல்வருக்கு நான் இரண்டு கடிதங்கள் எழுதி அதை அவரும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.  அப்போதே அபிலாஷ், வீடு கொடுத்தால் அதை வாங்கி எழுத்தாளர்கள் ஏழைகளிடம் கொடுத்து விட வேண்டும் என்று எழுதியிருந்தார்.  கிட்டத்தட்ட அப்படித்தான் எழுதியிருந்ததாக ஞாபகம்.  இன்றைய ஒரு கட்டுரையிலும் கிட்டத்தட்ட எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் castrate பண்ணுகிற மாதிரியான கருத்துகள்.  அதில் அவர் சொல்வதன் சாரம்: ஜெனே போல் எழுதுவதற்கு இங்கே உள்ளவர்களால் முடியும்.  ஆனாலும் இப்போது எழுத்தாளர்கள் பிரபலமாக இருப்பதால் அப்படி எழுத அவர்களுக்குக் கூச்சமாக உள்ளது.  புகழ் அதைத் தடுக்கிறது.  எனவே பல்லாயிரக்கணக்கில் புத்தகங்கள் விற்பதை விட இப்போது விற்பது போல் இருப்பதே நல்லது.

அதாவது, ஏன் இக்காலத்திய எழுத்தாளர்கள் மொக்கையாக எழுதுகிறார்கள்? இடைவெளி மாதிரி, காகித மலர்கள் மாதிரி, அம்மா வந்தாள் மாதிரி (பெயர்களெல்லாம் அவர் சொல்லவில்லை) ஏன் இப்போது எழுதப்படுவதில்லை? சாரு சொல்வது போல் எழுத்து பரவலாக வாசிக்கப்படுமானால் – அதாவது, எழுத்து பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன் – அப்படிப் பரவலாக வாசிக்கப்படுமானால் எழுத்தாளர்களுக்கு ஒரு பயமும் தயக்கமும் வந்து விடுகிறது என்கிறார் அபிலாஷ். ஆனால், நான் ‘செலிப்ரிட்டி’ ஆன பிறகுதான் எக்ஸைல் நாவலை எழுதினேன்.  அந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும்.  இவ்வளவு தூரம் பெயர் தெரிந்த ஒரு ஆசாமி அப்படி ஒரு நாவலை எழுதுவானா?  உலக மொழிகளில் எழுதியிருக்கிறானா?  எனக்குத் தெரிந்து மிஷல் வெல்பெக் (Michelle Houlebecq) போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் எழுதவில்லை.  அவர்களும் கூட ஐரோப்பிய சமூகத்தில் இப்போது பொதுவெளியில் நிலவும் இஸ்லாமிய வெறுப்பு போன்ற விஷயங்களைத்தான் துணிச்சலாக (உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல்) எழுதினார்களே ஒழிய பாலியல் விஷயங்களில் இத்தனை அத்துமீறலை எழுத்தில் வெளிப்படுத்தியதில்லை.  தமிழில் அம்மா வந்தாள் நாவலில் தி.ஜானகிராமன் செய்தார்.  அதற்கு முன்னேயும் சரி, பின்னேயும் சரி, அப்படி நடந்ததில்லை.  நான் மட்டுமே விதி விலக்கு.    

இன்று எக்ஸைல் மூன்றாம் பதிப்பு வந்துள்ளது. அதை நான் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை. (புரிந்து கொள்ளுங்கள்) தைரியம் இருந்தால் எதுவும் சாத்தியம். இப்போதும் ஒரு இளம் எழுத்தாளனின் நாவல் 200 பிரதிதான் போகிறது. ஷோபா சக்தி இங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவருடைய இச்சா என்ற நாவலைப் படித்தேன். அது ஒரு பின்நவீனத்துவ க்ளாஸிக். ஆயிரம் பிரதி கூட போயிருக்காது. அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள்… அப்படி ஒரு புத்தகம் வந்ததே யாருக்கும் தெரியாது. பெருந்தேவியின் குறுங்கதைகள்… ஓ, அவர் கதை வேறு எழுதுகிறாரா? பா.ராகவனின் நாவல்கள் 10000 பிரதிகள் விற்கட்டும். அவர் ஏன் சீரியலுக்கு எழுதப் போகிறார்? ஆனானப்பட்ட சுஜாதாவுக்கே பைபாஸ் சர்ஜரி செலவை மணி ரத்னமும் கமலும்தானே ஏற்றுக் கொண்டார்கள்? பிரபஞ்சனின் வைத்தியச் செலவை – 5 லட்சம் – மிஷ்கின் ஏற்றார். என் வைத்தியச் செலவை என் வாசகர் வட்டம் ஏற்றது. மூன்றரை லட்சம் ரூபாய்.

எழுத்தாளர்கள் எத்தனை காலத்துக்கு இப்படி பிச்சைக்காரர்களாகவே இருப்பது அபிலாஷ்? நான் இதுவரை 200 கேரளக் கல்விக்கூடங்களில் பேசியிருக்கிறேன். இங்கே தமிழ்நாட்டில் ரெண்டே ரெண்டு முறை. இங்கே உள்ள பல்கலைக்கழகங்களில் comparative literature துறையில் நான் ஒரு ஐந்தாண்டுக் காலம் வருகைதரு பேராசிரியராக இருக்க என்ன தகுதி என்னிடம் இல்லை?  இங்கே உள்ள 50 எழுத்தாளர்கள் அதற்குத் தகுதியானவர்கள் இருக்கிறார்கள்.  ஞானக்கூத்தன், அசோகமித்திரன், ந. முத்துசாமி போன்றவர்களை அப்படிப் பயன்படுத்தியிருக்கலாம்.  அவர்களெல்லாம் துறைத்தலைவர்களாக இருக்கவே தகுதியானவர்கள்.  ஞானக்கூத்தன் ஒரு துணைவேந்தராக இருக்கும் தகுதி வாய்ந்தவர்.  அப்படித்தான் கேரளத்தில் இருக்கிறார்கள்.  இப்போதும் கலாப்ரியா, தேவதேவன், தேவதச்சன், வண்ணதாசன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன், ந. முருகேச பாண்டியன், லக்ஷ்மி சரவணகுமார் என்று ஏராளமான பேர் இருக்கிறார்கள்.  இதில் வண்ணநிலவனை சேர்க்கவில்லை.  தமிழ்நாட்டில் ஒரு பயல் எழுத்தாளன் இல்லை என்று சொல்லி விடுவார்.  அந்த விஷயத்தில் அவரும் மாலனும் ஒன்று.  நான் பெயர் மறந்து போனவர்கள் ஏராளம்.  வருகைதரு பேராசிரியர்களாக, துறைத் தலைவர்களாக இருக்க இவர்கள் அத்தனை பேருமே தகுதியானவர்கள்தாம்.  அதெல்லாம் கேரளத்திலும், புதுச்சேரியிலும், சிங்கப்பூரிலும் நடக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடக்கவில்லை?  எல்லா மொழிகளிலும் 500 பிரதிகள்தான் விற்கின்றன.  ஆனால் நிறுவனங்களும் செல்வந்தர்களும் எழுத்தாளர்களை போஷிக்கிறார்கள்.  இங்கே எழுத்தாளன் பிச்சை எடுக்க வேண்டியிருக்கிறது. 

ஞாநி என் பெயரைப் போட்டு ஒரு பிரபல பத்திரிகையில் சாரு நிவேதிதா இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று எழுதினார்.  நான் வாசகர்களிடம் பணம் கேட்கிறேனாம்.  பிரபஞ்சன் பேர் போடாமல் எழுதினார்.  இருவருமே கடைசியில் என்னோடுதான் உட்கார்ந்திருந்தார்கள்.  இதெல்லாம் வேண்டாம், புத்தகம் ஒரு பத்தாயிரம் பிரதி விற்கலாமே என்று சொன்னால், அபிலாஷ் கவலைப்படுகிறார்.  எழுத்தாளர்களுக்குத் துணிச்சல் போய் விடும். 

அபிலாஷ், இப்போதைய எழுத்தாளர்கள் முன்பு போல் பட்டினி கிடந்து சாகவோ என்னைப் போல் பிச்சை எடுக்கவோ தயாராக இல்லை.  சினிமா, சீரியல் என்று எழுதி ஜீவனோபாயத்தைப் பார்த்துக் கொள்ளத் தயாராகி விட்டார்கள்.  நான் இருபது ஆண்டுகள் அரசாங்கத்தில் குமாஸ்தா வேலை பார்த்தேன்.  சினிமா, சீரியலில் காசு நிறைய வரும்.  ஆனால் தி. ஜானகிராமன் அம்மா வந்தாள் எழுதியது போல் இப்போது ஏன் துணிச்சல் இல்லை என்றால், நான் இருக்கிறேன் என்றுதான் சொல்வேன்.  ஒவ்வொரு எழுத்தாளனும் சொல்வான்.  அவரவரின் கதையை அவரவர் எழுதுகிறார். 

பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்று ஒரு உலக சாதனை நிகழ்ந்துதானே இருக்கிறது?  இத்தனைக்கும் அவரும் ஒரு அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறார். 

இன்று எக்ஸைல் மூன்றாவது பதிப்பு.  200 பிரதிகள் வந்து இறங்கியுள்ளன.  இப்படி இருந்தால் எழுத்தாளன் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருப்பான்.  2000 பிரதிகள் வந்து இறங்க வேண்டும்.  அதற்கான தைரியத்தை பதிப்பாளர் எப்போது பெறுவாரோ அப்போதுதான் நிலைமை சீர்திருந்தும்.  அதுவரை திருவோடு சத்தம்தான் கேட்கும். 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai