தொலைந்து போன புத்தகம்…

அப்போது இலக்கியம் ஒரு கண், குடி இன்னொரு கண்.  அப்படி ஒரு குடி.  ஆனால் குடியைக் குடிக்காகக் குடிப்பதில்லை.  அதுவும் ஒரு தோது.  தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் வெற்றிலை பாக்கும் புகையிலுமாக இரவு பூராவும் இலக்கியம் பேசுவார்களாம்.  ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு அய்ட்டம்.  அப்போது வெற்றிலை பாக்கு புகையிலை.  இப்போது குடி.  பாரிஸிலிருந்து வாசன் வந்திருந்தான்.  நெருங்கிய நண்பன்.  சென்னை வந்தால் சின்மயா நகரில் ராமானுஜம் வீட்டில்தான் தங்குவான்.  இங்கே ராமானுஜத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பெயருக்கேற்ற புத்திசாலி.  வடகலையா தென்கலையா தெரியவில்லை.  ஆனால் கடுமையான பெரியாரியவாதி.  புதிதாக மதம் மாறியவர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் இல்லையா, அதேபோல் இவனும் எப்போது பார்த்தாலும் பாப்பான் பாப்பான் என்று திட்டிக் கொண்டிருப்பான்.  ஆனால் அவன் எதையெதையெல்லாம் திட்டுகிறானோ அதெல்லாம் அவனிடமே உருத்திரண்டு உட்கார்ந்திருக்கும்.

ஒரு வேலை செய்ய மாட்டான்.  அவனுடைய எல்லா வேலைகளையும் அவனுடைய நண்பர்கள்தான் செய்ய வேண்டும்.  சிகரெட்டைக் குடித்து விட்டுத் தரையிலேயே நசுக்குவான்.  யாராவதுதான் அதைப் பெருக்க வேண்டும்.  பெருக்கினால் சாம்பல்தானே போகும்?  அந்தக் கரிக் கறை போகுமா?  இப்படியெல்லாம் கேட்டால் பூர்ஷ்வா என்று திட்டுவான்.  அவன் சாப்பிட்டால் கூட அவன் சாப்பிட்ட தட்டை நான்தான் கழுவ வேண்டும்.  ஆம், கொஞ்ச நாள் அவன் என் அறைவாசியாக இருந்தான். 

பிறகு சின்மயா நகர் போய் விட்டான்.  ஒரு மாதிரி கல்யாணமும் ஆகி விட்டது.  அது ஏன் ஒருமாதிரி என்றேன் என்றால், மரபு சார்ந்த கல்யாணம் அல்ல.  இப்போது சொல்கிறோம் இல்லையா, அந்த மாதிரி சேர்ந்து வாழ்தல்.  எல்லாம் ஒரு இருபது வருடங்கள் இருக்கும். 

என்னவோ தெரியவில்லை, ஆரம்பத்திலிருந்தே எனக்கும் அவனுக்கும் ஆகவில்லை.  ஏனென்றும் புரியவில்லை.  இந்த சிகரெட்டைத் தரையில் நசுக்குவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.  இதை நான் சுத்தம் அசுத்தம் சார்ந்த விஷயமாகப் பார்க்கவில்லை.  அடுத்த மனிதனை அவன் சுரண்டுகிறான்.  அடுத்த மனிதனின் உழைப்பில் வாழ்கிறான்.  அதுதான் எனக்குக் கோபம்.  இன்னொரு விஷயம்.  நாலைந்து பேர் கூட்டாகச் சேர்ந்து வாழும்போது நம் இஷ்டத்துக்கு அறை நடுவில் வாந்தி எடுக்கக் கூடாது.  ராமானுஜம் எடுப்பான்.  நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும்.  அவன் தொட மாட்டான்.  கக்கூஸ் நாம்தான் கழுவ வேண்டும்.  அப்புறம் எதற்கு ஐயா பாப்பான் பாப்பான் என்று திட்டுகிறாய்? 

நான் போஸ்டல் ஸ்டோர்ஸ் டெப்போவில் வேலையாக இருந்தபோது அவன் எழும்பூர் தொலைபேசியில் இருந்தான்.  அவன் கிளார்க்.  நான் ஸ்டெனோ.  கிளார்க் என்றால் படு சுதந்திரம் உண்டு.  ஸ்டெனோ என்றால் கிட்டத்தட்ட தாசி.  வேசி என்றால் கோபித்துக் கொள்வார்கள்.  அப்படித்தான் ஒருமுறை எழுதி ஆஃபீஸில் எனக்கு மெமோ கொடுத்து விட்டார்கள்.  இப்போது அப்படிச் செய்ய முடியாது என்றாலும் நான் கொஞ்சம் கனிந்து விட்டதாகத்தான் எனக்கே தோன்றுகிறது.  தினந்தோறும் மதியம் போய் அவன் ஆஃபீஸில் பார்த்துப் பேசிக் கொண்டிருப்பேன்.  தினமும்.  ஆட்டோவில் போய் ஆட்டோவில் திரும்புவேன்.  போஸ்டல் ஸ்டோர்ஸ் டெப்போ ஈகா தியேட்டர் அருகே உள்ளது.  அங்கிருந்து அவன் ஆஃபீஸ் ஒரு கிலோமீட்டர் இருக்கும்.  இப்படியே ஒரு வருடம் போயிருக்கும்.  ஒருநாள் ஏதோ ஒரு இலக்கிய விவகாரம் தொடர்பான விவாதம்.  வாக்குவாதம்.  சர்ச்சை.  கோபத்தில் நான் “இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் ராமானுஜம்” என்றேன்.

“நான் சந்திக்கவில்லையே சாரு, நீங்கள்தான் தினமும் என்னைத் தேடி வருகிறீர்கள்” என்று கவர்ச்சியாக சிரித்துக் கொண்டே சொன்னான்.  ஆங், சொல்ல மறந்து போனேன்.  ராமானுஜத்துக்குக் கோபமே வராது.  சிரித்துக் கொண்டேதான் பேசுவான்.  ஆனால் அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் கொந்தளித்துச் சீறுவார்கள்.  அப்போதும் சிரித்துக் கொண்டே அவர்களை ஊசியால் குத்திக் குத்தி மகிழ்வான் ராமானுஜம்.  அப்படி ஒரு ஊசியைத்தான் குத்தினான் அப்போது.  அப்படியே பளார் என்று கன்னத்தில் வாங்கியது போலிருந்தது எனக்கு.  அப்போதுதான் எனக்கே உறைத்தது, ஆஹா, நாம்தானே இவனைத் தேடி தினமும் வருகிறோம்? இவன் நம்மைத் தேடி ஒருநாள் வந்ததில்லையே?

அன்றிலிருந்து அவனை நான் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.  ஆனால் அவன் மட்டும் எந்த இலக்கியக் கூட்டத்தில் பார்த்தாலும் என்னிடம் கவர்ச்சியாக சிரித்தபடி நலம் விசாரிப்பான். 

வாசன் போன் பண்ணினான்.  சாரு, எப்போது சந்திக்கலாம்.  அன்று இரவு.  ராமானுஜம் வீடு. 

உயிரே போனாலும் நான் ராமானுஜம் வீட்டுக்கு வர மாட்டேன் என்றேன்.

“இதோ பாருங்கள் சாரு, நான்தான் உங்களை அழைக்கிறேன். இன்னும் பதினைந்து நாட்களுக்கு அது என் முகவரி.  சரியா?  நீங்கள் வருகிறீர்கள்.”

நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.  வாசன் கேட்கவில்லை.  நீங்கள் ராமானுஜம் கெஸ்ட் அல்ல.  சரியா? என் கெஸ்ட்.

போனேன்.  பேசினோம்.  குடித்தோம்.  எங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கிருஷ்ண குமாரும் அங்கே இருந்தான்.  அவன் சுந்தர ராமசாமி கோஷ்டியைச் சேர்ந்தவன்.  அவன் எங்கே இங்கே?  நாங்கள் பேசுவது எதுவுமே அவனுக்குப் புரியாதே?  எப்படி வந்தானோ என்னவோ, நானும் கேட்கவில்லை. 

ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ராமானுஜம் என்னுடன் பேசும் போது ஏதோ முந்தின நாள்தான் நாங்கள் சந்தித்துப் பிரிந்தது போல் பேசிக் கொண்டிருந்தான்.  நாங்கள் பல ஆண்டுகளாக சந்தித்துக் கொள்வதில்லை என்ற விஷயமே அவன் பேச்சில் தெரியவில்லை.   

வழக்கம் போல் நள்ளிரவு இரண்டு மணி வரை விவாதம் ஓடியது.  என்ன பேசினோம் என்பதெல்லாம் இப்போது ஞாபகம் இல்லை.  ஆனால் ஒரே ஒரு சம்பவம் மட்டும் வாழ்நாள் முழுக்கவும் மறக்காது.  

வீட்டை விட்டு வெளியே வந்தேன்.  அடுத்த தெருவில்தான் என் வீடு இருந்தது.  இடையில் கூவம் ஓடுகிறது.  கூவத்துக்கு இந்தப் பக்கம் ராமானுஜம் வீடு.  அந்தப் பக்கம் என் வீடு.

வெளியே வந்ததும், “சாரு, ஒரு நிமிஷம்…” என்று எப்போதும் போல் கவர்ச்சியாக சிரித்தபடியே அழைத்தான் ராமானுஜம். 

சொல்லுங்க ராமானுஜம் என்றபடியே அவன் அருகில் போனேன்.  

“ஒண்ணுமில்ல… இனிமே என் வீட்டுக்கு வராதீங்க… சரியா?”

அதைக் கேட்டதும் அடுத்த நொடி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன்.  அதற்குப் பிறகு ஒரே கெட்ட வார்த்தை (நான் தான்), அடிதடி.  ஆனால் நண்பர்கள் விலக்கி விட்டு விட்டார்கள்.  வாசனுக்கும் செம கெட்ட வார்த்தை அர்ச்சனை.  முட்டாக் கூதி, உன் பேச்சைக் கேட்டு வந்ததால்தானேடா இந்த செருப்படி எனக்கு… இத்யாதி. 

இதோடு முடிந்திருந்தால் இதை நான் எழுதியே இருக்க மாட்டேன்.  இனிமேல்தான் இருக்கிறது கதை.

இது ஒரு பாடம் என்று வீட்டுக்குப் போய் விட்டேன்.  மறுநாள் வாசன் போன் செய்து என்னை அழைத்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு, “என்ன இருந்தாலும் நீங்கள் செய்தது தப்பு சாரு” என்றான். 

”அவன் சொன்ன வார்த்தைக்கு இன்னும் பலமாகக் கொடுத்திருக்க வேண்டும்.  அவன் சொன்னதைப் பற்றி ஆட்சேபணை இல்லை.  அதை அவன் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும்.  நான் அப்போதே கிளம்பியிருப்பேன்” என்றேன்.

“சேச்சே, அதைச் சொல்லவில்லை.  நீங்கள் கொடுத்தது சரிதான்.  ஆனால் எடுத்ததுதான் தப்பு.”

“என்னடா வாசு சொல்றே?  கொடுத்தது சரி. எடுத்ததுன்னா?”

“ராமானுஜத்தின் புத்தகத்தை சுட்டுக் கொண்டு போனது ரொம்பவும் தப்பு.”

அதுதான் இன்னொரு சம்பவம்.  முந்தின இரவில் ராமானுஜத்தின் புத்தகம் ஒன்றைக் காணோம்.  நாங்கள் வரும் வரை படித்துக் கொண்டு இருந்திருக்கிறான்.  அதை வாசனும் பார்த்திருக்கிறான்.  அதனால்தான் வாசன் அத்தனை உறுதியாகச் சொல்கிறான். புத்தகம் ஜாக் தெரிதா எழுதிய Différance. ஸ்ட்ரக்சுரலிஸம் குறித்த மிக முக்கியமான புத்தகம். அப்போது நான்தான் ஒரு பத்திரிகையில் ஸ்ட்ரக்சுரலிஸம் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன்.  அந்தப் புத்தகம் எனக்கு மிகவும் தேவைப்படுகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதற்காக இன்னொருவனின் புத்தகத்தையா சுடுவேன்?  சண்டைக்காகப் பழி வாங்கலாம் என்றாலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அல்லவா சண்டை நடந்தது? 

ம்ஹும்.  வாசன் எந்த தர்க்கத்துக்கும் உடன்படுவதாக இல்லை.  நானும் எவ்வளவோ விவாதித்துப் பார்த்தேன்.  வாசன் ஒத்துக் கொள்ளவில்லை.  சரி, எப்படியோ போங்கள் என்று விட்டு விட்டான்.

ஆனால் எனக்கு என்னவோ கடந்த இருபது ஆண்டுகளாகவே அது ஒரு மர்மம்தான்.  யார்தான் அந்தப் புத்தகத்தை எடுத்திருப்பார்?  ராமானுஜமும் வாசனும் இரண்டு பேருமே மறுநாள் வீட்டை சல்லடை போட்டுத் தேடியிருக்கிறார்கள்.  புத்தகம் கிடைக்கவில்லை. வேறு யாருக்கும் அந்தப் புத்தகம் தேவைப்படாது.

ங்க்கொக்கா மக்கா, இருபது ஆண்டு மர்மம் போன வாரம்தான் தீர்ந்தது.  வாசன் வந்த போது சொன்னான்.  சாரு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜம் வீட்டில் தொலைந்து போன புத்தகம் எப்படித் தொலைந்தது தெரியுமா?

”அதுதான் தெரியலையேடா முட்டாக் கூதி.  அநாவசியமா எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டி விட்டீங்களே ரெண்டு பேரும்?”

“நீங்க இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.  அதை அந்த கிருஷ்ண குமார்தான் எடுத்தானாம்.”

என்னால் சற்றும் நம்ப முடியவில்லை.  ஏனென்றால், அவர்களெல்லாம் நியாயம், நேர்மை, தர்மம், தர்சனம் என்று பேசிக் கொண்டிருப்பவர்கள். 

“அவனுக்கு எதுக்கு அது? பொட்டலம் மடிக்கக் கூட யூஸ் ஆகாதே?”

“அப்படி இல்லை.  நாம் பேசினது எதுவுமே அவனுக்குப் புரியல.  புடிக்கல.  அதனால் ராமானுஜத்தைப் பழி வாங்குவதற்காக அந்தப் புத்தகத்தை எடுத்து ஜட்டிக்குள் போட்டுக் கொண்டு போய் கூவத்தில் போட்டு விட்டானாம்.  லூசுக் கூதி.”

***

சந்தா/நன்கொடை அனுப்ப விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai